Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)

முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)

  • PDF

இந்த வதைமுகாம் யாழ் கோட்டைக்கு மிக அருகில் இருந்தது. முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசத்துக்கும் அருகில் இருந்தது. 1990 இல் புலிகள் வெளியேற்றியது இந்த மக்களைத்தான். இது என் அனுமானம். கடந்த நான்கு நாட்களாக பிரித்தோதும் சத்தம் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்க முடிந்தது. அத்துடன் இது கோட்டை முகாமுக்கு மிக நெருக்கமாக இருந்த, ஒரு மாடிக் கட்டிடமாகும். செல் வெளிக்கிடும் சத்தம் முதல் அது விழுந்து வெடிக்கும் சத்தமும், அருகில் துப்பாக்கி சன்னங்கள் வெடிப்பது போன்ற ஒலிகள் எனது வதைமுகாமை அடிக்கடி உலுப்பியது.

நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறை சற்சதுரமானது. மூன்று மீற்றர் நீள அகலத்தைக் கொண்டது. அந்த அறையில் நான் மட்டுமே தனியாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டேன். இந்தச்சிறை உறுதியான கட்டிட அமைப்பைக் கொண்டது. அதிகமாக மேல்மாடி கொண்ட நவீன கட்டிடமாகும். மேலுக்கு உறுதியான கொங்கிரிட் அடித்தளம் போடப்பட்டிருந்தது.

இது எனக்காக உருவாக்கிய, முதல் வதை அறையுமல்ல சிறையுமல்ல. இங்கு பலர் தமது இரத்தத்தை சிந்தி வதைகளை அனுபவித்து, மரணங்களைக் கூட சந்தித்திருந்ததை அந்த அறை நிர்வாணமாக வெட்ட வெளிச்சமாக்கியது. இதை நிறுவும் வகையில் சுவரின் இருபக்கமும் (யன்னல் மற்றும் கதவு பக்கம் மிகக் குறைவாக) துப்பாக்கி குண்டு நெருக்கமாக பாய்ந்த அடையாளங்கள் செறிந்து காணப்பட்டன. அது போன்று கிரனைற் வெடித்துச் சிதறிய அடையாளங்கள், அறையின் ஆறு  தளத்திலும் தன் அடையாளத்தை விட்டுச் சென்று இருந்தது. அத்துடன் நாலு பக்கச் சுவரிலும் பல இடங்களில் இரத்தம் உறைந்து காணப்பட்டது. இதன் மூலம் அந்த அறையில் வக்கிரமான பல படுகொலைகள் செய்ததை உறுதி செய்தது. கட்டிட அமைப்பின் உறுதியான தன்மையை, இந்த அறையின் சன்ன அடையாளங்கள் வெளிப்படுத்தியது. அருகில் கோட்டையில் இருந்து இராணுவமும், அதை நோக்கிய புலிகளின் தாக்குதல் சத்தத்தின் ஊடாக, இந்த அறையில் அலறல்கள் மட்டுமின்றி தேவையான அளவுக்கு படுகொலைகளை வெளித்தெரியா வண்ணம் துப்பாக்கி மூலம் வக்கரித்து செய்ததை நிறுவுகின்றது. கிரனைற் குண்டு தாக்குதல் கூட ஒன்றுக்கு மேற்பட்ட தரம் வீசப்பட்டிருப்பதை, இந்த அறையில் குண்டு சிதறிய அடையாளங்கள் தெளிவாக காட்டி நின்றது. இந்த கிரனைற் வெளியில் இருந்து வீசப்படவில்லை. அதற்கான வெளிச் சுவர் ஓட்டை எதுவுமில்லை. உள்ளிருந்து திட்டமிட்ட படுகொலைகளை, இராணுவ ஆயுதங்கள் மூலம் ரசித்து செய்யப்பட்டிருந்ததை இவை தெளிவாக்குகின்றது. இது புலிகளின் தனிவகையான ரசனைக் குணமாகும்;.

எல்லையோர சிங்கள கிராமங்கள் மற்றும் முஸ்லிம் கிராமங்கள் மேல், புலிகள் அப்பாவி மக்கள் மேல் நடத்திய தொடர்ச்சியான தாக்குதலின் போது அந்த வக்கிரம் வெளிப்பட்டது. ஒவ்வொரு தாக்குதலிலும் 100க்கு மேலாக குழந்தைகளையும் பெண்களையும் உள்ளடக்கிய கிராமத்தையே கொன்றபோது, பச்சிளம் குழந்தைகளை கொன்ற விதம் கொடூரமானவை. அவர்களை அவர்களின் காலில் து}க்கி மரத்திலும் சுவரிலும் அறைந்து கொன்ற இந்த வரலாற்று நாயகர்களின் படுகொலை ரசனை, இயல்பான மனித குணாம்சம் கொண்டவையல்ல. இது ஒன்றும் கற்பனையல்ல. புலிகளின் படுகொலைகளையும், படுகொலை ரசனையையும் அம்பலம் செய்பவர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தே, தமது அதிகாரத்தை புலிகள் நிலைநாட்டமுடிந்தது. படுகொலைகள் மற்றும் மிரட்டல் ஊடாக முடிமறைத்தே, தமது புலி வேடத்தை மக்கள் முன் போடமுடிகின்றது. ஒவ்வொரு தமிழனுக்கும் புலிகள் பற்றிய பீதி இயல்பாகவும், நடைமுறை அனுபவமாகவும் தெரிந்தபடியே வாழ்கின்றனர்.

இது புலிக்குள்ளும் தான் உண்டு. என்னதான் புலிக்காக ஊளையிட்டு வக்காலத்து வாங்கினாலும், அச்சத்துடன் செயற்படுவதும் தெரிந்ததே. இனவெறி அரசின் இன ஒடுக்குமுறையுடன் கூடிய அடக்குமுறைக்கு எதிராக போராடுபவர்கள், புலிச் சிந்தனைக்கு அப்பால் கருத்து எழுத்து பேச்சு விமர்சனச் சுதந்திரம் இழந்து வாழ்ந்த  சமூகத்தை படைத்தனர். நடைமுறையில் மக்களின் சொந்த பங்களிப்பு இழந்து, வாய் மூடி, கண் கட்டி, காதுக்கு பஞ்சடைந்து நடைப்பிணமாக வாழும் நிலையைத்தான் தமிழ் மக்களுக்கான தீர்வென்றனர். இப்படி விடுதலைப் போராட்டம் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப் போவதாகப் பீற்றியது, சொந்த விலங்குகளையும் அடிமைத்தனத்தையும் தான்;. இதைத் தாண்டி எதுவுமல்ல. எதுவும் உண்டென்று யாரும் எதையும் சொல்லிவிடமுடியாது. இதை "மேதகு" தலைவரின் கூரிய முட்டாளுக்குரிய அறிவாலும் விளக்க முடியாது. ஒரேயொரு மொழி மட்டும் உண்டு. அது ஈவிரக்கமற்ற படுகொலை மொழியாகும்;. அதாவது கேள்வி எழுப்புபவனை இல்லாது ஒழிப்பது என்ற பாசிச சதிராட்டம் மட்டுமே, புலிகளின் ஒரே பதிலாக இருக்கும்.

இவர்கள் என்னை அடைத்த சித்திரவதை வதைமுகாமின் யன்னல் உறுதியாக, உட்புறம் மேலதிக பூட்டுகள் மூலம் பூட்டப்பட்டிருந்தது. அனேகமாக வெளிப்புறப் பலகை உறுதியான பலகை போட்டு திறக்க முடியாத வண்ணம் மூடப்பட்டிருக்கவேண்டும். முன் கதவு வெளிப்புறமாக பூட்டும் வகையில் இயல்புக்கு மாறாக புதிய தாழ்பாளைக் கொண்டிருந்தது. அத்துடன் அந்த கட்டடத்தின் பிற பகுதியில் சிலரை அடைத்து சித்திரவதை செய்திருக்கவேண்டும். அடிக்கடி கேட்கும் அலறல் சத்தங்கள், இரவின் அமைதியைக் கிழித்தபடி, உறுதியான அறைச் சுவர்களைத் தாண்டி என் காதுகளையே அதிர வைத்தது. பகலில் இது கேட்பது குறைவு. பகலின் சந்தடி கொண்ட சத்தம் காரணமாக இருக்கலாம். புலிகளின் வதைமுகாமின் சித்திரவதை வேகம் பெறுவது முன் இரவிலேயே. காரணம் புலிகள் அரசுக்கு எதிராக போராடும் அமைப்பாக இருப்பதாலும், அந்த போராட்டம் இதை ஓய்வுக்கு விட்டுவிடுவதாக இருக்கலாம். அல்லது வதைமுகாமில் தொடர்ச்சியான சித்திரவதை செய்ய, சுதந்திரமாக உலவும் புதிய பறவைகளை இரகசியமாக கடத்தி வரவும், கைது செய்யவும், கண்காணிக்கவும் பகல் அவர்களுக்கு ஒரு ஊடகமாக உள்ளது. இந்த வதை முகாமில் நேரடியாக சித்திரவதை செய்த மூவரையும் (விசு, சலீம், மாஸ்ட்டர்) மற்றும் மாத்தையாவையும் என்னை நேரடியாக கடத்திய தீபனையும் வேறு மூவரையும் காணமுடிந்தது. இதில் இருவர் தவிர மற்றவர்களை எனது இரண்டாவது வதைமுகாமிலும் நேரடியாக சந்திக்க முடிந்தது. இந்த வதைமுகாம் கட்டிடம் போராட்டத்தின் பெயரில் மக்களிடம் பறித்தெடுத்ததாக இருக்கலாம் அல்லது இராணுவத்தின் தாக்குதலுக்கு நெருக்கமான பிரதேசமாக இருப்பதால் கைவிடப்பட்ட அல்லது கைவிட வைக்கப்பட்ட வீடாகவும் இருக்கலாம். இந்த கட்டிடத்தைச் சுற்றி நிலத்தில் பங்கர்கள் இருக்க வேண்டும்; ஏனெனில் இராணுவத்தின் தாக்குதல் தீவிரமாகும் போது முகாமில் மயான அமைதி நிலவுவதுடன், சித்திரவதையில் ஈடுபடுபவர்களும் முற்றாக வெளியேறிவிடுகின்றனர். தமது உயிரை இராணுவ செல் வீச்சில் இருந்து பாதுகாக்க ஒடி ஒளித்துக் கொள்பவர்கள், தமது வதையில் சிக்கியவர்களை தெரு  நாய்கள் போல் அப்படியே விட்டுவிட்டுச் செல்லுகின்றனர். இது முதலாவது, இரண்டாவது வதைமுகாமின் பொது நிகழ்வாக, புலிகளின் பண்பாக இருந்தது. புலிகளின் வதை (தமது) முகாம் மீதான இராணுவ குண்டு வீச்சால் கைதிகள் இறந்ததாக கூறி, கைதிகளின் சடலங்களை ஒப்படைத்த நிகழ்வுகள் உண்டு, புலிகளின் அதிகாரத்தில் நிகழ்ந்தை, அன்றைய பத்திரிகைச் செய்திகள் மீளவும் உறுதி செய்துள்ளது. இது ஒருபக்க உண்மையாக இருந்த போதும், தாம் சித்திரவதை செய்து ரசித்து கொன்றவர்களையும் இப்படிக் கொடுப்பது அல்லது இதை காரணமாகச் சொல்லி சடலத்தை அழித்துவிட்டதாக, கைதியின் உறவினருக்கு கூறிய சம்பவங்களும் எமது போராட்ட வரலாற்றில் நிறையவே உண்டு. எனது முதலாவது வதைமுகாமில் இருந்த அப்பாவிகள் யார் என்ற எந்த விபரமும், தொடர்ச்சியாக எதையும் அறிய முடியவில்லை. வசந்தன் பற்றி மட்டுமே தெரிந்து கொள்ளமுடிந்தது.

பி.இரயாகரன்
தொடரும்

26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)

25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)

 

24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24)

 

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

 

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

 

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

 

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

 

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01) 

 

Last Updated on Sunday, 15 August 2010 07:54