Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் புலியெதிர்ப்பு கூறும் வரட்டு மார்க்சியம் என்பது என்ன?

புலியெதிர்ப்பு கூறும் வரட்டு மார்க்சியம் என்பது என்ன?

  • PDF

தனது மக்கள் விரோத வலது தன்மையை அங்கீகரிக்க மறுக்கும் மார்க்சியத்தைத் தான், அவர்கள் வரட்டு மார்க்சியம் என்கின்றனர். இலங்கை இந்திய ஏகாதிபத்திய வேலைதிட்டத்தின் கீழ் இயங்கும் புலியெதிர்ப்பு அரசியலை, மார்க்சியவாதிகள் ஏற்றுக்கொள்ளக் கோருவதை அடிப்படையாக கொண்டு தான்,

வரட்டு மார்க்சிய முத்திரை குத்தப்படுகின்றது.

 

வரட்டு மார்ச்கியம் பற்றி பேச முனைபவன், முதலில் தன்னை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்த வேண்டும். இல்லாதுவிடில் வரட்டு மார்க்சியம் பற்றி பேச, எந்த அருகதையுமற்றவன். அவன் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான மற்றொரு வார்க்கத்தின் பிரதிநிதி என்பதால், அவன் அதை வெறும் உள்நோக்கத்தடன் தான் பயன்படுத்துவான்.

 

அடிக்கடி ராகவன் வரட்டு மார்க்சியம் பற்றியும் மார்க்சிய பைபிள் பற்றியும் கூறுகின்றார். இது போல் பலரும் கூறுகின்றனர். மார்க்சியத்தின் ஆரோக்கியமான வளர்ச்சி பற்றியும் இவர்கள் சிலாகிக்கின்றனர். தனக்கு எதிரான வர்க்கத்தின் வளர்ச்சியில் இருக்கின்றதாக காட்டுகின்ற அக்கறையின் பின் இருப்பது நஞ்சு. முதலில் நீங்கள் மார்க்சியவாதிகளாக இல்லாத வரை, இவை எல்லாம் மார்க்சியத்தின சேறடிக்க செய்யும் அற்பத்தமான சூழ்ச்சியான செயல்கள் தான்.

 

ஒருவன் தன்னை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்துகின்றான் என்றால், அவன் வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். சமூகத்தை வர்க்க அடிப்படையில் பகுத்தாராய வேண்டும். ஒரு சமூக அமைப்பில் எதிரி வர்க்கத்தை தெளிவுபடுத்த வேண்டும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வர்க்கப் போராட்டத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்பது வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பதை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி பல விடையங்கள் உண்டு. இப்படி இவற்றை ஏற்றுக் கொண்டு, அதற்காக போராடும் போது தான் வரட்டு மார்க்சியத்தை இனம் காணமுடியும். பைபிள் மார்க்சியத்தை உடைத்துக் காட்ட முடியும்.

 

இதையா! இந்த புலியெதிர்ப்பு கனவான்கள் செய்கின்றனர். இல்லை. அவர்கள் வரட்டு மார்க்சியம் என்பது, புலியெதிர்ப்பு அரசியலை ஏற்க மறுக்கும் மார்க்சியத்தை தான். அவர்களின் பிற்போக்கு அரசியல் நோக்கத்துக்கு ஏற்ப, மார்க்சியத்தை வரட்டு மார்க்சியம் என்கின்றனர்.

 

வரட்டு மார்க்சியம் என்கின்ற இந்த புலியெதிர்ப்பு கனவான்களின், எந்த செப்பிடுவித்தையும் மாhக்சியத்தின் முன் அவியாது. புலியை ஒழித்தலுக்கு, ஏற்ப மார்க்சியத்தை வளைத்து சொன்னால் வரட்டு மார்க்சியமல்ல என்று நீங்கள் சொல்ல தயாராக உள்ளீர்கள் என்பது எமக்கு நன்கு தெரியும்.

 

புலிகளின் பாசிசத்துக்கு அப்பால், மார்க்சியவாதிகள் வர்க்க ரீதியாகவே அவர்களுடன் உடன்பாடு அற்றவர்கள். மார்க்சியவாதிகள் புலியை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்திய அளவுக்கு, வேறு யாரும் செய்தது கிடையாது. இருந்தபோதும் மாhக்சியவாதிகள் புலிகளை விடவும், பேரினவாத அரசைத்தான் முதலாவது எதிரியாக பார்க்கின்றனர். அரசு தான் புலியை உருவாக்கியதே ஒழிய, புலிகள் பேரினவாத அரசை உருவாக்கவில்லை. பேரினவாத அரசு ஒழிக்கப்பட்டால் புலி ஒழியும். புலி ஒழிக்கப்பட்டால், பேரினவாத அரசு ஒழியாது. இது மார்க்சியவாதிகளுக்கும் புலியெதிர்ப்புக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளில் ஒன்று.

 

மார்க்சியவாதிகள் அரசையும், அதை இயக்குகின்ற ஏகாதிபத்திய கட்டமைப்பையும், பிராந்திய வல்லரசு அனைத்தையும் எதிரியாக பார்க்கின்றனர். அவர்களுடன் கூடிக் குலாவி புலியை ஒழிக்கும் எந்த வேலை திட்டத்தையும், சதிகளையும் மாhக்சியவாதிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். இதிலும் கூட புலியை விட, நாம் தான் அரசியல் ரீதியாக கடுமையான எதிரிகளாக உங்கள் முன் உள்ளோம். இதனால் எம்மை வரட்டு மார்க்சியவாதிகளாக கூறுவதால், மார்க்சியம் வரட்டு வாதமாகி விடுவதில்லை.

 

புலியை ஒழித்தல் மார்க்சியவாதிகளின் அரசியல் வேலைத் திட்டமல்ல. மாறாக மக்களின் அதிகாரத்தை நிறுவுவது தான், மார்க்சியவாதிகளின் வேலைத்திட்டம். இந்த வகையில் தான், நாம் அனைத்தையும் விமர்சனக் கண்கொண்டு அணுகுகின்றோம். இது போன்ற எந்த வேலைத்திட்டமும் புலியெதிர்ப்பிடம் கிடையாது.

 

அவர்களின் வேலைத் திட்டம் என்பது, இலங்கை இந்திய ஏகாதிபத்தியத்தின் நகர்வுகளுக்கும், நலனுக்கும் உட்பட்டது. இதை இல்லை என்று யாராலும் மறுக்கமுடியாது. இதை நாம் அம்பலப்படுத்துவதால் வரட்டு மார்க்சியம் என்று புலம்புகின்றனர். அவர்கள் வரட்டு மார்க்சியம் என்று கண்டு பிடிப்பது, இலங்கை இந்திய மற்றும் ஏகாதிபத்திய நலனுக்கு இசைவானதாக மார்க்சியம் வளைந்து கொடுக்க மறுப்பதைத் தான்.

 

ராகவன் போன்ற புலியெதிர்ப்பு பிரிவினரிடம் இதற்கு வெளியில், எந்த மக்கள் நலன் சார்ந்த சொந்த வேலைத்திட்டமும் கிடையாது. தனிமனிதர்களிடம் கூட, இதையொட்டிய ஒரு சமூக கண்ணோட்டம் சமூகப் பார்வை கிடையாது. எல்லாம் கூலிக்கு மாரடிக்கின்ற அரசியல், மார்க்சியத்தை வரட்டுத்தனமாக காட்டுவதும் மாரடிப்புக்கு ஏற்பத்தானே.

 

பி.இரயாகரன்
30.11.2007