Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் தமிழ்பாசிசத்திற்கு துணை போகும் மூன்றாம்தர "இடதுசாரி" பிரமுகர்களும், பெண்ணியர்களும்

தமிழ்பாசிசத்திற்கு துணை போகும் மூன்றாம்தர "இடதுசாரி" பிரமுகர்களும், பெண்ணியர்களும்

  • PDF

தமிழ் பாசிசமானது மக்கள் மீதான  தனது  முப்பது வருட அரசியல் ஆதிக்கத்தை தன் அரசியல் தற்கொலை மூலமும்;  மஹிந்த பாசிச ராணுவத்திடம் சரணடைதல் மூலமும் முடிவுக்கு கொண்டு வந்தது. இன்று அதன் எச்சசொச்சங்கள் புலம்பெயர் தேசங்களில் தமது இருப்பைத் தக்கவைக்க   பல வழிகளிலும் முயன்ற வண்ணமுள்ளனர். வட்டுகோட்டை வாக்கெடுப்பு, நாடு கடந்த தமிழ் ஈழஅரசு தமிழ்ஈழ அபிவிருத்தி நிதி சேர்ப்பு, தமிழ்ஈழ அபிவிருத்திக்கான திட்டமிடல் பட்டறைகள், கருத்தரங்குகள்,  ஈழத்தமிழர் பேரவை போன்ற அமைப்புருவாக்கங்கள் என்பன புலம்பெயர் எச்சசொச்ச  தமிழ்பாசிசத்தின் தன் இருப்பிற்கான முன்னெடுப்புகளாகும்.

இடது இயங்குசக்திகள் மீது தாக்குதல் தமிழ் அரசியல் தரப்பினர்

அதே வேளை பல வருட தமிழ்பாசிச ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட இடதுசக்திகளும் தம்மை ஒருங்கமைக்க முயல்கின்றனர்.   புலத்தில் கைவிட்டு எண்ணக் கூடிய அளவிலேயே உள்ள இந்த   இடது சக்திகள் இன்று தம்மை ஒருங்கமைக்க முயல்கின்ற நிலையில் பலதரப்பட்ட தமிழ் அரசியல் தரப்பினர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.     குறிப்பாக கடந்த சில மாதங்களாக இத்தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.  இத்தாக்குதல்கள் மூன்று தரப்பிலிருந்து தொடுக்கப்படுகிறது.  
 
1 . தமிழ் தரகு -பாசிச   எச்சசொச்சங்கள். அதாவது புலம்பெயர் புலிப்பினாமிகள்    
2 . மஹிந்த-பாசிச அரச அடிவருடிகள்
3 . இடதுசக்திகள்  என புலத்தில் அறியப்பட்ட சில புத்திசீவிகளும், பிரமுகர்களும், மற்றும் பெண்ணியர்களும்.   
 
இத்தாக்குதல்கள் இடது இயங்குசக்திகள் மீது தமிழ்பாசிச கைக்கூலிகளாலும்,      மஹிந்த-பாசிச அரச அடிவருடிகளாலும் நடத்தப்படுவது இயல்பான, எதிர்பார்த்த விடயங்கள் ஆகும். ஆனால் இன்று  இடது இயங்குசக்திகள் மீது தாக்குதல் நடாத்துவதில் சில  இடதுசக்திகள் என புலத்தில் அறியப்பட்ட புத்திசீவிகளும், பிரமுகர்களும்; பெண்ணியர்களும் முன்னிற்கின்றனர் என்பதுவும், மறுக்க முடியாத கசப்பான உண்மைகளாகும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த புத்திசீவிகளும், பிரமுகர்களும்; பெண்ணியர்களும் தமிழ் தரகு-பாசிச எச்சசொச்சங்கள்; அதாவது புலம்பெயர் புலிப்பினாமிகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைத்தும் இடது இயங்குசக்திகள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர்.


நோர்வே பெண்தோழர் மீது பிரயோகிகப்ப்பட்ட (உளவியல்) வன்முறை

கடந்த மாதத்தில் நோர்வே தோழர்கள் சிலர் மஹிந்த பாசிச அரசையும், தமிழ் பாசிசசக்திகளையும் நோர்வேமக்கள் மத்தியில் துண்டுப்பிரசுரம் மூலம் அம்பலப்படுத்தினர். இதனால் வெகுண்டெழுந்த   தமிழ்பாசிச புலிப்பினாமிகள் துண்டுப்பிரசுரம் விநியோகித்த பெண்தோழர் மீது படுகீழ்தரமான உளவியல் வன்முறையை பிரயோகித்தனர். அந்நிலையில் சம்பவ இடத்தில இருந்த நோர்வேஜிய தோழர்களால் அத் தோழர் காப்பாற்றப்பட்டார். இதன் பின் பெண்தோழர் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைக்கு நோர்வேஜிய தோழர்களாலும், மற்றும் இடது வலது வித்தியாசமின்றி  அப்பிரதேசத்திலுள்ள அனைத்து நோர்வேஜிய கட்சிகளாலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவ் வன்முறை சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் நோர்வேயில் வாழும் இடதுசாரி அடையாளத்துடன் வலம்வரும் எவராலும் முன்னெடுக்கப்படவில்லை. இவ் விடயம் சம்பந்தமாக  பலருக்கு விபரமாக விடயங்கள் தெரிந்திருந்தும் தனிப்பட முறையில் கூட  பாதிக்கப்பட்ட தோழருக்கு தார்மீக மட்டத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை இந்த நோர்வே வாழ் முற்போக்குகள். 

  
இவ் வன்முறை சம்பந்தமாக எந்தவித கருத்தும் இல்லாத இவர்கள், நோர்வே இடதுசாரிப்  பிரபலங்கள் சிலர் புலிப்பினாமிகளின் பின்னணியில் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் பங்குபற்றி அவர்களுடன் கூடிக்குலாவி கும்மாளம் கொட்டியது தொடர்பாக தமிழரங்கத்தில் புனைபெயரிலும், சுயபெயரிலும் பிரமுகர்களை அம்பலப்படுத்தியபோது மட்டும்,  விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்தபடி  அம்பலப்படுத்தியவர்களுக்கும், தமிழரங்கத்திற்கும் எச்சரிக்கை விடுகின்றனர். இதன் அடிப்படையில் தான், மே 18 இயக்க பிரமுகர்களின் ஏற்பாட்டில் மே18 இயக்க பிரச்சார ஊடகமான தேசம்நெட்டில்  தமிழரங்கத்தையும் அதன் அரசியலையும் தனது யாழ்-வேளாள மேலாதிக்க பார்வையில் விமர்சிக்கிறார் புலிப்பினாமிகளுடன் கூடிக்குலாவி கும்மாளம் கொட்டிய சண்முகரத்தினம் சமுத்திரன். சமுத்திரனுக்கும், மே 18 இயக்கத்தின் அரசியல் இருப்பிற்கும் புலிகளும், ஏகாதிபத்திய நாடுகளின் ஆய்வுமையங்களும் முக்கியமானதென்பது விளங்கிக்கொள்ள முடியாத விடயமல்ல.  பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பது இதைத்தானோ ?  

 

"இடதுசாரி" பெண்ணியர்களும், பிரபலங்களும், பிரமுகர்களும்

இந்த நோர்வே வாழ் முற்போக்குகளுக்கு சளைத்தவர்கள் அல்ல மிகுதியான ஜரோப்பிய "இடதுசாரி" பெண்ணியர்களும், பிரபலங்களும், பிரமுகர்களும்; இவர்கள் நடத்தும் இணையதளங்களும். இவர்களும்  நோர்வே வாழ் முற்போக்குகளைப் போலவே கண்டும் காணாதிருந்தனர். இந்திய பெண்கவிதாயினிகளாகவும், விபச்சாரத்தை தொழிலென அங்கீகரிக்க கோரியும் அறிக்கை விடும் ஜரோப்பிய "இடதுசாரி" பெண்ணியர்களுக்கு நோர்வேயில் ஒரு பெண் தோழர் மீது நடத்தப்பட்ட வன்முறை ஒரு பொருட்டாக கருதப்படவில்லை.  அத் தோழர் மீது நடத்தப்பட்ட வன்முறை பற்றி இவர்களின் இணையங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்தும் கூட இவர்கள் அத் தகவலை வெளியிட மறுத்தனர். (இலங்கைநெற் மற்றும் மறுஆய்வு அதற்கான தமது கண்டனக்குரல்களை வெளியிட்டிருந்தன.) 

சில வேளை இவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல் இலக்கியத்தரத்தில் எழுதப்படாததாலும், பாதிக்கப்பட்ட தோழர் பிரபலமானவரல்லாததாலும் இவ் இடதுசாரிய பிரமுகர்களும்,   பெண்ணியர்களும், பெண் தோழர் மீது நடத்தப்பட்ட வன்முறையை தமது இணையதளங்கள் மூலம் பகிரங்கப்படுத்தாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இவர்களது இந்த கண்டும் காணாத போக்கு பாசிசத்திற்கு துணை போகும் செயலே ஒழிய வேறொன்றும் அல்ல. 

கவுண்டமணியின் செந்திலின் உரையாடலும் பின்நவீனத்துவமும்

இந்த தாக்குதல்களின்  வரிசையில் கடைசியாக வந்திருப்பது மார்க்சிச பார்வையிலான விமர்சனம் என்ற போர்வையில் முன்வைக்கப்பட்டிருக்கும்  பின்நவீனத்துவ கருத்தியல் சார்  சொல்லாடலின் அடிப்படையிலான திட்டித் தீர்த்தலாகும். "மக்களுக்காக கதைக்கிறேன்", "மக்களுக்காக எழுதுகிறேன்", "மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்;" "இலங்கை ஒடுக்கப்படும் மக்களைக் காவு கொள்கிறது" என  வரிக்கு வரி மக்கள் நலம் பற்றி; சொல்லாடல் செப்படிவித்தைகளை காட்டிய வண்ணம்,எமக்கள்நலம் சார்ந்த அனைத்து அமைப்புருவாக்கத்தையும் மறுத்து எழுதுகின்றனர் ஒரு சில புலம்பெயர் கல்விமான்கள்.

புலம்பெயர் சமுகத்தில் பலர் தங்களை பின்நவீனத்துவ இலக்கியவாதிகளாகவும், புத்திசீவிகளாகவும் நிலைநிறுத்த அரும்பாடு படுகின்றனர். இவர்களில் பலரின்எபின்நவீனத்துவ அறிவு அ.மார்க்ஸ்  "உல்டா" பண்ணி எழுதிய புத்தகங்களை மீறிப் போனதில்லை. ஆனால் கல்விமான்களின்  பின்நவீனத்துவ புலமையானது அவர்களின் உயர்கல்வி, மற்றும் விவாதத்தினூடு பெறப்பட்டது. 

இந்தக் கல்விமான்கள் பின்நவீனத்துவ கண்ணோட்டத்தினாலான தமது ஆய்வுகளை மார்க்சிச ஆய்வுக்கான சொல்லாடல்களை பயன்படுத்துவதன் மூலம்; மக்கள்நலம், சமுதாயநலம் சார்ந்த தத்துவபார்வையான மார்க்சிச கண்ணோட்டத்தில் தாம் எழுதியது போன்று பாவ்லா காட்டுகிறார்கள். கல்விசார் அறிவுசீவியான இவர்கள், பல தமிழ் லும்பன்கள் பின்நவீனத்துவ கருத்தியலை தவறாக பாவித்து அதனை நாறடித்து விட்டதனால், தம்மை பின்நவீனத்துவவாதியாகக் காட்டிக்கொள்ள தயங்குகிறார் போலும்.  

   
பின் நவீனத்துவ பார்வையானது பல நல்ல விடயங்களை உள்ளடக்கியது. அதிகாரத் தளங்களை கேள்விக்குள்ளாக்குவது, கடந்த நூற்றாண்டுகளில் அதாவது நவீனத்துவ காலப்பகுதியில் உருவான தத்துவங்கள்; அவை சார்ந்த நிறுவனங்களின் இருப்பு மீது கேள்விக்கணை தொடுப்பது போன்றவற்றிற்கு பின்நவீனத்துவ ஆய்வுமுறையை பயன்படுத்தலாம். ஆனல் பின்நவீனத்துவ ஆய்வுமுறை மூலம் கேள்வி கேட்கலாமே ஒழிய எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்ல முடியாது. உதாரணமாக  பின்நவீனத்துவ ஆய்வுமூலமும் ஒடுக்குமுறையை வெளிப்படுத்தலாம். ஆனால் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக என்ன செய்யவேண்டும் என்று பின்நவீனத்துவ சிந்தனை மூலம் சொல்லமுடியாது. வெறும் சொல்லாடல்கள் மூலம் கேள்வி கேட்பதுடன் தனது பணியை நிறைவு செய்யும் பின்நவீனத்துவத்தின் இந்த நிலைமையை கீழேகாணும்  தமிழ் திரைப்படத்தில் வந்த உரையாடல் மூலம் விளக்கலாம்.
 
செந்தில்: "அண்ணே இந்தாங்கண்ணே  வாழைப்பழம் " 
க.மணி: "டேய், உன்னை ரெண்டு  வாழப்பழம் வேண்ட சொன்னனான். ஒண்டு இந்தா  இருக்கு, மற்றது எங்க?"
செந்தில்:"அது தாண்ணே இது"  
க.மணி: "!!!!!!?????.....டேய் ஒரு ரூபாய்க்கு எத்தின  வாழப்பழம் ?"
செந்தில்:"ரெண்டு  வாழைப்பழம்"!
க.மணி: "ஒண்டு இந்தா இருக்கு, மற்றது எங்க?"
செந்தில்:"அது தாண்ணே இது" !!!!

இந்த  உரையாடலில் கேட்கப்படும் கேள்விக்கும்; வழங்கப்படும் பதிலுக்கும், நடைமுறை ரீதியாக எந்த சம்பந்தமும்  இல்லை. க.மணியின் கேள்விக்கு செந்தில் சொல்லும் பதில் தர்க்கரீதியாகவும்; மொழியியல் அடிப்படையிலும் சரியான பதிலாக இருந்தபோதும் நடைமுறையில் இரண்டாவது வாழைப்பழத்தை செந்தில் களவாக சாப்பிட்டார் என்ற உண்மையை செந்திலின் பதில்கள் வெளிப்படுத்துவதில்லை. அதன் அடிப்படையில் க.மணிக்கு இரண்டாவது வாழைப்பழம் பற்றிய தீர்வு கிடைக்கப் போவதுமில்லை.  
 
இன்னொரு வகையில் சொல்வதானால்;  மார்க்சிசம் சொல்வது வர்க்க ஒடுக்குமுறைக்கு ஒரே நிவாரணம் வர்க்கப்போரும், அதன் பால் பெறப்படும் உழைக்கும் வர்க்கத்தின் பாட்டாளிவரக்;க சர்வாதிகாரமுமேயாகும். ஆனல் பின்நவீனத்துவ ஆய்வுமுறை முதலாளித்துவத்தின் சுரண்டலை ஆய்வு ரீதியாக அம்பலப்படுத்த உதவும்.  ஆனால், சுரண்டலுக்கான தீர்வாக பாட்டாளி வர்க்கம் தனது அதிகார அரசை ஏற்படுத்தும் போது அதை உழைக்கும் வர்க்கத்தின், முதலாளித்துவத்தின் மீதான ஒடுக்குமுறையாக சித்தரிக்கும்.
 
ஆகவே தீர்வு தராத பின்நவீனத்துவம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உள்வீட்டு விமர்சனத்திற்கான ஆய்வு முறை மாத்திரமே. இக் காரணத்தினாலே தான் பின்நவீனத்துவம் இன்று இலக்கிய- மற்றும் மொழியியல் ஆய்வுக்கான கண்ணோட்டமாக இன்று பயன்படுத்தப்படுகிறது. ஆகவே மாரக்;சிச முகமூடி போட்ட வண்ணம் பின்நவீனத்துவ கருத்தியலின் அடிப்படையில் இடதுசக்திகளை விமர்சனம்எசெய்வது அரசியல் நேர்மையற்ற செயலாகும்.   
 
முடிவாக

 
அதேவேளை "எதிரியால் தாக்கப்படுவது நல்லவிடயமே"  என தலைவர் மாஒ சொன்னது போல இந்த மூன்றாம்தர சீரழிந்த இடதுபுத்திசீவிகளும், பிரமுகர்களும்; பெண்ணியர்களும் தமிழ் தரகு -பாசிச   எச்சசொச்சங்களும், பின்நவீனத்துவ பிரகஸ்பதிகளும் நடாத்தும் தாக்குதல்களை கணக்கில் எடுக்காது, இடதுசாரி இயங்குசக்திகள் தமது மக்கள் நலம் சார் வேலைத்திட்டத்தை ஊக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும்.

Last Updated on Wednesday, 23 June 2010 20:08