Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் அரசு மருத்துவமனையா? மரண வாசலா?

அரசு மருத்துவமனையா? மரண வாசலா?

  • PDF

போதிய அளவுக்கு மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. பறவைக் காச்சல், பன்றிக் காச்சல், சிக்குன்குனியா மற்றும் இன்னும் பெயர் தெரியாத பல புதிய நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பல அரசு மருத்துவமனைகளில் மருந்துகளும் இல்லை; குடிநீர், மின்சாரம், இரத்த வங்கி, எக்ஸ்ரே, ஈ.சி.ஜி., அவசர சிகிச்சைப் பிரிவு, ஆம்புலன்ஸ் முதலான வசதிகள் இல்லாமலும், அறுவை சிகிச்சை, தண்ணீர் சிகிச்சை, இதயநோய் சிகிச்சை, தோல்நோய் சிகிச்சை, குழந்தை நலம், எலும்பு முறிவு முதலானவற்றுக்கு மருத்துவர் இல்லாமலும், தண்ணீர் இல்லை, போதிய இடவசதி இல்லை என்று பல்வேறு காரணங்களைக் கூறியும் நோயாளிகளை விரட்டும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் தொடர்ந்து பல ஏழைகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனையா - மரண வாசலா

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழியில்லாமல், தங்களது சிறு உடமைகளை விற்றும் கந்துவட்டிக்குக் கடன் வாங்கியும் ஏழை நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர். இவற்றைக் கண்டித்து பலமுறை மனு கொடுத்தும் மருத்துவமனை நிர்வாகமோ, அரசோ அசைந்து கொடுப்பதில்லை. மறுபுறம், கலைஞர் காப்பீடு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகள் கொழுப்பதற்காகப் பலநூறு கோடிகளை அரசு ஒதுக்குகிறது.

அரசின் அலட்சியத்தை எதிர்த்தும், அரசு மருத்துவமனையைப் போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தி மக்களின் உயிரைக் காக்கக் கோரியும் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் இயங்கிவரும் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம், 11.10.2010 அன்று வாகனப் பேரணியையும், கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. கோத்தகிரி டானிங்டன் பகுதியிலிருந்து காமராஜர் சதுக்கம் வழியாக மார்க்கெட் திடலை இப்பேரணி வந்தடைந்ததும், அங்கு சங்கத்தின் தலைவர் தோழர் செல்வம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவமனை சீர்கேட்டை அம்பலப்படுத்தியும், அரசு மருத்துவமனைகளைப் புறக்கணித்துத் தனியார் மருத்துவமனைகளை ஊட்டிவளர்க்கும் கலைஞர் காப்பீடு திட்டத்தை எதிர்த்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள அரசு மருத்துவமனை சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, கடந்த 2009-ஆம் ஆண்டின் இறுதியில் மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், தலைமை மருத்துவமனை என்ற பெயர்ப்பலகை மட்டும்தான் இங்கு இருக்கிறதே தவிர, இங்கு போதிய மருத்துவர்களோ மருந்துகளோ இல்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளை அறவே புறக்கணித்துவரும் அரசை எதிர்த்தும், மருத்துவம் பெறுவது நமது அடிப்படை உரிமை, அதைச் செய்துதர வேண்டியது அரசின் கடமை என்பதை உணர்த்தியும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பென்னாகரம் வட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி, அதன் தொடர்ச்சியாக 11.10.2010 அன்று பென்னாகரம் அரசு மருத்துவமனை முன்பாக தோழர் சிவா தலைமையில் விண்ணதிரும் முழக்கங்களுடன் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

அரசு மருத்துவமனைகளைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் தமிழக அரசை எதிர்த்தும், தனியார் மருத்துவமனைகளின் கொள்ளையை எதிர்த்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள், போராடாமல் அடிப்படை உரிமைகளை நாம் பெறமுடியாது என்பதை உழைக்கும் மக்களுக்கு உணர்த்து வதாக அமைந்தன.