Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் ஏகாதிபத்திய முரண்பாடுகளும், படுபிற்போக்கான அரசுகளும்

ஏகாதிபத்திய முரண்பாடுகளும், படுபிற்போக்கான அரசுகளும்

  • PDF

நாடுகளுக்குள்ளான முரண்பாடுகள் ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் சரணடையும் போது, மக்களின் மேலான ஓடுக்குமுறை வெளிப்டையான வன்முறை வடிவத்தை எடுக்கின்றது. இந்த வகையில் தான், இலங்கையும் பயணிக்கின்றது. யுத்தத்தின் பின் தனிமைப்பட்டு, ஒட்டு மொத்த மக்கள் மேலான அடக்குமுறையை ஏவுகின்றது. பலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்து தனதாக்கிய இஸ்ரேல் பாணியில், தமிழ் பிரதேசத்தின் அடையாளத்தை அழிக்கின்றது. தனக்கு எதிரான சர்வதேச நெருக்கடியிலிருந்து தப்ப, ஏகாதிபத்திய முரண்பாட்டை தனக்கு சாதகமாகக் கொண்டு தமிழ் பகுதியை இல்லாததாக்குகின்றது. இஸ்ரேல் எதைச் செய்ததோ, அதையே இலங்கை செய்கின்றது.

 

 

 

உலகளவில் அமெரிக்க–ஐரோப்பிய தலைமையிலான ஏகாதிபத்தியத்துக்கும், ருசிய–சீன ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் பல்வேறு தளங்களில் கூர்மையாகி வருகின்றது. இந்த முரண்பாடு சிலவேளைகளில் தனிப்பட்ட நாடுகளுக்கு இடையிலும், இரு முகாங்களுக்கு இடையிலானதாகவும் வெளிப்படுகின்றது.

இதன் வெளிப்பாடு நாடுகளுக்குள்ளான முரண்பாடுகளில் கூட பிரதிபலிக்கின்றது. உள்நாட்டு வளங்களைக் கைப்பற்றித் தமதாக்கும் முரண்பாடுகளும், சந்தையை மையப்படுத்த நடக்கும் ஏகாதிபத்திய முரண்பாடுகளும், கேந்திர இராணுவ பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்ட முரண்பாடுகளும் எங்கும் கூர்மையாகின்றது.

இன்று ஏகாதிபத்திய சகாப்தத்தில் உலகமயமாதல் என்பது, நாடுகளின் கொஞ்ச நஞ்ச சுயாதீனத்தையும் இல்லாததாக்கியது. ஏகாதிபத்தியமல்லாத நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் ஆட்சி அமைப்பு என்பது, ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதை அடிப்படையாகக் கொண்டது. இதைத்தான் உலகமயமாதல் உருவாக்கியிருக்கின்றது. இதனால் அரசுகளும், ஆட்சியாளர்களும் மக்களில் இருந்து அன்னியப்பட்டு ஆள்வது என்பதும், அடக்குமுறையை ஏவி ஆள்வது என்பதும், உலகளவிலான அரசியல் பண்பாக மாறியுள்ளது. இந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் சுயாதீனமாக முடிவு எடுக்கவோ, மக்களுக்கு சேவை செய்யும் ஆட்சி அமைப்பு என்றிருக்கவோ உலகமயமாதலில் சாத்தியமில்லை. ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய பொம்மைகளாக, மக்களை ஒடுக்கும் கூலிப்படையாகவே தங்கள் அரசியல் பாத்திரத்தை ஆற்றுகின்றனர்.

இங்கு தேர்தல் மூலமான "ஜனநாயகத்" தெரிவு என்பது, போலியான ஜனநாயகமாகி விடுகின்றது. இங்கு வெற்றி பெறுதல் என்பது, தங்கள் ஆட்சியை தக்க வைத்தல் என்பதும் கூட, ஜனநாயக நடைமுறையில் ஒன்றாகி விடுகின்றது. இப்படியே தான் வெல்ல வைக்கப்படுகின்றனர்.

இந்த வகையில் இதற்குள் கூட ஏகாதிபத்தியங்கள் தலையிடுகின்றது. தங்கள் சார்பு ஆட்சியை உருவாக்கவும், அதைத் தக்கவைக்கவும் முனைகின்றது. அது போல் நீண்ட சர்வாதிகார ஆட்சிகளையும் தக்கவைக்கின்றது.

ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாடும், ஆட்சியாளருக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடும், ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாத வடிவத்தை எடுக்கின்ற போது, ஏகாதிபத்திய நலன்களுடன் இவை இசைந்து விடுகின்றது.

ஆட்சியாளருக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பது, மக்களுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான முரண்பாடாக மாறாத அனைத்தும், ஏகாதிபத்திய நலனாக மீள மாறிவிடுகின்றது.

அரபுலக மக்களின் கிளர்ச்சிகள், மீண்டும் புதிய தலைமையில், அதே ஏகாதிபத்தியத்தின் அனுசரணையுடனான ஆட்சியாக மாறிய நிகழ்வுகள் இன்று வெளிப்படையாக உள்ளது. எந்த மாற்றத்தையும் தராத தேர்தல் ஜனநாயகம் போல், ஆட்சியாளரை மாற்றிவிடுகின்ற எல்லைக்குள்ளான மாற்றத்தை, மக்களின் கிளர்ச்சிகள் கூட ஏற்படுத்துகின்றது. உலகமயமாதலில் மக்களின் அதிருப்தியை, தலைமையை மாற்றுவதன் மூலம் வடிய வைக்கும் புதிய உத்தியை இன்று ஏகாதிபத்தியங்கள் வழிகாட்டுகின்றது.

தங்களால் ஆதரிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்ட தங்கள் பொம்மை ஆட்சியாளர்களை கைவிடுவதன் மூலம், தமது நலனுக்கு ஏற்ற புதிய ஆட்சியாளரை மேற்கு எகாதிபத்தியங்கள் உருவாக்குகின்றது. இந்தப் போக்குடன் முரண்படும் இவர்களுக்கு விசுவாசமாக இருந்த பழைய ஆட்சியாளர்கள், தங்கள் அதிகாரத்தை தக்கவைக்க முனைகின்றனர். இதனால் மேற்குடன் முரண்பட்ட போட்டி ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து நின்று கொண்டு, தம்மை தக்கiவைக்கும் வண்ணம் இரத்தக் களரியை உருவாக்குகின்றனர்.

பொதுப்படையாக சீன-ருசிய ஏகாதிபத்தியங்கள், மேற்கு ஏகாதிபத்தியங்கள் கைவிட்ட ஆட்சியாளர்களை சார்ந்து, தமது நலனை முன்னிறுத்துகின்ற போக்கு அதிகரிக்கின்றது. மக்கள் முன் அம்பலமான, முன்பு மேற்கால் ஆதரிக்கப்பட்டு கைவிடப்பட்ட பிற்போக்கான ஆட்சியாளர்களை முண்டு கொடுக்கின்றனர். இங்கு சீன-ருசிய ஏகாதிபத்தியங்கள் பிற்போக்கான மக்கள் விரோத ஆட்சியாளர்களுடன் ஒன்றிணைந்து, தன் ஏகாதிபத்திய நலனை அடைய முனைகின்ற அதே நேரத்தில், அமெரிக்க–ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் மக்களைச் சார்ந்து நிற்பதாகக் காட்டிக்கொண்டு "முற்போக்கு" வேஷத்தை போட்டுவிடுகின்றது.

இதனால் இன்று உலகளாவில் ஏகாதிபத்தியம் சார்ந்த, பிற்போக்கு மற்றும் முற்போக்கு அரசியல் போக்குகள் எங்கும் உருவாகின்றது. இதில் சீன-ருசிய ஏகாதிபத்தியங்கள் பிற்போக்கான அரசியல் பாத்திரத்தை வகித்து தோற்கின்றது.

உண்மையில் அமெரிக்க–ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் படுபிற்போக்கானவை மட்டுமின்றி, அதுதான் மக்களைக் காலாகாலமாக ஒடுக்க உதவியது. தொடர்ந்து ஒடுக்கும் வண்ணம் தன்னை மீளவும் நிலைநிறுத்துகின்றது. ஆனால் உள்நாட்டில் மக்களின் உணர்வுகளையும், தான் அல்லாத ஏகாதிபத்தியங்களின் தலையீட்டையும் அடிப்படையாகக் கொண்டு, ஆட்சியாளர்களை தனிமைப்படுத்தும் வேலையைச் செய்கின்றது அல்லது தம்மால் பாதுகாக்கப்பட்ட ஆட்சியாளர்களை கைவிட்டு புதிய ஆட்சியாளர்களை உருவாக்குகின்றது.

இப்படி உலகளாவிய போக்கில், இலங்கை ஆளும் வர்க்கம் மேற்கின் முன் தனிமைப்பட்டு வருகின்றது. இதற்கு எதிராக சீன-ருசிய ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து நிற்பதன் மூலம், இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள் தங்களை நிலைநிறுத்த முனைகின்றனர். இந்த வகையில் சர்வதேச ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் தன்னை நுழைத்து அதற்குள் புதைந்து வருகின்றது.

பிராந்திய மேலாதிக்க வல்லரசாகவும், இலங்கை மேலான பிராந்திய மேலாதிக்க நாடாகவும் திகழும் இந்தியா, அமெரிக்க–ஐரோப்பிய எகாதிபத்திய நலன் சார்ந்து தான் இயங்குகின்றது. குறிப்பாக பிராந்திய நலன் சார்ந்து சீனாவுடனான பலதரப்பு முரண்பாடுகள், கூர்மையாகி வெளிப்படுகின்றது. இந்த நிலையில் இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள், சீன-ருசிய ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து மேற்குடன் மோதும் போக்குக்கு எதிராக இந்தியாவும் உள்ளது.

இலங்கை அரசு மேற்கின் முன் தனிமைப்பட்டு வரும் நிலையில், இந்தியாவுடன் முரண்பாடுகளும் கூர்மையாகி வருகின்றது. உள்நாட்டில் தமிழர்கள் மட்டுமின்றி, சிங்கள மக்களுடனான முரண்பாடுகளும் கூர்மையாகின்றது.

இப்படி தனிமைப்பட்டு வரும் இலங்கை ஆட்சியாளருக்கு எதிராக, இந்தியா மற்றும் மேற்கு ஏகாதிபத்தியங்கள் "முற்போக்கான" அரசியல் பாத்திரத்தை ஆற்றுவதான மாயை ஒரு அரசியல் சக்தியாக மாற்றம் பெற்று வருகின்றது.

சீன-ருசிய ஏகாதிபத்தியங்களைச் சார்ந்த இலங்கை ஆட்சியாளர்களின் போக்கு, மேற்கு மற்றும் இந்தியாவுடனான மோதல் போக்கை கூர்மையாக்குகின்றது. இது இலங்கையில் மீண்டும் கூலி இராணுவத்தை கொண்ட மக்கள் விரோத கிளர்ச்சியையோ அல்லது இன்றைய ஆட்சியாளர்களைக் கவிழ்க்கும் சதியை அடிப்படையாகக் கொண்ட "முற்போக்கு" முகமூடியுடன் படுபிற்போக்கான சதிகள் கொண்ட அரசியல் முன்நகர்வுகள் அரங்கேறி வருகின்றது. மீண்டும் மக்கள் தங்கள் சொந்த அதிகாரத்தை நிறுவும் போராட்டத்தை மறுத்து, இவை மேலேழுகின்றது. மக்களை மேலும் படுகுழியில் தள்ளும் படுபிற்போக்கான "முற்போக்கு" களை இனம்கண்டு மக்கள் தங்கள் சொந்த அதிகாரத்துக்காக போராடுவதன் மூலம் தான், இன்றைய ஆட்சியாளர்களை தூக்கியெறிய முடியும். இதுவல்லாத அனைத்தும், மேற்கு ஏகாதிபத்தியத்துக்கும் இந்தியாவுக்கும் தலையாட்டும் புதிய பொம்மையாக பழைய ஆட்சி வடிவத்தை உருவாக்கும். இதற்கான சதிதான், மாற்றத்துக்கான ஒன்றாக இன்று காட்டப்படுகின்றது. இதற்கு எதிரான போராட்டமின்றி, மக்களைச் சார்ந்ததாக எந்த போராட்டமும் இருக்க முடியாது.

 

பி.இரயாகரன்

07.06.2011

 

Last Updated on Tuesday, 07 June 2011 19:52