Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் கிரிமினல் மயமாகிவிட்டது ஊடகவியல்

கிரிமினல் மயமாகிவிட்டது ஊடகவியல்

  • PDF

சமூகத்தை முற்றுமுழுதாக அரசியல் கிரிமினல்கள் கட்டுப்படுத்தும் போது, ஊடகவியல் இதற்குள் சரணடைகின்றது. தன்னையும் தனது கருத்தையும் சுதந்திரமானதாக கூறிக்கொண்டு அதுவாகவே மாறுகின்றனர். இந்த அரசியல் கிரிமினல்கள் கீறிய கோட்டைத் தாண்டுவதில்லை. மற்றவர்களை அனுமதிப்பதுமில்லை.

 

மாறாக தமது இந்த இருப்புக்கு ஏற்ற கோட்பாடுகளையும், விளக்கங்களையும் வழங்கி அதை நியாயப்படுத்துகின்றனர். இன்று எம் மண்ணில் எத்தனை கொலைகள், எத்தனை கடத்தல்கள். வாழ்வியல் சிதைவுகள்.

 

இதை இந்த ஊடகவியலாளன் தனது ஊடகவியலில் எங்கே அம்பலப்படுத்தியுள்ளான். வசதியாகவே, இனம் தெரியாத கடத்தல்கள் இனம் தெரியாத கொலைகள் இனம் தெரியாத நபர்கள் என்று, தனது அரசியல் புல்லுருவித்தனத்துக்கு ஏற்பத்தான் எழுதுகின்றான். எல்லாக் கொலைகளும், கடத்தல்களும் யார்? ஏன்? எதற்கு? எப்படி செய்யப்பட்டது என்பது, மக்களுக்கு நன்கு தெரிந்தே இருக்கின்றது. ஆனால் ஊடகவியலாளனுக்கு மட்டும் அது இனம் தெரியவருவதில்லை.

 

உதாரணமாக மேற்கில் புலிக்கு பணம் கொடுப்பவர்களில் பெரும்பான்மை விருப்பமின்றியும், நிர்ப்பந்தம் காரணமாகவும், பயந்துதான் கொடுக்கின்றனர். இதை ஊடகவியல் அம்பலப்படுத்துவது கிடையாது. இதை அவர்கள் 'ஊடக வரைமுறைகளுக்கு" அப்பாற்பட்டது என்று கூறி, தப்பிக் கொள்ளவே இதற்கு ஆதாரமில்லை என்பார்கள். இப்படித் தான் இதற்குள் தான், இந்த ஊடகவியல் பொறுக்கிகள் பொறுக்குகின்றனர். புலியல்லாத புலியெதிர்ப்பு அரசியல், உளவு அமைப்புகளின் எடுபிடிகளாகி அவர்களின் அரசியலை கொண்டுள்ளதை இவர்கள் முன்வைக்கமாட்டார்கள். மாறாக இந்த அரசியல் கிரிமினல்களுடன் சேர்ந்து நிற்பதே ஊடகவியலாகின்றது.

 

இந்த அரசியல் பொறுக்கித் தனத்தை பாதுகாத்துக்கொள்ளவே, இவர்கள் இதற்கு ஆதாரமில்லை என்று பம்முகின்றனர். இப்படி மொத்த அரசியல் கிரிமினல்களுக்கும் உடந்தையாகவே செயல்படுகின்றனர். சமூகத்தின் சீரழிவுகளுக்கும், சமூக இழிவுகளுக்கும் காரணம் யார் எனபதை ஆராய்வதை, இந்த ஊடகவியல் மறுக்கின்றது.

 

மாறாக ஊடகவியல் என்ன செய்கின்றது, இந்த அரசியல் கிரிமினல்களுடன் சேர்ந்து பயணிக்கின்றது. உண்மையில் கிரிமினல் அரசியலை பாதுகாக்கின்ற தொழிலையே, தமது ஊடகவியலாக்கி விடுகின்றனர். மக்களுக்கு உண்மையான தகவலை வழங்குவதற்கு பதில், அரசியல் கிரிமினல்களின் மூடிமறைக்கப்பட்ட பொய்களை வாரிக் கொட்டுவதே ஊடகவியலாகி விடுகின்றது. மக்கள் ஏன் புலிகளை கண்டு நடுங்குகின்றனர். புலியெதிர்ப்பு கூலிக் குழுக்களைக் கண்டு அஞ்சுகின்றனர். இந்த நிலைமையை சுயவிசாரணை செய்ய மறுப்பதே ஊடகவியலாகின்து.

 

இதை நியாயப்படுத்தி பிழைக்கவே 'அது ஊடக வரைமுறைகளுக்கு அப்பால் தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்கின்றனர். அந்த ஊடக வரைமுறை என்ன? யார் அதைத் தீர்மானித்தனர்? யார் தீர்மானிக்கின்றனர்?

 

'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்றால், அது என்ன நடுநிலையா? இந்த நடு நிலைக்கு அரசியல் கிடையாதா? இப்படி தான், இதற்குள் தான் ஊடகப் பிழைப்புத்தனம் அரங்கேறுகின்றது. மக்கள் சார்பான அரசியல் நிலை எடுக்காவிட்டால், அனைத்து சமூகக்கேடுகளையும் அது ஆதரிக்கின்றது என்பதே வெளிப்படை.

 

இருக்கின்ற சமூகம் நடுநிலையானதா? அது சார்பற்றதா? இங்கு சமூக முரண்பாடுகள் கிடையாதா? இப்படித் தான், இதற்குள் 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்ற கூறி, அரசியல் கிரிமினல்களுடன் ஒன்றாக வம்பளந்து கொண்டு பயணிக்க முடிகின்றது.

 

இதை வெளிப்படையாக பார்ப்போம். புலிகளும், புலி அல்லாத குழுக்களும் கொலைகள் முதல் ஆள் கடத்தல்கள் வரை செய்த, அரசியல் கிரிமினல்களா இல்லையா? இதை விமர்சிக்காத, சுயவிமர்சனம் செய்யாத, இன்றும் அதை ஆதரிக்கின்ற, இதில் செயற்படுகின்றவர்களுடன், எப்படி ஊடகவியல் எந்த அடிப்படையில் இணங்கிச் செல்ல முடியும்! இது தான் அந்த ஊடக வரைமுறை? உண்மையில் மக்களுக்கு எதிரான ஒரு நிலை எடுத்துத் தான், அரசியல் கிரிமினல்களுடன் இணங்கிச் செல்லமுடியும்.

 

அவர்கள் தாம் மக்களுக்கு எதிராக செய்ததை நியாயப்படுத்துகின்றதும், மறுப்பதுமான அரசியலையே, இந்த ஊடகவியலில் வைக்கின்றனர், திணிக்கின்றனர். மக்களை மேலும் அடிமைப்படுத்துகின்ற வகையில், இவையோ உருட்டல் மிரட்டல்களே. அவர்கள் செய்யும் அரசியல் அது தான். இதை மீறுவது என்பது, தண்டனைக்குரிய குற்றம். சமூகம் படிப்படியாக இப்படி முடக்கப்படுகின்றது. சமூகத்தின் செயலற்ற தன்மைக்குள், அனைத்தும் சிதைக்கப்படுகின்றது.

 

அனைத்தும் இதுவாகி, கருத்தே இதுவாகிவிடுகின்றது. கருத்தாளர்கள் இவர்கள் மட்டுமாகிவிடுகின்றனர். இதற்குள் சோரம் போய் இயங்குவதே, ஊடகவியலாகிவிடுகின்றது. இப்படி தமது சந்தர்ப்பவாத பிழைப்புவாதத்தை நியாயப்படுத்த, 'அது ஊடக வரைமுறைகளுக்கு" அப்பால் செல்லாது என்று கூறி, ஒரு புனிதமான வரைமுறை பற்றி தானே பேசுகின்றது. இதன் புனிதத் தன்மை தான் என்ன? அதன் வரையறை தான் என்ன?

 

நிலவும் சமூக அமைப்பில் பிழைத்துக் கொள்ளும் வழிக்கு உட்பட்டது தான், இந்த வரையறை. சமூக மாற்றம், புரட்சிக்கு எதிரானதே, இந்த ஊடகவியல் கோட்பாடு. ஒடுக்குகின்ற சிறுபான்மைக்கு சார்பானதே, தான் போட்டுக் கொள்ளும் 'ஊடக வரைமுறை". சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் சார்பாக செயல்படுவது என்பது, 'ஊடக வரைமுறை". தங்களது எதிரானது என்பதைத் தான் இவர்கள் கூறுவருகின்றனர். பெரும்பான்மை மக்களைச் சார்ந்து நிற்பதாக இருந்தால், தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுத்தேயாக வேண்டும். பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கருத்து நிலைதான், சமூகத்தில் ஆதிக்கம் பெற்ற கருத்துநிலை. இதை மறுத்து பெரும்பான்மை மக்களுக்கு சார்பாக, 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்பதும், ' அது ஊடக வரைமுறைகளுக்கு" உட்பட்டது என்பதும், பெரும்பான்மை மக்களின் மேலான ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவது தான்.

 

இதற்காகவே 'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்ற கூறி, 'அது ஊடக வரைமுறைகளுக்கு" விரோதமானது என்று சுயவிளக்கத்தைக் கொடுக்கின்றனர். ஆனால் அப்படி ஒரு வரைவிலக்கணம் எதுவும் கிடையாது.

 

இதில் வேடிக்கை என்ன வென்றால், பெரும்பான்மை சார்பாக போராடும் எமது கருத்து நிலையை மறுக்க, இவர்களுக்கு இந்த வரைமுறை எதுவும் தடையாக இருப்பதில்லை. அதில மட்டும் அரசியல் நிலை எடுக்கின்றனர்.

 

'தனக்கென ஒரு அரசியல் கருத்துநிலையை எடுக்காது" என்று, சமூகத்தில் இருந்தபடி இப்படிச் சொல்வது என்பது, சமூகத்தை கேனயனாக்கின்ற பிழைப்புத்தனத்தை அடிப்படையாக கொண்டது. அரசியல் என்பது கிரிமினலாகிவிடும் போது, ஊடகவியலும் அதற்குள் தான் சஞ்சரித்துப் பிழைக்கின்றது.

 

பி.இரயாகரன்
27.01.2008