Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் அயோத்தி: தீர்ப்பு வழங்க நீதித்துறைக்கு அருகதை உண்டா?

அயோத்தி: தீர்ப்பு வழங்க நீதித்துறைக்கு அருகதை உண்டா?

  • PDF

அயோத்தியில் இந்துவெறியர்களால் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இத்தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த போது, சமரசத் தீர்வு காண்பதற்கு இன்னும் ஒரு வாய்ப்பளிக்கலாம் என்று கூறி, அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட ஒரு வாரம் தடைவிதித்து உத்தரவிட்டு மீண்டும் இழுத்தடித்தது, உச்ச நீதிமன்றம்.

 

 

 

பின்னர், கபாடியா தலைமையிலான 3 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வு, ரமேஷ் சந்திர திரிபாதியின் மனுவைத் தள்ளுபடிசெய்து, தீர்ப்பு வழங்க தற்போது உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதியன்று மாலை 3.30 மணியளவில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தலையங்கம் எழுதப்படுகிறது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால்கடந்த 60 ஆண்டுகளாக நீதித்துறையால் இழுத்தடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கு உடனடியாக முடிவுக்கு வரப்போவதில்லை.

 

இத்தனை ஆண்டுகாலம் இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டதற்கும், இந்து ராஷ்டிரத்தை நிறுவும் தமது நோக்கத்தை நிறைவேற்ற பாபர் மசூதியை இடித்து இந்துவெறி பாசிச பயங்கரவாதிகள் நாடெங்கும் கலவரங்களை நடத்தி நரவேட்டையாடியதற்கும் இந்திய நீதித்துறை தனது பொறுப்பை நிறைவேற்றாமல் இந்துவெறிக்குத் துணை நின்றிருப்பதே முக்கிய காரணம்.

 

பாபர் மசூதியும் அதன் நிலமும் முஸ்லிம்களுடையது. அதை "தாவாவுக்குட்பட்ட நிலம்', "சர்ச்சைக்குரிய நிலம்' என்று நீதித்துறை குறிப்பிடுவதே அயோக்கியத்தனமானது. அவர்களது வாதப்படியே "சர்ச்சைக்குரிய', "தாவாவுக்குரிய' ஒரு நிலத்தை ஒரு தரப்பினர் மட்டும் பயன்படுத்த அனுமதி அளிப்பது எவ்வாறு நியாயமாகும்? இயற்கை நீதிக்கே எதிராக இந்துவெறியர்கள் அந்த நிலத்தில் செங்கல் பூசை நடத்த அனுமதித்தது முதல் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியதுவரை எல்லா வகையிலும் இந்திய நீதித்துறை உடந்தையாக நின்றதே, இத்தகைய அநீதித்துறைக்கு இப் போது நீதி நியாயம் பற்றி பேச ஏதாவது அருகதை இருக்கிறதா? இந்துவெ றியர்களுக்கு ஆதரவாகவும் ஒருதலைப்பட்சமாகவும் செயல்பட்ட ஒரு அமைப்புக்கு, நீதி சொல்லத்தான் யோக்கியதை உண்டா?

 

முதலாவது மொகலாய மன்னரான பாபர் படையெடுத்துப் போய் அயோத்தியிலிருந்த ராமன் கோவிலை இடித்து 1528இல் மசூதியைக் கட்டினார் என்பதற்கும், ராமன் அவதரித்த இடம் அம்மசூதி கட்டப்பட்டுள்ள இடம்தான், அந்த ஊர்தான் என்பதற்கும் எவ்வித வரலாற்று ஆதாரமும் கிடையாது. ஆனால், அந்தக் குருட்டு மத நம்பிக்கையை மதவெறியாக்கி 1949ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி நள்ளிரவில் 50 பேர் கொண்ட ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் மசூதி வாயிலை உடைத்து உள்ளே நுழைந்து, அதனுள் ராமன் சீதை பொம்மைகளை வைத்துச் சுவர்களில் காவி மஞ்சள் நிறத்தில் உருவங்களையும் வரைந்து ராமன் அவதரித்து விட்டதாகப் புரளியைக் கிளப்பி விட்டனர்.

 

வரலாற்று ரீதியாகவும் பாரம்பரிய மரபு ரீதியாகவும் ஆதாரபூர்வமாக உள்ள முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியில் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனம் செய்த இந்துவெறி குண்டர்களைக் கைது செய்து தண்டிப்பதற்குப் பதில், அப்போது இந்திய பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட கலவரங்களால் நாடே பாதிக்கப்பட்டிருந்த நிலைமையைக் காட்டி, அயோத்தியில் கலவரம் ஏற்படுவதைத் தடுப்பது என்ற பெயரில், முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையைப் பறித்து பாபர் மசூதியைப் பூட்டி வைக்க அயோத்தி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம், பாபர் மசூதிக்கு வெளியே இந்துவெறியர்களால் அப்போது உருவாக்கப்பட்டிருந்த சபுத்ரா பீடத்திலிருந்து மூடப்பட்ட மசூதியின் சன்னல் வழியே ராமன் பொம்மையை வழிபட இந்துக்களுக்கு உரிமை வழங்கப்பட்டது.

 

அதன் பிறகு, பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவது என்ற திட்டத்துடன் இந்துவெறியர்கள் கட்டம் கட்டமாக நடத்திய ஒவ்வொரு அடாவடித்தனமான பயங்கரவாத நடவடிக்கையையும் நீதித்துறை அங்கீகரித்து உடந்தையாகவே இருந்துள்ளது.

 

1986இல் ராஜீவ் ஆட்சிக் காலத்தில், அயோத்தி நீதிமன்றம் எவ்வித விசாரணையுமின்றி மூடிக்கிடந்த மசூதியின் கதவுகளைத் திறந்துவிடுமாறு உத்தரவிட்டு, இந்துக்கள் அங்கு ராமனை வழிபட சட்டவிரோதமாக அனுமதித்தது. அதைத் தொடர்ந்து இந்துவெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில், மசூதி எதிரே செங்கல் பூசை நடத்த அனுமதித்தது, கட்டுமான வேலைகளைத் தொடங்கியது, ராமன் கோயில் கட்ட சுற்றுச் சுவர் எழுப்பியது, தாவாவுக்குட்பட்ட நிலத்தை ராமஜென்ம பூமி முக்தி நியாஸ் என்ற அமைப்புக்குச் சட்டவிரோதமாகத் தாரைவார்த்துக் கொடுத்தது, இந்து வெறியர்கள் அந்த நிலத்தில் ராமன் கோயில் கட்ட ஏற்பாடுகளைச் செய்தது என அடுத்தடுத்து இந்துவெறியர்களின் எல்லா அடாவடித்தனங்களுக்கும் அரசும் நீதித்துறையும் பணிந்து சேவை செய்துள்ளன.

 

இந்துவெறி பயங்கரவாதி அத்வானியின் ரத யாத்திரை யையும், பாபர் மசூதி இடிக்கப்படுவதையும் தடுக்க மறுத்து, 1992 டிசம்பர் 6ஆம் நாளன்று இந்துவெறியர்கள் அம்மசூதியை இடித்துத் தள்ளிய நாசவேலைக்கு உச்ச நீதிமன்றமே துணைபோனது. ராமன் இந்நாட்டு தேசியச் சின்னம், நாகரிகத்தின் வடிவம் என நாட்டுத் தலைவர்களாலும் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அவதாரம் என்று கூறி, பாபர் மசூதியை இடித்துத் தள்ளி அங்கே திடீரென இந்துவெறியர்கள் உருவாக்கிய கொட்டகையிலுள்ள ராமன் சிலையைத் தரிசிக்கவும் பக்தர்கள் வழிபடவும் அனுமதியும் பாதுகாப்பும் வழங்கியது, உச்ச நீதிமன்றம். இந்த அநீதிமன்றம் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களும் மசூதி இடிப்பைத் தொடர்ந்து இந்துவெறி அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்று தீர்ப்பளித்தன. கைது செய்யப்பட்ட இந்துவெறி பாசிச பயங்கரவாத குண்டர்களை விடுதலை செய்தன.

 

1949இல் அயோத்தியிலுள்ள பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக ராமன் பொம்மையை வைத்தது தொடங்கி இன்றுவரை பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் உள்ளிட்டு அனைத்து மட்டங்களிலும் இந்திய நீதித்துறை இந்துமதவெறி பாசிசத்துக்கு உடந்தையாக, சாதகமாகவே தீர்ப்புகள் வழங்கியுள்ளன. இவற்றின் மூலம் இந்துவெறி அமைப்புகளுக்கும் அவற்றின் நடவடிக்கைகளுக்கும் சட்டபூர்வ அங்கீகாரம் அளித்து நியாயப்படுத்தியுள்ளன. காவிச் சகதியில் மூழ்கிக் கிடக்கும் இந்திய நாட்டின் நீதித்துறை மதச்சார்பற்றதோ, நடுநிலையானதோ, புனிதமானதோ கிடையாது. நீதித்துறையின் ஒத்துழைப்பின்றி இந்துவெறி பாசிசம் இவ்வளவு பெரிய சக்தியாக வளர்ந்திருக்கவும் முடியாது.

 

இருப்பினும், 80களின் இறுதியிலும் 90களிலும் இந்துவெறியை ஏந்திச் சுழற்றிய இந்துவெறி பாசிஸ்டுகள் இப்போது செல்வாக்கிழந்து விட்டனர். அயோத்தி அமைந்துள்ள உ.பி. மாநிலத்திலேயே தொடர்ந்து தோல்வியைத்தான் சந்திக்கின்றனர். 1992இல் மசூதி இடிக்கப்பட்டபோது இந்துவெறியர்களின் நாயகனாகத் திகழ்ந்த அத்வானி மற்றும் பிற இந்துவெறி பயங்கரவாதிகள் இன்று அவர்களது கட்சியிலேயே ஓரங்கட்டப்பட்டுக் கிடக்கின்றனர். குஜராத் பாணியில் மறுகாலனியாக்கக் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி "வளர்ச்சியை'க் காட்டி ஓட்டுப் பொறுக்குவதில்தான் பா.ஜ.க. இப்போது அக்கறை காட்டி வருகிறது.

 

இந்துவெறியர்கள் செல்வாக்கிழந்துள்ள நிலையில், பாபர் மசூதி விவகாரத்தில் தீர்ப்பு சொல்வதற்கான அருகதையை பல ஆண்டுகளுக்கு முன்பே இழந்துவிட்ட இந்திய நீதித்துறை இப்போது தீர்ப்பு சொல்லக் கிளம்பியிருக்கிறது. இந்த உரிமையியல் வழக்கில், நிலத்தின் மீதான முஸ்லிம்களின் உரிமையை நீதிமன்றம் நிலை நாட்டித் தீர்ப்பளித்தாலும், அதை எதிர்த்து இந்துவெறியர்கள் உச்ச நீதிமன்றத்துக்குப் போவார்கள். அங்கு பல ஆண்டுகளுக்கு வழக்கு இழுத்தடிக்கப்படும். அங்கேயும் முஸ்லிம்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தாலும், இந்துவெறி பாசிஸ்டுகள் தமது மதவெறி அரசியலைக் கைவிட்டு விடப்போவதில்லை. இந்துவெறி பாசிச அரசியலுக்கு இத்தீர்ப்புகள் மாற்றுத் தீர்வைத் தரப்போவதுமில்லை.

Last Updated on Monday, 06 December 2010 19:43