Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் தனி மனித சிந்தனையும்… சமூகமும்…!

தனி மனித சிந்தனையும்… சமூகமும்…!

  • PDF

தனி மனிதர்களின் கூட்டு ஒரு சமூகமாகிறது. ஓவ்வொரு சமூகத்தினை சார்ந்த மக்களிடமும் மொழி, கலை கலாச்சாரம், பண்பாடு… போன்றவை மாறுபட்டு காணப்பட்டாலும் பாதிப்புகள் ஒன்றாகத்தான் இருக்கிறது. நாங்கள் சொந்த நாடற்ற சிறுபாண்மையினம் என்று பார்க்கும் போது எங்களுடைய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எங்களைப் போன்று உரிமைக்காக போராடுகின்ற சிறுபாண்மையின மக்கள் பலநாடுகளில் இருக்கின்றார்கள். இந்த மக்களும் இன்னொரு அரச அதிகாரத்தினால் அடக்கி ஒடுக்கப்படுபவர்களே. ஆனால் அதே நேரத்தில் சொந்த நாட்டிலே தனது சொந்த அரசின் கீழ் வாழும் மக்களின் நாளாந்த வாழ்க்கையினைப் பார்க்கும் போது, இரண்டு மக்களினதும் பிரச்சனைகள் சொந்தநாடு, சொந்த அரசு என்ற ஒன்றைத் தவிர மற்ற எல்லா நிலைகளிலும் ஒன்றுபட்டே காணப்படுகிறது. அரச அதிகாரத்தினால் மக்கள் பல வழிகளில் சுரண்டப்படுவதும் அடக்கி ஒடுக்கப்படுவதும் எல்லா மக்களுக்கும் பொதுவானதாகவே காணப்படுகிறது. இந்த நிலைமையினைப் பார்க்கும் போது, ஒரு மனிதனுக்கு சொந்த நாடு மட்டும் அந்த மனிதனுடைய பிரச்சனைகளைத் தீர்த்துவிடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதனுடைய வாழ்க்கையினை முடிவு செய்வது அந்த நாட்டு அரசியல். இந்த அரச அதிகாரத்திலே தனிமனிதனுடைய சிந்தனையும் முடிவும் இங்கு முக்கிய பங்கினை வகிக்கின்றது.


சாதாரண நடைமுறை வாழ்க்கையினை எடுத்து நோக்கினால் தனி மனிதனுடைய தவறான சிந்தனையும் செயற்பாடும் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் ஏதோ ஒருவகையில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. உதாரணமாக களவு, கொலை, கற்பழிப்பு, குடும்பப்பிரிவு… போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இங்கு ஒரு தனிமனிதன் அல்லது குடும்பமோ… பெண்கள், குழந்தைகளோ பாதிக்கப்படுகிறார்கள். இதனை நாங்கள் ஒருவனுடைய தனிப்பட்ட பிரச்சனை என்று ஓரம் தள்ளி வைத்துவிடுகிறோம்.


இதுவே ஒரு அரசியல்வாதியோ ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவனே தவறு செய்யும் போது கூட்டு மொத்த சமூகத்தினையோ, நாட்டினையோ, மக்களையோ பாதிப்புக்குள்ளாக்குகிறது. ஆனால் இங்கும் நாங்கள் மௌனமாக இருக்கிறோம் அல்லது நழுவல் போக்கினால் பின்வாங்கிக் கொள்கிறோம், இல்லாவிடின் சுயலாபத்திற்காக அவர்களின் வால்பிடிகளாக மாறி அவர்களுடைய தவறுகளை நியாயப்படுத்த முயல்கிறோம்.


இந்த தவறான அரசியல்வாதிகளை, தவறான தலைமைத்துவத்தை வளர்த்து தவறானவர்கள் கையில் அதிகாரத்தினை வழங்கியவர்கள் நாங்கள் தான், எங்கள் அறியாமை தான். கடந்தகால உலக அரசியலினைப் பார்க்கும் போது கிட்லர் அவனது தனிப்பட்ட சிந்தனையினால் உலகையே அழிவுப் பாதைக்கிட்டுச் செல்லும் பாசிச சர்வாதிகாரியானான். கிட்லரின் அதே தன்மை கொண்ட நவீன அரசியல்வாதி மகிந்தாவின் தனிமனித ‘மகிந்தசிந்தனை” பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை அழித்தொழித்து தமிழினத்திற்கு பேரழிவினை ஏற்படுத்தி இன்று மொத்த நாட்டையும் சீரளிக்கிறது.


இந்த மக்கள் அழிவு அரசியல் கிட்லரோடும், மகிந்தாவோடும் முடிந்துவிடப் போவதில்லை. நாங்கள் விழிப்படையும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். எங்களோடு இருக்கும் கிட்லர்களையும், மகிந்தாக்களையும் நாங்கள் இனங் கண்டு கொள்ள வேண்டும். எல்லாருமே அரசியலில் கால் வைக்கும் போது ஆரம்பத்தில் சாதாரண அப்பாவி அரசியல்வாதிகளாகத் தான் இருப்பார்கள். மக்கள் நலன் சார்ந்திராத இவர்களது தவறான அரசியற் போக்கு, பதவி, புகழ், அதிகாரம், சுயநலம் இவர்களை சர்வாதிகாரிகளாக பாசிஸ்டுகளாக மாற்றிவிடுகிறது. இதுவே காலப் போக்கில் அப்பாவி மக்களுக்கு பேரழிவினை ஏற்படுத்துகிறது.


எங்கள் ஓவ்வொரு தனிமனிதனுடைய பொறுப்பற்ற தன்மையும், அறியாமையும், தவறான சிந்தனையும் தான் இப்படியான பாசிஸிட்டுகள், சமூக விரோதிகள் உருவாகக் காரணமாக அமைகிறது.


கடந்தகால புலிகளின் போராட்டத்தினைப் பார்க்கையில் அவர்களோடு தனிமனித சிந்தனையும் தன்னிச்சையான முடிவுகளும், செயற்பாடுகளுமே மேலோங்கியிருந்தது. மக்கள் நலன்சார்ந்த பொதுவேலைத் திட்டமோ பரந்தளவிலான திட்டமிடலோ இருக்கவில்லை. பணம் சேகரித்தல், இராணுவ தாக்குதல்கள் அதற்காக விருப்பத்திற்கு மாறாக சிறுவர் சிறுமிகளைப் படையிலே சேர்த்தல் போன்று குறுகிய திட்டமிடல் தான் புலிகளோடிருந்தது. இந்த தவறான போக்கு இயக்கத்திற்குள் தனிமனித ஆதிக்கத்தினையும் அதிகாரத்தினையும் வளர்த்ததோடு இயக்கதிற்குள் பிளவுகளும், விலகல்களும் வரக்காரணமாயிற்று. இன்று அப்பாவிப் போராளிகள் மாவீரர்களது எதிர்பார்ப்புகள் எல்லாம் தவிடுபொடியாகி, இன்று தமிழ் மக்களது அன்றாட வாழ்க்கை கிள்ளுக் கீரையாக துரோகக்கும்பல்களின் அதிகாரப் பிடிக்கு கைமாற்றப்பட்டுள்ளது. அந்த மக்களின் இயலாமையினை அங்குள்ள அரசியல்வாதிகள் தங்கள் நலன்களுக்காக பயன்படுத்துகிறார்கள். தமிழ் மக்களது போராட்ட உணர்வினை வேறறுப்பதற்கான பல யுக்திகளும் நடவடிக்கைகளும் அரசினால் மேற்கொள்ளப்படுகிறது. இளம் சமூகத்தினரின் சிந்தனையும் செயல்களும் தவறான பாதைக்கு திசை திருப்பப்பட்டு அவர்களுடைய கல்வி மழுங்கடிக்கப்பட்டு இளைஞர்களின் எதிர்காலத்தினை சீரழிவிற்கு கொண்டு செல்கிறது.


ஓவ்வொரு தனிமனிதனுக்கும் சமூகப் பொறுப்பு உள்ளது. நாம் நமது குடும்பம் என்று மட்டும் இருந்துவிடாமல் இந்த அப்பாவித் தமிழ்மக்களின் வாழ்க்கை, எமது இளம் சந்ததியினரது எதிர்காலம் வளம்பெற சரியான அரசியலினை இனம் கண்டு அதன் அடிப்படையில் செயற்பட வேண்டிய கடமை ஒவ்வொரு தனிமனிதர்களாகிய எமக்கு உள்ளது. எங்கள் மக்களுக்காக நாம் ஒன்றிணைந்து எங்களால் முடிந்த வகையில் பங்காற்றுவோம்.

 

http://www.psminaiyam.com/?p=6074

Last Updated on Sunday, 30 May 2010 17:08