Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் சுய வாக்குமூலங்கள் மேலான குறுக்கு விசாரணையும், தீர்ப்பும்

சுய வாக்குமூலங்கள் மேலான குறுக்கு விசாரணையும், தீர்ப்பும்

  • PDF

இனியொரு நாவலன் வழக்கு போடப் போவதாக சலசலப்புக் காட்டி மிரட்டுகின்றார். நாமே குறுக்கு விசாரணையை நடத்தி, வழக்கை நடத்திவிட வேண்டியதுதான். அந்தக் குறுக்கு விசாரணையை எழுதிக்கொண்டிருந்த போது இனியொரு ஆசிரியரும், அருள் செழியனின்  தம்பியுமான அருள் எழிலன் "நடந்தது என்ன" என்ற ஒன்றை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரை எழுதி முடிந்த நிலையில் குகநாதன் பேட்டி தேசம் நெற்றில் வெளியாகியது. இதையடுத்து நாவலன் "ஜெயபாலன் – ரயா – குகநாதன்"  கூட்டுபற்றி வேறு பேசியிருக்கின்றார். குகநாதன் சமன் மகிந்த ராஜபக்சா என்று சொல்லி, இதுதான் ரயா என்று சொல்லும் எல்லையில் நாவலன் அரசியல் விரைவில் தஞ்சமடையும். நாம் முதலில் அருள் செழியன் - அருள் எழிலன் விடையத்தை சுருக்கமாக பார்த்துவிட்டு குறுக்கு விசாரணைக்கு செல்வோம்.


"மன நோயாளி" என்று கூறி அருள் எழிலன் தந்த விளக்கம் மனநோயாளித்தனமானது
 
"நடந்தது என்ன" என்று எதையும் அவர் எழுதவில்லை. மாறாக இது நடக்கக் காரணம் என்ன என்பதை விலாவாரியாக சொல்லுகின்றார். எமது விவாதம் இதுவல்லவே. நடந்தது என்ன என்பதே எமது கேள்வி.
 
1. இதில் நாவலன் சம்மந்தப்படவில்லை என்று தடாலடியாக மறுக்கின்றார். அதை அவர் "இந்தச் சம்பவத்தில் எந்தத் தொடர்புமற்ற நண்பர் நாவலனின் பெயரை தேவையில்லாமல் தொடர்புபடுத்தி அவர் செய்யும் அவதூறுகளால் அவர் பாதிக்கப்படுகிறார்கள்" என்று கூறி முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் அழுத்திக்காட்டுகின்றார். இப்படி ஒருவரை ஒருவர் காப்பாற்ற முனைகின்றனர்.     
 
இதில் நாவலன் சம்பந்தப்படவில்லையா!? இது என்ன எமது கற்பனையா!? குகநாதனின் புரட்டா?  உங்கள் வாக்குமூலங்கள் உண்மையை மூடிமறைக்க எப்படி புரட்டுகின்றது என்று பார்ப்போம்.   உங்கள் அண்ணன் அருள் செழியன், நாவலன் தலையிட்டதாகவே சொல்லுகின்றார்.

"குகநாதன் விடயத்தில் சபா நாவலன், அசோக் போன்றவர்களிடம் குகநாதனின் மனைவி அழுது கதறியதால் தான், அவர்கள் அவருக்காக என்னிடம் பேசினர்" என்கின்றார். இது பொய்யா? அல்லது நீங்கள் சொன்னது பொய்யா? சொல்லுங்கள். இப்படிக் கேட்டால் எம்மை "மனநோயாளி" என்பீர்கள். சரி, உங்கள் அண்ணன் சொன்னதை நீங்கள் மறுக்கின்றீர்களா?  இதில் எங்களுக்காகவல்ல "அவர்கள் அவருக்காக என்னிடம் பேசினர்" என்று, இந்தத் தலையீட்டைப் பற்றி குறிப்பிடுகின்றார். சரி உங்கள் அண்ணன் பொய் சொன்னான் என்று நீங்கள் கூறினால், உங்கள் "மார்க்சிய" தோழர் என்ன தான் கூறுகின்றார் என்று பார்ப்போம்.

"..நான் இதில் தலையிட விரும்பவில்லை என்றும் வேண்டுமானால் எனக்கு ஒரு ஆலோசனை தோன்றுகிறது என்றும் கூறினேன். அதாவது இந்தியாவில் சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதால் பிரான்சில் உள்ள சர்வதேசச் சட்டத்தரணி ஒருவரைத் தொடர்புகொண்டு அவரூடாகப் பணம் தருவதற்கு ஒரு கால எல்லையைப் பெற்றுக்கொள்ளலாமே என்று கூறினேன். அவருடன் இணைப்பைத் துண்டித்துக் கொண்டதும், அருள் எழிலனிடம் இது குறித்துக் கூறினேன்." என்கின்றார். இது என்ன? கத்தரிக்காய் வியாபாரமா? பணத்தை எப்படி யாரிடம் கொடுப்பது என்ற விடையத்தை முன்வைத்தது மட்டுமின்றி, இதுபற்றிய முடிவை உங்களிடம் கூறியதாகவும் கூறுகின்றார். இது அவரின் சுயவாக்குமூலம். சரியாக அப்போது எத்தனை மணி, இரவு 3 மணி.  அதற்கு நீங்கள் கூறியதாக "..பாதிக்கப்பட்டிருப்பது தனது அண்ணன் என்றும் என்னை இந்த விடயத்தில் இனிமேல் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்" என்றும் கூறுகின்றார். இனி இதில் "இந்த விடயத்தில் இனிமேல் தலையிட" வேண்டாம் என்று கூறியதாக கூறுகின்றார். இப்படி உண்மை இருக்க "மனநோயாளி" என்று கூறினால், எல்லா உண்மையும் பொய்யாகிவிடுமா? இவை உங்களைச் சேர்ந்தவர்களின் சொந்த வாக்குமூலங்கள் தான். எனது கற்பனையல்ல. இதை நாம் குறுக்கு விசாரணை செய்யும் போது, இதில் எதை மறைத்தீர்கள்,  எதை திரித்தீர்கள் என்பது மேலும் அம்பலமாகும்;.    
 
2. அருள் செழியன் நீங்கள் நடத்திய கட்டைப் பஞ்சாயத்துக்குரிய கொடுக்கல் வாங்கல் பற்றி, நாம் இங்கு தலையிடவில்லை. நீங்கள் முன்வைத்த ஆவணங்கள், சாட்சியங்களை நாம் மறுக்கவோ, இதை இல்லையென்று சொல்லவோ நாம் என்றும் முனையவில்லை. குகநாதன் பக்கத்தில் நியாயம் இருப்பதாக நாம் எதுவும் கூறவுமில்லை. நாம் முதல் கட்டுரையில் குறிப்பிட்டது போல், இது தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் என்பதை  குறிப்பிட்டதுடன், இதற்குள் சரி எது பிழை எது என்று நாம் எதையும் சொல்லவில்லை.
 
அங்கு என்ன நடந்தது என்பதும், யார் இதில் எப்படி எந்த நிலையில் தலையிட்டனர் என்பதும், எந்த முறையில் இந்த பிரச்சனை கையாளப்பட்டது என்பதும் தான், எமது குறிப்பான எமது கவனமாக இருந்தது, தொடர்ந்தும் இருக்கின்றது.
 
மற்றும்படி இந்த கொடுக்கல் வாங்கல் சார்ந்த இந்த பிரச்சனையை, சட்டப்படி நீதிமன்றம் மூலம் அணுகுவதையிட்டு நாம் இங்கு எந்த கேள்வியும் எழுப்பவில்லை. இப்படி இலட்சம் இலட்சம் விவகாரங்களில் நாள் தோறும் நீதி கோரப்படுகின்றது, மறுபக்கம் நீதி மறுக்கப்படுகின்றது. அருள்செழியன் போன்று பலர் இந்த ஈழத்து வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் சீரழிந்தனர் என்பது பொதுவான உண்மை. இங்கு தாங்களே இதில் ஒரு பங்காளியாக இருந்ததும், நம்பி ஏமாந்ததும் என்ற இதன் பின்னணி பற்பல உள்ளது. இது குகநாதனுக்கும் கூட பொருந்தும்.
 
விளம்பரம் இன்றி, வருமானம் தராத ஒரு தொழிலை நடத்தினர். இதில் தம்மை பங்காளியாகவும், நம்பிக்கை ஊட்டப்பட்டு ஏமாற்றப்பட்டவராக, பலவிதமான பின்புலங்கள் உண்டு. ரீ.ஆர்.ரி. வானொலியை புலிகள் குகநாதனிடம் இருந்து கைப்பற்றிய போது, இதன் பின் ஒரு கோடி ஈரோக்கள் பணத்தை சிலர் இழந்தனர் என்பது தகவல். இதைப் பெற பிரபாகரனை சென்று சந்தித்தவர்களுக்கு, ஆளுக்காள் சேர்ந்து நிலவைக் காட்டினர். குகநாதனின்  முன்னாள் கூட்டாளியும், பின் அவரை துரோகி என்று கூறிய பாரிஸ் ஈழநாடு பாலச்சந்திரன் கூட, இப்படி பணத்தைப் பெற வன்னி சென்ற போது தான் பிரபாகரனுடன் நின்று எடுத்த போட்டோவையே நாடுகடந்த தமிழ் ஈழத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தினார். இப்படி வானொலி, தொலைக்காட்சியின் பின் பலர் எதுவுமற்றராகினர். சற்றலையிற் நிறுவனம் மாதம் மாதம் பல இலட்சத்தை பெற, உங்கள் பணம் காணாமல் போனது. இப்படித் தான் இவை அரங்கேறின. சீட்டுக் கட்டுபவனிடம் சீட்டை எடுக்காது, சீட்டை கட்டுபவனிடமே வட்டிக்குவிட்டு வட்டியை அறவிட்டவர்கள் வட்டிக்கு விட்ட முதலையும் இழந்து சீட்டையும் இடையில் முறித்த கதைகள் போன்றது இவை.  
 
குகநாதன் வருமானம் வராத ஒன்றை, வருமானம் வரும் என்று நம்பவைத்து, பலரை இதில் இறக்கி இறுதியில் இந்தா அந்தா என்று ஏமாற்றியது அனைவருக்கும் தெரிந்த உண்மை. தொழிலில் இவை உள்ளவைதான். அவருடன் தொழில் நடத்திய அருள் செழியனுக்கு தெரியாது என்பதும், பலர் சொல்ல தொடர்ந்து நடத்தியது என்பதும் கூட, தங்களுக்கு கிடைத்த வரையில் இதில் பிரச்சனை இருக்கவில்லை என்பதை இது தெளிவுபடுத்தியுள்ளது.
 
3. குகநாதன் பற்றிய எமது நிலைப்பாடு தெளிவானது. அவர் புலிகளுடன் புலித்தேசியத்தை ஆதரித்து நின்ற போதும் தமிழ் தேசியவாதியாகவோ, இன்று இலங்கை அரசுடன் நிற்கின்ற போது தமிழ் தேசிய விரோதியாகவோ நாம் வகைப்படுத்தவில்லை. இப்படி நிற்பதன் மூலம், ஒரு தொலைக்காட்சியை நடத்த முடியும் என்பது அவரின் தொழில் பற்றிய கண்ணோட்டம். இது அரசியல் சூழலுக்கு ஏற்ப, மக்களுக்கு எதிராக எப்போதும் இருந்து வந்திருக்கின்றது. புலிகளுடன் நின்ற போது எதை அவர் செய்தாரோ, அதையே அரசுடன் நிற்கின்ற போது செய்கின்றார். ஒரு வித்தியாசமும் இதில் கிடையாது. தமிழ் தேசியம் பேசும் கஸ்பார் அடிகளை, புலித் தமிழ்தேசியத்துக்கு தன் வானொலி ஊடாக அறிமுகப்படுத்தியவரும் இதே குகாநாதன் தான். கஸ்பார் அடிகள் மூலம், மக்கள் மத்தியில் புலிக்காக பண சேகரிப்பை நடத்தியவர் இதே குகநாதன் தான். அன்று இதை நாம் அம்பலப்படுத்தினோம். அன்றும் சரி இன்றும் சரி, அவர் பற்றிய நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. அவர் நடத்திய ஈழநாட்டுக்கு தீ வைத்தும், அதன் ஆசிரியரில் ஒருவரை தாக்கியும், ஈழநாட்டை கைப்பற்ற புலிகள் முற்பட்ட போது அதையும் நாம் கண்டித்தோம். இங்கு குகநாதன் போன்றவர்களை அரசின் பக்கம் தள்ளிய தமிழ்தேசியத்தை விமர்ச்சிக்கும் அதே அளவுகோலைக் கொண்டு தான், தனிப்பட்ட அந்த நபர்கள் அரசுடன் சேர்ந்து நின்று தமிழ்மக்களுக்கு எதிராக செயல்படும் வடிவத்தையும் கண்டிக்கின்றோம். இது கருணா, டக்கிளஸ் என அனைவருக்கும் பொருந்தும்.       
 
4. நாம் குறுக்கு விசாரணைக்குள் செல்ல முன், இந்தக் கட்டுரையில் அருள்செழியன் மீது குகநாதன் நடத்திய கட்டைப் பஞ்சாயத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகின்றார். "எனக்கு எதிராக புகார் செய்திருந்த சத்தியமூர்த்தி ஒரு போலி பத்திரிகையாளர் என்றும் மேலிட செல்வாக்குடன் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிய வந்தது. என் மீதான இந்த மோசடி புகார் எனக்கு ஒரு புறம் அதிர்ச்சியை தந்தாலும் ….
 
சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு ஆய்வாளர் ஜீவரத்தினம் என்னை மிரட்டி கட்டை பஞ்சாயத்து செய்ததாக புகார் ஒன்றை அனுப்பினேன். அதைத்தொடர்ந்து பல அதிகாரிகளுக்கும் புகார்கள் அனுப்பினேன் எந்த பயனுமில்லை.
 
நடவடிக்கை எதுவும் இல்லாததால் ஆய்வாளர் ஜீவரத்தினம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும். 5லட்ச ரூபாய் நஸ்ட ஈடு பெற்றுத்தரும் படியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தேன். (அது இன்னமும் விசாரணையில் இருக்கிறது)"
என்கின்றார். ஆம் இது அருள் செழியன் கூறுவது போல் "கட்டைப் பஞ்சாயத்து" தான். இது கட்டைப் பஞ்சாயத்து என்றால், நீங்கள் செய்தது இதுதானே. இங்கும் அதே வழிமுறை தான் நடந்தது.
 
பணம், செல்வாக்கு, அதிகாரம் கொண்ட கும்பல், பொதுவில் நாடும் வழிமுறை இது. பொலிஸ் என்ற ஆளும் வர்க்கக் கும்பலைச் சார்ந்தும், அரசியல்வாதிகளைச் சார்ந்தும் இது இயங்குகின்றது. அதேபோல் தாதாக்களைச் (மாபியா) சார்ந்து, இது ஒரு தொழிலாக இயங்குகின்றது.
 
இந்தத் தொழிலுக்குள் புரட்சி, மார்க்சியம், தேசியம் என்ற மக்கள் சார்ந்த விடையத்தை பேசிக்கொண்டு ஈடுபடலாமா என்பதே, இங்குள்ள எமது பிரச்சனை. இது அரசியல் வழிமுறை மீதான அரசியல் பிரச்சனை. இதில் அருள் செழியன் - குகநாதன் தனித்தும், சட்ட நடைமுறைக்குள்ளும் ஈடுபட்டு இருந்தால் இது முற்றிலும் வேறு. இதில் இனியொரு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த மூவரும், ஏதோ ஒரு வகையில் பங்கு கொண்டு இருந்தனர். இதை உங்கள் வாக்குமூலங்கள் மிகத் தெளிவாக உறுதி செய்கின்றது. இதனால் இது அரசியலாக உள்ளது. இந்த வகையில்தான் இதை நாம் அம்பலப்படுத்தினோம், தொடர்ந்தும் அம்பலப்படுத்துவோம்.
 
5. அருள்செழியன் எனக்கு தந்த தொலைபேசி மூலம் அவருடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை. நான் எனது தொலைபேசி எண்ணை உடன் ஈமெயில் மூலம் கொடுத்து இருந்தும்,  அவரும் தொடர்பு கொள்ளவில்லை. அருள் எழிலன் கூறுவது போல் அல்ல. இதனால் அவர் தருவதாக சொன்ன 8 மணி நேர இந்த விவகாரத்தை நாம், மேலும் சுயமாக தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் அதைத் தருவதை நாங்கள் வரவேற்கின்றோம். அதைத் தருவதாக இருந்தால், எம்முடன் தொடர்பு கொள்ளவும்.                               
 
யாருக்கு எதிராக எதற்கு எதிராக வழக்கு?
 
சட்டம் வழக்கு என்கின்றார்கள், சரி யாருக்கு எதிராக எதற்கு எதிராக என்றால் ஒன்றும் புரியுதில்லை.  இந்தியாவில் பொலிஸ் துணையுடன் பிடித்து வைத்த ஒருவரை, விடுவிக்க பணத்தை வழங்கும்படி நாவலன் கோரியதை அம்பலப்படுத்தினோம். இப்படி எழுதியது தவறு என்று தான் வழக்காம். நல்ல வேடிக்கையாக இருக்கு. இதில் அவரின் கூற்றுப்படி இறுதி பேரம் என்ன? நாவலன் கூறுகின்றார் பாருங்கள் "…பிரான்சில் உள்ள சர்வதேசச் சட்டத்தரணி ஒருவரைத் தொடர்புகொண்டு அவரூடாகப் பணம் தருவதற்கு" ஏற்பாடு செய்யும்படி கூறியவர் தான் இறுதியில் "இணைப்பைத் துண்டித்துக் கொண்டதும், அருள் எழிலனிடம் இது குறித்துக் கூறினேன்." என்கின்றார். இப்படி எதுவும் நடக்கவில்லை என்று வழக்கா!? அந்தப் பணம் எவ்வளவு? அண்ணன் அருள்செழியன் கூறினார் நீங்கள் "அவருக்காக (குகநாதனின் மனைவிக்காக)  என்னிடம் பேசினர்" என்று. ஆனால் நாவலன் (அருள்செழியனுக்காக) பணத்தை எப்படி யார் மூலம் கொடுப்பது பற்றி பேசினர். இந்த முரண்பாட்டின் மேல் வழக்கா?
 
குகநாதனை செய்தது போல், பொலிஸ் மற்றும் சட்டத்தின் முன் எம்மை நிறுத்தப்போவதாக நாவலன் மிரட்டுகின்றார். நீங்கள் எம்மை சிறையில் தள்ளினாலும் சரி, மரண தண்டனையை வழங்கினாலும் சரி, இந்தச் சலசலப்பு மிரட்டலுக்கு நாம் அஞ்சப் போவது கிடையாது. கடந்த எங்கள் அரசியல் வரலாறு, இதையெல்லாம் துச்சமாக தூசாக கடந்துதான் வந்துள்ளது. போராட்டம் என்றால், இவை இன்றியா இருக்கும்? கருத்துச் சுதந்திரத்துக்காக, மக்களை ஏய்க்கும் கூட்டத்தை அம்பலப்படுத்தியதற்காக, உங்கள் சட்டம் சிறைத் தண்டனை தந்தால் அதற்கு நாங்கள் மண்டியிடமாட்டோம்.
 
சமூகம் பற்றிய பொது அரசியலுக்கு மீண்டும் வந்த பின்பு, உங்கள் நடத்தைகள் தான் எங்கள் எழுத்தில் அம்பலமாகின்றது. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லையா? நீங்கள் பேரம்  பேசவில்லையா? அப்படி பங்குபற்றினால் அது தவறு என்று உங்களுக்கு தெரிவதால், இன்று  அதை மறுக்கின்றீர்கள். சரி, உங்களுக்கு தவறாக தெரியும் இந்த விடையத்தில், இனியொரு ஆசிரியரும் தம்பியும் அருள் எழில், அண்ணனுக்காக இதில் ஈடுபடலாமா? அரசியல் ரீதியாகவே பதில் அளியுங்கள். 
 
சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட சிலரின் அரைகுறையான, திரிபுபட்ட உங்கள் சுய வாக்குமூலங்கள் மேல் வழக்கு போடப்போகின்றீர்களா?. வேடிக்கைதான் போங்கள். ஆனால் கிரிமினலில் நீங்கள் சூரர்கள்தான். நாங்கள் இல்லை என்று சொல்லவரவில்லை. இனியொரு என் பெயரில் மே 18 யானுக்கு எதிராக தயாரித்த அவதூறு ஈமெயிலை, தேசம்நெற்றில் போட்டு நடத்திய கிரிமினல் தனம் அம்பலமான போது என்னதான் செய்தீர்கள். சொல்லுங்கள். அன்று இரண்டு தரப்பும் நேர்மையாக எந்த சுயவிமர்சனத்தையும் செய்யவில்லை. இப்படி வழக்கு, சட்டம் என்று வந்தால் நீங்கள் அங்குமிங்குமாக பல புனைபெயரில் எழுதிய அவதூறு பின்னோட்டங்களை முன் கூட்டியே அழித்துவிடுங்கள்.          

கட்டைப் பஞ்சாயத்தை தவறு என்று சொல்லும் எம் கருத்துரிமை மீது வழக்கு!?
 
இதில் சம்பந்தபட்டவர்களின் சில சுயவாக்கு மூலங்கள் கிடைத்துள்ளது. ஆக நாம் அம்பலப்படுத்திய சம்பவம் உண்மையானது என்பதை, இது மிகத் தெளிவாக அறிவிக்கின்றது. அப்படியாயின் யாருக்கு எதிராக வழக்கு? தங்களுக்கு எதிராக தாங்களே வழக்கு. அவர்கள் நடந்ததை உறுதி செய்துள்ளனர். இதில் அவர்கள் தாங்கள் நடந்து கொண்ட விதம் எதுவும் தவறானதல்ல என்கின்றனர். இப்படி 
 
1. இது போன்ற செயல் சரியானது என்பது, அவர்களின் அரசியல் நிலைப்பாடாகி விடுகின்றது.  
 
2. இது போன்றவற்றில் ஈடுபடுவது தொழில் ரீதியான அவர்களிள் நடைமுறையாகிவிடுகின்றது.
 
நாங்கள் இதை தவறு என்று சொல்வதால், அதன் மேல் தான் வழக்கு. சொல்லும் கருத்துரிமை மீது வழக்கு. நடந்தது, இதில் தாங்கள் பங்கு கொண்டதையும், சுயவாக்கு மூலம் வழங்கி நியாயப்படுத்துபவர்கள் தான், அதைப் பற்றி நீ பேசக் கூடாது என்று கூறி வழக்கு போடப் போகின்றார்கள். இதை உள்ளுக்குள் விவாதிக்கவேண்டுமாம். தங்களைக் கேட்டு எழுத வேண்டுமாம். அரசியல் வேடிக்கையாயில்லை!    
 
இதில் குறைந்தபட்சம் பத்துபேருக்கு மேல் சம்பந்தப்பட்டனர். இந்த விவகாரத்தில், ஆளுக்காள் ஒரு விளக்கம் உண்டு. இங்கு அருள்செழியன் குகநாதன் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், அவர்கள் சார்ந்த கொடுக்கல் வாங்கல் விவகாரம் எமக்கு அக்கறைக்குரியதல்ல. சில பல பத்து இலட்சங்கள் கொண்ட இந்த கொடுக்கல் வாங்கல்கள் முதல் குறித்த இந்த சம்பவம் மூலம் பல இலட்சம் அறவிட்டது வரை இவை அனைத்தும் சட்டரீதியான வியாபாரமாகவா இருந்தது!? இந்தப் பணத்தை கொடுத்தவர் யார்? அதையும் கண்டுபிடிக்க முனையுங்கள். கொடுத்தவர் யார் என்பதை, தமிழ்தேசியம் பேசும் அருள் எழிலன்  அம்பலப்படுத்தி, அந்த மக்கள் பணத்தை தூக்கியெறியட்டும் பார்ப்போம். குகநாதனுக்காக அவர் யாருடைய பணத்தை எடுத்து உங்களுக்கு கொடுத்தார். தமிழ் மக்களின் பணத்தைத்தான். இதில் பொலிஸ்சுக்கு எவ்வளவு, மற்றவர்களுக்கு எவ்வளவு என்ற பல புதிர்கள் உண்டு. இப்படி பற்பல விவகாரங்கள் இதன் பின்னணியில் இன்னமும் உள்ளது. நீங்கள் நடத்திய இந்த கட்டைப் பஞ்சாயத்து முடிவுறாமல் கொஞ்சம் பிந்தியிருந்தால், இலங்கை அரசாங்கம் தலையிட்டு மற்றொரு கட்டைப் பஞ்சாயத்தில் தலைகீழாக முடித்திருக்கும். உங்கள் கட்டைப்பஞ்சாயத்தில் இலங்கை அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் இறுதியில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது.
 
இதில் எமது கவனம் குறிப்பானது. "மார்க்சியம்", "தேசியம்" பேசும் இனியொரு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த மூவரும் இந்த பணப்பேரத்தில் தலையிட்ட எல்லையில், இதைச் சரியென்று இன்று நியாயப்படுத்துகின்றனர். தலையீட்டின் அளவு மற்றும் பண்பு பற்றிதான் முரண்படுகின்றனர். இது போன்ற தலையீடு அரசியல் ரீதியாகவே தவறானது என்று அவர்கள் சொல்லவில்லை. இதை கட்டைப்பஞ்சாயத்தல்ல என்று சொல்லுகின்றனர். அப்படித்தானே! இப்படி இது இனியொருவின் கொள்கை ரீதியான ஒரு அரசியலாகிவிட்டது. இதில் சம்பந்தபட்ட வழக்கறிஞர்கள் ஒருவரல்ல, மாறாக சிலராக இருந்தனர். அவர்கள் வேறுயாருமல்ல புலியை ஆதரிக்கும் சில கட்சிகளின் வழக்கறிஞர்கள். இப்படி பினாமி தமிழ்தேசியத்தை பயன்படுத்திய இந்த விடையம், உள்ளடக்க ரீதியாக மற்றொரு அரசியலாகிவிடுகின்றது. ஒரு சட்டத்தரணி மகிந்தாவிடம் காசை வாங்கி தரக்கோரியது முதல், குகநாதனிடம் பணத்தைக் தரக்கோரிய ஐரோப்பிய பிரதிநிதி தன் மிரட்டலின் போது, தமிழ்தேசியத்துக்கு எதிரானவராக உங்களைக் காட்டி இந்த விவகாரம் பெரிதாகிவிடும் என்பதால் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு, இதில் இருந்து விடுபடும்படியும் அன்பாக கேட்டுக் கொண்டார் என்பது வரை அரசியல் உள்ளடக்கம் இருந்தது. குகநாதனிடம் இல்லாத இந்தப் பணத்தை கொடுத்தவர், பணத்தை எதனடிப்படையில் கொடுத்தார் என்று உற்றுப் பார்த்தால் அதுவும் அரசியல்தான். தமிழ்தேசியத்தின் நிலையில் தமிழ்மக்களுக்கு எதிரான,  தொலைக்காட்சியாக அது மேலும் கூர்மையாகின்றது.

இனியொரு எம்மை முத்திரை குத்த போட்ட செய்தியில் "டான் டிவியின் யாழ் செய்தியாசிரியராக புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார்" என்று போடுகின்றனர். உங்களின் கட்டைப் பஞ்சாயத்துக்கு பணத்தைக் கொடுத்தவன் இதைத்தான் செய்வான்.  பணத்தைக் கொடுத்தவர் இந்த நோக்கில்தான் தலையிட்டார். இப்படி இதன் பின் இனியொருவின் "மார்க்சியம்", புலிப்பினாமிய தமிழ் தேசியம் முதல் பேரினவாதம் வரை சம்மந்தப்பட்டு இது அரசியலாக மாறியிருந்தது, மாறியிருக்கின்றது.
             
வழக்கு மீதான குறுக்கு விசாரணை
 
அருள்செழியன் தன்வாக்கு மூலத்தில் "குகநாதன் விடயத்தில் சபா நாவலன், அசோக் போன்றவர்களிடம் குகநாதனின் மனைவி அழுது கதறியதால்தான் அவர்கள் அவருக்காக என்னிடம் பேசினர். அப்போது நான் எனக்கு வரவேண்டிய பணத்திற்கு யாராவது பொறுப்பெடுத்தால் என்னை ஏமாற்றிய குகநாதனை விட்டுவிடலாம் என்றேன். அவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். இதுதான் நடந்தது." என்கின்றார்.
 
வழக்கு போட உள்ள சபாநாவலன் தன் சொந்த வாக்குமூலத்தில் "சம்பவ தினத்தன்று காலை அருள் எழிலன் இனியொருவில் பதிவு செய்வதற்காக எனது மின்னஞ்சலுக்கு ஒரு கட்டுரை அனுப்பி வைத்திருந்தார். அதன் இறுதிப் பகுதியை மாலை அனுப்புவதாக கூறியிருந்த போதிலும் அது எனக்கு வந்து சேரவில்லை. மாலை பிரித்தானிய நேரம் ஐந்து மணியளவில் அருள் எழிலனின் கைத்தொலைபேசிக்கு அழைத்து கட்டுரை குறித்துக் கேட்டபோது, அவர் தான் கொமிசனர் அலுவலகத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
 
அங்கே இலங்கைத் தமிழரான குகநாதனை தமது சட்ட முறைப்பாட்டின் பேரில் தமிழகப் பொலீசார் கைது செய்திருப்பதாகவும் அது தனது அண்ணனுக்குத் குகநாதன் தரவேண்டிய பணம் குறித்த முறைப்பாடு என்றும் தெரிவித்தார்.
 
குகநாதனுக்கும் அவரது அண்ணனுக்கும் என்ன தொடர்பு என்று கேட்ட போது, அதனை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்று தொலைபேசியை குகநாதனிடம் கொடுத்தார். குகநாதன் தான் பெருந்தொகையான பணம் கொடுக்கவேண்டியிருப்பதாகவும் ஆனால் அதனைக் கொடுப்பதற்கு தன்னிடம் போதிய வசதிகள் இல்லை என்றும் என்னை அவர்களை சமாதானப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
 
குகநாதனை இதற்கு முன்னர் எனக்குத் தெரியாது என்றும் அருள் எழிலனின் அண்ணனையும் எனக்குத் தெரியாது என்றும் இதனால் இதில் நான் தலையிட விரும்பவில்லை என்று கூறினேன்.
 
அதற்கு, என்னை அவருக்குத் தெரியும் என்றும் நான் சுபாஸ் என்பவரின் நண்பன் என்பது தனக்குத் தெரியும் என்றும் சுபாஸ் என்பவரை பணத்திற்குப் பொறுப்பாக நிற்கும்படி என்னைக் கோருமாறும் கேட்டுக்கொண்டார்.
 
சுபாஸ் என்பவருடன் எனக்கு நீண்ட நாட்களாகத் தொடர்பில்லை என்பது தவிர நான் இந்த விடயத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினேன்.
 
தவிர, அரை லட்சம் மனிதர்களைக் கொலைசெய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன் என்னிடம் உதவி கேட்பதற்கு எந்தத் தார்மீக நியாயமும் இல்லை எனவும் இந்தப் பிரச்சனையில் எந்தக் காரணம் கொண்டும் நான் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினேன்."
இப்படி நாவலன் கூறுகின்றார்.
 
இவை இரண்டும் அவர்கள் வாக்கு மூலம். இப்படி இருக்க, இரண்டு வாக்கு மூலமும் முரண்படுகின்றது. குகநாதன் மனைவி அழுது புலம்பியதால் "அவருக்காக" தலையிட்டதாக கூறும் அருள்செழியன், மறுதளத்தில் கட்டுரை கேட்டு போன் அடித்த போது அதில் தலையிட அருள்செழியனின் தம்பி அருள்எழிலன் கோரியதாக நாவலன் கூறுகின்றார். இதில் எது உண்மை? எது பொய்? அல்லது இதுதான் நடந்ததா?
 
"குகநாதனை இதற்கு முன்னர் எனக்குத் தெரியாது" என்பது உண்மை. அதுபோல் நாவலனை குகநாதனுக்கு தெரியாது என்பது உண்மை. "சுபாஸ்" என்பவரை இருவருக்கும் தெரியும் என்பது, யாருக்கு தெரிந்து இருந்தது. நாவலன் கூற்றுப்படி சில கணம் பேசிய அந்த இடைவெளிக்குள் ஏன் எதற்கு சுபாஸ் சம்மந்தப்படுத்தப்படுகின்றார்.

"சுபாஸ் என்பவரை பணத்திற்குப் பொறுப்பாக நிற்கும்படி" கோரினார் என்றால், எப்படி திடீரென அது சாத்தியம். இரவு 3 மணிக்கு "பிரான்சில் உள்ள சர்வதேசச் சட்டத்தரணி ஒருவரைத் தொடர்புகொண்டு அவரூடாகப் பணம் தருவதற்கு ஒரு கால எல்லையைப் பெற்றுக்கொள்ளலாமே என்று கூறினேன்.
 
அவருடன் இணைப்பைத் துண்டித்துக் கொண்டதும், அருள் எழிலனிடம் இது குறித்துக் கூறினேன்."

இங்கு சுபாஸ்சைக் கடந்து சென்ற இந்தப் பேரத்தில், சர்வதேசச் சட்டத்தரணி வருகின்றார்.

இறுதியில் இதை அருள் எழிலனுக்கு இந்த பேரத்தின் முடிவை சொல்ல வேண்டியிருந்தது. இதில் அசோக்கின் பாத்திரம் பற்றி எதையும் இவர்கள் முன்வைக்கவில்லை. அவரும் இந்த சம்பவத்தின் போதான பேரத்தில் இருந்ததவர்தான்.
 
குறுக்கு விசாரணை மூலம் இதை அணுகுவோம். "… அரை இலட்சம் மனிதர்களைக் கொலைசெய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன் என்னிடம் உதவி கேட்பதற்கு எந்தத் தார்மீக நியாயமும் இல்லை எனவும் இந்தப் பிரச்சனையில் எந்தக் காரணம் கொண்டும் நான் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினேன்." என்கின்றார். ஆக இப்படி அரசியல் ரீதியாக, அரை இலட்சம் மனிதர்களை கொன்றவர்களுடன் நின்றால் அது தவறானது என்பதால் தலையிடவில்லை என்கின்றார். ஆனால் தலையிட்டதாக அல்லவா அருள்செழியன் கூறுகின்றார். இதை அவர் "குகநாதன் விடயத்தில் சபா நாவலன், அசோக் போன்றவர்களிடம் குகநாதனின் மனைவி அழுது கதறியதால்தான் அவர்கள் அவருக்காக என்னிடம் பேசினர்." என்கின்றார். சரி "அரை லட்சம் மனிதர்களைக் கொலை செய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன் என்னிடம் உதவி கேட்பதற்கு எந்தத் தார்மீக நியாயமும் இல்லை" என்றவர், பின் எப்படி தலையிட்டார்? சரி எந்தக் கொள்கையின் அடிப்படையில்? இங்கு அருள்செழியன் கூறுகின்றார், "குகநாதனின் மனைவி அழுது கதறியதால்தான் அவர்கள் அவருக்காக என்னிடம் பேசினர்" என்று, சரி என்ன தான் பேசினர். 30 இலட்சத்தை 15 இலட்சமாக குறைக்கும் பேரத்தையா? அல்லது என்னத்தை பேசினார்.
 
இங்கு குகநாதன் சார்பாக பேசினாரா? அல்லது உங்கள் சார்பாக பேசினாரா? அவர் சார்பாக பேசினார்கள் என்றால், என்ன பேசினார்கள்? உங்கள் சார்பாக பேசினார்கள் என்றால், என்ன தான் பேசினார்கள்? 30 இலட்சத்தை இடைத்தரகர்கள் கோரவில்லையா? சர்வதேச சட்டத்தரணியிடம் கொடுக்கக் கோரி நாவலன் கூறவில்லையா? இதில் தலையிடாதவர் அதை ஏன் அருள்செழியனுக்கு  கூற வேண்டும்? இவை ஒரு பேரத்தின் நீட்சியில்லையா?
 
இங்கு அசோக் தலையிட்டுள்ளார். எப்படி எந்த நேரத்தில். எந்தக் குறுக்கீட்டின் போது? அவரும் அன்று மாலை சரியாக 5 மணிக்கு கட்டுரை கேட்டுத்தான், தொடர்பு கொண்டாரோ!? பின் அவரும் நாவலன் போல் குகநாதனுடன் கதைத்தாரோ? "குகநாதனின் மனைவி அழுது கதறியதால்தான்" இவர் தலையிட்டாரோ!? எப்படி? அவரும் இதில் தலையிட்டார்!? எந்த நேரத்தில்!? எந்த வடிவில்!?    
 
சபா நாவலன் கூறுகின்றார் "இந்த உரையாடலின் மறுநாள் காலை மூன்று மணியளவில் எனது கைத் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அது குகநாதனின் மனைவியின் அழைப்பு! அவர், எனது தொலைபேசி இலக்கத்தை பிரான்சில் வசிக்கும் ஒருவர் கொடுத்ததாகக் கூறினார்.
 
அருட் செழியனின் தம்பி எனது நண்பர் என்று அறிந்ததாகவும் அவரூடாக பணத்தைக் கொடுப்பதற்கு தவணை கேட்கும்படியும் என்னைக் கேட்டார். இப்போது முழுப் பணத்தையும் தர அவர்கள் வற்புறுத்தினால் தனக்குத் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.
 
நான் இதில் தலையிட விரும்பவில்லை என்றும் வேண்டுமானால் எனக்கு ஒரு ஆலோசனை தோன்றுகிறது என்றும் கூறினேன். அதாவது இந்தியாவில் சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதால் பிரான்சில் உள்ள சர்வதேசச் சட்டத்தரணி ஒருவரைத் தொடர்புகொண்டு அவரூடாகப் பணம் தருவதற்கு ஒரு கால எல்லையைப் பெற்றுக்கொள்ளலாமே என்று கூறினேன்.
 
அவருடன் இணைப்பைத் துண்டித்துக் கொண்டதும், அருள் எழிலனிடம் இது குறித்துக் கூறினேன்."
என்கின்றார்.
 
ஆக நாவலன் கூறும் அதிகாலை 3 மணிக்கு "குகநாதனின் மனைவி அழுது கதறி" யதால் தலையிட்டார் என்பது அருள் செழியன் வாக்கு மூலம். ஆனால் தான் தலையிடவில்லை என்கின்றார் சபா நாவலன். அவர் எப்போது அழுது புலம்பினார்? ஆக அழுது புலம்பியதும் கூட, கற்பனையாகி விடுகின்றது.
 
இந்த சபாநாவலன் கூற்றில் "அவருடன் இணைப்பைத் துண்டித்துக் கொண்டதும், அருள் எழிலனிடம் இது குறித்துக் கூறினேன்." என்றால், இதில் தலையிடாதவர், ஏன் இதைக் கூற வேண்டும். ஆக இங்கு தொடர் பேரம் அங்குமிங்குமாக இரவிரவாக நடந்திருக்கிறது. இதனால் தான் அதை சபா நாவலன் கூற வேண்டியிருந்திருக்கின்றது. இதுதானே உண்மை.
 
".. சர்வதேசச் சட்டத்தரணி ஒருவரைத் தொடர்புகொண்டு அவரூடாகப் பணம் தருவதற்கு ஒரு கால எல்லையைப் பெற்றுக்கொள்ளலாமே" என்று இவர் ஆலோசனை கூறினார் என்றால், பணத்தை அருள் செழியனுக்கு கொடு என்கின்றார். இப்படி அருள்செழியனுக்கு கூறியது, தலையிடாத தலையீடு அப்படித்தானே. இதற்கு எதிராகவா வழக்கு சட்டம். 
 
நாவலன் கூற்றுப்படி மாலை பிரித்தானிய நேரம் 5 மணிக்கு தொடங்கிய பேரம், இரவு 3 மணிவரை தொடருகின்றது. இந்தியப் பொலிசாரின் இதன்பாலான அக்கறை கட்டைப் பஞ்சாயத்தாக இருந்ததால், இரவிரவாக கண் முழித்திருந்து நடந்துள்ளது. இந்தக் கட்டைப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட இனியொருவும் தான். எப்படி தமிழினவாத சட்டத்தரணிகள் எல்லாம் ஏன் எதற்காக தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஒன்றாக கூடினர்!? இப்படி இதன் பின்  கேள்விகள் பல.
 
இது கட்டைப் பஞ்சாயத்தா இல்லையா?
 
"இந்தியாவில் சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதால்" என்று, இதை  சட்டப்படியான கைது என்று சபா நாவலன் கூறுவதன் அரசியல் நோக்கம் என்ன? தாங்கள் நடத்தியது, கட்டைப் பஞ்சாயத்தல்ல என்று சொல்லத்தான். அங்கு நடந்தது என்ன? சட்டப்படியான, சட்ட ஒழுங்கு பிரச்சனை. இதையே குகநாதன் செய்த போது, அதை கட்டைப்பஞ்சாயத்து என்கின்றனர் அருள் எழிலும் அருள்செழியனும். தாங்கள் செய்தபோது  இது சட்ட ஒழுங்கு பிரச்சனையாகின்றது. இதில் ஏதோ ஒரு எல்லையில் பங்கு கொண்ட சபா நாவலன் இது கட்டைப்பஞ்சாயத்தல்ல, சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று வக்காலத்து வாங்குகின்றார். இங்கு இதில் நாவலின் பங்குபற்றலுக்கு அப்பால், இது கட்டைப் பஞ்சாயத்தா இல்லையா என்ற அரசியலும் இங்கும் கேள்விக்குள்ளாகின்றது.
 
சரி நாம் கேட்கின்றோம், இந்தியப் பொலிஸார் கட்டைப் பஞ்சாயத்து நடத்துவதில்லையா? முதலில் அரசியல் ரீதியாக அதைச் சொல்லுங்கள். இவை சட்டப்படியான கைதுகளில் நடப்பதில்லையா? நடக்கின்றது என்று நீங்கள் ஏற்றுக்கொண்டால், அது எப்படி நடக்கும்?  அதைச் சொல்லுங்கள். சரி இந்த விடையத்தில் பொலிசார் கட்டைப்பஞ்சாயத்து செய்தால் எப்படி நடக்கும்? அதையும் சொல்லுங்கள். முதலில் அருள் எழிலை பிடித்து குகநாதன் செய்தது கட்டைப்பஞ்சாயத்து என்றால், இது என்ன? அதில் இருந்து இது எப்படி வேறுபட்டது. 
 
அடுத்து இதே விடையத்தை தாதாக்கள் (மாபியாக்கள்) கட்டைப்பஞ்சாயத்து செய்தால் எப்படி இதில் வேறுபட்டு இருக்கும். அதையும் சொல்லுங்கள். சர்வதேச சட்டத்தரணிக்கு பதில், சர்வதேச மாபியாக்களிடம் பணம் கொடுக்க கோரியிருப்பீர்களோ!? இப்படி இந்த விடையத்தை தாதாக்கள் தலையிட்டால் எப்படி தான், இதில் இருந்து வேறுபட கையாண்டு இருப்பார்கள்? சொல்லுங்கள். இவை இரண்டும், சமூகத்தில் கிரிமினல்மயமாகி நிழல் உலகில் பயணிக்கின்றது.
 
இந்த இடத்தில் பொலிஸ் சட்டப்படிதான் கைது செய்கின்றது, கட்டப்பஞ்சாயத்து எதுவும் செய்வதில்லை என்று நீங்கள் சொன்னால், நீங்கள் யாருக்கு எதற்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள் என்பது தெரியவரும். பொலிஸ் கட்டைப்பஞ்சாயத்து செய்கின்றது என்றால், இதில் எப்படி இருக்கும் என்று விளக்கவேண்டும்.
 
"இந்தியாவில் சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதால்" என்றால், எந்த நீதிமன்றம் பிடிவிறாந்து அனுப்பியது? சரி எப்ப அனுப்பியது? விமான நிலையங்களுக்கு இவரை கைது செய்ய எந்த சட்டத் தீர்ப்பு கோரியது. எந்த நீதிமன்றம் பல இலட்சத்தை கொடுக்கக் கோரி தீர்ப்பளித்தது? நடந்த அனைத்தும் சட்டவிரோதமானது. சட்டத்துக்கு உட்பட்டதல்ல. சட்டத்தை கையில் எடுத்து, நடத்திய கட்டப் பஞ்சாயத்து. ஒருவர் பணம் தரவில்லை என்று பொலிசில் முறையிட்டால், உடனே கைது செய்கின்றது என்று கூறுகின்ற அரசியல் கேலிக் கூத்தைத்தான் இங்கு நாம் பார்க்கின்றோம். இவர்கள் மக்கள் அரசியல் வேறு செய்கின்றனராம். கொடுக்கல் வாங்கல் விடையங்களில், ஒருவருக்கு எதிராக ஒருவரை கைது செய்யும் உரிமை கிடையாது. அது நீதிமன்றத்தின் பிடியாணையின் எல்லைக்கு உட்பட்டது. பிடியாணையின்றி கைது செய்ய முடியாது.
 
இதை திசைதிருப்ப சொன்னவை  மீது        
       
1. "பல பொய்களை என்மீதும் ஏனையோர் மீதும் சுமத்திவந்த இந்தப் பேர்வழி இம்முறை மக்கள் கலை இலக்கியக் கழகத்தையும் தொடர்புபடுத்தியிருப்பது என்னைப் பதில் கூற நிர்ப்பந்தித்திருக்கிறது." என்கின்றார். இதில் எங்கே நாம் ம.க.இ.க. இதனுடன் இதைச் சம்பந்தப்படுத்தியுள்ளேன். எந்தவிதத்திலும் இதில் அவர்களை நாம் சம்பந்தப்படுத்தவில்லை.
 
நாம் இதில் கூறியது இந்த கட்டைப்பஞ்சாயத்து நிகழ்வின் பின் ம.க.இ.க.வுடன் புதிய திசைகள் நடத்திய ஒருங்கிணைந்த போராட்டத்தை குழப்பவே இதை நாங்கள் எழுதுவதாக நீங்கள் கூறாமல் இருக்கவும், இதை உடன் எழுதாமல் இருந்தோம் என்ற இடத்தில் ம.க.இ.க. வைக் கூறிப்பிட்டோம். இந்தப் போராட்டத்தை புதிய திசைகளுடன் சேர்ந்து நடத்த வேண்டாம் என்று, நாம் ம.க.இ.க.வுக்கு கூறியதாக நாவலன் நடத்திய பிரச்சாரத்தையும் இதில் குறிப்பிட்டோம். வேறு எந்தவிதத்திலும் ம.க.இ.க. பற்றி இதில் குறிப்பிடவில்லை.
 
இப்படி இருக்க "மார்க்சிய இயக்கம்" இதில் சம்பந்தப்பட்டதாக புதியதிசையைச் சேர்ந்த ஒருவர் கூறியதையே நாம் குறிப்பாக்கி அணுகினோம். அது ம.க.இ.க.வாக நாம் கருதியிருக்கவில்லை. நாவலன் தான் இன்று இந்த கட்டுரை மூலம், ம.க.இ.க. என்று அழுத்தி குறிப்பிட்ட காட்ட முனைகின்றார்.     
 
மார்க்சிய இயக்கம் தான் தன்னைக் கடத்தியதால், தன்னிடம் குகநாதன் குடும்பம் கோரியதால் தான், இதில் தலையிட்டதாக நாவலன் கூறியதாக புதிய திசைகள் சேர்ந்த ஒருவர் கூறிய போது, நாம் அதை ம.க.இ.க.வாக என்றும் கருதியது கிடையாது. அவர்கள் யார் என்ற கேள்வி எம்முன் எழுந்தது. சபா நாவலன் அ.மார்க்ஸ் என்ற "மார்க்சிய"வாதியின் முன்னுரை வாங்கியது முதல் வலது இடது இந்திய திரிபுவாதிகள் மட்டுமின்றி ம.க.இ.க., தமிழ்த்தேசிய "மார்க்சிய" அருள்எழிலன் வரை தொடர்பை கொண்டவர். ஆகவே நாம் யார் கடத்தியது என்ற விசாரணையைத் தொடங்கினோம்.
 
முதலில் இது கடத்தல் மூலம் 30 இலட்சம் கோரப்பட்டதாக, இதில் நாவலன் தலையிட்டு கோரியதாக முதலில் அறிகின்றோம். இதை இலண்டன் தோழர்களுடன் நான் உரையாடுகின்றேன். அவர்கள் புதிய திசைகளுடன் உரையாடிய போது, மார்க்சிய இயக்கம் சம்பந்தப்பட்டதால் தன்னை (நாவலனை) தலையிடுமாறு கோரினர் என்ற தகவலை அவர்கள் கூறினர். இதில் இருந்து நாம் இதை அறிய முனைகிறோம். இந்த விடையம் இப்படி எங்களுக்குத் தெரியும் என்பது, புதியதிசைகள் மூலம் அவருக்கு தெரிந்திருக்கும் என்பது தெளிவாகின்றது. அவர் ஒரு சுயவிளக்கத்தையோ, எமக்கு இது பற்றி எதையும் முன்வைக்கவில்லை. இந்த விடையத்தில் மார்க்சிய இயக்கம் சம்மந்தப்பட்டதாக கூறிய போது, இரண்டாம் முறையும் புதிய திசையை சேர்ந்த அவருடன் இதுதான் உண்மையா என கேட்கும்படி கோரினேன். அப்படி மீண்டும் கதைக்கப்பட்டது.
 
இதில் இருந்து தான் இதை தெரிந்து கொள்ள முனைந்தோம். அன்று அதை கூறியவர், இன்று  அருள் எழிலையும் ஒரு மார்க்சிய குழுவாகக் தான் கருதித்தான் அதைக் கூறியதாக கூறுகின்றார். ஆனால் அதை அருள் எழில் செய்ததாக அன்று எமக்கு அன்று கூறவில்லை. புதிய திசையைச் சேர்ந்தவர்கள், அருள் எழிலை மார்க்சிய குழுவாக கருதினார் என்றால், எப்படி நாவலன் அரசியல் அவர்களை பம்மாத்துகின்றது என்பது மற்றொரு எடுத்துக்காட்டு. இனியொரு ஆசிரியர் குழுவில் அருள் எழில் வேறு உள்ளார்.                      
 
யார் அந்த மார்க்சிய குழு என்று தேடிய விசாரணையின் போது தான், இந்தத் தகவலை நான் தெரிந்து எழுத தகவல் திரட்டுவது குகநாதனுக்கு தெரியவருகின்றது. அவர் பாரிஸ் வரும் போது என்னை சந்திப்பதாகவும், நான் தகவல் தேடிய மூன்றாம் தரப்பு மூலம் கூறுகின்றார். இதனால் அவர் வரும்வரை கட்டுரையை வெளியிடுவதை பின்போடுகின்றோம். அவர் பாரிஸ் வந்த பின் என்னை சந்திக்கவில்லை. நான் தான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போதுதான், உங்களை கடத்தியதாக கூறுகின்றனரே யார் என்று கேட்கின்றோம். அப்படி யாரும் கடத்தவில்லை என்றதுடன், இது தனிப்பட்ட விவகாரம் என்றும், இதை எழுதுவதை தான் விரும்பவில்லை என்றார். நாம் எழுத உள்ளதை தெளிவுபடுத்தியும், இதில் நடந்தவற்றை பற்றியும் உரையாடினோம். நாம் முன்பு தெரிந்து கொண்ட விடையங்கள் இதன் மூலம் மேலும் உறுதியாகின. இதில் அருள் செழியன் சம்மந்தப்பட்டது தெரியவந்தது.

முதலில் ஈ.என்.டி.எல்.எவ். தான் கடத்தியது என்ற கேள்வியும், அசோக் மூலம்  நாவலன் தலையிட்டாரா என்ற கோணத்தில் இதை அணுகினோம். மார்க்சிய குழு கடத்தியது என்பது, அப்படி எந்தக் குழுவும் இல்லை என்பதும், அதுவும் குகநாதனை எப்படி என்ற கேள்வியும் எம்முன் எழுந்தது.
 
இங்கு இதை நாம் கடத்தல் என்று கட்டுரையில் கூறியது, இந்தக் கட்டைப்பஞ்சாயத்து அடிப்படையில் தான். அதை பொலிஸ் கைது செய்யும் தன் அதிகாரத்தைக் கொண்டு செய்கின்றது அவ்வளவு தான் வித்தியாசம். மற்றும்படி கட்டைப்பஞ்சாயத்து செய்ய நடத்திய கடத்தல். இதை மூடிமறைத்து பாதுகாத்து, இதில் பங்குபற்றிய அடிப்படையில் நாவலனை அம்பலப்படுத்தினோம். 

                 
2. "இந்தக் கட்டுரை யாருடைய எழுத்து முறைக்கும் முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது." என்கின்றார் நாவலன். நிச்சயமாக. உண்மையை மூடிமறைக்க இப்படி யாரும் சொதப்பக் கூடாது. முரண்பாடுகளுடன் பிதற்றக் கூடாது. இந்த "முன்னுதாரணம்" மூலம் மக்களை ஏய்க்கும் முறைக்கு, சாவுமணி அடிக்க வேணடும்.
 
3. "வயிற்றைக் குமட்டும் அருவருப்போடு, எழுதுவதா இல்லையா என்று ஆயிரம் தடவைகள் யோசித்த பின்னர் எழுத விரும்பாமல் எழுதுகின்ற பதிவு இது." என்கின்றார் நாவலன். "வயிற்றைக் குமட்டும் அருவருப்பான" பாசிச நடைமுறையை மூடிமறைக்க, இந்த வார்த்தைகள் உங்களுக்கு கை கொடுக்கவில்லை. நேர்மையாக, உண்மையாக, பகுத்தறிவுடன் செயல்படாத வரை, வார்த்தைகள் கைகொடுக்காது. சுயவிமர்சனமற்ற புரட்டு நாற்றத்தால் நிரம்பி வழியும். 
 
4. "அரசியலற்ற “விடுப்புக் கட்டுரையை” எழுதுவதற்கு என்னையும் நிர்ப்பந்தித்தது" என்கின்றார் நாவலன். கட்டைப் பஞ்சாயத்து செய்து பணம் அறவிட்டதா "விடுப்பு"!? இதை செய்வதை உங்கள் அரசியல் தவறாக காணாதவரை, அதைக் கண்டிக்காத வரை, இதில் முன்னின்ற உங்கள் இனியொரு ஆசிரியரும் தம்பியும் இதில் ஈடுபட்டதை குறைந்தபட்சம் கண்டிக்காத வரை, இதை மூடிமறைக்க விடுப்பு என்று கூறுவது உங்கள் கபடத்தனமான இழிவு அரசியலாகிவிடுகின்றது.          
 
 
5. "தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி தனிமனித இயல்புகள் குறித்த விவாதங்களைத் தூண்டி தமது இருப்பை நிலை நாட்டிக் கொள்வதாகும்" என்கின்றார் நாவலன். இதுவா தனிப்பட்ட தாக்குதல். நீங்கள் மூக்கை நுழைக்காத ஒன்றையா நாம் சொன்னோம்!?  தனிமனித நடத்தை உங்கள் அரசியலுக்கு வெளியில் இருக்க முடியாது என்பது தான் மார்க்சியம். நீ மார்க்சியவாதி என்று கூறும் வரை, அதைக் கோருவோம், அம்பலப்படுத்துவோம். தனிநபர் தாக்குதல் இது என்று கருதும் உன் நடத்தை, உன் அரசியலுக்கு முரணானது. அதனால் அது அம்பலமாகின்றது. "தனிமனித இயல்புகள்" ஏற்ற மார்க்சியம் எதுவும் கிடையாது. அதுபோல் "தனிமனித இயல்பு"க்கு ஏற்ப சமூகம் இருப்பதில்லை. சமூகத்துக்கு ஏற்ற தனிமனிதர்கள் தான் இருக்க முடியும்.
 
6.  "பூச்சி என்ற முன்னை நாள் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் ஒரு சிறிய தொலைபேசி நிறுவனம் ஆரம்பித்த போது அதில் வேலையற்றிருந்த நானும் இணைந்திருந்தேன். அது நட்டமடைந்த போது அதற்குரிய நட்டத்தை நாம் இருவருமே ஏற்றுக்கொண்டோம். ஈ.பிஆர்.எல்.எப் அரச ஆதரவு நிலையை நான் விமர்சித்த போது அவர்கள் நான் பூச்சியை ஏமாற்றியதாக எழுதினார்கள்." ஆக நாங்கள் இதை எழுதவில்லை. இதற்கு எமக்கு எதிராக வழக்காம். நீஙகள் தொழில் நடத்தும் முன்பே அவர் ஈ.பி.ஆர்.எல்.எப்.யில் இருக்க, அவர் முன்பே கடையை நடத்திக்கொண்டு இருந்தவர். கடையின் அனைத்து மூலதனம் காணாமல் போக, சில கையெழுத்துகள் யார் போட்டது போன்று கேள்விகளுக்கு, இன்று "ஈ.பிஆர்.எல்.எப் அரச ஆதரவு நிலையை நான் விமர்சித்த போது அவர்கள் நான் பூச்சியை ஏமாற்றியதாக எழுதினார்கள்." என்று கூறுவது கேவலம் கெட்டது மட்டுமின்றி வேடிக்கையானது. "ஈ.பிஆர்.எல்.எப் அரச ஆதரவு" என இதற்குள் இழுப்பது, தனக்கு சாதகமான அரசியலை பூச்சுற்றிக் காட்டுவது. போகிற போக்கில், மகிந்த ராஜபக்சா தான் தான் பணம் கோரியதாக குகநாதன் மூலம் கூறக் கூறியதாக சொன்னாலும் ஆச்சரியமில்லை.
 
7. "ஆயிரம் தத்துவார்த்த அரசியல் பிரச்சனைகள் குறித்த கற்றல்களிலும் விவாதங்களிலும் எம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்குப் பதிலாக எனது நேரத்தை இந்தக் கிசுகிசுப்புக் காரர்களோடு.." என்கின்றார் நாவலன்.  அருமையிலும் அருமை. குகநாதனின் மனைவியுடன் நடந்த பேரத்தை அருள் எழிலனுக்கு சொல்ல எடுத்த அக்கறை பற்றி எல்லாம் பேசுவது கிசுகிசுப்பு. கடந்த வரலாற்றில் மக்கள் விரோத பாத்திரத்தை எடுத்தவர்களுடன் நடத்தும் அரசியல் விபச்சாரம் அம்பலமாகும் போது, அது கிசுகிசுவாம். இது வார்த்தை ஜாலங்கள் மூலம் மக்களை ஏய்க்கும் பித்தலாட்டம் மட்டுமின்றி, அரசியல் சதியுமாகும்.

பி.இரயாகரன்
13.09.2010

Last Updated on Sunday, 12 September 2010 21:09