Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் "முப்பது வருட போராட்டத்தால் எமக்கு என்ன கிடைத்தது - டக்ளஸ்"

"முப்பது வருட போராட்டத்தால் எமக்கு என்ன கிடைத்தது - டக்ளஸ்"

  • PDF

எதுவுமில்லை என்பது உண்மைதான். சரி 25 வருடமாக அரசுடன் நீங்கள் நின்றதால் எமக்கு என்ன தான் கிடைத்தது? அதைச் சொல்லுங்கள். 60 வருடமாக இந்த அரசால் தமிழ்மக்களுக்கு என்ன தான் கிடைத்தது. அதையாவது சொல்லுங்கள். எதுவுமில்லை. முப்பது வருட போராட்டத்தால் மட்டுமல்ல, இதுவல்லாத உங்கள் வழிமுறைகளிலும், ஏன் 60 வருடமாக தமிழ்மக்களுக்கு யாராலும் எதுவும் கிடைக்கவில்லை.

ஆக போராட்டத்தால் மட்டுமல்ல, போராடாமல் கூட எதுவும் மக்களுக்கு கிடைக்கவில்லை. போராட்டம் தவறல்ல. போராடிய வழிமுறைதான் இங்கு தவறாக இருந்துள்ளது.

 

 

இப்படி உண்மையிருக்க, மக்களை ஏமாற்ற 60 வருடமாக சொன்ன அதை கதையையே மீள சொல்கின்றார் டக்ளஸ். "எங்கள் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி தயாராக உள்ளார். தமிழ்த் தலைவர்கள் தயாராக இல்லை." என்கின்றீர்கள். ஆக எங்கள் பிரச்சனையைத் தீர்க்க ஜனாதிபதி தயாராக இல்லை என்பதை சொல்லுங்கள். அதுதானே உண்மை. யுத்தத்தை நடத்திய போது புலிகளும், இந்த "தமிழ் தலைவர்களும்" இந்த யுத்தத்தை நிறுத்தக் கோரிய போது, என்ன உங்கள் ஜனாதிபதி யுத்தத்தை நிறுத்தினாரா? இல்லை. தமிழ் தலைவர்களால் யுத்தத்துக்கு எந்த தடையும் ஏற்படவில்லை. ஜனாதிபதி புலியின் அழிவு வரை யுத்தத்தை நடத்தினார். இப்படி உண்மை இருக்க, "ஜனாதிபதி பிரச்சனையை தீர்க்க தயாராகவுள்ளார் தமிழ்த் தலைவர்கள் தான் தடையாக உள்ளனர்" என்பது கேலிக்குரியது அல்லவா. அவர் யுத்தத்தை நடத்தியது போல், பிரச்சனையை அவராகவே தீர்க்க வேண்டியதுதானே. அவருக்கு என்ன தடை?

சரி "எங்கள் பிரச்சனை" தான் என்ன? அதை ஜனாதிபதி எப்படி அடையாளம் கண்டுள்ளார். அதையாவது சொல்லுங்களேன். "தமிழ்த் தலைவர்கள் தயாராக இல்லை" என்பது உண்மையாகவே இருக்கட்டும், ஒரு நாட்டின் ஜனாதிபதி நாட்டின் பிரச்சனையைத் தீர்க்க, அவை தடையாக இருப்பதில்லை. மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய எந்த தீர்வையும், மக்கள் எதிர்ப்பதில்லை.

ஆக இங்கு தடை, மக்கள் பிரச்சனையைத் தீர்க்கத் தயாரற்ற ஜனாதிபதியேதான். இந்த உண்மையை மூடிமறைக்க, "தமிழ்த் தலைவர்கள் தயாராக இல்லை" என்று சொல்ல வேண்டியுள்ளது. சரி இந்தத் தமிழ் தலைவர்களின் யோக்கியதை என்ன?

ஜனாதிபதி எலும்பை போட்டால் கவ்விக்கொண்டு குரைக்கும் எல்லையைத் தாண்டி, அவர்கள் தமிழ் மக்களின் நலனுக்காக வாழ்பவர்களல்ல. இந்த எல்லையில் அவர்கள் "தமிழ்த் தலைவர்களாக" இருக்கின்றனர். நீங்கள் இப்படி "தமிழ்த் தலைவர்கள்" என்று விழிக்கும் போது, நீங்கள் யார்? சரி உங்கள் ஜனாதிபதி யாரின் பிரதிநிதியாக தன்னை வெளிப்படுத்துகின்றார்?

இங்கு தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத ஜனாதிபதியும், தமிழர் பிரச்சனையை தீர்க்காத ஜனாதிபதியும், அவருக்கு ஏற்ப தாளம் போடும் டக்கிளசும் தான், தம் பங்குக்கு தமிழ்மக்களுக்கு எதிராக இயங்குகின்றனர்.

தமிழ்மக்கள் சந்திக்கின்ற அரசியல் பிரச்சனைக்கு அரசு தானாக முன்வந்து, தீர்வு காண்பதன் மூலம் தான், இனம் கடந்த மனித உணர்வுகளை உருவாக்க முடியும். இன்று யுத்தக் கைதிகள் முதல் இனப்பிரச்சனை வரை, இந்த அரசு தானாக தலையிட்டு தீர்வை காணாத வரை, "தமிழ்த் தலைவர்கள்" என்கின்றவர்கள் தோன்றிய பிரச்சனை இனவாதமாக தொடர்ந்து திசைமாறிப் போகின்றது.

மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு "தமிழ்த் தலைவர்கள்" பேச வேண்டிய அவசியம் கிடையாது. இங்கு இதை தீர்க்காமல் இருப்பதற்காகவே அரசு பேசுகின்றது. "தென்னிலங்கை மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒத்துழைத்தால் தான் அரசினால் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வை எட்டக்கூடியதாக இருக்கும்." என்பது அபத்தமானது. நீங்கள், கருணா, பிள்ளையான் … என்று நீங்கள் அனைவரும் சேர்ந்து அரசுடன் நின்றதன் மூலம், எந்தத் தீர்வையும் தமழ் மக்களுக்கு காணமுடியவில்லை. "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு" ஒரு தமிழர் தரப்பு இனவாதக் கட்சியாக தொடர்ந்து இருப்பதற்கு காரணமே, இந்த இனவாத அரசு என்ற இருப்புத்தான். அரசு தானாக இந்தப் பிரச்சனையைத் தீர்த்தால் "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு" வரலாற்றில் தானாகவே காணாமல் போய்விடும். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு" பை அரசியல் ரீதியாக தொடர்ந்து வைத்திருப்பது இந்தப் பேரினவாத அரசுதான்.

"இன்று அனேகமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது." என்பது விசித்திரமான வக்கற்றவர்களின் புலம்பல். "அனேகமான பிரச்சினை" என்று எதைக் குறித்து இது கூறப்படுகின்றது. வடகிழக்கில் தொடரும் சிவில் சமூகமற்ற இராணுவமயமாக்கல் முதல் வடக்கு கிழக்கை நாட்டின் பொது சிவில் சட்ட ஒழுங்கில் இருந்து தனிமைப்படுத்தும் சிறப்பு கண்காணிப்புக்கள் வரை, இதற்குள் எத்தனை விதமான ஒடுக்குமுறைகள். தங்கள் உறவுகளை தேடுவோர், குற்றச்சாட்டு இன்றி சிறையில் வாழ்வோர், சிறையில் யார் யார் உயிருடன் இருக்கின்றனர் என்று தெரியாது பரிதவிக்கும் மனித உணர்வுகள் வரை, எத்தனை எத்தனை பிரச்சனைகள். "அனேகமான பிரச்சினை" தீர்ந்துவிட்டதாக கூறி "அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்" என்று கூறுவது, முன்னையதை மூடிமறைப்பது தான் இங்கு பேரினவாத வக்கிரமாகவே வெளிப்படுகின்றது.

உண்மை இப்படி இருக்க "பிரேமதாசா, சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்கா, ராஜபக்ச இவர்களுடன் பேசி அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய சந்தர்ப்பங்களைத் தமிழர்கள் தவறவிட்டு விட்டார்கள். திரும்பவும் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தான் தீர்க்க வேண்டும். அதற்கு ஜனாதிபதி தயாராக உள்ளார். தமிழ்த் தலைவர்கள் தயாராக இல்லை." என்பது கடைந்தெடுத்த அரசியல் அற்பத்தனமாகும்;.

பேசித் தீர்க்க சந்தர்ப்பம் கிடைத்தது என்பது அப்பட்டமான பொய். இனப்பிரச்சனையைத் தீர்க்க தயாரற்ற சந்தர்ப்பங்கள் தான் வழங்கப்பட்டது. அதை பேச்சுவார்த்தை மேசையில் வைத்து அம்பலப்படுத்த முடியாதவர்களாகவே பேசியவர்கள் இருந்தார்கள். இங்கு இதுதான் உண்மை. இந்த உண்மையை எதிர்மறையில் முன்னிறுத்தி, அவர்கள் தீர்வைத் தரத் தயாராக இருந்ததாக கூறுவது தான் இங்கு கடைந்தெடுத்த பொறுக்கித்தனம்;.

சரி அந்த தீர்வுகள் தான் எங்கே? புலிகள் இருந்த வரை அவர்கள் தான் தீர்வுக்கு தடை என்றார்கள். அவர்களை அழித்த பின் அதை முன்வைக்கவில்லை. இப்போது "தமிழ்த் தலைவர்கள் தயாராக இல்லை" என்று கூறிக்கொண்டு, தமிழனை அழிக்க புறப்பட்டுள்ளனர்.

ஆக உரிமைக்காகவும், தங்கள் இருப்புக்காகவும் போராடுவதைத் தவிர, வேறு வழி மக்களுக்கு இன்று கிடையாது. இதுதான் இதன் பின்னுள்ள உண்மை.

 

பி.இரயாகரன்

08.05.2011

Last Updated on Sunday, 08 May 2011 13:17