Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் கைலாசபதியின் 28.வது ஆண்டு நினைவாக (பகுதி. 7)

கைலாசபதியின் 28.வது ஆண்டு நினைவாக (பகுதி. 7)

  • PDF

மு.தளையசிங்கமும் முற்போக்கு இலக்கியமும்

எனக்கு இந்த முற்போக்கு என்ற அடைமொழியே பிடிக்கவில்லை. அது ஒரு திருகப்பட்ட அர்த்தத்தைத் தான் கொடுக்கிறது. மனிதனின் பிரச்சினைகளை மிக அக்கறையோடு அணுகும் கலை நிறைந்த இலக்கியங்கள் எல்லாம் முற்போக்கு இலக்கியங்கள் தான். இலக்கியத்தை முற்போக்கு இலக்கியம், பிற்போக்கும் இலக்கியம் என்று பிரிக்க முடியுமானால்; முற்போக்கு இலக்கியத்தையும் அதி முற்போக்கு இலக்கியம், அதி அதி முற்போக்கு இலக்கியம் என்று உலகத்தில் எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்களோ அத்தனை பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டே போகலாமே!

 

எனவே இலக்கியம் என்றாலே முற்போக்கு இலக்கியம் தான் என்பது கருத்து. இலக்கியம் என்றால் முற்போக்கு இலக்கியம் முற்போக்கு இலக்கியம் என்றால் இலக்கியம் – அது தான் நான் நினைப்பது. தரமற்றவற்றை இலக்கியத்துக்கு உயர்த்திப் பின்பு அவற்றை வேறுபடுத்த முயலும் போது தான் முற்போக்கு இலக்கியம் என்ற பெயர் எழவேண்டிய நிலை ஏற்படுகிறது. இது தரமற்ற இன்றைய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் தரமற்ற தன்மையை மறைப்பதற்காக தாங்களாகவே ஒதுக்கப்பட்டுக் கீழே விழுந்து விடும், வேறு தரமற்ற படைப்புகள் உயர்ந்தவை என்று காட்ட முயலும் ஒரு நிலை. உருவத்துக்க முக்கியம் கொடுக்காமல் (கொடுக்க முடியாததால்) உள்ளடக்கத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் சில எழுத்தாளர்களும் இந்தப் பணிக்கு மிகவும் உதவுகிறார்கள். அதனால் தான் ‘முற்போக்கு இலக்கியம்’ என்ற இந்தத் தலைப்பும் குறையை மறைக்க முயலும் ஒரு வகை விளம்பரம் என்று ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டேன்.

 

அப்படியென்றால் முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வி,  இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியாக மாறிவிடுகிறது. இலக்கியம் என்றால் என்ன?.  அதைப் பற்றி ஆயிரக்கணக்கானோர் எழுதிவிட்டனர். இனியும் எழுதுவது வாசகர்களின் அறிவை அவமதிக்கும் அனாவசியமாகும். அத்துடன்  ஆன  எதிலும் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். இலக்கியத்துக்கு உருவமும் வேண்டும்.  உள்ளடக்கமும் வேண்டும். இலக்கியத்தின் இரு கால்கள் அவை. ஆனால் அந்த உருவமும் உள்ளடக்கமும் ஒவ்வொரு தனிப்பட்ட எழுத்தாளனின் சக்திக்கேற்ப விரியக் கூடியவை. புதுமைப்பித்தன் தம் சிறுகதைகளின் உள்ளடக்கத்துக்கு மட்டும் ஓர் உச்சத்தைக் கொடுக்கவில்லை. அவருடைய எழுத்தின் சத்தியாலும் நடையின் கவர்ச்சியாலும் கலைமிகுந்த கவர்ச்சியாலும் உருவத்துக்குமே ஓர் புது உச்சத்தைக் கொடுத்திருக்கிறார் என்பது தான் என் எண்ணம். ஆனால் உருவமும் உள்ளடக்கமும் அவனவனின் சக்திக்கும் திறமைக்கும் என்றாலும் ஒவ்வொரு எழுத்தாளனும் எதிர்நோக்க வேண்டிய சில பொதுப் பிரச்சினைகளும் உண்மைகளும் இருக்கின்றன. அவை அவனது சூழலாலும் கால கட்டத்தாலும் , அதே சமயம் மனித வர்க்கத்துக்கே சொந்தமான எல்லாக் காலகட்டத்துக்குமே செல்லுபடியான பொது மனிதத் தன்மையாலும் நிர்ணயிக்கப்பட்டு எழுகின்றன. அந்தப் பொதுப் பிரச்சினைகளை தன் சக்திக்கும் அறிவுக்கும் ஏற்ப ஓர் எழுத்தாளன் அணுகும்போது அவனுடைய தனித் தன்மையைக் காட்டும் உருவமும் உள்ளடக்கமும் கொண்ட இலக்கியங்கள் வெளிவருகின்றன. நான் ஓர் எழுத்தாளன். என் தனித்தன்மையை விளக்கம் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் கொண்ட இலக்கியத்தைத் தெரிய வேண்டுமானால் இலக்கியத்துக்கு நான் கொடுக்கும் வரைவு இலக்கணத்தைப் புரிய வேண்டுமானால்,  இனி நான் வெளியிடும் படைப்புகளைத்தான் படிக்க வேண்டும். ஆனால் என்னை இன்று எதிர்நோக்கும் பொதுப் பிரச்சினைகளும் உண்மைகளும் இருக்கின்றன. அவற்றைத் தான் மற்ற எழுத்தாளர்களும் எதிர்நோக்குகிறார்கள். எதிர்நோக்கும் போது அவரவர் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்பத்தான் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். அவற்றை என் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ப நான் எப்படிப் புரிந்து கொள்கின்றேன் என்பதைக் காட்டுவது தான் இக்கட்டுரை. அதன் மூலம் வரைவு இலக்கணம் கொடுப்பதை விட இலக்கியத்தைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை அதிகமாகத் தெளிவு படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன்……

அடுத்தது தனித்தன்மை-அது மிக முக்கியம். மற்றவர்களைப் பார்க்கும்போது என் முன்னே எழும் பொதுப் பிரச்சினைகளை அணுகும் போது என்னை நான் இழந்து விட விரும்புவதில்லை. என்னை நான் மறந்து விடக் கூடாது. விளம்பரங்களும் கூட்டுகளும் எனக்குப் பிடிக்காதவை. என் திறமை அதில் எனக்குள்ள நம்பிக்கை அத்துடன் அவை எல்லாவற்றையும் விட நான் போற்றிக் காப்பாற்ற விரும்பும் என் தனித்தன்மை என்பவற்றுக்கு விளம்பரங்களும் கூட்டுகளும் நேர் எதிரானவை. நான் தனித்தன்மையில் அதிகப் பற்றுள்ளவன். கட்சியின் கட்டுப்பாடுகளும் சமூத்தின் சட்ட திட்டங்களுக்கும் எப்போதும் தலைசாய்க்க விரும்பாதவன்.  தி.மு.க அமைப்புக்குள் இயங்க வேண்டிய நிலை கம்பனுக்கு எற்பட்டிருந்தால் அப்படி ஒரு காப்பியத்தை அவனால் பாடியிருக்க முடியாது. கொம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட திட்டங்களுக்குள் ஜெயகாந்தனும்,  நம் முற்போக்க எழுத்தாளர் சங்கத்தின் பிற்போக்கு நோக்கங்களுக்குள் எஸ். பொன்னுத்துரையும் எழ முடியாமல் வீழ்ந்திருந்தால்;  இன்று அவர்கள் எழுதும் தரமான கதைகளை அவர்களால் எழுத முடிந்திருக்காது. ஒவ்வொரு எழுத்தாளனும் நான் வைத்திருக்க விரும்பும் அதே தனித்தன்மையை வைத்திருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் வகுப்பவர்கள் கட்சியோடும் அரசாங்கத்தோடும் செத்துப் போகட்டும். இலக்கியத்துக்குள் வர வேண்டாம். ஒவ்வொரு எழுத்தாளனம் ஒர் மேதாவி. தனக்கேற்ற சட்ட திட்டங்களை அவன் தானே அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தனித்தன்மை காப்பாற்றப்படும். அந்தத் தனித்தன்மை அவனது இலக்கியங்களில் பிரதிபலிக்கப்படும்.

எனவே இலக்கியம் என்பதன் மூலம் கட்சி இலக்கியத்தை நான் கருதவில்லை. கட்சி இலக்கியத்தை அடியோடு வெறுக்கிறேன். கலை கலைக்காக என்ற வாதம் பிழையானது. ஆனால் அதைவிடப் பிழையானது கலை கட்சிக்காக என்ற வாதம். முன்னதில் கொஞ்சமாவது தனித் தன்மைக்கும் புதிய தத்துவங்கள் பிறப்பதற்கும் வசதி இருந்தது. பின்னதில் அந்த வசதி கொஞ்சமும் இல்லை. ஒருமைப்பாடு ஒருமைப்பாடு!.  ஒரே ராகம்!.  எல்லாப் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு ஒரே கலை மக்களுக்காக – நானும் கை தூக்குகிறேன். ஆனால் மக்கள் என்பதைக் கட்சியாக மாற்றுவதை நான் அடியோடு எதிர்க்கிறேன். கட்சி என்பது மக்களாக விரிய வேண்டும். ஆனால் அது இன்றைய அரசியல் கட்சிகளால் முடியாது. வேறு எந்தக் கட்சிகளாலும் முடியாதது. காரணம் மனிதத் தண்மைகள், எண்ணங்கள், மன எழுச்சிகள் என்பவற்றை  கொண்டு அளக்க முடியாது. அவை விசாலமானவை. மிகச் சிக்கலானவை. ஒவ்வொரு கட்சியும் அந்தச் சிக்கலான பரந்த அளவில் ஒரு சிறு பின்னந்தான். ஒரு பின்னம். அது முதலாளித்துவ ஜனநாயகத்திலும் சரி தொழிலாளித்துவ சர்வாதிகாரத்திலும் சரி ஒன்றேதான்.

எனக்குப் பொது மக்களைப் பிடிக்காது என்பதல்ல அர்த்தம். பொது மக்களைப் பற்றிய என் அபிப்பிராயம் வேறு என்பது தான் உண்மை. மக்களைத் தனித்துக் கோடுகள் தெரியாத நீர்த் திரளாக நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு மக்கள் திரள் தத்துவம் கட்சியும் சர்வாதிகாரியும் வெட்டும் வாய்க்காலைத் தவிர வேறு வழியில் மக்களை ஒட விடுவதில்லை. மக்களில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதென்றால் ஒவ்வொரு மனிதனிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறதென்பது தான் அர்த்தம். ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறு நீர்த்துளியல்ல.  மற்றவர்களோடு கலந்து சேர்ந்து தன் தனித் தன்மையை இழந்து ஒட்டத்தையும் வேகத்தையும் ஏற்படுத்தா விட்டால் காய்ந்து ஆவியாய்ச் செத்துவிடுவதற்கு!.  ஒவ்வொரு துளியும் ஓர் ஒட்டத்தை ஏற்படுத்தக் கூடியது!.  முழு ஓட்டத்தையுமே மாற்றக் கூடியது!.  அந்த அதிசயத் துளி தனி மனிதன்!.  எனவே நான் பொதுத் தன்மையை பொது முன்னேற்றத்தை விரும்புகிறேன் என்றால், அது தனித் தன்மையும் தனி முன்னேற்றத்தை விரும்புகிறேன் என்றால்,  அது தனித் தன்மையும் தனி முன்னேற்றமும் வளர்வதினால் ஏற்படும் பொது முன்னேற்றமே. மற்றவர்களின் தனித் தன்மையை விழுங்கி அடக்கி வளரும் ஒரு தனித்தன்மை எப்படி சர்வாதிகாரமாகி விடுமோ; அப்படி ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் விழுங்கி வளரும் பொதுத் தன்மையும் சர்வாதிகாரமாகி விடுகிறது. கட்சி இலக்கியம் கூடாது என்று கருதுவது அதனால்தான். மக்களின் பரந்த வாழ்க்கைக்குக் கட்சி தன்னிடமிருக்கும் ஒரு முழத் துணியில் இலக்கியம் தைக்கிறது. அதனால் அந்த ஒரு முழத் துணிக்கேற்ப வாழ்கையையே வெட்டி ஒதுக்கி விடுகிறது. அதற்குப் பின் இலக்கியம் என்பது வாழ்க்கையின் ஒரு சிறு பின்னத்தின் பிரதிபலிப்பாகவே ஆகிவிடுகிறது. அதோடு இலக்கியப் போக்கில் ஒருமைப்பாடு யந்திரப் பிடியாக விழுந்து விடுகிறது. அதன் பின் ஒரு ஸ்தம்பிதம். அதற்குப் பின் இலக்கியம் மக்களுக்காகத் தான் படைக்கப்பட்டாலும், அது முற்போக்கு இலக்கியமாகப் பின் தங்கி விட்ட பிற்போக்கு இலக்கியமாக அதாவது இலக்கியமற்றதாக மாறி விடுகிறது. அதற்குப் பின் கட்சியின் பிரசாரம் எல்லாம் வெறும் விளம்பரமாகி விடுகிறது. கட்சியின் பிற்போக்குத் தன்மையையும் குறுகிய நோக்கையும் மறைக்கும் விளம்பரம்.  நம் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுடைய நிலையும் அதே நிலைதான்.

(தொடரும்)

Last Updated on Tuesday, 21 June 2011 18:58