Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் வடக்குகிழக்கில் இராணுவ ஆட்சி, புலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாகின்றது

வடக்குகிழக்கில் இராணுவ ஆட்சி, புலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாகின்றது

  • PDF

இனப் பிரச்சனையைத் தீர்த்தால் என்ன நடக்கும்? வடக்கு கிழக்கில் இராணுவ முகாம் அவசியமற்றதாகிவிடும். நாடுகடந்த தமிழீழம் என்ற புல்லுருவிக் கூட்டமும் உருவாகாது. பேரினவாதம் இனப்பிரச்சனையை தீர்க்க மறுப்பதுதான், இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக தொடருகின்றது. இவ் இரண்டுமே மக்களுக்கு எதிரானது. 

இனப் பிரச்சனைத் தீர்க்காது, வடக்குகிழக்கு மக்களை வெல்ல முடியாது. அவர்களை அடக்கியாள தொடர்ந்து இராணுவத்தையே நிறுத்தி, இராணுவத் தீர்வையே நாடமுடியும். இன்று நடப்பது இதுதான். இதைத்தான் இன்று இலங்கை பேரினவாத அரசு செய்து வருகின்றது. எந்த இராணுவம் பல பத்தாயிரம் தமிழ்மக்களை கடந்தகாலத்தில் கொன்று குவித்ததோ, அதற்கு அந்த மண்ணில் நினைவுச் சின்னங்களை நிறுவுகின்றது. தமிழ்மக்களின் உரிமைகளை மறுத்து, அவர்களை அடக்கியொடுக்க நடத்திய ஆக்கிரமிப்பின் மூலமான தன் இனவாத வெற்றியை பறைசாற்றும் வண்ணம் தன்னை நிறுவுகின்றது. இதன் பின்னணியில் புலிகளின் மாவீரர் நினைவு மையங்களை தகர்த்து, அதை சிதைத்து அழிக்கின்றது. இவை எவையும், தமிழ்மக்களை வெற்றி கொள்ளவல்ல, அவர்களை தமக்கு அடங்கிப் போ என்று கூறி நிற்கின்றது.

 

இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப்படாத வரை, தமிழ் மக்களை அடக்கியாளத்தான் முடியும்;. இதுதான் அரசியல் விதி. இதைத்தான் இன்று இலங்கை அரசு செய்கின்றது. இதனடிப்படையில் வடக்கு கிழக்கு எங்கும் நிரந்தர இராணுவ முகாங்களாக மாற, புலத்தில் அது நாடுகடந்த தமிழீழ அரசாக வெளிப்படுகின்றது. இதனடிப்படையில் பல முனைகளில், பல சமூகப் பிளவுகள் ஆழமாகிவருகின்றது.

 

இனப்பிரச்சனையைத் தீர்க்க மறுத்து உருவாகும், சிங்கள தமிழ் இனவாத அரசியல் விளைவு இது. இதைத்தான் வடக்கு கிழக்கு மக்கள், தங்கள் வாக்களிப்பு மூலம் அரசை அம்பலமாக்கினர்.   

 

இனங்களை ஓடுக்கி இனப்பிரச்சனையை உருவாக்கிய பேரினவாதம், சிறுபான்மை இனங்களுக்கு எந்த உரிமையையும் வழங்க மறுத்து வந்தது. இனப் பிரச்சனையை தொடர்ச்சியாக தீர்க்க மறுத்த பேரினவாதத்தின் விளைவுதான், ஆயுதப் போராட்டமாக மாறியது. ஆயுதப் போராட்டமாக மாறிய பின், அதை "பயங்கரவாத பிரச்சனையாக" பேரினவாதம் கூறினர். "பயங்கரவாத பிரச்சனையை" தீர்த்தபின்தான், தீர்வு என்றார்கள்.

 

இன்று அந்த தீர்வு தான் என்ன? வடக்கு கிழக்கு மக்களை அடக்கியாள, இராணுவ முகாங்களாக மாறுகின்றனர். இராணுவத்தைக் கொண்டு மக்களை அடக்கியாள்வதைத் தவிர, மாற்றுவழியில் பேரினவாதம் எதையும் தேர்ந்தெடுக்கவில்லை. 

 

புலிகள் தங்கள் அதிகாரத்தை நிறுவ அமைத்த நினைவுச் சின்னங்களை அழித்து, அதனிடத்தில் தங்கள் அதிகாரத்தை வெளிப்படுத்த இராணுவ நினைவுச் சின்னங்களை நிறுவுகின்றது அரசு. இதன் மூலம் எப்படித்தான் தமிழ்மக்களை வெல்ல முடியும்.

 

இலங்கை இனப்பிரச்சனை வரலாற்றில் சிறிய புத்தர் சிலையை வைத்து, பின் அதை சுற்றி உள்ள காணிகளை அபகரித்து, பாரிய புத்தர் சிலையை நிறுவுவது கூட கடந்தகால பேரினவாத நடைமுறையாகும். இன்றும், தொடர்ந்து தமிழ் பகுதிகளில் பௌத்த சிங்கள ஆதிக்க குறியீடுகளை அரசு அமைத்து வருகின்றது. இது இனவடிப்படையிலான அரசு எதிர்ப்பு இனவாத அரசியலை, சிறுபான்மை இனங்கள் மத்தியில் தொடர்ச்சியாக உற்பத்தி செய்கின்றது.

 

இன்று இதன் பின்னணியில், மகிந்த குடும்ப சர்வாதிகாரம் இதை மேலும் நுட்பமாக கூர்மையாக்குகின்றது. இலங்கை மக்களை இராணுவம் மூலமும், ஒரு சிறு இரகசிய சதிக் குழுவின் மூலமும் அடக்கியாள முனைகின்றது.

 

அது இனப் பிரச்னைக்கான அனைத்து அடிப்படையான கடந்தகால வரலாற்றையும் மறுத்துரைத்து வருகின்றது. அது அனைத்தையும் புலிப் பிரச்சனையாகவே, காட்டி அணுகுகின்றது. தொடர்ந்து இராணுவ வடிவங்கள் மூலம், இனத்தை அடக்கியாள முனைகின்றது.

   

இதுதான் வடக்கு கிழக்கு மக்களை சுற்றி நடக்கும், புதிய பேரினவாத விஸ்தரிப்பாகும். 

 

பி.இரயாகரன்
09.05.2010

   

 

Last Updated on Sunday, 09 May 2010 12:26