Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் பிநாயக் சென் மீதான வழக்கும் தண்டனையும்: காட்டு வேட்டையின் நீட்டிப்பு!

பிநாயக் சென் மீதான வழக்கும் தண்டனையும்: காட்டு வேட்டையின் நீட்டிப்பு!

  • PDF

அடுக்கடுக்கான இலஞ்சஊழல் கதைகளாலும், விலைவாசி உயர்வின் தாக்குதலாலும் நடுத்தர வர்க்கம் பிரமைதட்டிப் போயிருக்கையில், அதன் அறிவுஜீவிப் பிரிவினரை உலுக்கி இருக்கிறது, பிரபல சமூக சேவை மருத்துவரும், மனித உரிமைகள் ஆர்வலருமான பிநாயக் சென் அவர்களுக்கு மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்ற முத்திரை குத்தி, வாழ்நாள் கடுங்காவல் தண்டனை விதித்து சட்டிஸ்கார் மாநில, ரெய்ப் பூர் நகர விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

 

மருத்துவர் பிநாயக் சென் மீதான இத்தாக்குதலைத் தனியொரு விவகாரமாகப் பார்க்க முடியாது. காங்கிரசு, பா.ஜ.க. ஆகிய பாசிச பயங்கரவாதிகளின் நேரடித் தலைமையிலும், சில சமயம் நேரடியாகவும் சில சமயம் மறைமுகமாகவும் போலி கம்யூனிஸ்டுகளின் பங்கேற்புடனும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டு வேட்டை (ஆபரேஷன் கிரீன் ஹண்ட்) தாக்குதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. நடுத்தர வர்க்கத்தின் அறிவுஜீவிகளும் இதை உணர்ந்துதான் உள்ளனர்.

தாராளமயம் தனியார்மயம் உலகமயமாக்கம் அடிப்படையிலான புதிய பொருளாதாரக் கொள்கைகளால் பொன்னுலகம் படைக்கப் போவதாக ஊதிவிடப்பட்ட வண்ண வண்ணக் குமிழிகள் எல்லாம் வெடித்துச் சிதறிவிட்டன. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல; தங்க மணலில் பெட்ரோலிய டாலர்கள் இறைந்து கிடக்கும் வடஆப்பிரிக்க, அரேபிய நாடுகளிலும் கூட மக்கள் எழுச்சிகள் ஆட்சியாளர்களை நடுநடுங்கச் செய்கின்றன. அந்த அளவுக்கு நமது நாட்டு மக்கள் எழுச்சியுறவில்லை என்றாலும், பா.ஜ.க. கூட்டணி படம் போட்டுக் காட்டிய ""ஒளிரும் இந்தியா''வும், காங்கிரசு கூட்டணி முழங்கும் ""நம் மக்கள் ஆட்சி''யும் அப்பட்டமாகப் பொய்த்துப் போனதைக் கண்டார்கள்.

 

நாட்டைப் பொருளாதார வல்லரசாக்குவது, இரண்டு இலக்கப் பொருளாதார முன்னேற்றத்துக்கான திட்டங்கள் என்ற பெயரில் நீர், நிலம், காடுகள், மலைகள், கனிமவளங்கள், எரிசக்தி எண்ணெய் வளங்கள், அரசுத் துறைத் தொழில்கள் என்று அனைத்து அரசுச் சொத்துக்களும், இயற்கை வளங்களும், உள் நாட்டு தேசங்கடந்த தரகு முதலாளிகள், அன்னிய, பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் கொள்ளைக்காக தாரை வார்க்கப்படுகின்றன. இவர்களின் கொள்ளைக்காக, தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக்கப்படுகிறார்கள், விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள், பழங்குடிகள் வாழ்விடங்களில் இருந்து விரட்டப்படுகிறார்கள்; பொதுவில் மக்களின் வாழ்வாதாரங்கள் பறிபோகின்றன. மதவெறியாலும், பிரிவினைவாத, தீவிரவாத, பயங்கரவாதப் பீதியூட்டியும் அரசு பாசிசமயமாக்கப்படுகிறது. ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் மாஃபியா கிரிமினல்களாகவும், மாஃபியாகிரிமினல்கள் அரசியல் தலைவர்களாகவும், கார்ப்பரேட் முதலாளிகளாகவும் மாறி ஆதிக்கம் செய்கிறார்கள். இவர்களின் கிரிமினல், கொள்ளைத் தாக்குதல்களிலிருந்து மக்களைக் "காக்க வேண்டிய' போலீசு, இராணுவம், சி.பி.ஐ. மற்றும் நீதித்துறையோ குற்றவாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு எங்கும் எதிலும் லஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் மோசடிகள் கொள்ளைகளில் ஈடுபடுவதை மக்கள் பார்க்கிறார்கள்.

 

அடிப்படைத் தேவைகள், குடியுரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் மட்டுமல்ல; மனித உரிமைப் போராளிகளும் ஆட்சியாளர்களின் ஏவல் படைகளால் காலில் போட்டு மிதிக்கப்படுவதைக் காண்கிறார்கள். இந்த அநீதி அக்கிரமங்களுக்கு எதிராகப் போராடும் கம்யூனிசப் புரட்சியாளர்களை, குறிப்பாக மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்குக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள உள்நாட்டுப் போர்தான் ஆபரேசன் கிரீன்ஹண்ட் என்ற காட்டுவேட்டை. இத்தகைய தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டு தமக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தித் தரும்படி இந்திய முதலாளிகளின் சங்கமே அரசுக்கு நேரடி வேண்டுகோள் விட்டது.

 

இந்த உண்மையை முதலில் உணர்ந்து கொண்டவர்கள், கம்யூனிசப் புரட்சியாளர்களின் அரசியல் செல்வாக்கின் கீழுள்ள மக்கள்தாம்; அடுத்து, காட்டு வேட்டையின் காரணத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டவர்கள், நடுத்தர வர்க்கத்தின் அறிவுஜீவிப் பிரிவினர்கள். அவர்களிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஜனநாயக மற்றும் மனித உரிமை இயக்கத்தவர்கள் ஆகியவர்களோடு ஒரு பிரிவு பத்திரிக்கையாளர்களும் காட்டு வேட்டைக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.

 

குறிப்பாக, கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காக மேற்கு வங்கம் சிங்கூர், நந்திகிராமிலும்; ஒரிசாவின் கலிங்காநகர், நியாம்கிரியிலும்; ஜார்கண்ட், சட்டிஸ்கரிலும் விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்கள் மீது துணை இராணுவத்தை ஏவிப் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முக்கியமாக சட்டிஸ்கரில், சல்வாஜூடும் என்ற கூலிப்படை பழங்குடி மக்கள் மீது நடத்திய வக்கிரமான பாசிச பயங்கரவாதத் தாக்குதல்கள். இலட்சக்கணக்கான பழங்குடி மக்களை, சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி வதைமுகாம்களில் அடைத்து வைத்திருப்பது, நியமகிரியிலும், கலிங்கா நகரிலும் பழங்குடி மக்களைப் படுகொலை செய்து வெறியாட்டம் போட்டது, உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் அம்பலப்படுத்தப்பட்டு, காங்கிரசு மற்றும் பா.ஜ.க. அரசுகளுக்கு எதிராகக் கடும் வெறுப்பையும் ஆத்திரத்தையும் பெற்றது.

 

காட்டுவேட்டைக்கு எதிராக மாவோயிஸ்டுகளின் மக்கள் விடுதலைக் கொரில்லாப்படை சட்டிஸ்கரிலும், ஜார்க்கண்ட், ஒரிசாவிலும் நடத்திய பதிலடித் தாக்குதல்கள் அரசின் துணை இராணுவப் படைக்கும், சல்வாஜூடும் என்ற கூலிப்படைக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியபோது, காட்டுவேட்டையின் தோல்வியை அறிவுஜீவிகள் அறிவித்தனர். அரசப் படைகளே தார்மீகத் துணிவை இழக்கத் தொடங்கின. அரசியல், பொருளாதார நெருக்கடிகள் முற்றி, அரசு நிர்வாகம், நீதித்துறை, பொருளாதாரம் ஆகிய அனைத்தும் தழுவிய தோல்வி அடைந்தபோது, நாட்டில் கட்டமைப்பு நெருக்கடியும் தோல்வியும் ஏற்பட்டுவிட்டதாக அறிவுஜீவிகள் ஒவ்வொரு விவகாரத்திலும் பிரகடனப்படுத்தினார்கள். இந்தக் கருத்து நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களிடையிலும் வேகமாகப் பரவி வருகிறது. கட்டமைப்பு நெருக்கடிக்குத் தீர்வும் மாற்றும் நாடாளுமன்ற அரசியல் அமைப்புக்குள்ளாகவே காண முடியாத போது, மாவோயிஸ்டுகள் உட்பட கம்யூனிசப் புரட்சியாளர்கள் மீது நம்பிக்கையையும், ஆதரவையும் வைக்கும் திசையில் அவர்களின் கவனம் திரும்பி வருகிறது.

 

இதனால், ஆத்திரமுற்ற பாசிச பயங்கரவாத ஆட்சியாளர்கள் மாவோயிஸ்டுகள் உட்பட கம்யூனிச புரட்சியாளர் மீதான கொடூரமான தாக்குதல்களை அவர்களின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் மீது மட்டுமல்ல; ஜனநாயக மற்றும் மனித உரிமைப் போராளிகள் மீதும் நீட்டித்து, பீதியூட்டிப் பழிவாங்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை அரச பாசிச பயங்கரவாதத் தலைவனாகிய அமைச்சர் சிதம்பரம் பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார். மாவோயிச ஆதரவாளர்கள், அனுதாபிகளைக் கூடத் தீவிரவாதிகளாகத்தான் கருதுவோம் என்று எச்சரித்திருக்கிறார். இதைச் செயல்படுத்தும் விதமாகத்தான், சுவாமி அக்னிவேஷ் மூலமாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட மாவோயிசத் தலைவர் தோழர் ஆசாத்துடன் உத்திரகண்ட் பத்திரிக்கையாளர் பாண்டேவும் போலி மோதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

 

புரட்சிகரத் தலைமையையும் அணிகளையும் ஒழித்துக் கட்டுவதற்காக போலி மோதல் என்கவுண்டர் வழிமுறை மட்டுமல்ல; புரட்சிகர அமைப்பின் ஆதாரவாளர்கள், அனுதாபிகளிடையே பயபீதியைப் பரப்புவதற்கும் பயன்படும். ஜனநாயகவாதியும் எழுத்தாளருமான அருந்ததிராய், காட்டுவேட்டை என்பது சொந்த நாட்டு மக்கள் மீதே, கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காகத் தொடுக்கப்பட்டுள்ள உள்நாட்டுப் போர் என்பதை அம்பலப்படுத்தி எழுதியும் பேசியும் வருகிறார். மனித உரிமைப் போராளி பிநாயக் சென் காட்டு வேட்டையின் கொடூரங்களையும் மனித உரிமை மீறல்களையும் எதிர்த்துப் போராடுவதோடு பழங்குடி மக்களுக்கும், மாவோயிஸ்டு சிறைக் கைதிகளுக்கும் மருத்துவச் சிகிச்சையளித்து வருகிறார். இப்படிப்பட்டவர்களின் பணிகள் நடுத்தர மக்களிடையே, குறிப்பாக நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளிடையே அரச பாசிச பயங்கரவாதிகளுக்கு எதிரான நல்ல கருத்துருவாக்கம் செய்கின்றன.

 

அருந்ததிராய், பிநாயக் சென் போன்றவர்கள் மீது போலி மோதல் என்கவுண்டர் தாக்குதலை நடத்த முடியாது; அது பாரிய எதிர்விளைவை ஏற்படுத்தி விடும் என்பதால் அரசுக்கு எதிராகக் கலகத்தைத் தூண்டியதாகவும், தீவிரவாதத்துக்கு உடந்தையாக இருந்ததாகவும், ராஜதுரோக (ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த 120 ஆ, 124அ ஆகிய காலனியக் கருப்புச் சட்டங்கள்) வழக்குகளை சோடித்து நீண்டகாலம் சிறையிலடைக்க எத்தணிக்கிறார்கள், இந்திய அரச பாசிச பயங்கரவாதிகள். புதுதில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் ஜம்மு காஷ்மீர் ஹூரியத் கூட்டணியின் தலைவர் சையது கிலானியோடு கலந்து கொண்டு காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது அருந்ததி ராய் மீதான குற்றசாட்டுக்கு ஆதாரம்.

 

சட்டிஸ்கர் மாநிலம் ரெய்ப்பூர் மத்திய சிறையில் மாவோயிச தலைவர் நாராயண சன்யாலைப் பலமுறை சந்தித்து, அவரிடமிருந்து ரகசியக் கடிதத்தை மாவோயிசத் தலைமைக்குக் கொடுத்தார் என்பது பிநாயக் சென் மீதான குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டுக்கு அடிப்படையோ, ஆதாரமோ, சாட்சியமோ எதுவுமில்லை, எல்லாம் புனை கதை என்று முதலாளிய செய்தி ஊடகங்களும், உயர் சட்டவல்லுநர்களுமே கேலிகிண்டல் செய்கின்றனர். மத்திய சிறை உயர் போலீசு அதிகாரி உட்பட சாட்சியமளித்த அனைவரும் குற்றச்சாட்டுக்களை மறுத்தபோதும், வழக்குக்கு ஆதாரமாக பொய்யாக போலீசே தயாரித்து வைத்த ஆவணங்களையும் சாட்சிகளையும் ஏற்று, அரசு போலீசின் குற்றப் பத்திரிக்கை வாசகங்களை அப்படியே வாந்தி எடுக்கும் வகையில் பிநாயக் சென்னுக்கு வாழ்நாள் கொடுந்தண்டனை வழங்கியுள்ளது, விசாரணை நீதிமன்றம். ஏற்கெனவே இரண்டு ஆண்டுகள் சிறையின் தனிமை கொட்டடியில் அடைக்கப்பட்டிருந்த பிநாயக் சென், மேல்முறையீடு காலத்திலும், பிணையில் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக மேலும் சில பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

 

இந்திய நீதிமன்றங்கள், பாசிச பயங்கரவாத அமைப்புகள் தாம்; அவற்றின் நீதிபதிகளின் கருப்பு அங்கிக்குள் காக்கி காவிச் சீருடை பாசிஸ்டுகள் ஒளிந்திருக்கிறார்கள் என்று கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஏராளமான சான்றுகளுடன் எடுத்துச் சொல்லி வருகிறார்கள். கேரளத் தோழர் வர்கீஸ் கொலை வழக்கில் உயர் போலீசு அதிகாரிக்கு ஆயுள் தண்டனை வழங்கியதைப் போன்ற தீர்ப்புகள் விதிவிலக்கானவைதாம் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை.

 

நீதிமன்றங்களின் பாசிச பயங்கரவாதத் தீர்ப்புகள் வந்து எத்தனை முறை இடித்துரைத்தாலும் எல்லா வண்ணப் போலி கம்யூனிஸ்டுகளும் திரும்பத் திரும்ப அவற்றின் மீது நம்பிக்கை வைக்கும் தோரணையிலேயே சித்தரிக்கிறார்கள். ""சில நேரங்களில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள், காவல்துறை அதிகாரிகள் வழங்கிய தீர்ப்புகள் போல் இருக்கின்றன. கருப்புக் கவுனுக்குள் காக்கிச் சீருடை மறைந்துள்ளதோ என்ற ஐயம் ஏற்படுகிறது... பிநாயக் சென்னுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை அளித்ததும் இவ்வாறான ஐயத்தை எழுப்புகிறது.'' (பெ. மணியரசன், தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், சனவரி 1631, 2011)

 

ஆனால், பாசிச பயங்கரவாதிகள் சில நேரங்களில் அல்ல; எப்போதும் ஐயத்திற்கு இடமின்றி ஒரே நீதிமுறையைத்தான் பின்பற்றுகிறார்கள். முதலில் தண்டனையைத் தீர்மானிக்கிறார்கள். பிறகுதான் குற்றப்பத்திரிகையையும், தண்டனையையும் தீர்மானிக்கிறார்கள். பிறகுதான் சாட்சியங்களையும் சோடணை செய்கிறார்கள். நீதிபதிகள் அதையே தீர்ப்பாக அறிவிக்கிறார்கள். பிநாயக் சென் வழக்கிலும் இதுதான் நடந்தது. கம்யூனிச புரட்சியாளர்களைத் தனிமைப்படுத்தி ஒடுக்குவது, குறிப்பாக நடுத்தர மக்களிடையே பயபீதியை உருவாக்கவும் அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய சதி நடவடிக்கைகள், அவர்கள் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை. மாறாக, அரச பாசிச பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆத்திரத்தையும் கோபத்தையும் உலகம் முழுவதிலும் உள்ள ஜனநாயக மற்றும் மனித உரிமைப் போராளிகளிடையேயும் அரசியலற்ற மக்கள் பிரிவினரிடையேயும் கூடத் தூண்டி விட்டுள்ளது. பிநாயக் சென்னை விடுதலை செய்யும்படி நோபல் பரிசு பெற்ற 22 அறிஞர்களும் விஞ்ஞானிகளும் இந்திய அரசைக் கோரி மனுப் போட்டுள்ளனர். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்தைச் சேர்ந்த 55 சமூக அமைப்புகள் கூட்டணி அமைத்து உலகின் பெருநகரங்களில் கூட்டங்கள் நடத்தி, இந்தியாவில் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி, இந்திய அரசின் ஒடுக்குமுறைகளை எதிர்த்து தியாகிகள் தினம் கடைப்பிடிக்கின்றன.

 

பிநாயக் சென் வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரியில் படித்தவர், சட்டிஸ்கரில் நீண்டகாலம் மருத்துவ சேவை புரிந்தவர் என்பதால் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் திரண்டு அவருக்கு எதிரான அடக்குமுறைக் கண்டித்து இயக்கங்கள் நடத்துகின்றன. அவரது உருவப்படமும் ""பிநாயக் சென் கலகக்காரர் என்றால், நானும்தான்!'' என்ற வாசகங்களும் பொறித்த பனியன்கள் பிரபலமாகி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளிலும் இந்த இயக்கம் பரவி வருகிறது. அருந்ததி ராய், பிநாயக் சென் முதலானோர் பிரபலமான நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள். அதனால் அவர்கள் மீதான ஒடுக்குமுறை வெளிவந்து கடும் கண்டனத்துக்குள்ளாகி உள்ளது. ஆனால், இன்னும் நூற்றுக்கணக்கானோருக்கு எதிராக அரச துரோக வழக்குகள் போட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சமீபத்தில் மூட்டை சுமக்கும் தொழிலாளியும் ம.க.இ.க. அமைப்பின் செயல்வீரருமான தோழர் இராவணன் மீது சுவரெழுத்துக் குற்றத்துக்காக இதுவரை மூன்று முறை அரச துரோக வழக்குப் போட்டு சிறையிலடைத்தனர். இப்படி வழக்குகள் பதிவு செய்துவிட்டு, பின்னர் குண்டர் சட்டத்திலோ, தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலோ பலநாள் விசாரணையின்றி சிறையிலடைக்க சதி நடக்கிறது. உள்ளூர் அளவில் நடக்கும் இத்தகைய அடக்கு முறைகளை ஊடகங்கள் கண்டுகொள்வதே இல்லை. ஆனால், இத்தகைய அடக்குமுறைகள், இருட்டடிப்புகளால் குமுறும் மக்கள் உணர்வுகளை அடக்கிவிட முடியாது. · ஆர்.கே.