Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் கொலைகாரனும், பொறுக்கியுமான சிவராமின் பெயரில் பிழைக்கும் ஊடக தர்மங்கள்

கொலைகாரனும், பொறுக்கியுமான சிவராமின் பெயரில் பிழைக்கும் ஊடக தர்மங்கள்

  • PDF

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட புலிகள் அதற்காக இன்று வரை மனம் வருந்தியது கிடையாது. அதே போல் மக்களுக்கு துரோகம் செய்த ஊடகவியல், தன்னைத்தான் போற்றிக்கொள்ள முனைகின்றது. துரோகத்தின் அச்சில் எம் மக்கள் கொல்லப்பட்டனர். யாரும் இதுவரை இதற்காக மனம் வருந்தவில்லை, பொறுப்பேற்கவில்லை. தங்கள் செயலை சரியென்றும், அதன் பின்னான தங்கள் இழிந்து போன மகிமைகளை மெச்சியும் கொள்கின்றனர்.

 

பேரினவாத இலங்கை அரச பாசிசம் சிவராமைக் கொன்றதை முன்னிறுத்தி, அவனின் நினைவு தினத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் ஓடுகாலிகள், ஊடகவியலில் தொங்கிக் கொண்டு ஒளிவட்டம் கட்டுகின்றனர். இதைவிட்டால், இவர்களுக்கு வேறு எந்த அடையாளமும் கிடையாது. இதே சிவராம் 1985 மார்ச் 26ம் திகதி அகிலன் செல்வனைக் கொன்றான் என்பதும், அவர்களின் நினைவை முன்னிறுத்தி எதையும் அரசியல் ரீதியாக இவர்கள் முன்வைப்பது கிடையாது. ஆக அரசியல் ரீதியாக சீரழிந்து, சிவராம் அரசியலை முன்னெடுத்தவர்கள் சிவராமை முன்னிறுத்தி நிற்கின்றனர். சிவராமின்; அரசியலும் அவன் முன்வைத்த ஊடக தர்மமும், புலி வழங்கிய மாமனிதன் பட்டம் மூலம் உலகறிந்தது. இங்கு ஊடகவியலாளர் மகுடங்களை சிவராமின் மூலம் சூட்டிக்கொள்ளும் பின்னணியும் இதன் அரசியல் தளமும் வெட்ட வெளிச்சமானது.

1990 களில் அரசியலைத் துறந்த ஓடுகாலிகள், ஊடகவியலாளராக தம்மைத் தகவமைத்துக் கொண்டனர். அரசியலை துறந்த பின், இங்கும் நேர்மையாக எப்படித்தான் உண்மையான ஒரு ஊடகவியலாளராக வாழ்ந்தும் போராடியும் இருக்க முடியும்!? புலிக்கு ஏற்ற சிவராம் போல், சாடிக்கேற்ற மூடிகள்தான் இந்த ஊடகவியலாளர்கள்.

அண்மையில் முன்னாள் சரிநிகரைச் சார்ந்து உருவான ஊடகவியலாளர்களும், புலியைச் சார்ந்து தேசியம் பேசிய ஊடகவியலாளர்களும், இன்று அரசியல் போக்கிடமற்ற நிலையில், பேஸ்புக்கிலும், உலக தமிழ் செய்திகள் (குளொபல் தமிழ் நியூஸ்) இணையத்திலும் நக்குகின்றனர். சிவராம் பெயரில் தங்கள் ஊடகத்தனத்தை மெச்சிக்கொள்ள, சிவராமுக்கு ஒளிவட்டம் கட்டினர். புலிகளால் மாமனிதன் தகுதி வழங்கப்பட்ட அதே அரசியல் அச்சில், இந்த முன்னாள் ஊடகவியவர்கள் மெய்சிலிர்க்க வரலாற்றையே புரட்டுகின்றனர். சிவராம் பற்றிய பித்தலாட்டங்களை தங்கள் ஓடுகாலித்தனத்துக்கு ஏற்ப புரட்டுகின்றனர்.

இன்றுவரை இலங்கை அரசு பெரும் தேசியத்தை முன்னிறுத்தி புலியிசத்தை தொடர்ந்து தக்கவைப்பது போல், ஊடக சுதந்திரத்தை மிதித்து முன்னாள் ஊடகவியலாளர்களின் போலித்தனத்தை இதே அரசுதான் பாதுகாக்கின்றது. தமது ஊடக பணி பற்றி மெய்சிலிர்க்கப் புலம்பும் இந்தக் கூட்டம், தமிழ்மக்களுக்கு தங்கள் ஊடகம் மூலம் எதைச் சொன்னது என்பதை கேள்விக்குள்ளாக்குவது தவிர்க்க முடியாதது.

அரசு – புலியும் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் கொடூரங்கள் பற்பல. இதையா இந்த ஊடகவியல் பிரதிபலித்தது. இல்லை. புலியைவிட ஒப்பீட்டளவில் அரசு வழங்கிய ஊடக சுதந்திரத்தில் அரசை மட்டும் எதிர்த்து எழுதியவர்கள், என்றும் புலியை விமர்சிக்கவில்லை. மாறாக புலியாக, புலிக்கேற்ற ஊடகவியலாக ஊடகவியலை மாற்றினர். புலியின் மக்கள் விரோத அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக, அரசை எதிர்த்து எழுதும் தங்கள் பச்சோந்தித்தனத்தையே தமது ஊடகவியலாக்கினர். இதில் சிலரோ, புலியின் சம்பளப் பட்டியலில் இருந்தனர். ஊடகவியலாளன் என்று கூறிக்கொள்ளும் இவர்கள், என்றும் ஊடகத்தை மக்களைச் சார்ந்து நின்று சொன்னது கிடையாது. புலி சொன்னதைத் தாண்டி எதுவும் சொன்னது கிடையாது.

இன்று ஐ.நாவே இரு தரப்பு போர்க்குற்றத்தின் ஒரு சிறு பகுதியை சுட்டிக்காட்டிய இன்றைய நிலையில், இவர்கள் இன்றளவில் கூட அதை முன்வைக்காதவர்கள் தான். தமிழ்மக்களை குறுந்தேசிய புலி மாயைக்குள் வழிகாட்டியதில், இந்த போலி ஊடகவியலாளரின் பண்பு கெட்ட நடத்தை இன்றி எதுவும் அரங்கேறவில்லை. புலியின் மனிதவுரிமை மீறல்கள் முதல் அதன் படுகொலைகள் அனைத்தையும் நியாயப்படுத்தும் வண்ணம், அதை தங்கள் ஊடகவியல் மூலம் மூடிமறைத்தனர்.

சிவராமை அரசு கொன்றது போல், அகிலன் செல்வனை சிவராம் கொன்ற நிகழ்வை மூடிமறைத்துக் கொண்டுதான், இன்று தங்கள் ஊடாக தர்மம் பற்றி பேசுகின்ற போக்கிரித்தனத்தை நாம் பார்க்கின்றோம். இப்படி இன்று நடந்துகொள்ளும் இவர்களின் ஊடகவியல், புலிகள் நடத்தையை பற்றி எப்படித்தான் நேர்மையாக பேசியிருக்க முடியும்?

அகிலன் செல்வன் படுகொலை மட்டுமல்ல, புளொட்டில் நடந்த பல்வேறு படுகொலைகள் முதல் மக்கள் விரோத செயற்பாடுகளுடன் சிவராம் நேரடியாக சம்பந்தப்பட்டவன். அதே அரசியல் அடிப்படையில்தான், சிவராம் புலி ஊடகவியலாளனானான். ஆம் புலியின் தமிழ்நெற்றின் ஊடாக தன்னை ஊடகவியலாளனாக்கினான்.

இப்படிப்பட்ட கொலைகாரப் பொறுக்கிக்கு, மறுபடியும் சரிநிகர் தான் முதலில் பாய்விரித்தது. 1985 களில் மக்கள் போராட்டத்தை வலியுறுத்தியும், மக்களுக்காக போராடி புலி உட்பட அனைத்து மக்கள்விரோத இயக்கத்தினாலும் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியவர்களைக் கொண்டு உருவானது தான் இந்த சரிநிகர். அகிலன் செல்வன் கொலைக்கு எதிராக 1985 இல் உரத்துக் குரல் கொடுத்தவர்கள். 1990 இல் கொலைகாரர்களுடன் கூடி ஊடகவியலாளர்கள் ஆனார்கள். 2000 இல் கொலைகாரர்களின் வாரிசாக கூறிக்கொண்டு பிழைக்க முனைகின்றனர்.

1980 களில் மக்கள் சார்ந்து நின்று போராடியவர்கள், 1990 இல் அதைப் பிரதிபலிக்கும் ஒரு பத்திரிகையை முன்னிறுத்தி சரிநிகரை கொண்டுவந்தனர். அது தன் வரம்புக்குள் இரு தரப்பு விமர்சனத்தைக் கொண்டுவந்த போது, அரசியல் ரீதியாக தன் குறிக்கோளை வெளிப்படையாக துறந்திருக்கவில்லை. தனிப்பட்ட உரையாடல்கள் முதல் அவர்கள் எழுதிய தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் கூட்டுவேலை முறைகளும், பத்திரிகையில் வெளிப்படையான விலகல் குறித்த எமது விமர்சனத்தையும் மறுத்து வந்தனர். சில கடிதங்களில், இந்தச் சிவராம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவை வெளியிடப்படும்.

சரிநிகர் அரசியலைத் துறந்து ஊடகவியலாளராக தம்மை மாற்றி வந்த காலம் இது. இதன் பின் புலிக்கு ஏற்ற ஊடகவியலாளராக மாறியவர்கள், பொதுச் சூழலைக் காட்டிப் பிழைத்தனர். அரசியலை முற்றாகத் துறந்து, ஊடகவியல் மூலம் தங்களை தக்கவைக்க முனைந்தவர்கள், புலியை விட அரசு வழங்கிய சுதந்திரத்தில் நின்று அரசை விமர்சித்தனர். இறுதியில் அரசு புலியை போல் மாறிய போது, ஊடகவியலைத் துறந்தனர்.

இன்று அரசியலும் கிடையாது, ஊடகவியலும் கிடையாது. அடிப்படையில் நேர்மையும் கிடையாது. புலத்து (புலித்)தேசியத்தை சார்ந்து நின்று, நக்கிப் பிழைக்க முனைகின்றனர். உலக தமிழ் செய்திகள் (குளோபல் தமிழ் நியூஸ்) என்ற இணையத் தளத்தை கொண்டும், பேஸ்புக் மூலமும், தங்கள் பிரமுகர் வட்டத்தின் மூலமும், தமக்குதாம் ஒளிவட்டம் கட்ட முனைகின்றனர். இதற்கு சிவராம் என்ற கொலைகாரனை தங்கள் ஊடக தர்மத்தின் நாயகனாகக் காட்டி, இதன் மூலம் தமக்கு மகுடம் சூட்டுகின்றனர். இந்தச் சிவராம் புலிக்கு காவடி எடுத்ததைத் தவிர, தன் ஊடகம் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதனால் புலிகள் தன் நாய்க்கு, மாமனிதன் பட்டம் கொடுத்தனர். அதன் பின் நக்கியவர்களும், அதைக்காட்டி இன்றும் பிழைக்க முனைபவர்களும் தான், இந்த முன்னாள் ஊடகவியலாளர்கள். தமக்கு ஒளிவட்டம் கட்ட, சிவராமுக்கு ஒளிவட்டம் போட்டுக் காட்டுகின்றனர்.

தமிழ்மக்களை இலங்கை அரசு மட்டும் இந்த நிலைக்கு கொண்டு வரவில்லை, புலிகளும் தான், ஏன் இந்த ஊடகவியலாளர்களும் தான்; என்பது வெளிப்படையானது.

பி.இரயாகரன்

04.05.2011

 

 

Last Updated on Wednesday, 04 May 2011 12:21