Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் தங்கள் கொலைகார தனத்தை மூடிமறைக்க, புளட் நடத்திய திருகுதாளம்

தங்கள் கொலைகார தனத்தை மூடிமறைக்க, புளட் நடத்திய திருகுதாளம்

  • PDF

சீலன் எழுதும் தொடருடன்  " நம்பிக்கைக்குரிய ஆளாக நடிக்க, சுந்தரத்தினதும் உமாமகேஸ்வரனினதும் படத்தை கழுத்தில் தொங்கவிட்டேன் (புளட்டில் நான் பகுதி 18) " தொடர்புடையது இந்த விவாதம். ரெசோ மாணவர் அமைப்பு புளட்டின் அரசியல் பாதையை மறுதலித்து வந்தது. புளட்டின் உட்படுகொலைகளையும்,  மக்கள் விரோத அரசியலையும், அணிகளிடையே அம்பலப்படுத்தியது. இப்படிப் போராடிய ஒரு கட்டத்தில், பின்தளத்துக்கு சென்று முகாம்களிலுள்ள பயிற்சி பெறும் போராளிகளின் நிலவரங்களையும் அறிய வேண்டும் என முடிவெடுத்தது. அதன் பலனாய் சில மாணவரமைப்பு பிரதிநிதிகள் இந்தியா சென்று வருவதாக எடுத்த முடிபின் அடிப்படையிலேயே, அந்தக் குழுவில் நான் என்னை வலிந்து இணைத்துக் கொண்டேன். இது எனது கடமையுமாக எனக்குப்பட்டது.

எனவே எனது இந்தப் பயணம் சீலன் போன்றவர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட கொடுமைகளையும், உட்படுகொலைகளையும் மாணவரமைப்பு, தனது அணிகளிடம் அம்பலப்படுத்தும், சாட்சியப்படுத்தும் ஒரு ஆபத்தான பயணமாகவே இருந்தது. அதனை அறிந்திருந்த நாம் மீளவும் திரும்பி வருவோமா என்ற கேள்வியோடு மேற்கொள்ளப்பட்ட பயணமாகவே எனது பயணமும் நடந்தது. ஆனால் நாங்கள் எவரும் திரும்பி தளத்துக்கு வராதவிடத்து, (சிலர் திரும்பிவராமல் சில காலம் தங்கி நின்றார்கள்) உண்மைக்காக நாங்கள் உயிர்ப்பலி எடுக்கப்பட்டோம் என்பதே, ரெசோவிற்கு கிடைத்திருக்கக் கூடிய மறைமுக செய்தியாகவிருந்திருக்கும் என்பது எமது பக்கபலமுமாக இருந்தது.

எனவே மாணவர் அமைப்பைப் பகைக்கும் ஒரு பொறிக்குள் அவர்கள் அகப்பட விரும்பமாட்டார்கள் என்ற ஒருவகைப் பக்கபலத்துடன், எம்பின் நின்ற இந்த மாணவர்களின் பலத்துடன் தான், நாங்கள் பின்தளத்துக்கு சென்றோம்.

ஆனாலும் அங்கும் சிலர் சென்ற நோக்கிலிருந்து திரும்பி அணி பிரிந்தார்கள். உமா மகேஸ்வரன் தiலைமைக்கு எதிராக கிளம்பிய பரந்தன் ராஜனுடன் கூட்டு சேர்ந்தார்கள். சமூக விஞ்ஞானக் கல்விக்கழகத்தில், மகா உத்தமன் தயவில் மவுனமாக ஒதுங்கிக் கொண்டார்கள் சிலர்.

எந்தத் தடயங்களையும், வெளிப்படையான பேச்சுகளையும், எந்த பயிற்சி முகாம் போராளிகளிடமும் பெற்றுவிடாதபடி எம்மை கண்காணித்தபடி எம்மை போராளிகளை சந்திக்க அனுமதித்தனர். யார் கொலைகளுக்கெல்லாம் பின்னணியில் இருந்தார்களோ, யார் உமாமகேஸ்வரனின் நெருங்கிய சகாக்களாக இருந்தார்களோ, அவர்களாலேயே  பயிற்சி முகாம்களுக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம். எங்களை அழைத்துச் சென்றவர்களையே, அந்தந்த பயிற்சிமுகாம் போராளிகள் கண்டு மிரளுவார்கள் என்பது நாங்கள் அறிந்தது தான்.  அவர்கள் இந்த நபர்கள் முன்னிலையில் ஒன்றில் வாய் திறக்க மாட்டார்கள் அல்லது நடிக்கத்தான் செய்வார்கள். அவர்கள் அஞ்சும் அதே நபர்களால் நாங்கள் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதான நிலைமையில், எங்களையும் அதே கொலைகார அரசியல் நபர்கள் தான் என பயிற்சிமுகாம் போராளிகள் நினைத்திருந்தால் அதில் எந்த தவறேதுமில்லையல்லவா! அவர்கள் எங்களைக் கண்டு அச்சப்படுவார்களே ஒழிய வாய் திறப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?. ஆனால் அவர்கள் என்ன சூழலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் அனுபவிப்பது என்ன என்பதை அறிய எந்த நீண்ட உரையாடலும் தேவையில்லாதிருந்தது.

பாசிசம் கண்காணிக்கும், அதே நேரம் நல்ல தோழனாய் நடித்து புலனறியும். எனவே அப்படி ஒரு சூழலுக்குள் கட்டிவைக்கப்பட்டிருந்த அவர்கள் எவரை நம்பி அவர்கள் மனம்திறந்து பேச முடியும்? ஆனால் அவர்களது  வார்த்தைகளை விட அங்கிருந்த உற்சாகமிழந்த சூழல் அதிகம் பேசியது. அச்ச சுபாபத்துடன் அவர்கள் அதிகம் பேசாது ஒதுங்கியிருந்தாலும், உற்சாகமிழந்த, கவலைகள் படிந்த, வேண்டாவெறுப்பான நடைப்பிணமான அவர்களது தோற்றம், அவர்களது ஏக்கமும் சோகமும் தயக்கமும், மன உணர்வுகளும் சொல்லாத வார்த்தைகளாய் அவர்களது விழிகளில் எழுதப்பட்டிருந்தது. எங்களது கேள்விகளுக்கு விடைகளை அவர்களிடமிருந்து வெளிப்படையாக பலரும் குழுமியிருக்கும் ஒரு சிறிது நேர சந்திப்பில் கேட்டறியவும் முடியாது. அதற்காக அவர்களில் யாரையும் பலியிடவும் முடியாது. அது எவ்வாறான ஆபத்துக்குள் இட்டுச் செல்லும் என்பது சொல்லியா தெரிய வேண்டும். அவர்களது அங்கலாய்ப்பும் ஏக்கமும் பெரும்பாலும் எப்போது தங்களது பயிற்சி முடியும் தாங்கள் எப்போது நாட்டுக்கு இவர்களால் திருப்பி அனுப்பப்படுவோம் என்றவாறாகவே இருந்தது. அவர்கள் அங்கு சிறைக்குள் அகப்பட்டவர்கள் போன்ற மனவுணர்வுடன் வாழ்கிறார்கள் என்பது சொல்லாமலே தெரிந்தது.

இப்படியான சந்திப்பின் போது எனக்குத் தெரிந்தவர்களை எனக்கு ஊடாக பயிற்சிக்கு வந்தவர்களை தற்செயலாக சந்திப்பது போலவே நான் காட்டிக் கொண்டேன். தனித்தனியே தேடிப்போய் அதிக அக்கறை எடுத்து அவர்களோடு பேச நான் முனைந்தால் சந்தேகத்தில் அவர்களின் உயிருக்கு நாமே உலை வைத்தவர்களாகி விடுவோம் என்ற எச்சரிக்கை உணர்வு மனதில் இருந்தது. அதே நேரம் எனக்குத் தெரிந்த இன்னார் இன்னார் பற்றி அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பது பற்றி பேர் சொல்லி தேடிச் செல்லாமல் குறிப்பானதல்லாத எழுந்தமானமான விசாரிப்பு மற்றும் பயிற்சி முகாம்களில் ஏற்படுத்தப்பட்ட பொதுவான சந்திப்பு வேளைகளில் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டேன்.

இப்படி ஒரு சூழலிலேயே சீலனை நான் சந்தித்தேன். ஆனால் சீலனுக்கு ஏற்கனவே எமது வருகை எதற்கானது என்ற நோக்கம் மறைக்கப்பட்டு நாங்கள் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காகவே மாணவர் அமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டு பின்தளம் வந்து சேர்ந்திருக்கின்றோம் என்று மாணிக்கதாசனால் கூறப்பட்டிருந்தது. இதுவே சீலனும் நானும் பின்னாட்களில் ஊர்த்தெருக்களில் ஒருவரையொருவர் வீதிகளில் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் நேர் எதிராக சந்தித்துக் கொள்வதை தவிர்ப்பதற்காய் சைக்கிள்களை கிளை ஒழுங்கைகளுக்குள் ஓட்டிச் சென்று மறைந்து கொள்வதற்கான பரஸ்பர சந்தேகத்தினையும் இருவருக்கும் ஏற்படுத்தியிருந்தது.

சீலன் நாடு திரும்பிய பின், சீலன் கொமாண்டோ இராணுவப்பயிற்சி பெற்றவர் என்பதால் தலைமைக்கும் உமா மகேஸ்வரனுக்கும் விசுவாசி என நானும் பரந்தாமனும் சந்தேகப்பட்டு மறைந்து கொள்ளுவோம். அதேவேளை மேற்சொன்ன பின்தளப் பயணத்தில் நான்  பங்குகொண்டது மாணிக்கதாசன் தந்த துப்பாக்கி சுடுபயிற்சிக்காகவே என்ற தவறான தகவலால் சீலன் எங்களை தளத்தில் உமாமகேஸ்வரன் தலைமை விசுவாசிகள் என்றெண்ணி எங்களைக் கண்டு மறைந்து கொள்வதற்கும் காரணங்களாகயிருந்தன என்பதை பின்னாளில் வெளிநாட்டில் சந்தித்துக் கொண்ட போதே தெளிவாக்கிக் கொண்டோம்.

துப்பாக்கி சுடுபயிற்சி என்பது, திடீரென எங்களுக்கே முன்னறிவிப்பு எதுவுமின்றி அங்கேயே அப்பொழுதே மாணிக்கதாசனால் ஏற்பாடாகிய ஒன்று. கொதிநிலையில் இருந்த பயிற்சி முகாம்களில் நாம் எதற்காக வந்தோம் என்ற காரணத்தை மறைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தபடியால, எங்களது வருகைக்கான காரணம் எங்களது நோக்கத்திலேயோ நிகழ்ச்சிநிரலிலேயோ இருந்திராத அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஓரேயொரு சன்னம் வழங்கப்பட்டு ஒரு கணம் கூட தேறாத சுடும் பயிற்சி என்ற ஒரு சிறு நிகழ்வுக்காகத்தான் என்றே பயிற்சி முகாம் போராளிகளுக்கிடையில் பரப்பப்பட்டது என்பதை சீலன் மூலமாக இன்று அறிகிறேன்.

மாணிக்கதாசனால் மோட்டார்சைக்கிளில் அழைத்துச்செல்லப்பட்டவர்கள் நானும் தீபநேசனும் ஆகும்.  திடுதிப்பென்று ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த இடைச்செருகல் சுடுபயிற்சி என்ற கட்டளையில் ஒரு இராணுவ அதிகாரம் இருந்தது. ஆனால் இந்த மோட்டார் சைக்கிள் பயணம் சென்ற பாதை நெடுகிலும் எங்களை ஒன்றில் எச்சரிப்பதற்காகவோ அல்லது சுட்டுக் கொன்றழிப்பதற்காவோ தான் மாணிக்கதாசனால் கூட்டிச் செல்லப்படுகிறோம் என்ற எண்ணமே அச்சுறுத்திக் கொண்டிருந்தது. ஏனெனில் இந்த நிகழ்வு எங்களது வருகையின் முக்கியமான நிகழ்ச்சிநிரலுக்கு எள்ளளவும் சம்பந்தப்படாதது. திடுதிப்பென புகுத்தப்பட்டது. கேள்விகளும் கோபங்களும் கொப்பளிக்கின்ற சூழலில் மக்கள் விரோத இயக்கத்திடமிருந்து சுடுபயிற்சி பெறுவதற்கு அவ்வளவு என்ன முக்கியத்துவம் என்பதே எனது எண்ணமாகவிருந்தது.
 
இது வெறும் ரிவோல்வரினால் குறிக்கப்பட்ட தூரத்துக்கப்பால் நின்று தென்னைமரமொன்றில் இடப்பட்டிருந்த வட்டப்பரப்புக்குள் குறிவைத்து சுடுவதற்கு ஆளுக்கொரு சன்னம் மட்டுமே தரப்பட்டு அவ்வட்டப்பரப்புக்குள் சன்னத்தை செலுத்துமாறு கூறப்பட்டது.

அந்த ஒரு சன்னத்தை மட்டுமே செலுத்திய ஒரு நிமிடமும் கூட நீடிக்காத இந்த நிகழ்வே எங்களது வருகைக்காக மாபெரும் காரணமாக கூறப்பட்டது என்பது எவ்வாறு எங்கள் வருகை பயிற்சிமுகாம் போராளிகளுக்கு மறைக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் பெறுகிறது என்பதை உணரப்போதுமானது.

தொடரும்


சிறி
 

Last Updated on Monday, 30 August 2010 20:35