Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் இன்றைய அரசியல் சூழலை மாற்றி அமைப்பதில் உள்ள நெருக்கடிகள்

இன்றைய அரசியல் சூழலை மாற்றி அமைப்பதில் உள்ள நெருக்கடிகள்

  • PDF

பேரினவாத பாசிச அரசும், மறுபுறம் எஞ்சிய புலிப் பாசிசத்தின் எச்சங்களும் ஆதிக்கம் பெற்ற அரசியல் கூறாக இன்னமும் உள்ளது. ஒரு பகுதி மக்கள் தாம் உருவாக்கி வைத்திருந்த அரசியல் மாயையைக் களைந்தாலும், மற்றொரு அரசியல் போக்கை முன்னெடுக்கவில்லை. வீங்கி வெம்பிக் கிடந்த பிரமைகளையே இழந்தனர்.

புலி பலாத்காரமாக கைப்பற்றி வைத்திருந்த அந்த அரசியல் தலைமையை, திடீரென சமூகம் இழந்ததன் மூலம் அரசியல் அனாதையாக்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, வன்னி மக்கள் சந்திக்கும் அவலம் பலவிதமானது. ஆனால் இன்று அதைப் பேசவோ, முன்வைத்து போராடவோ யாருமில்லை. யாழ்ப்பாண மேட்டுக்குடி மக்களோ, புலம்பெயர் மக்களின் பணத்தில் ஆடம்பரத்தில் வக்கரிக்கின்றனர். இப்படி ஒரு அரசியல் சூழலை, இலங்கை அரசு உருவாக்கியுள்ளது.

இலங்கை முதல் புலம்பெயர் மக்களைப் பொறுத்த வரையில், மந்தைகளாகவே வாழ்ந்தனர். கடந்தகால போராட்டங்கள், இந்த எல்லைக்குள் தான் வழிநடத்தப்பட்டன. புலிகள் முதல் புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு வரை, அரசியல் ரீதியாக மக்களை அணிதிரட்ட தவறியது முதல் தங்களை கூட அரசியல் ரீதியாக அணிதிரட்டவில்லை. இதற்கு எதிரான அரசியலையே அனைவரும் கொண்டு இருந்தனர். புலிகள் தங்களை மாபியா பாணியில் இணைத்துக் கொண்டவர்கள், மக்களை மிரட்டியும் மக்களின் பிணத்தை உற்பத்தியும் செய்து அதைக் கொண்டு மக்களை தம் பின்னால் நிற்க நிர்ப்பந்தித்தனர்.

இப்படி அரசியல் ரீதியாக மக்களை அமைப்பாக்கல் என்பது, மறுதலிக்கப்பட்டு வந்தது. உண்மையில் அரசியலை முன்னெடுத்தவர்கள், இதற்கு எதிராக இருந்தனர் என்பதே உண்மை. உண்மையில் அவர்கள் கூட, தங்களை அரசியல் ரீதியாக அமைப்பாக்கிக் கொள்ளவில்லை. மாறாக அதற்கு எதிராக இருந்தனர். இதுவே தமிழ் மக்களைச் சுற்றி கடந்தகால அரசியல் வரலாறாகிவிட்டது.

புலிகள் அழித்தொழிப்பு அரசியலால் தப்பிப் பிழைத்த இடதுசாரிகள், தம்மை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்க முனையவில்லை. மாறாக தங்களை, தங்கள் உதிரித்தனமான இருப்பு சார்ந்த எல்லைக்குள் கும்பல் அரசியல் செய்யும் பொறுக்கித்தனத்தை முன்தள்ளினர். உள்ளடக்க ரீதியாக இது புலியெதிர்ப்பை அடிப்படையாக கொண்ட போதும், இது ஜனநாயகம் என்ற சொல்லை தன் மூகப் பூச்சாக பயன்படுத்தியது.        

பேரினவாதம் புலிகளை வெல்லத் தொடங்கியவுடன் அரசியல் ரீதியாக தம்மை அணிதிரட்டாத புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது, அரசைப் பலப்படுத்தி புலி அழித்தலாகியது. எஞ்சிய உதிரிகள் இதை எதிர்த்த போதும், தாம் போராடுவது மக்களுக்காக என்று கூறிய போதும் அமைப்பாகுவதையும், அமைப்பாக்குவதையும் மறுத்தனர். மக்களை அணிதிரட்டாத உதிரிகளின் இருப்பு அரசியல், புலியெதிர்ப்பினை அரசியலாக கொண்டிருந்தது.

இப்படி இலங்கை அரசை எதிர்க்கின்ற, மக்களை அமைப்பாக்குவதை மறுக்கின்ற புலியெதிர்ப்பு,  தன் இருப்பு சார்ந்த உதிரி வர்க்க அரசியலை முன்தள்ளியது. இந்தப் போக்கு புலம்பெயர் சமூகம் முதல் இலங்கை வரை காணப்படுகின்றது.

பழைய கட்சிகளோ பிரமுகர் கட்சி என்ற நிலையைத் தாண்டி, மக்களின் உடனடிப் பிரச்சனையில் தலையிடவில்லை. வெறுமனே அறிக்கைவிடும் எல்லையைத் தாண்டி  செல்லவில்லை. இப்படித்தான் அரசியல் உள்ளது.

இன்றைய இந்த பொது நிலையில் தனிப்பட்ட நபர்களின் இருப்புக்கேற்ற, உதிரி வர்க்க நிலைக்கேற்ற அரசியல் ஒருங்கிணைவை கோரும் போக்கு பொதுவாகக் காணப்படுகின்றது. அது மக்களையும், தம்மையும் அமைப்பாக்கும் அரசியல் உள்ளடக்கத்தை மறுதலிக்கின்றது. இதற்கு பதில் தன் நிலைக்கு, கீழ் இறங்கி வரக்கோருகின்றது. உதிரிகள் தங்கள் இருப்பு சார்ந்த இருப்பைத் தக்கவைக்கும், அரசியலை முன்தள்ளுகின்றனர்.   

உண்மையில் சமூக பிற்போக்கின் பொதுத்தளத்தில் நடக்கும் இயல்பான அணிசேர்க்கையில், இறங்கி அணிதிரட்ட கோருகின்றனர். இப்படி அரசியலைக் கைவிட்ட, உதிரி அரசியல் ஆர்வங்கள் சமூக மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்பும் கருத்துகள் தொடர்ந்தும் முளைவிடுகின்றது.

செயலற்ற, செயலைக் கோருகின்ற நிலைமை என்பது, அரசியலைக் கைவிடக் கோருகின்றது. அரசியN;ல இதற்கு தடையாக காண்பது, அரசியலாகின்றது. இது அரசியலை வெட்டிச் சுருக்க, அதை மூடிமறைக்கவும் கூட முனைகின்றது. இது அரசியல் ஆர்வமுள்ளவர்கள் மத்தியில், இந்த முரண்பாடு பரிணமிக்கின்றது. விமர்சனங்கள், விவாதங்கள் வெட்டி வேலையாக கருதும் போக்கை உருவாக்குகின்றது.

மாற்றம் அற்ற அசமந்தப் போக்கு, அரசியல் ரீதியாக சமூகத்தில் செல்வாக்கு செலுத்த முடியாத தன்மை, இதற்கு அரசியல் ரீதியாக அணுகுவது தான் காரணம் என்று கருதும் போக்கும், விவாதம் விமர்சனம் என்ற வெட்டி அரசியலும் தான் காரணம் என்று கருதும் தன்மையும் வெளிப்படுகின்றது.                 

இது எம்மைச் சுற்றி அரசியல் நிலைமையை கருத்தில் எடுப்பதை மறுக்கின்றது. இலங்கையில் பேரினவாத பாசிசம் நிலவுவதையும், தமிழ் மக்கள் மத்தியில் மாற்று சிந்தனை அரசியல் கூறுகள் அனைத்தையும் கடந்தகாலத்தில் புலிகள் அழித்திருந்தனர் என்பதையும் காண மறுக்கின்றது. அறிவியல் ரீதியாக புலியல்லாத அனைத்தும் சிதைக்கப்பட்டதால், வலதுசாரிய சிந்தனை முறைமட்டும் சமூகத்தில் எஞ்சின. புரட்சிகர கூறுகள் அங்கு இல்லை. இன்று பேரினவாத பாசிசம் தொடர்ந்தும் அதையே செய்கின்றது. சிங்கள இடதுசாரிகள் கிடையாது. சிங்கள இடதுசாரிகள் என்று கூறிக்கொள்பவர்கள், பேரினவாதத்தின் எல்லையைத் தாண்டி சிந்திப்பது கிடையாது. தமிழ் இடதுசாரிகள் என்று கூறிக் கொள்பவர்கள் அரசு-புலியை தாண்டி சிந்திப்பது கிடையாது. இது இலங்கை மற்றும் புலம்பெயர் சமூகத்தில் உள்ள நிலைமை.

புலத்தில் வலதுசாரிய புலிப்பாசிசத்தின் சித்தாந்த எல்லையைத் தாண்டி, சமூகத்தை நோக்கிய சிந்தனை முறை இருக்கவில்லை. புலியல்லாத தரப்பு இதை முன்வைக்கவுமில்லை. தங்கள் இருப்பு என்ற அரசியல் எல்லையைத் தாண்டி, மக்களிடம் செல்வதை அரசியல் ரீதியாக மறுத்தனர்.   

தங்களை தாங்கள் அரசியல் ரீதியாக அமைப்பாக்கல், அதன் மூலம் மக்களை அமைப்பாக்கல் என்பதை, கடந்த பல பத்துவருடங்களாக மறுத்தல் அதை அழித்தல் எம்மைச் சுற்றிய பொது அரசியலாக இருந்தது.

இதற்கு மாறாக சிறு குழுவாக நாம் இதைக் கோருவது, அதை முன்வைப்பது, அந்த அரசியலை பேசுவது தொடர்ந்து அன்னியமானதாக உள்ளது. இதனால் அரசியல் ரீதியாக அர்த்தமற்ற ஒன்றாக உணர்வது வெளிப்படுகின்றது. எம்மைச் சுற்றிய சூழலில், அதில் நாம் தலையிட முடியாத தனிமையில், எம் சரியான கருத்துகள் பிரயோசனமற்றதாக கருதும் போக்கு படிப்படியாக அரசியலை கைவிட்டு அணுகக் கோருகின்றது. அரசியலற்ற அமைப்பு வடிவங்களைக் கோருகின்றது. உண்மையில் மக்களை அணிதிரட்டல், அதற்காக நாம் அணிதிரளுதல் என்பது, கடந்த காலத்தில் எம்முடைய மைய அரசியலாக இருந்ததில்லை. இதற்கு எதிரான அரசியல் தான் அன்றும் இன்றும் காணப்படுகின்றது.

சமூக அறியாமையையும், சமூக பிற்போக்கையும் சார்ந்து தம்மை அணிதிரட்டும் போக்கே, இலகுவானதாக இயல்பானதாக இன்னமும் தொடருகின்றது. இதனால் இதற்கு எதிரான எமது போராட்டம் கடுமையாகி, தனிமைப்பட்டதாக மாறிவிடுகின்றது. இதில் இருந்துதான் நாம் எம் அரசியலுக்காக தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.       

பி.இரயாகரன்
21.07.2010

      


 

Last Updated on Wednesday, 21 July 2010 09:20