Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் நக்சல்பாரி புரட்சி நாயகன் தோழர் கனுசன்யாலுக்கு வீரவணக்கம்!

நக்சல்பாரி புரட்சி நாயகன் தோழர் கனுசன்யாலுக்கு வீரவணக்கம்!

  • PDF

மாபெரும் நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியைக் களத்தில் நின்று தலைமையேற்று வழிநடத்தியவரும் கனு சன்யால் என்று பிரபலமாக அறியப்பட்டவரும் கனுபாபு என்று அன்புடனும் புரட்சிகர மரியாதையுடனும் அழைக்கப்பட்டவருமான கிருஷ்ணகுமார் சன்யால் கடந்த மார்ச் 23ஆம் நாள் நக்சல்பாரி என்று சிறு நகருக்கு அருகே உள்ள ஹட்டிகிசா கிராமத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்செய்தி கேட்டு நெஞ்சில் வலியும் வேதனையும் அடையும் இலட்சக்கணக்கான நக்சல்பாரி புரட்சியாளர்களோடு நாமும் இணைந்து கனுபாபுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறோம்.

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க புரட்சியைத் தொடங்கி வைத்த கனுபாபு மண் சுவரும் ஓலைக் கூரையும் கொண்ட சிறு குடிசையிலேயே வாழ்ந்து மடிந்தார். ""அங்கே தரையிலே கிழிந்த பாயும் சில மக்கிய போர்வைத் துண்டுகளுமே கிடந்தன சில புத்தகங்களும் துணிகளும் பாத்திரங்களுமே அவருக்கென இருந்தன. அந்த மண் சுவரில் மார்க்ஸ்எங்கெல்ஸ் லெனின் ஸ்டாலின் மாவோ ஆகியோரின் கருப்புவெள்ளை புகைப்படங்களின்சட்டகங்களே தொங்கின'' என்று அவரது மரணத்தை அறிவித்த பத்திரிக்கையாளர் குறிப்பிடுகிறார். தனது வாழ்க்கை முழுவதையும் மார்க்சியம் லெனனியம் மாவோ சிந்தனை என்ற சித்தாந்தத்துக்கு அர்ப்பணித்த அம்மாபெரும் நக்சல்பாரி நாயகனின் எளிய வாழ்க்கையை அது சித்தரிக்கிறது.

 

மூளையில் இரத்தக் குழாய் வெடித்து இரத்தக் கசிவு ஏற்பட்டதால் கடந்த ஓராண்டாகவேதான் வாழ்ந்த குடிசைக்கு வெளியேகூட நடமாட முடியாமல் முடங்கிக் கிடந்தார். இருந்தபோதும் கல்கத்தா கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு மறுத்தார். இந்த அரசுக்கு எதிராகப் போராடும் தான் அதனிடம் மருத்துவ உதவி பெறுவது கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ""நான் ஒரு காலத்தில் மக்கள் ஆதரவு பெற்ற பிரபலமானவனாக இருந்தேன். இப்போது மக்கள் ஆதரவின்றி உள்ளேன். நோயுற்றும் உள்ளேன். அதனால் இனி மேலும் மக்களைத் திரட்டி அமைப்பாக்க முடியாமல் போயுள்ளேன்'' என்று தனது இறுதிப் பேட்டியில் வேதனையை வெளிப்படுத்தினார் என்று அறிகிறோம். அவரது தற்கொலைக்குப் பலரும் பலவாறு கற்பிதங்களைச் செய்தபோதும் குறிப்பாக இதை வைத்து எதிரிகள் நக்சல்பாரி இயக்கத்தை இழிவுபடுத்திய போதும் இறுதிமூச்சு வரை போர்க்குணமிக்கவராகவே வாழ்ந்திருக்கிறார். எதிரிகள் பிரச்சாரம் செய்வதைப் போல புரட்சியின் மீது அவநம்பிக்கையுற்று கனுபாபு தற்கொலை செய்து கொள்ளவில்லை. நோயின் வேதனை வலி காரணமாகவே அவ்வாறு செய்துள்ளார்.

 

நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியை கனு சன்யாலும் ஜங்கல் சந்தாலும் தலைமையேற்று வழிநடத்தினர். மரபுவழி ஆயுதங்களை ஏந்திய குத்தகை விவசாயிகள் உள்ளூர் நிலப்பிரபுக்களுக்கு எதிராக மாபெரும் எழுச்சி நடத்தி நிலங்களைக் கைப்பற்றினர். துரோகியும் போலீசு மந்திரியுமான ஜோதிபாசு உத்திரவின்படி மே 23 அன்று நக்சல்பாரி கிராமத்தின் மீது போலீசு படையெடுத்தது. ஆயுத பாணிகளான உழவர்கள் எதிர்த் தாக்குதல் தொடுத்து ஒரு போலீசு அதிகாரியைக் கொன்றனர். மிருகத்தனமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட போலீசு ஆறு பெண்கள் இரண்டு குழந்தைகள் உட்பட 10 விவசாயிகளைச் சுட்டுக் கொன்றது. அப்போதைக்கு அப்பேரெழுச்சியை எதிரிகள் ஒடுக்கிவிட்டபோதும் அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் பலபத்து நக்சல்பாரி பாணியிலான ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் வெடித்தன. கனுபாபு 1969ஆம் ஆண்டு அதாவது லெனினுடைய பிறந்த நூற்றாண்டு கல்கத்தா தியாகிகள் மைதானத்தில் நடந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மேநாள் பேரணிக்குத் தலைமையேற்று இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட்) கட்சி நிறுவப்பட்டதை முறைப்படி பிரகடனப்படுத்தினார். அதன்பிறகு பல ஆயிரம் நக்சல்பாரிகளைச் சிறை சித்திரவதை படுகொலைகள் மூலம் எதிரிகள் அடக்கி ஒடுக்கியபோதும் எவ்வளவோ இழப்புகளைச் சந்தித்த போதும் புரட்சிப்பேரியக்கமாக அது வளர்ந்து நிற்கிறது.

நக்சல்பாரி உழவர் பேரெழுச்சி அனுபவத்தை முதல் தெராய் அறிக்கையில் தொகுத்த கனுபாபு ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். சாரு மஜும்தாரின் இடது திசைவிலகலுக்குப் பிறகு இரண்டாவது தெராய் அறிக்கையில் நக்சல்பாரி பேரெழுச்சியை மீளாய்வு செய்து அத்தவறுகளை நிராகரித்தார். சாருவின் இடது திசை விலகல் காரணமாக இயக்கம் பின்னடைவு பிளவுக்குள்ளானபோது 1970களின் ஆரம்பத்தில் சிறையிலிருந்த பிற ஐந்து முக்கிய தோழர்களோடு இணைந்து கட்சியின் தவறுகளைக் களைந்து ஐக்கியப்பட்டுப் புரட்சியை முன்னெடுக்கும்படி அறைகூவல் விட்டார்.

ஏழாண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து 1970களின் இறுதியில் விடுதலையான கனுபாபு பிளவுபட்டிருந்த நக்சல்பாரி குழுக்களை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கம்யூனிசப் புரட்சியாளர்களின் அமைப்புக் கமிட்டியை அமைத்தார். ஐக்கியம் பிளவு மீண்டும் ஐக்கியம் என்று சில அமைப்பு முயற்சிகளில் ஈடுபட்டார். இத்தகைய முயற்சிகளினூடாக வலது விலகல் தவறையும் செய்தார். தனது சகாவான ஜங்கல் சந்தாலைத் தேர்தலில் நிறுத்தித் தோல்வியும் அடைந்தார். இருந்தபோதும் உள்ளூர் பிரச்சினைகளில் மக்களைத் திரட்டுவதை அவர் கைவிடவில்லை. குறிப்பாக சிலிகுரி ஜல்குரி வட்டாரத்தில் விவசாயிகளையும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும் அமைப்பாகி சில இயக்கங்களை நடத்தினார். ஏகாதிபத்திய நலன்களுக்காக மேற்கு வங்க இடதுசாரி முன்னணி அரசு பின்பற்றிய தொழில்மயமாக்கக் கொள்கைகளை குறிப்பாக சிங்கூர் நந்திகிராம நிலப் பறிப்புகளுக்கு எதிராகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். சாருவின் இடது திசைவிலகலை நிராகரித்த அதேசமயம் கனுசன்யால் மாற்று மக்கள் திரள் புரட்சிகர வழியை வகுப்பதில் வெற்றி பெறவில்லை என்றாலும் கனுபாபுவை வலது சந்தர்ப்பவாத சகதிக்குள் வீழ்த்த சில போலி புரட்சியாளர்கள் செய்த முயற்சியை இறுதிவரை எதிர்த்தார் என்பதுதான் உண்மை.

 

- ஆசிரியர் குழு.