Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பழைய போர்; புதிய போர்க்களம்

பழைய போர்; புதிய போர்க்களம்

  • PDF

 

பதிவினை முழுமையாக ஒலி வடிவில் கேளுங்கள் :
(ஒலிவடிவில் கேட்டுக்கொண்டே பதிவை வாசிப்பது கூடுதல் விளக்கமாகவும் சலிப்பற்ற அனுபவமாகவும் இருக்கும்)


சின்னச் சின்னத் துண்டுப்பிரசுரங்களாக அந்த இரகசியச்செய்தி பொதுமக்களின் கைகளுக்கு வந்து சேர்கிறது. வீதிகளில் சுவரொட்டிகளாகப் புரட்சிகர வாசகங்களுடன் அச்செய்தி காணப்படுகிறது. அதிகார அரசின் காவலாளிகள் அவசர அவசரமாகச் சுவரொட்டிகளை அப்புறப்படுத்துகிறார்கள். ஆயிரமா இரண்டாயிரமா? கோடிக்கணக்கான சுவரொட்டிகள். போராளிகள் மறைவாக வந்து சிலர் காதுகளுக்குள் செய்தியைக் கிசுகிசுத்துவிட்டுச்செல்கிறார்கள்.

துண்டுப்பிரசுரங்களிலும், சுவரொட்டிகளிலும், சங்கேத வார்த்தைகளிலும் பரிமாறப்படும் மக்களுக்கான போர்க் குறிப்பை, தாக்குதல் ஒன்றுக்கான ஆணையை வழங்கிய தலைவர் யார்?



றொபின் ஹூடா?
மருது சகோதரர்களா?
பகத் சிங்கா?
சே குவேராவா?

யார்?

ஓர் ஊரிலல்ல; ஒரு நாட்டிலல்ல; முழு உலகிலும் செய்தி கசிகிறது, மக்களை வந்தடைகிறது.

இரவோடிரவாக, பகலோடு பகலாக உலகத்து மக்களின் பிள்ளைகள் முகமூடிகளை அணிந்துகொள்கிறார்கள். ஆயுதங்களைக் கையிலெடுக்கிறார்கள்.
தமக்கெனத் தலைமையால் ஒதுக்கப்பட்ட மறைவிடங்களில் கூடுகிறார்கள். நூறாக, ஆயிரமாக, பல்லாயிரமாக... கூடுகிறார்கள்.

உலகம் முழுதும்.

அதிகாரத்தின் மையங்களில் கலவர ரேகைகள்.
பகாசுரக் கம்பனிகளில் பயத்தின் மேகங்கள்.
எவர் எவரெல்லாம் இலக்காகக்கூடும் என்று போராளிகளால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. காவல்துறை கையைப்பிசைகிறது. அணுகுண்டுகள் செயலிழக்கின்றன. போர்விமானங்கள் படுத்துறங்குகின்றன.

தமது முதல் இலக்கு எதுவென்று மறைவிடங்களில் போராளிகள் தமக்குள் ஆலோசனை செய்கிறார்கள்.

இலக்குத் தீர்மானிக்கப்படுகிறது.

உலகம் முழுதும் ஆணை பறக்கிறது.

உலகத்துப் போராளிகளின் படைகள் அனைத்தும் குறித்த இலக்கை நோக்கித் திருப்பப்படுகிறது.

ஆணை பறக்கிறது.

பீரங்கிகள் முழங்குகின்றன!



எங்கிருந்தாலும் எவ்வேளையிலும் தங்குதடையின்றிச் செலவழிக்கலாம்!

ஓ.. Paypall! Visa! Mastercard!

மணிக்கணக்கில் செயலற்றுப்போயின.

அவர்களுக்குத் தூசாயினும், பெருந்தொகை நட்டம்.

தாக்குதலுக்குள்ளான எதிரி இலக்குகளும் தாக்குதல் நேரங்களும் வருமாறு:

TargetSiteAttack time
PostFinance postfinance.ch 2010-12-06
Swedish Prosecution Authority aklagare.se 2010-12-07
EveryDNS everydns.com 2010-12-07
Joseph Lieberman lieberman.senate.gov 2010-12-08
MasterCard mastercard.com 2010-12-08 10:30 UTC
Borgstrom and Bostrom advbyra.se 2010-12-08
Visa visa.com 2010-12-08 21:00 UTC
Sarah Palin sarahpac.com 2010-12-08
Paypal paypal.com 2010-12-09 02:50 UTC
Amazon amazon.com 2010-12-09 23:00 UTC



தாக்குதல் ஒன்றுக்கான ஆணையை வழங்கிய தலைவர் யார்?

றொபின் ஹூடா?
மருது சகோதரர்களா?
பகத் சிங்கா?
சே குவேராவா?

யார்?






யாராகவும் இருக்கவேண்டியதில்லை. நாம் யாவராகவும் இருக்கமுடியும்.

ஒரு பழைய போர், பழைய கோபம், பழைய எதிர்ப்பரசியல், பழைய தாக்குதல், பழைய கலவரம் இன்று புதிய வடிவை எடுத்திருக்கிறது. புதிய ஆயுதத்தைத் தூக்கியிருக்கிறது.
அதன் பெயர் Operation: Payback. (திருப்பிக்கொடு)




இன்றைய திகதிக்கு இத்தாக்குதல் சற்றே பழைய கதைதான் என்றாலும், விக்கிலீக்ஸ் தளம் பற்றித் தற்போது எழுந்திருக்கும் பிரமாண்டமான கவன ஈர்ப்புக்குப்பிறகு, குறிப்பாக Julian Assange கைது செய்யப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் இத்தாக்குதல் மேலும் வீரியமுள்ளதாய் மாறியிருப்பதுடன் பரவலாக உலகின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

விக்கிலீக்ஸ் தளத்தை எதிர்த்து, அத்தளத்துக்கு இடைஞ்சல்கள் விளைவித்த அத்தனை அரச, தனியார் நிறுவனங்களும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன. சும்மா ரோட்டில் போகும் "ரவுடி"களின் கல்லெறித்தாக்குதல் அல்ல இது.

ஏன் தாக்குகிறோம்; என்ன அடிப்படையில் தாக்குகிறோம்; எமது நோக்கம் என்ன; அது ஏன் மக்களின் நலனுக்கானது; எங்கே தாக்கப்போகிறோம்; எப்போது தாக்குவோம்; எப்படித் தாக்குவோம்; எல்லாம் முன்கூட்டியே சொல்லப்பட்டு மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட போராளிகளைக்கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. போதாக்குறைக்கு தாக்குதல் நடக்கும் போதே போராளிகள் ஒருங்கிணைவதையும் நிறுவனங்கள் தாக்குதலுள்ளாவதையும் நாம் எம் கண்களால் பார்த்துக்கொண்டிருக்க முடிகிறது.

சைபர் தாக்குதல்கள் எமக்கொன்றும் புதிய செய்தி அல்ல.

கணினியின் வருகையோடு நச்சுநிரற் தாக்குதலாக (Virus Attack), ஏய்ப்பாக (Hacking) விளையாட்டுத்தனமாக, பொறுக்கித்தனமாக இவ்வாறான தாக்குதல்கள் நடைபெற்றுத்தான் வந்தன.
2008 இல் ரசியா ஜோர்ஜியா மீது படையெடுத்தபோது வெளிப்படையாகவே சைபர் தாக்குதல்களையும் தன் நடவடிக்கையோடு ஒருங்கிணைத்திருந்தது.

இந்தத்தொடுப்பில் இன்னும் பலவற்றைப் பார்க்கலாம்

ஆனால் இவை எவற்றையும் விட Operation Payback மாறுபட்டது.

முன்னையவை விளையாட்டாக, விசமமாக, தனி மனிதர்களால், நிறுவனங்களால், அரசாங்கங்களால் செய்யப்பட்டது.

ஆனால் Operation payback, அரசாங்கங்களுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராக, பெரு நிறுவனங்களுக்கு எதிராக, வெளிப்படையாகச் சொல்லப்பட்ட அரசியல் அடிப்படை ஒன்றுக்காக, அரசியல் நோக்கத்தோடு, ஆட்களை ஒருங்கிணைத்து அதிகாரம் அற்ற சாதாரண மக்களால் செய்யப்படுவது. ஓர் அதிகார-எதிர்ப்பு அரசியல் இயக்கமாக நடைபெறுவது.

இதுதான் நடந்துள்ள புதிய மாற்றம்.






சைபர் வெளியில், இணையத்தின் மெய்நிகர் வெளியில் இவ்வாறு அதிகாரங்களுக்கெதிரான அரசியல் இயக்கங்கள் உருவான கதையும் அதன் பின்னணிகளும் விரிவானவை.

சுருக்கமாகச் சொன்னால், றிச்சர்ட் ஸ்டால்மன் கொண்டுவந்த கட்டற்ற மென்பொருள் இயக்கமும் அதன் வழி உருவான "எண்மிய உரிமைகள் (Digital Rights)" பற்றிய விழிப்புணர்வும் மெல்ல மெல்ல கட்டற்ற மென்பொருள் இயக்கம் Anarchistக்கள் மத்தியில் பிரபலமானதும் அதேவேளை காப்புரிமையை மீறுவதை இயக்கமாக்கிய Pirate bay இன் செயற்பாடுகளும் அதனைத்தொடர்ந்து Pirate Party என்கிற அரசியற் கட்சி உருவானமையும் பசுமைக்கட்சிகளின் தோழமையும் இணையத்தின் பெரும் பரவலும் எல்லாம் சேர்ந்தே இப்போராட்டத்துக்கான பின்னணியை அமைத்துக்கொடுத்தன.



ஒரு பந்தியில் சொல்லிவிட்டுத் தாண்டி நான் போனாலும் இந்த விடயம் விரிவாக எழுதப்படவேண்டியுள்ளது.

மேலே சொன்ன வெவ்வேறு அரசியல் இயக்கங்களின் கூட்டணியில் விக்கிலீக்ஸ் வந்து இணைந்துகொண்டது. அது நேரடியாகவே அரச அதிகாரங்களைச் சீண்டியது.

Operation Payback இனைச்சீண்டி எழுப்பிய முதல் நிகழ்வு இந்தியாவில் தான் நடந்தது. பொலிவூட் தொழிற்துறை, திரைப்படங்களைக் காப்புரிமையை மீறி பகிர்ந்து வந்த தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்துமுகமாகப் பெருந்தொகைப்பணத்தைச் செலவழித்து Aiplex Software என்ற இந்திய நிறுவனத்தைப் பணிக்கமர்த்தியது. தாக்குதலையும் நடத்தியது. கூடவே, இவ்வாறு தாம் சொல்லியும் நிறுத்தப்படாத "சட்டத்துக்குப்புறம்பான" தளங்கள் தொடர்ந்தும் தாக்குதலுக்குள்ளாக்கப்படும் என்றும் மிரட்டியது.

இந்தச் சம்பவத்தின் போதுதான் முதன் முதலில் "திருப்பிக் கொடுக்க" வேண்டிய தேவை சாதாரண இணையப் பயனர்களுக்கு ஏற்படுகிறது. Aiplex Software நிறுவனத்தின் தளத்தின் மீதே தாக்குதல் திட்டமிடப்பட்டாலும் பின்பு, அதைவிட வலுவான தாக்கத்தை உண்டாக்குவதற்காக குறித்த பிரச்சினையை கிளப்பிய திரைப்படத் தயாரிப்பாளர்களைக் குறிவைத்து அவர்களது திரைப்படத்துக்கான தளம் தாக்கி முடக்கப்பட்டது.

கூடவே இவ்வகைத்தாக்குதல்கள் இணைய வெளியில் அமைப்பாக்கப்பட்டு அரசியல் பிரகடனமும் வெளியிடப்பட்டது.

"இணையத்தில் தலையீடு செய்யும் பெருவணிக நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் நாம் எதிராகவுள்ளோம். இணையமானது கட்டற்றதாயும் அனைவருக்கும் திறந்ததாயும் இருக்கவேண்டும் என நாம் நம்புகிறோம். இதில் உடன்பாடு இல்லை என்ற காரணத்துக்காக அரசாங்கங்கள் தணிக்கை செய்ய முயலக்கூடாது"

அவர்களது முழுமையான பிரகடனங்களை இங்கே பார்க்கலாம்



பின்பு காலத்துக்குக்காலம் அறிவித்தல்களும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டு பல்வேறு காரணங்களுக்காகத் தாக்குதல்கள் பல நடத்தப்பட்டுள்ளன.


விக்கிலீக்சின் வருகைக்குப்பிறகு இணையத்தில் அரசாங்கங்களின் தலையீட்டை எதிர்ப்பது, மக்களின் தகவலறியும் உரிமையைக் காப்பது, வெளிப்படையான நிர்வாக அமைப்புக்களைக் கோருவது எல்லாமே புதிய அர்த்தத்தையும் உத்வேகத்தையும் பெற்றுக்கொண்டன. கூடவே வெறுமனே காப்புரிமைக்கெதிரான போராட்டமாக, தணிக்கைக்கெதிரான போராட்டமாக இருந்த நிலை மாறி நேரடியாக அரச அதிகார இயந்திரங்களின் கொலைகாரத் தன்மைக்கெதிரான போராட்டமாக இது மாறவேண்டியதானது.



சரி பிழைகள், சந்தேகங்கள் அனைத்தையும் தாண்டி, விக்கிலீக்ஸ் மீதான அரசுகளின் அழுத்தங்கள் இந்த இணையவெளிப் போராட்டக்குழுக்களின் வானவில் கூட்டணியைச் சாத்தியப்படுத்தி அதையொரு அரசியல் அமைப்பாக மாற்றியமைத்துள்ளது.

இவர்கள் V for Vendetta என்ற திரைப்படத்தின் குறியீடுகள், வார்த்தைகளை அடிக்கடிப் பயன்படுத்துவதிலிருந்து அவர்களது அரசியல் ரீதியான நோக்கம் தெளிவாக இருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அப்படத்தை ஒருமுறை பாருங்கள்.

[ஏற்கனவே இங்கே அறிமுகப்படுத்தப்பட்ட Pirate Party தற்போது மிதவாதம் பேசுகிறது. "சட்டரீதியாக" போராடுங்கள். தாக்குதல்கள் வேண்டாம் என்று அறிக்கை விடுகிறது ;) ]




மெல்ல இந்தத்தாக்குதலின் பின்னாலுள்ள தொழிநுட்பத்தையும் பார்த்துவிடுவோம்.

இத்தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பொதுவான உத்தி DDoS (Distributed Denial of Service attack) எனப்படுகிறது.

வலைத்தளங்கள் வழங்கிகளில் உள்ளன. நாம் ஒரு முகவரியைப் பயன்படுத்தி வலைத்தளம் ஒன்றைப் பார்க்க விரும்பினால் உண்மையில் அவ்வழங்கிக்கு கோரிக்கை ஒன்றினை அனுப்புகிறோம். கோரிக்கைக்கேற்ப வழங்கி வலைத்தளத்தை எமக்குக் காண்பிக்கிறது. வழங்கியின் தாங்கும் திறன் மட்டுப்பட்டதே. ஒரு கடையில் ஒரே நேரத்தில் ஐந்து பேர் வந்தால் சமாளிக்கலாம். ஐந்து லட்சம் பேர் வந்தால் என்னாகும்?

வழங்கியின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான்.

வழங்கி தாங்கும் அளவுக்கு மேலாக எக்கச்சக்கமான கோரிக்கைகளை அனுப்பி அவ்வழங்கியைச் செயலிழக்கச்செய்து வலைத்தளத்தை முடக்கும் உத்திதான் இங்கே பயன்படுத்தப்பட்டது.

பெரிய நிறுவனங்களின் சக்திவாய்ந்த வழங்கிகளை அடித்துச்சாய்க்க தனி ஒருவர் தாக்குதல் நடத்தினால் காணாது. பலரை ஒன்றிணைத்து ஒரே நேரத்தில் தாக்க வேண்டும். சொல்லப்போனால் படை திரட்டிப்போய்த் தாக்க வேண்டும்.

இணையத்தில் எமது முகம் தெரியாமல் உரையாடவும் உலாவவும் கூடிய வசதிகள் உண்டு. அதற்கு உதவும் தொழிநுட்பங்கள் உண்டு. அவற்றைப்பயன்படுத்தி கூடிக்கதைக்கிறார்கள். எங்கே கூடுவது போன்ற தகவலகளை Twitter, Facebook போன்ற தற்காலத் தொடர்பாடல் ஊடகங்கள் மூலம் பரிமாறிக்கொள்கிறார்கள். (கிளர்ச்சிக்காரர்களின் தொடர்பாடல் சாதனமாக இயங்கியதால்தான் Twitter தாக்குதலில் இருந்து தப்பித்தது. அது கிளர்ச்சிக்காரர்களின் முக்கிய இலக்காகவே இருக்கிறது)

பிறகு ஆயுதங்களைத் தயார்படுத்துகிறார்கள்.

இந்தத் தாக்குதலுக்கு இக்கிளர்ச்சிக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் LOIC எனப்படுகிறது. இதன் விரிவான பேர் கேட்டால் சும்மா அதிரும்.
"Low Orbit Ion Cannon"

தாக்குதல் இலக்கு, தாக்குவோர், தாக்கும் முறை, தாக்குதல் எல்லாமே மெய்நிகர்த்தவை. மென்பொருள் வடிவானவை. ஆயுதமும் அப்படியே.
அந்தப் பீரங்கி ஒரு மென்பொருளாகும்.

கிளர்ச்சிக்காரர்கள் அவ்வாயுதத்தை மேலும் சீர்படுத்தி அதிசக்திவாய்ந்ததாகத் தமக்கேற்றபடி மாற்றி வைத்திருக்கிறார்கள்.

கூடிப்பேசி, போதுமானளவு போராளிகளைச் சேர்த்துக்கொண்டபின், இலக்கைத்தீர்மானித்து மேம்படுத்தப்பட்ட LOIC பீரங்கியால் சரமாரியாக அடிக்கிறார்கள்.

உண்மையில் இந்த மென்பொருள் பீரங்கிகள் குறித்த வழங்கிக்கு எண்ணற்ற கோரிக்கைகளைச் சூறாவளிபோல் அனுப்புகின்றன.



Paypal, Visa போன்ற இணையப் பணக்கொடுக்கல்வாங்கலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் அவர்களது வியாபாரத்தின் அச்சாணியே ஒருகணம் அதிர்ந்துபோகும். அதிர்ந்துதான் போனது. ஏகப்பட்ட பணத்தை, வாடிக்கையாளர்களை, நம்பகத்தன்மையை அந்நிறுவனங்கள் இழந்தன.




ரொபின் ஹூட்டுக்கு என்ன நடந்தது?
மருது சகோதரர்களைக் காலனியாதிக்க அதிகாரம் என்ன செய்தது?
பகத்சிங்கை அதிகாரம் எப்படிக் கையாண்டது?
கட்டபொம்மனின் மணற்கோட்டையும் மனக்கோட்டையும் எப்படி உடைந்தது?
சே குவேராவுக்கு என்ன முடிவு?
புரட்சிகர தேசங்களே கடைசியில் என்னவாயின?


அதிகாரங்கள் தூங்கிக்கொண்டிருக்கப்போவதில்லை.

அவர்களும் அவர்களுடைய புத்திகூர்மை மிக்க கைக்கூலிகளும் இரவுபகலாக அதிவேகமாகச் சிந்தித்தவண்ணமும் செயலாற்றியவண்ணமும் இருக்கிறார்கள். தமக்கான ஆபத்து மக்கள் வடிவில் எப்போதும் இருக்கிறதென்பதை அந்த மக்களை விடவும் அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மக்களிடம் ஏற்படும் சிறு சலனத்தையும் சிறு கிளர்ச்சியையும் எல்லாப் பலங்கொண்டும் அடக்கி வேரோடு பிடுங்கி எறிந்துவிட எல்லா வழிகளையும் தேடிக்கொண்டிருப்பார்கள்.

இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவர் மீதானதுமான தீவிர கண்காணிப்பும் இணையத்தொடர்பாடல் மீதான அரசுகளின் இரும்புப்பிடியும் மேலும் மேலும் அதிகரிக்கப்போகின்றன என்பதை நாம் இப்போதே எதிர்வு கூரலாம்.

இத்தகையை கிளர்ச்சிகளைக் காரணம் காட்டி மனிதகுலத்துக்கெதிரான தம் கண்காணிப்புப் பொறிகளைச் சட்டரீதியானதாகவும் நியாயமானதாகவும் பரப்புரை செய்துகொள்வார்கள்.

கண்காணிப்பு. கண்காணிப்பே இன்று அத்தனை அதிகார நிறுவனங்களதும் பொதுவான ஆயுதம். கண்காணிப்பு வலை மேலும் மேலும் எம் கழுத்தை இறுக்கப்போகிறது.

புதியபுதிய மாற்றுவழிகளைக் கண்டறிந்து இவ்வகைத்தாக்குதல்களைச் சமாளித்து எதிர்த்தாக்குதலும் தொடுக்குமளவுக்கு அரசுகள் கூடி எழும்.

கிளர்ச்சிக்காரர்களும் புதிய புதிய ஆயுதங்களுடன் புதிய புதிய போர்க்களங்களில் அதிகாரங்களைச் சந்திப்பார்கள்.

மெல்ல மெல்ல ஒன்றிணைந்து, கோபம் கொண்டு, கொதிநிலையடைந்து மக்கள் கிளர்ந்தெழுந்து அடிப்பதும் பின் உடனடியாக சுதாகரித்துகொண்டு அதிகாரம் மறுபடி வெல்வதும்
காலகாலமாக மீண்டும் மீண்டும் நிகழ்வது.

ஆனால் போரோ ஓய்வதில்லை.

ஏனெனில் அதிகாரமுள்ளவர்களும் அதிகாரமற்றவர்களும் இருக்கும் வரை, அதிகாரமற்றவர்களை வருத்திச்சுரண்டி அடக்கி ஒடுக்கியே அதிகாரம் வாழவேண்டிய நிலை தொடரும் வரை"திருப்பி அடிக்க" வேண்டிய தேவை சாதாரணர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். ஓயப்போவதில்லை.

இந்த "திருப்பி அடி"த்தலை நாம் ரொபின் ஹூட்டுடன் அல்லது பகத்சிங்கின் கைக்குண்டுத்தாக்குதலுடன் ஒப்பிடலாம்.

ஓர் அதிர்ச்சியையும், ஆளும் வர்க்கத்துக்கும் பெருவணிக நிறுவனங்களுக்கும் எதிரான நியாயமான எழுச்சியையும் இது உருவாக்கியிருக்கிறது. ஆள்வோரின் முகத்திரையைக் கிழித்து மக்களுக்குக் காட்ட முயன்றிருக்கிறது.

வெடிகுண்டு போடப்பட்டிருக்கிறது. பகத்சிங்கின் வார்த்தைகளில் சொன்னால், இது வெறும் சத்த வெடிகுண்டே. "கேளாத செவிகளும் கேட்கட்டும்" என்பதற்காகப் போடப்பட்டது. செவிகளை நாம் கேட்கப்பண்ண வேண்டும்.


புரட்சிகர அமைப்புக்களுக்கு இது சொல்லும் செய்தி என்னவென்றால்,

ஆளும் வர்க்கமோ தன் ஆயுதங்களை அதிவேகமாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
புரட்சிகர சக்திகளும் அதற்கு ஈடுகொடுத்துத் தம் ஆயுதங்களைத் தீட்டிக்கொள்ள வேண்டும். அதற்கான ஆய்வுகளில் செயற்பாடுகளில் இறங்கியாகவேண்டும்.

புதிய போர்க்களங்களுக்கு ஆயத்தமாகவேண்டும்.




[பின் குறிப்பு: விக்கிலீக்ஸ் ஜூலியன், தமக்கு அமெரிக்காவால் ஏதேனும் தீங்கு நடக்குமானால் பயன்படுத்தச்சொல்லி 1.5 GB அளவுள்ள வெடிகுண்டு ஒன்றை இணையக்குடிமக்கள் அனைவருக்குமாக வழங்கியிருக்கிறார்கள். எண்மிய வெடிகுண்டு. அதை இப்போதைக்கு எவராலும் திறந்து பார்க்க முடியாது. அது மிக ஆழமாக மறைகுறியாக்கப்பட்ட கோப்பு (Deeply encrypted file). அதில் அடங்கியுள்ள தகவல்கள் அமெரிக்காவை நிலைகுலையச் செய்யப் போதுமானவை என்று குறிப்பிட்டிருக்கிறார். உரிய காலம் வரும்போது அதனை திறப்பதற்கான வழி வகைகள் அறிவிக்கப்படலாம்.]

Last Updated on Friday, 10 December 2010 13:03