Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் தமிழினவாதிகள் வெற்று வேட்டு உணர்ச்சி உரைகள் தான், விழுப்புரம் குண்டு வெடிப்பாகியது

தமிழினவாதிகள் வெற்று வேட்டு உணர்ச்சி உரைகள் தான், விழுப்புரம் குண்டு வெடிப்பாகியது

  • PDF

இனம் சார்ந்த வலதுசாரிய உணர்வும், உணர்ச்சியும், மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதிலும் பார்க்க வெடிகுண்டில் தான் அதிக நம்பிக்கை கொள்ள வைக்கின்றது. அதுவும் பிழைப்புவாதிகளின் உணர்ச்சிப் பேச்சை நம்பி பலியானவர்கள், தனிமைப்பட்டுப் போன விரக்தி நிலையில் தனிநபர் பயங்கரவாதத்தை நாடுகின்றனர். ஏன் அரசியல் தற்கொலையைக் கூட நாடுகின்றனர். இப்படிபட்டவர்கள் எந்த மக்களையும் அணிதிரட்ட முடியாது என்று கருதி, தன்னளவில் குண்டு வெடிப்பை முன்வைக்கின்றனர். இந்தக் குண்டு வெடிப்பு, மக்களை மேலும் இவர்களில் இருந்து தனிமைப்படுத்துகின்றது. மக்களை மேலும் மேலும் இவை செயலற்றதாக்குகின்றது.

அரச பயங்கரவாதத்துக்கு எதிரான தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றுவேட்டு உணர்ச்சி அரசியல் தான், பிரபாகரன் உள்ளிட்ட தனிநபர் பயங்கரவாத அரசியலாக தோற்றம் பெற்றது. அன்று பிரபாகரன், இன்று "மேதகு பிரபாகரன் தம்பிகள்". வரலாற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பதன் மூலம், பிழைப்புவாத தமிழனவாதிகளின் உணர்ச்சிக்குள் தமிழினம் புதைக்கப்படுகின்றது. இந்த தனிநபர் பயங்கரவாதம் மூலம் உருவான பிரபாகரனின் புலியியக்கம் நடத்திய தொடர்ச்சியான மனித விரோத செயலால், தமிழ்மக்கள் உலகளாவில் தனிமைப்பட்டார்கள். இன்று ஏஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச அனுதாபத்தையும் தகர்த்தெறியவே, உணர்ச்சி சார்ந்த இந்த குண்டு வெடிப்புகள் உதவுகின்றது.

இந்த இடத்தில், நடந்த நிகழ்வை இந்திய உளவுத்துறையின் சதி என்று சிலர் கூற முற்படுகின்றனர். இது போன்றவற்றை அவர்கள் செய்யமாட்டார்கள் என்பதல்ல. ஆனால் அவர்கள் அதை "மேதகு பிரபாகரன் தம்பிகள்" பெயரில் செய்யுமளவுக்கு, நிலைமை உள்ளதென்றால் அதற்கு யார் பொறுப்பு?  தமிழினவாதிகளின் உணர்ச்சி ஊட்டிய அரசியல் தளத்தைத்தான், அவர்களும் பயன்படுத்தியிருப்பார்கள். அதற்கான பொறுப்பும் இவர்களைச் சாரும். புலிகள் இயக்கத்தைக் கொண்டு, அனுராதபுர இனப் படுகொலைகளை (150 முதல் 200 பேர்) 1985 இல் இந்திய உளவுத்துறை நடத்தியது போன்று, இதுவும் ஒன்றாகிவிடும்.      

மக்களை அரசியலை நிராகரித்த அரசியல் களத்தில், எதுவும் எப்படியும் நடக்கலாம். அதை யார் செய்தது என்பதை, மக்கள் இனம் காணமுடியாது போய்விடுகின்றது. அதை மறுக்க முடியாது போய்விடுகின்றது. அதற்கான அரசியல் தார்மீக பலத்தை, தனிநபர் பயங்கரவாத அரசியல் நடைமுறை இல்லாதாக்கிவிடுகின்றது.
  
தமிழக இனவாதிகள் எழுப்பும் வெற்றுக் கூச்சல்களும், சவடால்களும் இதுபோன்ற குண்டு வெடிப்புகளை உருவாக்கும், உருவாக்குகின்றது. அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்று வேட்டுகள் மூலம் உசுப்பேத்திய பாராளுமன்ற அரசியல் விபச்சாரத்தில் தான், பிரபாகரன் உள்ளிட்ட அப்பாவி இளைஞர்கள் அரச பயங்கரவாதத்துக்கு எதிரான தனிநபர் பயங்கரவாதிகளாக உருவானார்கள். சுடுவது, குண்டு வைப்பது, கொல்வது, கொள்ளையடிப்பது, பணத்தை கறப்பது, லஞ்சம் கொடுத்து காரியமாற்றுவது … என்று இதுவே விடுதலைப் போராட்டமாகியது. இதை நம்பி, ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் இந்த வழியில் பலியானார்கள். இதன் மூலம் மக்களை ஏமாற்றி கொழுத்த திடீர் பணக்காரக் கும்பல் தொடர்ந்து கொழுக்க, சமூகத்தை பாசிசமயமாக்கியதன் மூலம் மாபியாத்தனமும் விடுதலைப் போராட்டமாகியது.

இந்த தனிநபர் பயங்கரவாத அரசியல் பீரங்கியையும், விமானத்தையும் வைத்திருந்த போதும் கூட, அரசியல் நடத்தைகள் மாறிவிடவில்லை. அது மக்களை ஓடுக்கி அவர்களை அன்னியமாக்கியது. உண்மையில் மக்கள் போராட்டத்தை இது அழித்ததுடன், போராட்ட அடிப்படைகளையும் சிதைத்தது. இன அழிவைத் தான், இறுதி முடிவாக்கியது. தமிழ் மக்கள் பெற்றதோ, இனவழிவும் சொந்த இழப்பும்தான்.   

இந்த எல்லையில் தான், தமிழக உணர்ச்சி அரசியல் முன்னேறுகின்றது. தமிழக இனவாதிகளான கோபாலசாமி முதல் எல்லா பம்மாத்துவாதிகளும், உசுப்பேத்திய சவடால் பேச்சுகளை உண்மை என்று நம்பி உணர்ச்சிவசப்பட்டவர்கள், விரக்தியடைந்து குண்டைத்தான் வைக்க முடிகின்றது. சிலர் இனத்துக்காக தற்கொலை செய்கின்றனர். இப்படி மக்களை வலதுசாரிய இனவாதம் வழிநடத்துகின்ற இனவாத அரசியல் தளத்தில், சமூக பிரச்சனைகள் சீரழிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.           

அரச பயங்கரவாதத்தை முறியடிக்க, தனிநபர் பயங்கரவாதம் ஒருநாளும் அரசியல் தீர்வாகாது. தோற்றுப் போன பிரபாகரன் கூட, அப்படித்தான் தோற்கடிக்கப்;பட்டார். சினிமா கதாநாயகர்களும், அரசியல் கதாநாயகர்களும் மக்களை பார்வையாளராக்கி, அதன் மூலம் மக்களின் விடுதலையை குழிதோண்டிப் புதைக்கத்தான் முடிகின்றது.

இந்த வகையில் விழுப்புரம் குண்டு வெடிப்பும், "மேதகு பிரபாகரனின் தம்பிகள்" உரிமை கோரிய கடிதமும், பிரபாகரனின் அதே தனிநபர் பயங்கரவாத வழிமுறையை மிகச் சரியாகவே எடுத்துக் காட்டுகின்றது. மக்களை நம்பி அவர்களை அணிதிரட்டிப் போராட முடியாதவர்கள், மக்களைக் கொன்று போராடுவதையே தனிநபர் பயங்கரவாத அரசியல் மூலம் அரசியலாக முன்வைக்கின்றனர்.

இந்த அரசியல் வழிமுறையை நாம் இடது மற்றும் வலது எங்கும் காண முடிகின்றது. மக்கள் தான் வரலாற்றை தீர்மானிக்கின்றனர் என்பதையும், தம் மீதான ஓடுக்குமுறைக்கு எதிராக மக்கள்தான் போராட வேண்டியவர்கள் என்பதையும் மறுக்கின்ற போது, தனிநபர் பயங்கரவாதம் மூலம் அதை அணுகுகின்றனர். இது மக்களைப் போராட்டத்தில் இருந்து அன்னியமாக்குவதுடன், மக்களுக்கு எதிராகவே அது மாறிவிடுகின்றது.

சமூக அநீதிகளையும், ஓடுக்குமுறைகளையும் எதிர்க்கும் மனப்பாங்குடன் தியாக உணர்வுடன் தான், தனிநபர் பயங்கரவாதத்தில் ஈடுபடுகின்றனர். தனிமனித சொத்துடமை உருவாக்கும் உலக கண்ணோட்டம் சார்ந்து, தனிமனித நடத்தைகள் சார்ந்த தனிநபர் பயங்கரவாத கூறுகள் முதன்மை பெற்று இதைத் தூண்டுகின்றது. கவர்ச்சியான, விளம்பரமான உலக ஓழுங்குக்குள், தனிநபர் பயங்கரவாதம் எடுப்பான ஒன்றாக மாறி பரபரப்பாக வெளிப்படுகின்றது. இதில் நம்பி, மக்கள்தான் போராட வேண்டும் என்பதை மறுக்கின்றது.

இப்படி அரசியலுக்காக தன்னைத்தான் அழிக்கும் தற்கொலை முதல் தற்கொலை தாக்குதல் வரை, இவை அனைத்தும் இந்த அரசியல் எல்லைக்குள் தான் இயங்குகின்றது. இங்கு அர்ப்பணிப்பும், தியாக உணர்வும் சுயநலமற்றது தான். ஆனால் அது சமூக நலன் சார்ந்ததல்ல.          

மக்களை அணிதிரட்டுவதற்கு மாறான தனிமனித உணர்வும் உணர்ச்சியும் சார்ந்த செயல்கள், என்றும், சமூக நலன் சார்ந்ததல்ல.

இந்தவகையில் குண்டு வெடிப்பு அவர்கள் சொந்த நோக்கத்தை கொச்சைப்படுத்தியிருக்கின்றது. மக்கள் இந்த அரசியலில் இருந்து விலகி செல்வதற்கே, இது வழிவகுக்கும். அத்துடன் ஈழமக்களின் அவலத்துக்கு ஆதரவாக அல்ல, எதிரான உணர்வுக்கே இது அரசியல் ரீதியாக வழிகாட்டுகின்றது.

பி.இரயாகரன்
13.06.2010


 

Last Updated on Sunday, 13 June 2010 09:02