Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் ஸ்பெக்ட்ரம்: கொள்ளையே கொள்கை!

ஸ்பெக்ட்ரம்: கொள்ளையே கொள்கை!

  • PDF

ஸ்பெக்ட்ரம் கொள்ளையில் விற்கப்பட்ட பொருள் என்ன, வாங்கப்பட்ட பொருள் என்ன என்பது குறித்துப் புரிந்து கொள்வது பெரும்பான்மை மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஆயிரம் ரூபாய்க் காகிதத்தைக் கண்ணால் பார்த்திராத மக்களைக் கொண்ட நாட்டில், கோடிக்கு எத்தனை பூச்சியங்கள் என்பதைக்கூட நிச்சயமாகச் சொல்லத் தெரியாத மக்களைக் கொண்ட நாட்டில், கொள்ளையடிக்கப்படும் தொகை எத்தனை கோடியாக இருந்தால்தான் என்ன? ஒரு விதத்தில் பார்த்தால், கொள்ளையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அதுவே திருடர்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகி விடுகிறது.

 

இத்தனை பிரம்மாண்டமான கொள்ளை நடந்திருந்தபோதும், அதனைத் தமது அரசியல் ஆதாயத்துக்குக்கூடப் பயன்படுத்த முடியாத நிலையிலேயே பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்காகக் கூச்சல் போடுவதைத் தவிர, வேறு எதையும் செய்யக்கூடிய நிலையில் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இல்லை. கூட்டு நாடாளுமன்றக் குழுவிசாரணைக்கு பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களைக் கொண்டு வந்து நிறுத்துவதன் மூலம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன போலும்! இதனைப் புரிந்து கொண்ட பாரம்பரியமிக்க தொழில்முறைத் திருடர்களான காங்கிரசு கட்சியினர் விவகாரத்தையே தலைகீழாகத் திருப்பிவிட்டார்கள். 2001 முதல் தொலைத் தொடர்புத் துறையில் நடந்தவை அனைத்தையும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தரவைப் பெற்றதன் மூலம், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த சி.பி.ஐ.யின் விசாரணை வலயத்துக்குள் பா.ஜ.க. உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தையும் கொண்டு வந்துவிட்டனர். ராடியா பா.ஜ.க. பிரமுகர்கள் தொடர்பு குறித்த விவரங்களை ஒவ்வொன்றாகக் கசியவிடுவதன் மூலம் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு பா.ஜ.க.வைத் தள்ளியிருக்கின்றனர்.

 

கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், தங்களுக்கிடையிலான முரண்பாட்டை எந்த எல்லை வரை தள்ளிச் செல்வதை அனுமதிக்கலாம் என்பதை ஆளும் வர்க்கங்களே தீர்மானிக்கின்றன. ஸ்பெக்ட்ரம் கொள்ளையின் தொகையைக் காட்டிலும், நீரா ராடியாவின் டேப் மூலம் அம்பலமாகியிருக்கும் விசயங்கள் ஆளும் வர்க்கத்துக்கு கவலையளிக்கின்றன. ஓட்டுக்கட்சித் தலைவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், அதிகார வர்க்கம், ஊடகங்கள், நீதிபதிகள் ஆகியோருக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலான உறவு பற்றியும் மென்மேலும் அம்பலமாவது நீண்டகால நோக்கில் நன்மை பயப்பதல்ல என்பதால், இந்த லாவணிக் கச்சேரியை அதிக இரைச்சலின்றி முடித்துக் கொண்டு, அடுத்த கொள்ளைக்கு அணியமாவதற்கே அவர்கள் விரும்புகிறார்கள்.

 

ஆ.ராசா மீதும், பெய்ஜால் போன்றவர்கள் மீதும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஒரு வழக்கு, ராடியாவின் மீது ஒரு அந்நியச் செலாவணி வழக்கு என்று இந்தப் புலன் விசாரணை முடிக்கப்படுமானால், ஸ்பெக்ட்ரம் கொள்ளையின் ஆதாயத்தைப் விழுங்கிய டாடா, அம்பானி, மித்தல் போன்ற கார்ப்பரேட் திருடர்கள், கவுரவமான தொழிலதிபர்களாகவும், இந்தக் கொள்ளையைச் சாத்தியமாக்கிய தனியார்மயம் எனும் கொள்ளை, நாட்டு முன்னேற்றத்திற்கான கொள்கையாவும் தொடர்ந்து நீடிக்கும். இதனினும் பிரம்மாண்டமான பகற்கொள்ளைகளையும் பெற்றெடுக்கும். அத்தகையதோர் நிலை உருவாவதைத் தடுக்கும் முயற்சியே இந்த இதழ்.