Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் நீதிபதிகள்: ஊழல் பெருச்சாளிகள்!

நீதிபதிகள்: ஊழல் பெருச்சாளிகள்!

  • PDF

உ.பி. மாநிலத்தின் காசியாபாத் மாவட்டக் கருவூல அதிகாரிகளும் நீதிபதிகளும் கூட்டுச் சேர்ந்து,  கடைநிலை அரசு ஊழியர்களின் சேமநல நிதியிலிருந்து  ரூ.34.56 கோடியைச் சட்டவிரோதமாக மோசடி செய்து சுருட்டி ஏப்பம் விட்டனர். கருவூல அதிகாரியான அஷுடோஷ் அஸ்தானா என்பவனுடன் சேர்ந்து போலி ஆவணங்களைத் தயாரித்து,  நீதிபதிகளும் கருவூல அதிகாரிகளும் இம்மோசடிக்கு உடந்தையாக இருந்து பணத்தைப் பங்குபோட்டுக் கொண்டுள்ளனர். 2001-இலிருந்து 2008-வரை நடந்துள்ள இந்த மோசடி மெதுவாகக் கசிந்து ஏப்ரல் 2008-இல் அஸ்தானா கைது செய்யப்பட்டான். அவனுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் 82 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


நீதிபதிகளுக்கு உரிய கப்பம் செலுத்தியதோடு, அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களையும் அஸ்தனா அளித்துள்ளான். இதற்கான ரசீதுகளும் அஸ்தானாவிடம் இருந்துள்ளன. தனது வாக்குமூலத்தில் அவன் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தாருண் சட்டர்ஜி, தற்போது ஓய்வு பெற்றுள்ள சுபாஷ் அகர்வால், சந்த் நிகாம் உள்ளிட்ட அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் - என  33 நீதிபதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான். ஆனாலும், இந்நீதிபதிகள் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்படவில்லை. நீதிபதிகள் கூட்டுச் சேர்ந்து நடத்திய இம்மோசடி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி நகர்சிங் யாதவ் என்ற வழக்குரைஞரும் காசியாபாத் வழக்குரைஞர்கள் சங்கமும் உயர் நீதிமன்றத்தை அணுகின.  அம்மனுவை உ.பி.யின் அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.


இந்தியத் தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.வர்மா இருந்தபோது, நீதிபதிகளுக்கான நன்னடத்தை விதிகள் வகுக்கப்பட்டு, நீதிபதிகள் தமது சொத்துக் கணக்கை தலைமை நீதிபதியிடம் அளிக்க வேண்டும் என்றும் இந்த விவரங்கள் இரகசியமாக வைக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நீதிபதிகளைச் சொத்துக் கணக்கு காட்டச் சொல்வது சுயமரியாதைக்கு இழுக்கு என்றும், நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்த விவரங்களைப் பெற தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது என்றும் அன்றைய இந்தியத் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறினார்.


அப்பேர்பட்ட கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் 2008-ஆம் ஆண்டு ஜூலையில் காசியாபாத் நீதிபதிகளின் ஊழல் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காகக் கேட்க விரும்பும் கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் எழுத்து மூலம் தர வேண்டும் என்றும், அதற்குக் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகள் எழுத்து மூலம் அளிக்கும் பதில்களின் அடிப்படையிலேயே விசாரணையைத் தொடர வேண்டும் என்றும் இந்த உச்ச நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்தது.


நீதிபதிகளுக்கு இப்படிச் சலுகை அளிப்பதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் கடும் ஆட்சேபணை தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த கே.ஜி.பாலகிருஷ்ணன்,  தன்னுடைய நிர்வாக ரீதியான உத்தரவைக் கேள்விக்குள்ளாக்கினால், இவ்வழக்கை விசாரணை செய்யும் அமர்வில்தான் பங்கேற்க முடியாது என்று ஆத்திரத்தைக் கக்கி அதிலிருந்து வெளியேறினார். மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதியான பி.என்.அகர்வாலும் இந்த அமர்விலிருந்து விலகிக் கொண்டார்.


தொழிலாளர்கள் மற்றும் கடைநிலை அரசு ஊழியர்களின் வைப்பு நிதியைக் கையாடல் செய்து ஏப்பம் விட்ட அநீதிபதிகளின் மீது இந்நீதிபதிகளுக்கு ஆத்திரம் வரவில்லை. மாறாக, ஊழல் நீதிபதிகளுக்கு சலுகை அளிக்கக்கூடாது என்றதும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த அளவுக்கு வர்க்கப் பாசமும் இனப் பாசமும் இந்நீதிபதிகளிடம் பொங்கி வழிந்தது.


அதன் பிறகு, செப்டம்பர் 2008-இல்  டி.கே.ஜெயின் தலைமையிலான புதிய அமர்வின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடந்து, முன்னாள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஆர்.பி.யாதவ், ஆர்.என்.மிஸ்ரா, ஏ.கே.சிங் மற்றும் மூன்று மாவட்ட நீதிபதிகளின் மீது  சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றவாளிகளான  நீதிபதிகளில் மூன்று பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதைத் தவிர, வேறு எந்த தண்டனையும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதற்கிடையே இவ்வழக்கின் முக்கிய சாட்சியான அஸ்தானா,  அக்டோபர் 2009-இல் உ.பி.யின் தஸ்னா மாவட்டச் சிறைச்சாலையில் மர்மமான முறையில் மாண்டுபோனான். நீதிபதிகளும் அதிகாரிகளும் இதர முக்கிய சாட்சியங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டி விசாரணையை இழுத்தடித்து வந்ததால், 17 நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமுமில்லை என்று சி.பி.ஐ. தெரிவிக்க வேண்டியதாயிற்று.


நத்தை வேகத்தில் இந்த விசாரணை நகர்ந்து வந்த நிலையில், தற்போதைய காசியாபாத் மாவட்ட நீதிபதியான விஷ்ணு சந்திர குப்தா,  வழக்கு கோப்புகளையும் வாக்குமூலக் குறுந்தகடுகளையும் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்குமாறும், அவர்களுடன் இணைந்து விசாரணை நடத்துமாறும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கடந்த ஜூலை 26-ஆம் தேதி கூறி, வழக்கை திசைதிருப்பி முடக்க முயற்சித்துள்ளார். இதையறிந்த அட்டர்னி ஜெனரல் கூலம் வாகன்வாதி,  உடனடியாக வழக்கு விசாரணையை காசியாபாத்துக்கு வெளியே டெல்லியில் வைத்து நடத்துமாறும், இல்லையேல் நீதிபதிகளே இவ்விசாரணையை நீர்த்துப்போகச் செய்துவிடுவார்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உயர் நீதிமன்ற - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு அம்பலமானால், எப்படியெல்லாம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை மூடிமறைத்துத் தப்பிக்க முயற்சிப்பார்கள் என்பதற்கு காசியாபாத் நீதிபதிகளின் ஊழல் வழக்கே சான்று கூறப் போதுமானது. குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அவ்வளவு சுலபமாக இந்தக் கண்ணியவான்களைத் தண்டித்துவிட முடியாது. நீதிபதிகள் தண்டிக்கப்பட்டால் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையே கேள்விக்குள்ளாகிவிடும் என்று கூறி, நீதிபதிகளைக் கேள்விக்கிடமற்ற புனிதமானவர்கள் என்று சட்டமும் ஆளும் வர்க்கங்களும் தீவிரமாகப் பாதுகாத்து வருகின்றன.


உச்ச நீதிமன்ற நீதிபதி இராமசாமியின் ஊழல், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் ஊழல், பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊழல், தமிழகத்தின் மோசடி நீதிபதி தினகரனின் நில ஆக்கிரமிப்பு, தனக்கு வேண்டியவர்களுக்குச் சாதகமாக நீதிபதிகள் உத்தரவிடுவது, தீர்ப்பு வழங்குவது-என அடுத்தடுத்துப் பல ஊழல்களும் முறைகேடுகளும், இந்நீதிபதிகள் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட விவகாரங்களும் அம்பலமான போதிலும் எந்த நீதிபதியும் தண்டிக்கப்பட்டதாக வரலாறில்லை.


அதேசமயம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கபாடியா, ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருப்பதை அம்பலப்படுத்தி "தெகல்கா" வார இதழுக்குப் பேட்டியளித்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞரான பிரசாந்த் பூஷண் மீதும், "தெகல்கா" இதழின் ஆசிரியர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2007-இல் தலைமை நீதிபதியாக இருந்த சபர்வால், தனது மகன்களது கூட்டாளிகள் கட்டும் பேரங்காடியின் வியாபாரம் பெருகுவதற்காக டெல்லியில் பல்லாயிரக்கணக்கான சில்லறை வியாபாரிகளை அடித்து விரட்ட உத்தரவிட்டார்.  இதை அம்பலப்படுத்தி செய்தி வெளியிட்ட  "மிட் டே" என்ற நாளேட்டின் பத்திரிகையாளர்களும் கேலிச்சித்திர ஓவியரும் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 4 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


இந்திய நீதித்துறைதான் இந்தியக் குடிமகனின் கடைசி நம்பிக்கை என்று ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் சித்தரித்து வருகின்றன. ஆனால், கிரிமினல் - ஊழல் - மோசடி அநீதிபதிகளிடம் நாம் இனியும் நம்பிக்கை வைக்க முடியாது என்பதையே பெருகிவரும் நீதித்துறை ஊழல்களும் மோசடிகளும் நிரூபித்துக் காட்டுகின்றன.
-தனபால்.