Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் போபால்: கொலைகார 'டௌ'-வே வெளியேறு! புரட்சிகர அமைப்புகளின் முற்றுகை

போபால்: கொலைகார 'டௌ'-வே வெளியேறு! புரட்சிகர அமைப்புகளின் முற்றுகை

  • PDF

போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்துக் குற்றவாளிகளை ஒருநாள்கூடச் சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது, போபால் நீதிமன்றம். 23,000 இந்திய மக்களைப் படுகொலை செய்து, 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் பயங்கரவாதியான  யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது, அமெரிக்க  அரசு.


2001-இல் யூனியன் கார்பைடை விலைக்கு வாங்கிய டௌ கெமிக்கல்ஸ் எனும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம், போபால் ஆலையில் 26 ஆண்டுகளாகக் குவிந்து கிடக்கும் இரசாயனக் கழிவுகளை அகற்றுவதற்கும், போபால் மருத்துவமனையை நடத்துவதற்கான செலவுகளுக்குப் பொறுப்பேற்பதற்கும் மறுத்து வருகிறது. டௌ-வின் கோரிக்கைகள் அனைத்தையும்  ஏற்றுக் கொண்டிருக்கிறது, மன்மோகன் சிங் அரசு.


இந்திய அரசு அமெரிக்காவிடம் வாங்கவிருக்கும் அணு உலைகள் வெடித்து, நாளை இலட்சக்கணக்கான இந்தியர்கள் செத்தாலும், அதற்காக அணுசக்தி கம்பெனிகளைப் பொறுப்பாக்கக் கூடாது என்று கூறும் மசோதாவை நிறைவேற்ற சூழ்ச்சி மேல் சூழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறுது, காங்கிரசு அரசு.


"பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்துக்காக இந்திய மக்களைக் கொல்வதும், மண்ணைவிட்டு விரட்டுவதும், நம் தொழில்களை அழிப்பதும், உரிமைகளைப் பறிப்பதும்தான் நீதி. பன்னாட்டு முதலாளிகள் சொல்வதுதான் சட்டம். அவர்கள் கொழுப்பதுதான் நாட்டின் முன்னேற்றம்" என்ற இந்திய அரசின் மறுகாலனியாக்கக் கொள்கையை எதிர்த்தும், "போபால் படுகொலைக்கு நீதி வேண்டுமா? நக்சல்பாரி புரட்சி ஒன்றுதான் பாதை!" என்பதை உணர்த்தியும்,  கொலைகார டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட அறைகூவி மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து போலி சுதந்திர நாளான ஆகஸ்ட் 15 அன்று போராட்டத்தை அறிவித்திருந்தன.


இதையொட்டி ஏறத்தாழ ஒரு மாதத்துக்கும் மேலாக, தமிழகமெங்கும்  2 இலட்சத்துக்கும் மேலான  துண்டுப் பிரசுரங்கள், 70,000 சிறு வெளியீடுகளுடன் ஆலை வாயிற்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், புகைப்பட கண்காட்சிகள் வாயிலாகவும்  பேருந்துகள்-இரயில்கள், குடியிருப்புப் பகுதிகள், கடைவீதிகள், கல்லூரிகள்-பள்ளிகளிலும் வீச்சாகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. " இப்படியொரு கொடுமை நடந்துள்ளதா?" என்று அதிர்ச்சியடைந்த உழைக்கும் மக்கள், இப்பிரச்சார இயக்கத்தையும் போராட்டத்தையும் ஆதரித்து நன்கொடைகள் அளித்ததோடு, கொலைகாரர்களுக்கு எதிராக தமது வெஞ்சினத்தையும் வெளிப்படுத்தினார்கள்.


இம்முற்றுகைப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்து தடைவிதித்ததுடன், போராட்டத்துக்குத் திரண்டுவந்தவர்களை ஆங்காங்கே வழிமறித்துக் கைது செய்தது, போலீசு.  எனினும், தடையை மீறி சென்னை - காசி திரையரங்கம் அருகிலிருந்து டௌ கெமிக்கல்சின் சென்னை அலுவகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல காலை 10 மணியளவில் இவ்வமைப்பினர் செஞ்சட்டையுடன் செங்கொடி ஏந்திக் குடும்பம் குடும்பமாக அணிதிரண்டு, தடையை மீறி அங்கேயே ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.


இவ்வமைப்புகளின் தோழர்கள் நடத்திய வீதி நாடகம் போபால் படுகொலைக் கொடூரத்தை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி, அனைவரது நெஞ்சங்களையும் குமுறியெழச் செய்தது. மழையைப் பொருட்படுத்தாமல், பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் பறை முழக்கத்துடன் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம், விண்ணதிரும் முழக்கங்களுடன் ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 1500 பேரை போலீசு கைது செய்தது. பள்ளிகள் மற்றும் மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்த இத்தோழர்கள் உற்சாகத்துடன் விளக்கவுரை, கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு.வெள்ளையன், போராடிக் கைதான தோழர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். கைதான தோழர்கள் இரவு விடுவிக்கப்பட்டனர்.


இந்த முற்றுகைப் போராட்டத்தைத் தடுத்ததன் மூலம் ஆகஸ்ட்-15 என்பது பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குத்தான் சுதந்திர நாள் என்பது நிரூபணமானது. போலி சுதந்திர நாளில், நாட்டு விடுதலைக்கான ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டமாக இம்முற்றுகைப் போராட்டம் அமைந்தது.
-பு.ஜ.செய்தியாளர்கள்.