Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வட்டாட்சியர் அலுவலகமா? ஆதிக்க சாதிவெறியர்களின் கூடாரமா?

வட்டாட்சியர் அலுவலகமா? ஆதிக்க சாதிவெறியர்களின் கூடாரமா?

  • PDF

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் ஏறத்தாழ 5,000 பேர் கொண்ட குறவன் சாதியினர் 15 கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். மிகவும் தாழ்த்தப்பட்டவர்களான, அனைத்துச் சாதியினராலும் ஒடுக்கப்பட்டவர்களுமான, கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகமிகப் பின்தங்கியவர்களுமான இவர்கள் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், இடைத்தரகர்களை வைத்து ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இலஞ்சம் வாங்கிக் கொண்டு, “இந்து குறவன் ” (SC)என்று வருவாத்துறை அதிகாரிகள் சாதிச் சான்றிதழ் தருகின்றனர். ஏழைகளான குறவன் சாதியினர் பணம் கொடுக்க முடியாவிட்டால் “குறவர் ” (DNC) என்று சாதிச் சான்றிதழ் தருகின்றனர். அரசின் சாதிப்பட்டியலில் குறவன் சாதியை தாழ்த்தப்பட்ட சாதி என்று குறிப்பிடும்போது, இங்கு மட்டும் அவ்வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். சீர்மரபினர் (De notified Caste) என்று புதிய சாதியைக் குறிப்பிடுகின்றனர்.

வட்டாச்சியல் அலுவலகமா ஆதிக்க சாதிவெறி கூடாறமா

குறவன் சாதிச் சான்றிதழ் தர 50 ஆண்டுகால ஆதாரம் கேட்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முதல் மகனுக்கு “இந்து குறவன்‘”என்றும், இரண்டாவது மகனுக்கு “குறவர்” என்றும் இருவேறு சாதிகளைக் குறிப்பிட்டுச் சான்றிதழ்களைக் கொடுத்துத் தொல்லைப்படுத்துகின்றனர். ஆவணங்கள்-விண்ணப்பங்கள் காணாமல் போய்விட்டதாகக் கூறி, சாதிச் சான்றிதழ் தராமல் இழுத்தடித்து விண்ணப்பதாரர்களை கடும் மன உலைச்சலுக்கு ஆளாக்கி இழிவுபடுத்துகின்றனர். இந்த சீர்மரபினர் சான்றிதழை வைத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பட்டியலில் மத்திய-மாநில அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் குறவன் இன இளைஞர்கள் பரிதவிக்கின்றனர்.

வட்டாட்சியரான ஜோதி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் பேசி இதற்கு முன்பு குறவன் (SC) சான்றிதழ் வழங்கி வந்தார். ஆனால், வருவாய் ஆய்வாளர்களும் கிராம நிர்வாக அலுவலர்களும் சாதி வெறியர்களுக்குத் துணைபோவதால், இப்போது இந்துக் குறவன் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. வட்டாட்சியர் மீது பொய்ப்புகார் சுமத்தியும், குறவன் எனச் சாதிச் சான்றிதழ் தரக்கூடாது என்றும் சாதிவெறியர்கள் துண்டுப்பிரசுரம் வெளியிட்டு எச்சரித்துள்ளனர். அந்த நேர்மையான அதிகாரி மீது இப்போது விசாரணை நடந்து வருகிறது.

குறவன் சாதி மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இந்த அநீதியை எதிர்த்தும், சாதி வெறியர்களை அம்பலப்படுத்தியும் “அரசியல் சாசனத்தை மீறும் வருவாய் ஆய்வாளர் நாகலிங்கம், கிருஷ்ணவேணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களையும் பணிநீக்கம் செய்! இந்து குறவன் சாதிக்கு அரசுப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு சாதிச் சான்றிதழ் கொடு!” என்ற முழக்கங்களுடன் திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் விடுதலை முன்னணி 11.10.2010 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. தோழர் பொன்னுசாமி தலைமையில், திரளான உழைக்கும் மக்களின் பங்கேற்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க. மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் சிறப்புரையாற்ற, வி.வி.மு., மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு குறவன் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்

________________________________

- புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
______________________________