Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

மக்களின் எதிர்பார்ப்பும், புலித் தலைவரின் அலட்சியமும்

  • PDF

வருடாவருடம் மக்களின் வேறான எதிர்பார்ப்புகளின் மத்தியில், புலிகளின் தலைவர் பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம். வருடம் ஒரு முறை தான், அவரின் கருத்து என்ற ஒன்றை அவர் வாயால் மக்கள் கேட்க முடியும் என்ற நிலை. மக்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்று. அவர் உரையாற்றுவது வேறொன்று.

 

அவர் இந்த தமிழீழம், நாம் கொள்கையில் நேர்மையானவர்கள், பொறுமையின் எல்லையில் காத்துக் கொண்டிருக்கின்றோம், எமது பலத்தை காட்டியுள்ளோம், அடிகுத்து, என்றவாறான உரையாற்றுபவர். இதை மக்கள் கேட்க மட்டும் தான் முடியும். அபிப்பிராயம் சொல்லவோ, விமர்சனம் செய்யவோ முடியாது. புலியை வைத்து ஏய்த்துப் பிழைக்கும் கூட்டத்துக்கு இது மட்டும் போதுமானதாக இருப்பது வழக்கம். அவர்களை திருப்தி செய்யும் வகையில் தான் உரை அமையும். ஏன் புலித்தலைவரின் நோக்கமும் அதுவே தான். சென்ற முறையும் அதற்கு முந்திய முறையும் கூட அது அவ்வளவாக எடுபடவில்லை. இம்முறையும் சென்ற முறையை கூட தாண்டாது, அவ்வளவுக்கு அது சேடமிழுக்கின்றது.

 

தமிழ் மக்கள் புலித் தலைவரிடம் எதை எதிர்பார்க்கின்றனர்

 

தாம் நிம்மதியாக வாழும் மனித சூழலை எதிர்பார்க்கின்றனர். பேரினவாதம் கொட்டம் அடித்தாலும், புலிகளாவது ஆறுதலளிக்கக் கூடிய வகையில் தம்முடன் நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் அதை எதிர்பார்க்கின்றனர். இதைப் புலிகள் தமது மக்களுக்கு ஏற்படுத்த மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் வாழ்வை கையில் பிடித்துக்கொண்டு வாழ்கின்றனர். தமது துயரத்தை சொல்லி அழக் கூட ஒரு மக்கள் தலைவன் கிடையாது என்ற நிலையில், ஊமையாகி ஊனமாகி நடுங்கிக் கிடக்கின்றனர்.

 

மக்கள் தம்மை சக மனிதனாக, சகல உரிமைகளும் கொண்ட சக மனித ஜீவியாக, புலித் தலைவரின் உரிமைகளுக்கு நிகராக, தம்மை மதிப்பதையே அவர்கள் கோருகின்றனர். தமது பிரச்சனைகளைக் காது கொடுத்து கேட்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் தான், மக்கள் நடைப்பிணமாக வாழ்கின்றனர்.

 

புலித் தலைவர் தனது குடும்பம், தனது குழந்தை, தனது ஆட்களை நடத்துகின்றது போன்று, எமக்கு ஒரு தந்தையாக, குடும்ப உறுப்பினராக உறவினராக, ஏன் ஒரு மக்கள் தலைவனாக இருக்க மாட்டாரா என்று அங்கலாய்க்கின்றனர். புலிக்கு மட்டும் தலைவராக இருந்து, மக்களாகிய தம்மை ஒடுக்குவதை கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். மக்களாகிய தம்மையும் ஒரு மனிதனாகக் கூட நடத்தமாட்டாரா என்று அங்கலாய்க்கின்றனர்.

 

வன்னியில் அன்றாடம் மக்கள் பலாத்காரமாக யுத்தமுனைக்கு அனுப்பப்படுகின்றனர். மக்கள் முன், புலித் தலைவனால் யுத்தம் வலிந்து திணிக்கப்படுகின்றது. கட்டாயப்படுத்தி அனுப்பப்படும் மனிதம், உணர்ச்சியற்ற பிணமாகவே சண்டைக்குள் இறக்கப்படுகின்றனர். அங்கு மீண்டும் ஒருமுறை யுத்த முனையில் அவர்கள் கொல்லப்படுகின்றனர்.

 

இதனால் மனித சாவு நிகழாத நாட்கள் கிடையாது. மரண ஓப்பாரிகள் கேட்காத கிராமங்கள் கிடையாது. ஒவ்வொரு வீட்டையும், நிலைகுலைய வைத்துள்ள மரணங்கள். யார் யாருக்கு ஆறுதல் சொல்வது என்று தெரியாதளவில் மரணங்கள். தமது குழந்தைகளை பிள்ளை பிடிகார புலிகளிடம் தொலைத்து விட்டு பரிதவிக்கும் மக்கள். குழந்தையின் பிணத்தை எதிர்பார்த்து, வாசலில் காத்துக்கிடக்கும் மக்கள். இதுதான் அந்த மக்களின் வாழ்வியல். இதைத்தான் புலித்தலைவன் மக்களுக்கு கொடுத்துள்ளான். ஏன் இந்த ப+மியில் தின்னக் குடிக்க எதையும் தலைவர் விட்டுவைக்கவில்லை.

 

எதையும் சொந்தக் குடும்பத்தில் கூட வாய்விட்டு பேச முடியாது. எங்கும் எதிலும் அச்சம். வாய் பேசாது ஊமையாகிய மனங்கள். தமது துயரத்தையே தமக்குள் பொத்திக்கொண்டு வாழ்கின்ற, அடிமை வாழ்க்கை.

 

இப்படி ஆயிரம் ஆயிரம் மனித துன்பங்களை சுமந்து நிற்கின்ற ஒரு பூமியின், தலைவர் தான் புலித் தலைவர். இந்த புலித் தலைவரிடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பது, இதில் இருந்து விடுதலை தான். புலிகளிடம் இருந்து அவர்கள் எதிர்பார்ப்பது, தமது வாழ்வின் மீட்சியைத் தான். தமிழ் மக்களாகிய தம் மீதான, புலிகளின் அடக்குமுறையை அல்ல.

 

வெல்ல முடியாத ஒரு புலி யுத்தத்தைக் கொண்டு, விடுதலை காண்பதாக கூறுவதை மக்கள் நம்பத் தயாராகவில்லை. தமிழ் மக்களாகிய தமக்கு புலிகள் தரமறுக்கும் சொந்த விடுதலையை தான், புலித்தலைவரிடம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

உழைப்பு இல்லை. நிவாரணமில்லை. குழந்தைகள் இல்லை. குடும்பங்கள் சிதைந்து விட்டன. உற்றார் உறவினர் எல்லாம் அழிந்து சிதைந்து சின்னாபின்னமாகிப் போய்விட்டார்கள். எஞ்சிக்கிடப்பது தனிமை. வாய் விட்டுப் பேச முடியாத சூனியம். புலம்பக் கூட முடியாத கண்காணிப்பு. இப்படி மனித அவலத்தால் நிறைந்த, மகிழ்ச்சியற்ற ஒரு பூமியாகிவிட்டது. இதைத்தான் புலித் தலைவர் மக்களுக்கு பரிசாக்கியுள்ளார்.

 

மக்கள் தலைவரின் உரையில் எதிர்பார்ப்பது இதில் இருந்து ஒரு மீட்சியைத்தான். களைத்துப் போன சண்டையைப் பற்றிய வீறாப்போ, தோற்றுக்கொண்டு இருக்கும் சண்டை பற்றிய நம்பிக்கையோ அல்ல. சமாதானம் பற்றிய உறுதியையோ, அன்னிய நாடுகள் பற்றிய நம்பிக்கையீனம் பற்றிய தலைவரின் ஒப்பாரியையோ அல்ல. மனித வாழ்வின் மீட்சிக்கு, மனிதனின் மகிழ்ச்சிக்குரிய ஒரு நல்ல தலைவனின் உண்மையான மனித அக்கறையை, அதையொட்டிய நடைமுறையை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

பி.இரயாகரன்
26.11.2007