Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் "மே 17ம் திகதியை துக்கதினம்" என்கின்றது கூட்டமைப்பு. அதை நிராகரியுங்கள்?

"மே 17ம் திகதியை துக்கதினம்" என்கின்றது கூட்டமைப்பு. அதை நிராகரியுங்கள்?

  • PDF

தமிழ்மக்கள் பலி அரசியலில் இருந்து, பலி எடுத்தவர்களிடமிருந்து தப்பிய நாளை, எப்படி தமிழ் மக்களின் துக்கதினமாக அறிவிக்க முடியும். அன்று யாருக்குத் துக்கம்? மக்களுக்கா, புலிக்கா? தங்கள் வலதுசாரி புலித் தோழர்களுக்காக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களின் பெயரால் மூக்கால் சிந்துகின்றது. மே 17, இல் என்ன நடந்தது? தமிழ்மக்களை தம் பங்குக்கு கொன்று வந்து புலிகள் சரணடைந்து இருந்த நிலையில், அவர்கள் கொல்லப்பட்ட நாள். தமிழ்மக்கள் சுதந்திரமாக வெளியேறிய நாள். இது தமிழ்மக்களின் துக்க நாளல்ல, புலியின் துக்க நாள்.

மே 17 அன்று என்ன நடந்தது? அன்று அதிகாலையும், 16 ம் திகதி பின் இரவும் தான் புலிகள் முற்றாக (தலைவர் உட்பட) சரணடைந்தனர். இதன் பின் அங்கு ஒரு யுத்தம் நடக்கவில்லை. இதன் பின்பும் யுத்தம் நடந்ததாக, தங்கள் தொடர்பில் புலிகள் இருந்;ததாக, இதன் பின்னான சூசையின் பேட்டி என அனைத்தும் திட்டமிட்டு திசைதிருப்ப புலிகள் நடத்திய நாடகங்கள்.  17ம் திகதி அதிகாலையும், 16ம் திகதி பின் இரவும் பாதுகாப்பாக புலிகள் தாங்கள் தப்பிச் செல்ல சரணடைந்தனர். இதன்பின் அவர்கள் கொல்லப்பட்ட நிகழ்வை அடுத்து, புலம்பெயர் சமூகத்தை ஏய்த்துப் பிழைத்த கூட்டம் தொடர்ந்து புலத்து மக்களைப் போராட வைக்க, 18ம் திகதிவரை புலத்துப் புலிகள் யுத்தத்தை கற்பனையில் நடத்தினர். இந்தப் புரட்டுப் பற்றி நாம், தனியாக விரிவாக பின் பார்க்கலாம்.  

 

மே 17 அன்று புலிகளின் பிடியில் இருந்து, புலிகள் சரணடைந்து இருந்த நிலையில் பொதுமக்கள் பெருமளவில் சுதந்திரமாக தப்பி வெளியேறிய நாள். அன்றுதான் புலிகளின் தளபதிகள், அவர்கள் குடும்பங்கள் தனியாக பாதுகாப்பாக வெளியேறும் வண்ணம்  சரணடைந்து இருந்தனர். இந்த நிலையில், கும்பலாக படுகொலை செய்யப்பட்டனர்.  இவ்விரண்டும் ஒரே நாளில் நடக்கின்றது. மக்கள் பலியெடுத்தவர்களிடமிருந்தும் பலி கொடுத்தவர்களிடமிருந்தும் தப்பிய நாளை, எப்படி தமிழ்மக்களின் துக்கதினமாக அறிவிக்க முடியும். 

 

அன்று புலிகள் சரணடைந்திருந்ததால், அப்பாவி மக்கள் புலிகளின் பலியீட்டு அரசியலில் இருந்து தப்பி மீண்ட நாள். அதுவரை காலமும் புலிகள் மக்களைப் பலியிட்டனர். இந்த பலியிடுவதை மறுத்து தப்பியவர்களை, புலிகள் கொன்றனர். இவை எல்லாம் 16 ம் திகதி பின்னிரவு, 17ம் திகதி அதிகாலையுடன் முடிவுக்கு வந்தது. 

 

இந்த நாள் எப்படி, எந்த அடிப்படையில் தமிழ்மக்களின் துக்கநாளாகும். இதுவோ புலிகளின் துக்கநாள். தமிழினவாத வலதுசாரிகளின் துக்கநாள். புலிகளின் எடுபிடிகளாக இருந்த கூட்டமைப்பின், அரசியலுக்கு துக்கநாள்.

 

புலிகள் தங்கள் துரோகத்தையும், காட்டிக்கொடுப்பையும், சரணடைவையும் மூடிமறைக்க, இந்த நாளை 18ம் திகதியாக்கினர். புலத்தில் 18ம் திகதியை முன்னிறுத்தி நகர்வுகள் நடக்கின்றது. வேடிக்கை என்னவென்றால் 16ம் திகதி இரவை 17ம் திகதி இரவாக்கி, 18ம் திகதியை எல்லாம் முடிந்த நாட்களாக காட்டுகின்றனர். இது தங்கள் துரோகத்தையும் சரணடைவு அரசியலையும் மூடிமறைக்கவும், அரசு தரப்பு தன் போர்க்குற்றத்தை மூடிமறைக்கவும், திகதிகளில் குளறுபடி திருகுதாளம் செய்துள்ளனர்.

 

தம் வரலாற்றுக் கூறுகளைத் திரிக்க, பல ஆவணங்களை இல்லாதாக்கி வருகின்றனர். 16ம் திகதி கே.பி என்று கூறும் குமரன் பத்மநாதன் ஆயுதத்தை கைவிட்டு சரணடைவதான தெரிவித்த ஒலி வடிவ செய்தியையும், அடுத்தநாள் காலை வெளியாகிய அவரின் அறிக்கையையும், இன்று புலிகள் தங்கள் ஆவணங்களில் இருந்து மெதுவாக அகற்றியுள்ளனர். இதன் மூலம் தான், 17ம், 18ம் திகதி என்ற புதிய திரிபு புகுத்தப்பட்டது. 

 

16ம் திகதி பின்னிரவுக்கு பின், 17ம் திகதி அதிகாலையின் பின், புலிகளுடன் சம்பந்தப்படாத பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படவில்லை. தம்மை தனிமைப்படுத்தி, பாதுகாப்பாக வெளியேறுவதாக நம்பிய புலித்தலைவர்களும், புலிக் குடும்பத்தினரும், புலி விசுவாசிகளும், வகைதொகையின்றி  17ம் திகதி கொல்லப்பட்டனர். இது ஒரு போர்க்குற்றம். இப்படிக் கொன்றதை எதிர்ப்பது வேறு, ஆனால் இந்த நாள் தமிழ்மக்களின் துக்க நாளல்ல.

 

இப்படியிருக்க அன்றைய நாளை " மே 17 ஆம் திகதியை துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைக் கோரியுள்ளது. உச்சக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டமை, இலட்சக்கணக்கானோர் பல்வேறு பாரிய பாதிப்புகளுடன் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டமை போன்றவற்றைச் சுட்டிக்காட்டியே இத் துக்கதின அனுஸ்டிப்பைக் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு." கோருகின்றது. புலிகள் தம் சரணடைவு மூலம், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்த நிலையில், அன்று "உச்சக்கட்ட" போர் நடந்ததாக கூறுவது திரிபாகும். இதையே புலிகளும் சொல்லுகின்றனர்.

 

மே 16 வரை தான் யுத்தம் நடந்தது. அது வரைதான் பாரிய மக்கள் இழப்புகள் நடந்தது. மக்களை பணயம் வைத்து, அவர்களை புலிகள் பலிகொடுத்தனர். தமக்காக பலியெடுத்தனர். இதை மீறிய போது, அவர்களே பலியெடுத்தனர். இது வரலாறு. இப்படியிருக்க, புலிகளின் சரணடைவையடுத்து, புலிகள் இன்றி அங்கிருந்து மக்கள் மீண்டு வெளியேறிய நாளை, பெருமளவிலான படுகொலைகள் முடிவுக்கு வந்த நாளை, "துக்கதினம்" என்பவன் மக்களைப் படுகொலை செய்த புலியரசியலை மீண்டும் செய்கின்றனர் என்பது வெளிப்படையான உண்மை. 

 

17 ம் திகதி தம் மீதான துப்பாக்கி குறிகள் இன்றி, அங்கிருந்து மக்கள் தப்பி வெளியேறுகின்றனர். அன்று இந்த வெளியேற்றம், அடுத்த வாழ்வுக்கான மக்களின் தெரிவு.

 

இதற்கு முன்னும் பேரினவாதம் நடத்திய இனவழிப்பு, யுத்தபூமியில் இருந்து மக்களை வெளியேற்றியது ஒருபுறம் நிகழ, புலிகள் மக்களை பலாத்காரமாக தம்முடன் வெறியேற்றினர். குறிப்பாக யுத்தம் நடவாத பல பிரேதேசத்தில் இருந்து மக்களை தம்முடன் வெளியேற்றினர். பேரினவாத இனவழிப்பு ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற, புலிகள் நூற்றுக்கணக்கில் அதைச் செய்தனர். பேரினவாதம் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்களைக் கொல்ல, புலிகள் நூற்றுக்கணக்கில் அதைச் செய்தனர்.

 

பேரினவாதம் ஆயிரக்கணக்கில் செய்யும் வண்ணம், புலிகளின் அரசியல் இருந்தது. அதாவது மக்களின் அழிவை ஊக்குவித்து அப் பாதிப்பைக் காட்டி நிற்பதுதான், புலிகளின் அரசியலாக அன்றும் என்றும் இருந்தது. மக்களின் சொல்லொணா அவலமும் துயரமும் கொண்ட காட்சிகள் தான், புலிகளின் மிதப்பு அரசியலாக பிரச்சாரமாக இருந்தது. இதை எதிரியைக் கொண்டு செய்விப்பது தான், புலியின் மூலோபாய அரசியல் நடைமுறையாக இருந்தது. இதில் இருந்து மீண்ட 17ம் திகதி, எப்படி தமிழ்மக்களின் துக்கதினம்? இதை செய்து அரசியல் பிழைப்பு நடத்திய வலதுசாரிகளுக்கு தான் இது துக்கநாள்.

 

மக்களை பலிகொடுத்து சர்வதேச தலையீடு மூலம் தமிழீழம் என்பது முடிவுக்கு வந்த நாள். இது ஒரு உண்மை. எல்லாம் முடிந்தபின், புலிகளின் மீது பேரினவாதம் தன் கணக்கைத் தீர்த்த  நாள். இதைத் தான் கூட்டமைப்பு துக்கதினம் என்கின்றது. புலத்துப் புலி மாபியாக்கள் தங்கள் துரோகத்தையும், காட்டிக்கொடுப்பையும், சரணடைவையும் மூடிமறைக்க, மே 18ம் திகதியை முன்னிறுத்துகின்றது.

 

இப்படி ஒருபுறம் இருக்க, பேரினவாதம் இந்தத் திகதிகளை தன் வெற்றிநாளாக பிரகடனம் செய்கின்றது. அதனால் அதற்கு எதிரானது, என்ற வகையில் தமிழ் மக்களின் பொது துக்க நாளல்ல. புலிகளின,; வலதுசாரிகளின் அரசியலுக்கு துக்கநாள். ஆனால் தமிழ்மக்கள் கொலைக்களத்தில் இருந்து மீண்ட நாள்.

 

துக்கம், மகிழ்ச்சி இரண்டையும் அன்று உணர்ந்தனர். தாங்கள் பலியெடுப்பு, பலிகொடுப்பில் இருந்து தப்பிவிட்டதை உணர்ந்தனர். இதில் இருந்து மீண்ட சந்தோசம், அதேநேரம் புதிய துன்பத்துடன் புதிய சிறைக்குள் அடைக்கப்பட்ட நாள். உணர்ச்சிகள் இழந்து பரிதவித்த நாள். இதுவா தமிழ்மக்களின் துக்கநாள்?

 

பி.இரயாகரன்
10.05.2010        

 

Last Updated on Monday, 10 May 2010 10:58