Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் "தமிழீழம்", "ஐக்கிய இலங்கை" என்பதே இனவாதம், அது சுயநிர்ணயத்தை மறுக்கின்றது

"தமிழீழம்", "ஐக்கிய இலங்கை" என்பதே இனவாதம், அது சுயநிர்ணயத்தை மறுக்கின்றது

  • PDF

தமிழீழம் என்ற கோசம் பிரிவினையை முன்னிறுத்தி, சிங்கள மக்களுடனான ஐக்கியத்தை நிராகரித்து எழுந்தது. தமிழினவாத வலதுசாரியம், என்றும் ஐக்கியத்தைக் கோரும் சுயநிர்ணயத்தைக் குழிதோண்டிப் புதைத்து வந்தது. சிங்களமக்களை ஐக்கியப்படுத்தும், சுயநிர்ணயத்தை மறுத்தே அது தமிழீழம் என்றது. சுயநிர்ணயமறுப்பே, தமிழீழத்தின் சித்தாந்தமாகவும் நடைமுறையாகவும் மாறியது. இதுவே தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைகளைக் கூட மறுக்கும், வலதுசாரிய தமிழ் பாசிசமாக மாறியது.

தமிழீழம் என்பது தேசத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தையும், தேசியத்தின் அரசியல் அடிப்படைகளையும் கூட மறுத்தது. அதுதான் அதன் தோல்வியாகும். தேசம் என்பதும், தேசியம் என்பதும் முரணற்ற முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த அரசியல் சாரமாகும். அது நிலப்பிரபுத்துவ சமூக பண்பாட்டு பொருளாதாரக் கூறுகளை மறுத்து எழுவதாகும். இதைத்தான் சுயநிர்ணயம், ஒடுக்கப்பட்ட இனத்திடம் கோருகின்றது. இதை மறுக்கும்போது, அது சொந்த இனத்தையே ஒடுக்குகின்றது.

 

இந்த வகையில் தமிழீழம் என்பது, சுயநிர்ணயத்தை மறுத்துதான் எழுந்தது,

 

1.சிங்கள மக்களுடனான ஐக்கியத்தையும், அதற்கான அரசியல் போராட்டத்தையும் நிராகரித்தது. மாறாக சிங்கள மக்களுடன் பிரிவினையை விதைத்து பிளவைத் தூண்டியது.

 

2.ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைகளை பாதுகாத்து, அவர்களையே அது ஓடுக்கியது.

 

இது எம் வரலாறு. இந்த தமிழீழம், தமிழ்மக்களையே காவு கொண்டது. இந்த தமிழீழம் சொந்தமக்களை ஐக்கியப்படுத்தும் சுயநிர்ணய அரசியலை மறுத்தது. சிங்களமக்களை ஐக்கியப்படுத்தாது, சுயநிர்ணயத்தை மறுத்தது. இப்படி சுயநிர்ணய மறுப்பில் இருந்து எழுந்தது தான், தமிழீழக் கோசம். மக்களை பிளந்து, சொந்த மக்களை ஒடுக்கும் வலதுசாரிய தமிழ் இனவாதிகளின் மையக் கோசம் தான், தமிழீழமானது. அது ஐக்கியத்துக்கான ஒரு அரசியல் கோசமல்ல. அதை மறுக்கும் பிளவுவாதக் கோசம்.   

      

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மேலான சகல ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடும் போது, "தமிழீழம்" "ஐக்கிய இலங்கை" என்று, நேரெதிரான அரசியல் அர்த்தத்தில் அது என்றும் இருப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மேலான அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடுவதை மறுக்கும் போதுதான், இது வாதத்துக்குரிய குறிப்பொருளாக மாறுகின்றது. இங்கு ஆளும்வர்க்க நலன்களே, குறிப்பாக செல்வாக்கு வகிக்கின்றது. இதற்கு வெளியில் ஒடுக்கப்பட்ட மக்கள் முன், இது ஒரு விவாதப்பொருளே கிடையாது. இப்படியிருக்க எம்மைச் சுற்றி இது எற்படுத்துவது, ஒடுக்கும் வலதுசாரிய சிந்தனைமுறையின் தொடர்ச்சியான அரசியல் செல்வாக்குத்தான். நாம் இன்னும் மக்களுக்காக, மக்கள் அரசியல் ஊடாக சுயமாக சிந்திக்கவில்லை என்பதையே இது கோடிட்டுக் காட்டுகின்றது.

 

இதனால் இதுவே அரசியல் தர்க்கமாக, விவாதமாக சிலரிடையே மாறிவருகின்றது. இது அரசியல் ரீதியாக, மக்களின் அரசியல் உள்ளடக்கத்தை மறுக்கின்றது. "தமிழீழம்" என்ற தமிழ் இனவாதிகளின் அரசியலும், "ஐக்கிய இலங்கை" என்ற பேரினவாதிகளின் அரசியலும், இதில் இதன் பின்னான சாரப்பொருளாக உள்ளது.

 

இடதுசாரிய அரசியல் தளத்தில் இது மாயையான, மர்மமான சொல் சார்ந்த ஒரு தர்க்கப் பொருளாக மாறிவிடுகின்றது. இவ்விரண்டும் சொல் சார்ந்த அடிப்படையில், இரண்டு நேர் எதிரான இனவாத எல்லைக்குள், அது கொண்டுள்ள பொருளின் அடிப்படை எல்லைக்குள் இவை முன்னிறுத்தப்பட்டு விவாதிக்கப்படுகின்றது.

 

இரண்டும் தவறானது. "தமிழீழம்" எப்படி தமிழினவாதமாக உள்ளதோ, அப்படி "ஐக்கிய இலங்கை" சிங்கள பேரினவாத எல்லைக்குள் காணப்படுகின்றது. வலதுசாரிய சித்தாந்த கண்ணோட்டத்துக்கு வெளியில் இதை முன்னிறுத்தும் சுயநிர்ணயம் தான், மக்கள் தாங்கள் எப்படி வாழ்வது என்பதை துல்லியமாக தீர்மானிக்கின்றது.

 

தமிழ்மக்களின உரிமைக்கான போராட்டம் என்பது, சுயநிர்ணயத்துக்கான போராட்டம் தான். அது தமிழீழத்துக்கான போராட்டமல்ல. தமிழீழம் என்பது வலதுசாரிய தமிழ் இனவாதிகளின் சொந்தக் கோரிக்கையாகும். அது சுயநிர்ணயத்தை என்றும் கோரியதில்லை. மாறாக சுயநிர்ணயத்தை மறுத்து, பதிலாக தமிழீழத்தைக் கோருகின்றது. இதனால்தான் தமிழீழம் தமிழ் மக்களின் உள்ளார்ந்த சமூக முரண்பாடுகளை மறுத்து, அவர்களை தமிழீழத்தின் பால் ஓடுக்குகின்றது. தமிழீழம் மூலம் மக்களின் சுயநிர்ணயத்தை மறுப்பதால்தான், சிங்களமக்களை எதிரியாக முன்னிறுத்தி அவர்களை தூற்றி ஒடுக்க முனைகின்றது.

 

சுயநிர்ணயம் எதைக் கோருகின்றது. இரண்டு இனங்கள் சேர்ந்து வாழ்வதையும், அது முடியாத போது பிரிந்து செல்வதையும் வலியுறுத்துகின்றது. இந்த வகையில் பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் மக்களை ஜக்கியப்படுத்தும் போராட்டம் என்பதே முதன்மையானது. அரசியல் கிளர்ச்சி, பிரச்சாரத்தில் மக்களிடையே பிளவை விதைப்பது, சுயநிர்ணயமல்ல. ஐக்கியத்துக்கான போராட்டம் தான், பிரிந்து செல்வதை ஆளும் பேரினவாதத்துக்கு எதிராக ஜனநாயகப்படுத்தி அதை இயல்பானதாக்குகின்றது.

 

தமிழ் - சிங்கள மக்கள் தமக்கிடையிலான ஐக்கியத்துக்காக நடத்துகின்ற போராட்டம் தான் சுயநிர்ணயத்தின் உள்ளார்ந்த சாரமாகும். சுயநிர்ணயம் என்பது பிரிவினையும், பிளவுவாதமுமல்ல.

 

அதாவது இனவாத அரசியலை எதிர்த்து நடத்துகின்ற போராட்டம் தான் சுயநிர்ணயம். இதை பிரிவினை ஜக்கியம் என்று குறுக்கி, ஒரு எல்லைக்குள் முடக்கி கொச்சைப்படுத்த முடியாது.

 

வலதுசாரிய சித்தாந்தமும், அதன் செல்வாக்கும், ஐக்கியம் - பிரிவினை என்று நேரெதிராக முன்னிறுத்தி, இவ்விரண்டையும் மறுக்கும் இனவாத அரசியலை முன்தள்ளுகின்றது. இதன் வெளிப்படுபொருள் தான் "தமிழீழம் - ஐக்கிய இலங்கை" என்று குறுகிய அர்த்தத்தில் பிரதிபலிக்கின்றது.

 

மக்கள் சுயநிர்ணத்தில் அடிப்படையில் ஐக்கியத்துக்காக போராடுவதை மறுத்து, ஆளும் வர்க்கங்கள் பிரிவினையை முன்னிறுத்துகின்றது. சுயநிர்ணயத்தின் அடிப்படையைத் திரித்து,  அதை நிராகரிக்கின்றது. மக்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதும், பிரிவினையை வலியுறுத்தும் ஆளும் வர்க்க பிளவுவாதத்தை அம்பலப்படுத்தி போராடுவதும் தான், மக்கள் அரசியல்.

 

மக்களிடையே ஐக்கியம் என்பதுதான், இலங்கை தளுவிய போராட்டமாகுவும், இது தமிழ் சிங்களம் என, இரண்டு தரப்புக்கும் பொருந்தும்;. மக்களிடையே பிளவை விதைக்கும் இனவாதம் தான், "தமிழீழமாக" வெளிப்படுகின்றது. மக்களிடையே ஐக்கியம் என்பது, பிளவுவாதத்துக்கு எதிரானது. ஐக்கியத்தைக் கோரும் சுயநிர்ணயத்தை மறுப்பது தான், "தமிழீழமாக" முன்வைக்கும் பிளவுவாத அரசியலாகும்.

 

ஐக்கியம், தமிழீழம் என்ற அரசியல் விவாதத்தின் உள்ளார்ந்த சாரமே, இதற்குள்தான் அடங்கியிருக்கின்றது. ஐக்கியத்துக்கான போராட்டம் மக்களை இணைப்பதையும், தமிழீழம் என்பது மக்களின் ஐக்கியத்தை பிளப்பதையும் அடிப்படையாகக் கொண்டது. இது சிங்கள மக்களை மட்டுமல்ல, தமிழ்மக்களையும் உள்ளடக்கியது தான்.


எம் வரலாறு சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி போராடியதல்ல. மாறாக சுயநிர்ணயத்துக்கு எதிராக, தமிழீழம் என்ற பிளவுவாதத்தை முன்னிறுத்தியது. பேரினவாத ஆளும்வர்க்கம் பிளவுவாதத்தை முன்னிறுத்தி, தேசிய சிறுபான்மை இன மக்களை ஒடுக்கியாண்டது. இதை தங்கள் பிளவுவாத தமிழீழத்துக்கு ஆதரவாக முன்னிறுத்துவது இனவாதமாகும். நாம் ஐக்கியத்துக்காக போராடுவது தான், சுயநிர்ணய அரசியல். இதை மறுப்பது தமிழினவாதத்தின் குறுகிய குதர்க்க வாதமாகும்;. நாங்கள் முன்னின்று ஐக்கியத்துக்காக போராடாத வரை, நாங்களும் கூட தமிழினவாதிகள் தான். அது பேரினவாதத்துக்கு நிகரானது. அதுதான் முஸ்லீம் மக்களை, பேரினவாதம் போல் வேட்டையாடியது.

 

இங்கு தமிழ் வலதுசாரிய இனவாதிகள், பேரினவாத இனவாதிகளுடன் நடத்திய பேரங்களை  ஐக்கியத்துக்கான ஒன்றாக கூறுவது அரசியல் அபத்தம்;. இது ஆளும் வர்க்கங்கள் மக்களிடையே ஐக்கியத்தை சிதைத்தபடி, தமக்கிடையில் செய்யும் குறுகிய பேரங்கள். ஐக்கியத்துகான போராட்டம் என்பது, ஒடுக்கப்பட்ட சிங்களமக்களுடன் சேர்ந்து வாழ ஒடுக்கப்பட்ட தமிழ்மக்கள் நடத்தும் போராட்டம் தான். ஒடுக்கும் வர்க்கங்கள் ஐக்கியத்துக்கான போராட்டத்தை நடத்துவது கிடையாது. அது பிரிவினையையும், பிளவையும்  தான் முன்வைக்கின்றது. அதுதான் அதன் அரசியல் சாரம். 

                   

ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் நடத்தும் ஐக்கியத்துக்கான போராட்டமே, சுயநிர்ணயத்தின் அரசியல் உள்ளடக்கமாகும். இதன் போது பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் சுயநிர்ணயத்தின் அடிப்படையில் தமிழ்மக்கள் பிரிந்து செல்லும் உரிமையை முன்வைப்பது அவர்களின் ஐக்கியத்துக்கான மையக் கோசமாகும். இப்படி பரஸ்பரம் ஈடுபடும்போதுதான்,  அரசை தூக்கியெறியும் ஒன்றுபட்ட ஐக்கியமும், பரஸ்பரம் ஈடுபடாத போது பிரிவினையும் ஏற்படுகின்றது. இந்த பிரிவினை இனவாதமாக இல்லாது இருக்க வேண்டுமென்றால், நாம் ஐக்கியத்துக்காக தொடர்ந்து போராடிபடி இருக்கவேண்டும்.

 

தமிழ்மக்களாகிய நாங்கள் ஐக்கியத்துக்காக சிங்கள ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில், எம் நியாயமான முரணற்ற ஜனநாயக கோரிக்கையை முன்வைத்து போரடியது கிடையாது. தமிழ் இனவாதத்தை எதிர்த்துப் போராடியது கிடையாது. இது தான் எங்கள் வரலாறு. தமிழ் வலதுசாரியம் ஐக்கியத்ததை குழிதோண்டி புதைத்தது. பிளவுவாதத்தை முன்னிறுத்தி வந்தது. தமிழ்தேசியம் சுயநிர்ணயத்தை முன் வைத்து, என்றும் போராடியது கிடையாது. அதைத் திரித்து, ஐக்கியத்தை குழிதோண்டிப் புதைத்தபடி பிளவுவாதத்தை விதைத்தது. இதன் மூலம் தான், தமிழ்மக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

 

பி.இரயாகரன்
01.06.2010

 

Last Updated on Tuesday, 01 June 2010 10:04