Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் கிழக்கு வெள்ளமும், யாழ் மேலாதிக்கமும்

கிழக்கு வெள்ளமும், யாழ் மேலாதிக்கமும்

  • PDF

கிழக்கு மக்களோ மீளமீள, யாரும் கைகொடுத்து உதவ முன்வராத துன்பத்தையே அனுபவிக்கின்றனர். கடுமையான மழையும், வெள்ளமும், அந்த மக்களை மீண்டும் ஓருமுறை அகதியாக்கியுள்ளது. இயற்கை தான் இதை உருவாக்கிய போதும், செயற்கையான யாழ் மேலாதிக்கமோ, அந்த மக்களின் முதுகில் குத்தியுள்ளது.

ஒரு உதவி, ஒரு நிவாரணம், ஒரு அனுதாபம், மனிதாபிமான உணர்வு என எதுவுமற்ற, வரட்டுத்தமான அற்பத்தனமான மனநிலையில் தமிழினம். செய்திகளில் இந்த மனித சோகம், அவலம் இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. மனித அவலங்கள் இப்படித்தான் இழிவாடப்படுகின்றது. தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறுபவர்களும், தமிழ் தேசிய குத்தகைக்காரர்களும் இருக்கும் வரை, எந்த மக்களும் இப்படி அனாதைகள் போல் ஆதரவற்றுக் கிடக்க வேண்டியது தான்.

 

இதுதான் தமிழ் மக்களின் மொத்த தலைவிதி. யாழ் மேலாதிக்கம் இதன் மேல் எழுந்து நின்று ஆடும் போது, கிழக்கு மக்களின் தலைவிதி என்பது மேலும் படு பயங்கரமானதாகி விடுகின்றது.

 

இப்படி அந்த மக்களின் இன்றைய அவலத்தையிட்டு, எந்தவிதத்திலும் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்படி யாழ் மேலாதிக்கம் தனது தலைக்கனத்துடன், மக்களின் வாழ்வு மீது வம்பளக்கின்றது.

 

ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்கள், தமிழ் தேசியத்தின் மேல் ஏகபோக உரிமை கொண்டாடுபவர்கள், கிழக்கு தமிழ் மக்களை நடத்துகின்ற விதம் சகிக்க முடியாத ஒன்று. தமிழ் இனத்தின் மேலான அவமானம். கிழக்கு பிரதேசவாதம் பற்றி சதா இழிவாடுபவர்கள், எந்த விதத்திலும் அடிப்படையில் நேர்மையற்றவர்கள் என்பதையே, கிழக்கு வெள்ளம் மறுபடியும் நிறுவிவிடுகின்றது.

 

மக்களை செம்மறித்தனத்தில் மேய்க்க முனைகின்ற யாழ் மேலாதிக்க சக்திகளின் வக்கிரத்தில், கிழக்கு மக்களின் கண்ணீர்க் கதைகள் அதி பயங்கரமானவை. அண்மைக்காலமாக அந்த மக்களின் வாழ்வைச் சுற்றிச்சுற்றி அது வதைத்து வருகின்றது.

 

முதலில் சுனாமி கிழக்கைச் சூறையாடி, அந்த மக்களை நாதியற்றவராக்கியது. அந்த மக்களுக்கு யாரும் கைகொடுத்து உதவக்கூட முன்வரவில்லை. அவர்களுக்கு உதவுவதற்கென தமிழ்மக்கள் வாரிக் கொடுத்த செல்வம், அந்த கிழக்கு மக்களுக்கு ஒரு துளிதன்னும் கிடைக்கவில்லை. அந்த உதவியை யாழ் மேலாதிக்க அதிகார மையங்கள் கைப்பற்றி, அதை தமது சொந்த இருப்புக்கே பயன்படுத்தியது.

 

இதன் பின் புலியொழிப்பின் பெயரில், தமிழ் மக்கள் மேல் பேரினவாதம் ஒரு பாரிய தாக்குதலை நடத்தி அவர்களை அகதியாக்கினர். கிழக்கு மக்கள் வீடு வாசல்களை இழந்து, உழைப்பின் மூலவளங்களை எல்லாம் இழந்த, ஒரு சமூகமாகிவிட்டனர். இதன் போது கூட, கிழக்குத் தமிழ் மக்களை யாழ் மேலாதிக்கம் கண்டு கொள்ளவேயில்லை. கைகொடுத்து உதவ முன்வரவில்லை.

இன்று மீண்டும் கிழக்கில் பாரிய வெள்ளம். கிழக்கு மக்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். இதைப் பற்றிய தகவல்களைக் கூட, யாழ்மேலாதிக்கம் இருட்டடிப்பு செய்கின்றது. இதுதான் யாழ் மேலாதிக்கத்தின் தேசிய வக்கிரம்.

 

இப்படி அடுத்தடுத்த மக்களின் துயரங்களைக் கூட கண்டு கொள்ளாத தேசியமும், தேசமும். இதனால் தான் இது தோற்று வருகின்றது. மக்களைப் பற்றிச் சிந்திக்காத அரசியல், கடுகளவு கூட மக்களையிட்டு எண்ணிப் பார்ப்பதில்லை. மக்களின் துன்ப துயரங்களில் அக்கறை கொள்வதில்லை. யாழ் மேலாதிக்க அதிகாரம் என்பது, மக்களின் வாழ்வியல் அடிப்படைகளையே தகர்த்து விடுகின்றது.

 

மறுபக்கத்தில் கிழக்குப் பிரதேசவாதம் பேசியவர்களின் நிலையும் இதுதான். புலியெதிர்ப்பு புலியொழிப்பு அரசியல் பேசும் கிழக்கு மேலாதிக்கம், கிழக்கு மக்களைப் பற்றி எதுவும் பேசுவது கிடையாது. கிழக்கு மக்களை வெள்ளம் காவு கொண்டுள்ள நிலையிலும், அந்த மக்களுக்காக எதையும் செய்வது கிடையாது. இப்படிப்பட்ட கிழக்கு மேலாதிக்க பிரதேசவாத தலைமைகள் என்ன செய்கின்றனர் ? யாழ் மேலாதிக்கவாதிகள் போல் தமிழ் மக்களைக் கொல்லுகின்றனர், கொள்ளையடிக்கின்றனர், சூறையாடுகின்றனர், கப்பம் அறவிடுகின்றனர். இதில் தான் அவர்கள் சுயாதீனம். மற்றப்படி பேரினவாத எடுபிடிகளாக, கூலிக் கும்பலாக குரைக்கின்றனர். இப்படி நக்குவதில் கூட முரண்பாடுகள். அதில் ஒரு அரசியல். அதையே மாற்று அரசியல் என்று கூறி, சமூகத்தையே இதற்குள் நடுங்க வைக்கின்றனர்.

 

மக்களோ துன்பத்திலும் துயரத்திலும் சாகின்றனர். விடிவுகளற்ற இருட்டில் மக்கள் அல்லாடுகின்றனர். யாழ் மேலாதிக்கம் போல், கிழக்கு மேலாதிக்கமும் அந்த மக்களின் குரல்வளையை நெரித்துக் கொன்று வருகின்றது. இதற்கு இயற்கையும் துணைபோகின்றது.

 

இயற்கையை தனக்கு ஏற்ப மாற்ற உழைத்த குரங்கில் இருந்து தான், பரிணாமமடைந்து மனிதன் உருவானான். இன்று இயற்கையுடன் சேர்ந்து மனிதத்தன்மையை அழிக்கின்ற காட்டுமிராண்டிகள் நிலைக்கு, தமிழ்ச் சமூகம் சென்றுவிட்டது. இதையே கிழக்கு வெள்ளம் மறுபடியும் நிறுவுகின்றது.

 

பி.இரயாகரன்
27.12.2007