Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் காத்தான்குடி இஸ்லாமிய அடிப்படைவாதம், முஸ்லீம் சிறுமிகளைக் குதறியது

காத்தான்குடி இஸ்லாமிய அடிப்படைவாதம், முஸ்லீம் சிறுமிகளைக் குதறியது

  • PDF

உங்கள் குடுப்பத்தில் உங்கள் பெண் குழந்தைகளுக்கு இது போன்று நடந்திருந்தால், நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? முஸ்லீம் சமூகத்திலிருந்து எந்த அறிவுத்துறையினரும் இந்த இஸ்லாமிய ஆணாதிக்க அடிப்படைவாத வக்கிரத்தைக் கேள்விக்குள்ளாக்கவில்லை. இதை வெறும் கலாச்சாரப் பிரச்சினையாகக் காட்டி மூடிமறைக்கவே முனைகின்றனர்.

 

அந்தச் சிறுமிகளை ஓட்டோ ஒன்றில் கடத்தியவர்கள், அவர்களை ஒரு வீட்டில் வைத்து தாக்கியவர்கள், இறுதியில் பல ஆயிரம் மக்களைக் கூட்டி பள்ளிவாசல் நிர்வாகமும் சேர்ந்து தாக்கினர். இந்தப் பெண்களின் உடைகள் கிழிக்கப்பட்டது முதல் மருத்துவ பரிசோதனை வரை நடத்தி முடித்த இந்த நிகழ்வின் பின்னணியில், இஸ்லாமிய ஆணாதிக்க அடிப்படைவாதமும், இதை மூடிமறைப்பதிலும் நியாயப்பபடுத்துவதிலும் மதக் கண்ணோட்டமும், ஆதிக்கம் வகிக்கின்றது.

நீதிமன்ற உத்தரவு ஒன்றின்படி, பள்ளிவாசல்கள் மூலம் அவதூறுகளுக்கு மன்னிப்புப் கோரி ஒலிபரப்பக் கோரிய ஒலிபரப்பும், வெளிப்படையற்ற அவதூறை சுற்றிவளைத்து மீளப் பரப்பி இருக்கின்றது.

இனி அந்த இரு சிறுமிகளும் இஸ்லாமிய ஆணாதிக்க சமூக அமைப்பில், இயல்பான பொதுவாழ்வுக்கு வர இடமில்லை. இதைத்தான் முஸ்லீம் சமூகமும், முஸ்லீம் அறிவுத்துறையினரும் இஸ்லாமிய அடிப்படைவாதம் சார்ந்து நடத்தி முடித்திருக்கின்றனர்.

இரு சிறுமிகள் இணையத்தில் ஆபாசப் படம் பார்த்ததாக கூறித்தான் இஸ்லாமிய அடிப்படைவாதம் அவர்களைக் குதறியது. முதலில் இணைய ஆபாசத்தை பார்க்கலாமா இல்லையா என்பது தொடர்பாக இலங்கை சிவில் சமூக சட்டம் உண்டு. இதைத்தாண்டி தனிநபர்கள் விசாரணை செய்யும் உரிமை அவர்களுக்கு கிடையாது. அதுவும் இஸ்லாமிய ஆணாதிக்கம் சார்ந்து இதைச் செய்வது வக்கிரம், அராஜகம். எது பாலியல் ஆபாசம் என்பதை வரையறுக்க, இஸ்லாமிய ஆணாதிக்கத்துக்கு எந்த அருகதையும் கிடையாது. அதுதான் இதன் மத அடிப்படைவாதமாகும்.

இந்த இந்த சிறுமிகள் இணையத்தை பார்த்த பின்னணியில், அது ஆபாசம் தான் என்று கூறி சித்திரவதை செய்கின்றனர். இதற்காக அச்சிறுமிகளை சில இளைஞர்கள் கடத்திச் சென்று, ஒரு இரகசிய இடத்தில் வைத்து பாலியல் ரீதியான கேள்விகள் முதல் உடைகளைக் கிழித்தும் தாக்குகின்றனர். பின் இதை பள்ளிவாசலும் செய்கின்றது. இதையெல்லாம் கலாச்சாரத்தினைக் கண்காணிக்கும் சுதந்திரம் என்று அறிவுசார் விளக்கம் கொடுக்கின்றனர். ஆணாதிக்க வெறியர்களின் ஆணாதிக்க கேள்விகள் ஊடாகவே இவை அரங்கேறுகின்றது. இதற்காக பள்ளிவாசல், ஆபாசப்படம் பார்த்த பெண்களை தண்டிக்கவும் பார்க்கவும் வாருங்கள் என்று தங்கள் ஒலிபரப்பு மூலம் அறிவித்தது. இதன் மூலம் பல ஆயிரம் மக்களை வரவழைத்து, சிறுமிகளின் நடத்தையைப் பற்றி விசாரணை நடத்தினர் இஸ்லாமிய ஆணாதிக்கவாதிகள்.

ஆணாதிக்கமும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் சார்ந்த இந்தக் கடத்தல் மற்றும் விசாரணையின் போது இந்தச் சிறுமிகள் உடைகள் கிழிக்கப்பட்ட நிலையில், தந்தையின் முறைப்பாட்டை அடுத்து பொலிசார் தலையிட்டனர். பொலிசார் மீட்க முடியாது போன நிலையில், நூற்றுக்கணக்கில் பொலிசார் தலையிட்டு இந்த சிறுமிகளை அங்கிருந்து மீட்டு எடுத்தனர்.

இந்த நிகழ்வு முன்னதாகவே பள்ளிவாசல் ஒலிபரப்பு மூலம், இந்த சிறுமிகளின் நடத்தை பற்றிய அவதூறுகள் பரபபப்பட்டு, இஸ்லாமிய ஆணாதிக்கக் கூச்சல் மூலம் மக்கள் திரட்டப்பட்டனர். இந்த அடிப்படைவாதக் கூட்டம், பொலிசார் அங்கிருந்து அவர்களை மீட்பதற்கு எதிராக மோதியது. இந்தக் காத்தான்குடியில் பேரிச்சை மரத்தை நடுவது, வீதிப் பெயர்ப் பலகையில் அரபு மொழியை திணித்தது வரை இஸ்லாமிய அடிப்படைவாதம் வேரூன்றி வருகின்றது. பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களின் துணையுடன் தான் இது அரங்கேறுகின்றது.

இலங்கையில் இனவாதம் மூலம் அரசியல் நடத்தும் சிங்கள, தமிழ் அரசியல் வாதிகள் போல், முஸ்லீம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மதம் மூலம் தான் அரசியல்வாதிகள் அரசியல் நடத்துகின்றனர். இதன் பின்னணியில் இங்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் மேலெழுகின்றது. இதன் பின்னணியில் அரபுலக அடிப்படைவாத பண உதவிகள் உண்டு.

இஸ்லாமிய அடிப்படைவாதம் சார்ந்த அரசியல், முஸ்லீம் இனம் சார்ந்த அடிப்படையில் இலங்கை இன முரண்பாட்டுக்குள் தன்னை ஒருங்கிணைக்கவில்லை. மாறாக மதம் சார்ந்து இனவாதிகளுடன் ஒன்றிணைந்து நிற்பவர்கள், இன முரண்பாட்டுத் தீர்வு தொடர்பாக தமிழ்-சிங்கள் அரசியல்வாதிகளின் பேச்சுவார்த்தைக்குள் தம்மை நுழைக்கும் பச்சோந்திகளாகவே அரசியல் செய்கின்றனர். மதம் சார்ந்த எல்லைக்குள்ளான அரசியல் பிழைப்புவாதிகளின் பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆதிக்கம் பெறுகின்றது. பொதுவாக இந்த எல்லைக்குள் தான், முஸ்லீம் அறிவுத்துறையினர் தம்மை வெளிப்படுத்துகின்றனர்.

பொதுவான மத நம்பிக்கை, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கேள்விக்குள்ளாக்காத வரை, அடிப்படைவாதம் சமூகத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தொடங்குகின்றது. இது தான் இந்த சிறுமிகளின் பாலியல் நடத்ததை மீது அவதூறு செய்தது. அவர்கள் உடல் மேல் தங்கள் அதிகாரத்தை பிரயோகித்து. தங்கள் ஆணாதிக்க இஸ்லாமிய அடிப்டைவாதம் மூலம் குதறியது மட்டுமின்றி அதை நியாயப்படுத்தி தர்க்கமும் செய்கின்றது.

முஸ்லீம் மக்கள் மத்தியில், இஸ்லாமிய மதம் சார்ந்த பொதுவான பண்பாட்டு கலாச்சார கூறுகளுக்கு அப்பால், இஸ்லாமிய அடிப்படைவாதம் சார்ந்த விடையங்களை முஸ்லீம் அறிவுஜீவிகள் என்று கூறிக்கொள்வோர் விமர்சனம் செய்வதில்லை. குறிப்பாக முஸ்லீம் பகுத்தறிவுவாதிகள், மத நம்பிக்கை அற்ற முஸ்லீம் அறிவுத்துறையினர், முஸ்லீம் மக்கள் மத்தியில் இன்மை, இஸ்லாமிய அடிப்படைவாதத்தினைக் கண்டு கொள்வதில்லை.

இந்தப் பின்னணியில் சிறுமிகள் மேலான பாலியல் ஒழுக்கம் மீது, ஆணாதிக்க இஸ்லாமிய அடிப்படைவாதம் நடத்திய அடாவடித்தனத்தைக் கண்டிக்கத் தயாரற்ற பொதுத்தன்மையும், மதத்தைப் பகைக்காத பொதுப் போக்கும், இதை மதம் சார்ந்து மூடிமறைக்கும் அழுகுண்ணி ஆட்டத்தையே செய்கின்றனர்.

இப்படி காத்தான்குடி முஸ்லீம் மக்கள் மத்தியில், இஸ்லாமிய மதம் சார்ந்த கண்காணிப்பு தீவிரமாகி வருகின்றது. அந்த மக்களை பொதுவான மதப் போர்வையில், மூடிமறைத்து இயங்கும் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒடுக்கி வருகின்றது. சம்பவங்களை மூடிமறைக்க வெறும் கலாச்சாரப் பிரச்சனையாக இவற்றைத் திரித்து, இஸ்லாமிய மத அடிப்படைவாதம் சமூகத்தைக் குறுக்கி வெளி உலகில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி வருகின்றது. இதைத்தான் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் உலகெங்கும் முன்னிறுத்துகின்றது. இன்று இலங்கையில் இது ஊடுருவி வருகின்றது. காத்தான்குடியில் இது இன்று வெளிப்பட்டு அம்பலமாகி நிற்கின்றது.

பி.இரயாகரன்

30.06.2011

 

 

Last Updated on Thursday, 30 June 2011 14:23