Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் அவர்கள் தங்களுக்காகப் போராடவில்லை

அவர்கள் தங்களுக்காகப் போராடவில்லை

  • PDF

பிள்ளைகளைப் பறிகொடுத்து, ஊனமுற்ற பேரப்பிள்ளகளைச் சுமந்தபடி, சோற்றுக்கும் மருந்துக்கும் காசில்லாமல், 26 ஆண்டுகளாக இந்த இரக்கமற்ற அரசை எதிர்த்து நிற்கும் பெண்கள் - யாருக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? தங்களுக்காகவா?

இலட்சுமி பாய், தற்போது 75 வயதாகும் மூதாட்டி. நச்சுவாயுத் தாக்குதல் நடந்த அன்று யூனியன் கார்பைடு ஆலைக்கு எதிர்புறம் இருக்கும் ஜே.பி.நகரில் வசித்து வந்த அவர், ஒரு கூலித் தொழிலாளி. நச்சு வாயுவால் இவர் கணவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அன்று உயிர் பிழைத்தார். இருப்பினும், இனம் புரியாத பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு முடமாகிப் போன அவர், பல ஆண்டுகளாக மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக அலைந்து, மிகுந்த வேதனையோடு இறந்தார்.

அப்போது பதின்ம வயதில் இருந்த அவருடைய இரண்டு மகன்களையும் மகளையும் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்பியதால்தான், இலட்சுமி பாய் வீட்டில் அடுப்பு எரிந்தது. இன்னமும் அக்குடும்பத்தினருக்கு அடிக்கடி இனம் புரியாத நோய்கள் தாக்குவதால், வருமானம் அனைத்தும் மருத்துவத்துக்கே செலவாகி வறுமை வாட்டிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், இன்றுவரை மனம் தளராமல் போபால் படுகொலைக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்கள் அனைத்திலும் இலட்சுமி பாய் கலந்துகொள்கிறார். பல ஏழைக் குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துவிட்ட ஆண்டர்சனுக்குத் தண்டனை கொடுக்கக் கோரி, போபால் மக்கள் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

தப்பியவர்களை மட்டுமல்ல; அவர்களின் அடுத்த சந்ததியினரையும் இன்றுவரை வதைத்துவரும் யூனியன் கார்பைடை எதிர்த்தும், அதனைக் கையகப்படுத்தியுள்ள டௌ கெமிக்கல்ஸை எதிர்த்தும், பாதிக்கப்பட்ட போபால் மக்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். நிவாரணம் கொடு, சிகிச்சை அளி என்பதாக முதலில் ஆரம்பித்த போராட்டம், பின்னர் தமது குழந்தைகள் மட்டுமின்றி அனைவரையும் நிரந்தர நோயாளியாக்கிக் கொண்டிருக்கும் யூனியன் கார்பைடு ஆலையின் நச்சுக் கழிவுகளை அகற்றக் கோரும் போராட்டமாகவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கோரும் போராட்டமாகவும் கடந்த 25 ஆண்டுகளில் முன்னேறி வந்துள்ளது. தங்களுக்கு நேரிட்ட பாதிப்பும் துயரமும் அடுத்த தலைமுறையிலும் தொடரக் கூடாது எனும் நோக்கில்தான் இந்தப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

1984-க்கு பின் பிறந்த 10,000 போபால் குழந்தைகளுக்கு (இவை, "விஷவாயு குழந்தைகள்" என்றே மருத்துவ வட்டாரத்தினரால் அழைக்கப்படுகின்றன) மருத்துவக் காப்பீடு வழங்க 1990-இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்வழங்க 2004-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இவற்றில் எதையும் மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை. இந்த அநீதியைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட போபால் மக்களில் 50 பேர் போபாலில் இருந்து 600 கி.மீ. தொலைவில் இருக்கும் தில்லிக்கு, கடந்த 2008-ஆம் ஆண்டு பாத யாத்திரை மேற்கொண்டனர். வழியெங்கும் கோரிக்கை முழக்கப் போராட்டங்களை நடத்திக் கொண்டு தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்து சேர்ந்து, தர்ணா போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 11 வயது சிறுவன் முதல் 82 வயது முதியவர் வரை கலந்து கொண்டனர்.

துல்சா பாய் எனும் 70 வயது மூதாட்டியின் குடும்பம், போபால் கொடூரம் நடந்தபோது சிந்தி காலனியில் குடியிருந்து வந்தது. நச்சுவாயுவிலிருந்து எப்படியோ அக்குடும்பம் உயிர் தப்பிய போதிலும், நச்சு வாயுத் தாக்குதலின் கொடூர விளைவுகளை அக்குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் சந்தித்தனர். இது மட்டுமின்றி, யூனியன் கார்பைடு ஆலைக்கு வெளியே கொட்டப்பட்டிருந்த நச்சுக் கழிவுகளால் நஞ்சாகிவிட்ட நிலத்தடி நீரைத்தான் அவர்கள் குடிக்க வேண்டியிருந்தது.

இதனால் அவரது 14 வயது பேரன் ஆகாஷ் வளர்ச்சியே அடையாமல் குள்ளமாகவே இருக்கிறான். அவரது மருமகள் மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கால் அவதிக்குள்ளானார். இளைய மகனை காசநோய் தாக்கியது. மற்ற பேரக் குழந்தைகள் தொடர்ச்சியான முதுகுவலி, மூச்சுத்திணறல், உடல் பலவீனம் போன்றவற்றால் அவதியுற்றன. தீராத நோயும் வறுமையும் அவரது குடும்பத்தைப் பிடித்தாட்டிய போதிலும், துல்சா பாய் துவண்டு விடவில்லை. முடமாகிவிட்ட தன் பேரக் குழந்தையை இடுப்பிலே சுமந்து கொண்டு போராடுவோருடன் இணைந்து கொண்டார். 70 வயது ஆகியும் நீதியை வென்றடையும் நோக்கில், போபாலில் இருந்து தில்லி வரை பாதயாத்திரை சென்ற 50 பேருடன் அவரும் இணைந்து கொண்டார்.

நஞ்சான நிலத்தடி நீரின் கொடுமையால் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, பார்வை இழந்த கண்ணோடு இன்னொரு குழந்தை - என துயரத்தை சுமந்து வாழும் தந்தை ஒருவரும் இந்தப் பயணத்தில் கலந்து கொண்டார். தனது தாயாரையும் இரண்டு பேரன்களையும் நச்சு வாயுவுக்குப் பலிகொடுத்து 25 ஆண்டுகளாக நச்சு வாயுவின் பக்கவிளைவுகளோடு போராடும் சோட்டேகானும் (வயது 67) அவரது மனைவியும், இந்தப் பாத யாத்திரை பாதிக்கப்பட்ட போபால் மக்களுக்கு வெற்றியை தேடித் தரும் என்று உறுதியாக நம்பி போராட்டத்தில் கலந்து கொண்டனர். வயல்வெளிகளிலும் பள்ளிக்கூடங்களின் தாழ்வாரங்களிலும் இரவைக் கழித்து, மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த நெடும்பயணம், ஜந்தர் மந்தர் பகுதியில் தில்லி போலீசாரால் தடுக்கப்பட்டது. தில்லியில் போராட்டம் நடத்திய போபால் மக்கள் 11 நாட்கள் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டனர். நாடாளுமன்றத் தெருவில் மறியல் செய்ய முயன்ற 12 குழந்தைகள் உள்ளிட்ட 36 பேர் கைது செய்யப்பட்டு போலீசு நிலையத்தில் வைத்து கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர்.

அரசின் பல்வேறு அடக்குமுறைகளைத் தாங்கி, பாதிக்கப்பட்ட போபால் மக்களின் உரிமைக்காக பல்வேறு குழுக்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. சதிநாத் சாரங்கி (வயது 54), கடந்த 23 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டோர் இயக்கத்தை ஒருங்கிணைத்துப் போராடி வருகிறார். போபால் மக்களின் போராட்டப் பயணத்தில் பலமுறை அவர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலையின் நச்சுக் கழிவுகளை டௌ கெமிக்கல்ஸ் அகற்றத் தேவையில்லை என அரசு பேரம் பேசியது வெளியானதும், அதை எதிர்த்து அரசுக்கெதிரான போராட்டம்; டௌ கெமிக்கல்சுக்கு ஆதரவாக ரத்தன் டாட்டா கடிதம் எழுதியதையடுத்து டாடா நிறுவனங்கள் முன் மறியல், டாடா பொருட்களைப் புறக்கணிக்கும் இயக்கம் - என அடுத்தடுத்த போராட்டங்களில் தங்கள் நோய்களைக்கூடப் பொருட்படுத்தாமல் போபால் மக்கள் போர்க்குணத்தோடு கலந்து கொள்கின்றனர். அண்மையில், இந்தூர் அருகிலுள்ள பிதாம்பூரில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக் கழிவுகள் தாக்கி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதும், அதற்கெதிராக ம.பி. அரசின் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம் எதிரே அவர்கள் போராடினார்கள். கடந்த ஜூன் 7-ஆம் தேதியன்று வழங்கப்பட்ட அநீதியையும் அவமானத்தையும் நிவாரண மோசடிகளையும் எதிர்த்து அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் நிவாரணப் பிச்சைக்காகப் போராடவில்லை. அரசின் புறக்கணிப்பும் அடக்குமுறையும் தொடர்ந்த போதிலும் அவர்கள் துவண்டுவிடவில்லை. கருணையை எதிர்பார்த்து காத்திருக்கவுமில்லை. அநீதிக்கும் அவமானத்துக்கும் பழிதீர்க்க வேண்டும், இனியும் போபால் போன்ற பேரழிவுகள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்றுதான் அவர்களின் போராட்டம் தொடர்கிறது. அவர்களின் நியாயமான போராட்டத்தை, முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டமாக, மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டமாக முன்னெடுத்துச் செல்வது ஒன்றுதான், நாம் போபால் மக்களின் போராட்டத்துக்கு காட்டும் உண்மையான ஆதரவாக இருக்க முடியும்.

*சுப்பு