Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"தூய" தேசியம், "தூய தேசியவாதிகள்" என்று ஒன்று (வர்க்க) அரசியலில் கிடையாது. தேசியம் என்பது, எங்கும் எப்போதும் அரசியல் அர்த்தத்தில் ஒன்றுதான் உள்ளது. அதுவல்லாத அனைத்தும் புரட்டுத்தனமானது. இங்கு "தூயது" என்பது மோசடித்தனமானது.  தேசியத்துக்கு மாறாக, முரணாக "தூய" தேசியம் என்ற ஒன்று கிடையாது. அதுதான் தேசியம் சார்ந்து உருவாகும் பாசிசம். புரியும் மொழியில் சொன்னால், மார்க்சியம் என்பது ஒன்று தான் உள்ளது. "தூய" மார்க்சியம் என்று ஒன்று கிடையாது. "தூய மார்க்சியவாதி" "தூய வர்க்கப் போராட்டம்"…. என்று எதுவும் கிடையாது. இங்கு தேசியத்தில் "தூயது" என்பது, தேசிய பாசிசத்தையே குறிக்கின்றது. தேசியத்தில் பாசிசத்தின் தோற்றம் "தூய" கூறுகளை, தன் வர்க்க அடிப்படையில் முன்னிறுத்தித்தான், மற்றயதை மறுத்துத்தான் தோற்றம் பெறுகின்றது.

வர்க்கம் கடந்த தமிழர்கள் என்ற இனம் மற்றும் தேசியம் பாசிசம் என்ற எல்லையில் முன்னிறுத்திதான், "தூய தேசியவாதிகளை" "நேர்மைமிக்க"வர்களாக இனியொரு (புதியதிசைகள்) மற்றொரு அரசியல் கண்டுபிடிப்பை வெளியிடுகின்றது. அத்துடன் புலியைச் சேர்ந்த நேர்மையான விமர்சர்கள், அதாவது சுயவிமர்சனக்காரர் என்கின்ற அரசியல் புரட்டையும் முன்வைக்கின்றது. இப்படி அவர்கள் செய்த சுயவிமர்சனத்தையும், விமர்சனத்தையும், ”இனியொரு” நாவலனின் காதுக்குள் தான் ஓதினர். இந்த அரசியல் பித்தலாட்டத்தையே ஜீ.ரீ.வி தொலைக்காட்சியில் புலிகளும் உறுதி செய்தனர். புலிகள் ஏன் மற்றவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதில்லை என்ற கேள்விக்கு, தாங்கள் புதிய திசைகளுடன் இணைந்து செயல்படுவதாக கூறினர். இப்படி இனியொரு கண்டுபிடித்த புலித் "தூய தேசியவாதிகள்", தமிழ் மக்களுக்கு இப்படிக் கூறி மக்களை தங்கள் "நேர்மை" மூலம் ஏய்க்க முடிகின்றது. அன்று ஈரோசுடன் இணைந்து போராடுவதாக புலிகள் கூறிய அதே புரட்டு. இனியொரு மற்றும் புதியதிசைகள் தங்கள் நிலையை நியாயப்படுத்த, அவர்களை "தூய தேசியவாதிகள்" என்கின்றனர். 

இப்படி புலிக்கு குடைபிடிக்க வெளிக்கிட்டு மூக்குடைபட்ட போலி "இடதுசாரிக்" கூட்டம், தன்னையும் தன்செயலையும் நியாயப்படுத்த "தூய தமிழ் தேசியவாதிகள்;" பற்றி பேசுகின்றது. இந்த வகையில் இனியொரு மற்றும் புதியதிசைகளைச் சேர்ந்த சபாநாவலன் புலியை ஐந்தாக பிரித்து வகைப்படுத்தி எழுதுகின்றார். முதல் நான்கும் மக்கள் விரோதமானவையாம், ஐந்தாவது தான் சரியானது என்று கூறுகின்றார். அந்த வகையில் "கடந்த காலத்தை விமர்சன அடிப்படையில் நோக்குகின்ற நேர்மைமிக்க தூய தேசியவாதிகள்." என்று கூறி, தாங்கள் புலிகளுடன் நடத்திய "அரசியலற்ற" புலிக் கூத்துக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.

கோட்பாடு சார்ந்து இந்த "தூய தேசியவாதம்" பற்றி ஆராய்வது அவசியமாகின்றது. புலியில் இதுவல்லாத அனைத்தும், தமிழ் தேசியத்தை பயன்படுத்தி பிழைக்கின்ற சந்தர்ப்பவாத மற்றும் பிழைப்புவாத அடிப்படையைக் கொண்டது. ஆக "தூய தேசியவாதிகள்" தான் இதைச் செய்யவில்லை என்றால், அதுதான் மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்தை அரசியல் அடிப்படிடையாக கொண்ட பாசிசத்தின் அரசியல் உள்ளடக்கமாகும். "தூய" என்பது இங்கு பாசிச சித்தாந்தம் சார்ந்த, அதன் அரசியல் உள்ளடக்கமாகும்.         

இந்த வகையில் "தூய தேசியவாதிகளில்" முதன்மையானவராக இருந்தவர் புலிகளின் தலைவரும் மக்கள் விரோதியுமான பிரபாகரன் தான். தனிமனித ஒழுக்க விதிகள் முதல் தேசியம் மீதான தனிமனித நடத்தைகள் வரை, "தூய" உள்ளடக்கத்தில் அதன் பண்பாட்டு அரசியல் தளத்தில் பாசிசத் தன்மை கொண்ட கூறுகள் தான், அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளத்தில் பாசிசமாகியது.   

இங்கு "தூய தமிழ்தேசியம்" எங்கும் எப்போதும் தேசியம் சார்ந்து வலதுசாரிய பாசிசமாகும். அத்தேசியம் தன் "தூய்மை" சார்ந்து, மற்றைய சமூக பண்பாட்டுப் பொருளாதார வர்க்க முரண்பாடுகளை எல்லாம் வரைமுறையின்றி ஒடுக்குகின்றது. தான் அல்லாத அனைத்தையும், தன் "தூய்மை" மூலம் வேறுபடுத்தி காட்டி ஒடுக்குகின்றது.

இனியொரு முன்னிறுத்தும் "தூய தேசியவாதிகளின்" தேசியம் எது? நிலப்பிரபுத்துவ, தரகு முதலாளித்துவ, ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட முதலாளித்துவ தேசியமா? நிச்சயமாக இல்லை. மாறாக நிலப்பிரபுத்துவ, தரகுமுதலாளித்துவ, ஏகாதிபத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட புலித்தேசியமே, அவர்களின் "தூய தேசியமாகும்". தேசியம் என்பது குறைந்தபட்சம், தேசிய முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கு இனியொரு முன்னிறுத்தும் "தூய தேசியம்" இதுவல்ல. இதுதான் என்றால் அது புலியுடன் என்றும் இருக்க முடியாது. அதற்குள் இருக்கும் வரை, மூடிமறைத்த சந்தர்ப்பவாதம் மூலம் தன்னை நிலைநிறுத்துகின்றது. மக்கள் முன் விமர்சனம், சுயவிமர்சனத்தை, அது என்றும் செய்வது கிடையாது.     

இங்கு "விமர்சன அடிப்படையில் நோக்குகின்ற நேர்மைமிக்க தூய தேசியவாதிகள்" என்பது பொய்மையானது, புரட்டுத்தனமானது. இல்லை என்ற அரசியல் நிலைப்பாடு, இனியொருவின் சந்தர்ப்பவாத பிழைப்புவாத அரசியல். "விமர்சனம்", "நேர்மை" கொண்ட தேசியவாதிகள், புலிக்குள் நின்று எப்படி நேர்மையான அரசியலைச் செய்ய முடியும்? செய்ய முடியும் என்று கூறுகின்ற இனியொருவின் புரட்டுத்தான், இங்கு முதன்மையாக அம்பலமாகின்றது. இப்படி கூறும் இவர்கள், நேர்மையாகத் தம்மை விமர்சனம் செய்தது கிடையாது. இவர்கள் புலிகள் செய்வதாக கூறுவது, புலிக்குள் தாம் கும்மியடிக்க "தூய தேசியவாதிகள்" என்ற புரட்டுக் கோட்பாட்டை முன்தள்ளுகின்றனர். உண்மையில் "தூய தேசியவாதிகள்" என்பது அரசியல் ரீதியாக, உள்ளடக்க ரீதியாக, கோட்பாட்டு அடிப்படையில் எதார்த்தத்தில் கிடையாது. மேலும் வர்க்க சமூக அமைப்பில், இது அரசியல் ரீதியாக கேலிக்குரியது.

"தூய" என்பது கற்பனையானது. எதுவும் "தூயது" கிடையாது. அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தது. ஒன்றில் ஒன்று தங்கியிருப்பது தான்.

"விமர்சனம்", "நேர்மை" யும் எங்கு உண்மையானதாக இருக்கின்றது என்றால், மக்களைச் சார்ந்து நிற்பதன் மூலம் தன்னை (தம்மை) வெளிப்படுத்தும் போது தான். புலியைச் சார்ந்து நிற்பதன் மூலமல்ல. இங்கு இதுவல்லாத "விமர்சனம்", "நேர்மை" பற்றி, இனியொருவின்  காதுக்குள் அவர்கள் சொன்னதாக காட்டி அதை தன் அரசியல் பிழைப்புத்தனத்துக்கு ஏற்ப முன்வைக்கின்றது. இதன் மூலம் தங்கள் சொந்த சந்தர்ப்பவாத புலிப் பிழைப்புத்தனத்துக்கு ஏற்ற, ஒரு அரசியல் கோட்பாட்டை தேடுகின்றனர். இது வர்க்கம் கடந்த, இனம் சார்ந்த குறுகிய தேசியத்தை சார்ந்து, இல்லாத ஒரு "தூய தேசியவாதிகளை" கண்டுபிடித்து காட்ட முனைகின்றது. ஆம் மூடிமறைத்த சந்தர்ப்பவாத  பாசிட்டுகளையே, இங்கு இவர்கள் "தூய தேசியவாதிகளாக" காட்டி நிற்கின்றனர்.

இதன் மூலம் மீண்டும் இந்த "தூய" புலிப் பாசிட்டுகளின் பின், தமிழ் மக்களைச் செல்லுமாறு வழிகாட்டுகின்றனர். இதுதான் இவர்கள் முன்வைக்கும் "புரட்சிகரமான" "மார்க்சிய" பூச்சுப் பூசிய ”வர்க்க” அரசியலாகும்.

பி.இரயாகரன்
10.12.2010