Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் புதுப் பாராளுமன்றத்தின் “நம்பிக்கை நட்சத்திரங்கள்” என்னதான் சொல்கின்றார்கள்

புதுப் பாராளுமன்றத்தின் “நம்பிக்கை நட்சத்திரங்கள்” என்னதான் சொல்கின்றார்கள்

  • PDF

கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற தேர்தல் திருவிழாவின் மூலம்  “புடம்  போட்டு  எடுக்கப்பட்ட இலங்கை மக்கள்”   ஏப்ரல் 8-ல் தங்களுக்குப் பிடித்த ,  தங்கள் அபிமான நட்சத்திரங்களை புதுப் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளார்கள்.  இதன் மூலம் இலங்கை மக்களின் அடுத்த ஐந்தாண்டிற்கான அரசியல் பணி முடிவுற்றுள்ளது. 

 

இனி மேல் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரும், அவரின் குடும்ப நிறுவனமுமே இலங்கை அரசியலின் சகலதையும் தீர்மானிக்கப் போகின்றது.  மக்கள் புள்ளடியிட்டு தேர்ந்தெடுத்த 196-நட்சத்திரங்கள் போதாதென்று,  தேர்ந்தெடுத்ததுகள் தங்கள் துணைக்கு இன்னொரு 47பேரை (தேசியப்பட்டியல்) தெரிவு செய்துள்ளனர்.


அத்துடன் மகிந்த மன்னன் அதி முக்கியமான நான்கு மந்திரிப் பதவிகளை தான் எடுத்து வைத்துக் கொண்டு, தனக்குச் சேவகம் செய்ய,  தஞ்சாவூர்ப் பொம்மைகள் போன்ற  (இதுகள் எதற்கும் தலையாட்டும்)  37-முழுசும், 39-துணையும் கொண்ட மந்திரி சபையையும் ஏற்படுத்தியுள்ளார்.  இதற்குள் தான் டக்கிளசும்,  கருணாவும் முழு-அரை மந்திரிகள் ஆகியுள்ளனர்.

புதுப்பாராளுமன்றப் புகுவிழா

 

22-ந் திகதி காலை நடைபெற்ற  புதுப் பாராளுமன்றப்  புகு விழாவில்,  புதிய சபாநாயகர், பிரதமருடன்,  மன்னன் ராஜபக்சவும்,  அவரின் மந்திரி பிரதானிகளுடன்,  தேசியப்பட்டியல்காரரும்  கலந்து கொண்டனர்.  கருணா அம்மான் தேசியப்பட்டியலுக்  கூடாக,  துணை  மீள் குடியேற்ற மந்திரியாக மீளக்  (செஞ்சோற்- அரசியலுக்கு) குடியமர்த்தப்பட்டுள்ளார்.  இதற்கு மகிந்தக் கடவுள் திருவருள் பாலித்து துணையருள் புரிந்துள்ளார். தாங்கள் மீள் வெளியேற்றம்  இல்லாதிருக்க,  தினமும்  “மகிந்தபூசை”  செய்யக்கடவீர்களாக.

அரசியலில் நிரந்தர நண்பன்-எதிரி என்ற ஒன்றில்லை என்ற சூட்சு மத்திற்கு அமைய ரணில்  மனேகனேசனுக்கு தேசியப்பட்டியலில் இடம்கொடாது  நிராகரித்துள்ளார். ரணிலின் இக்குத்துக்கரண அரசியலால், அவர்களின் கூட்டணிக்குள்ளும்  வெளியிலும்  பெரும் வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.

“தூய பௌத்த சிங்களவன்  இனவாதத்திற்கு அப்பாற்பட்டவன்”  இது தமிழர் கூட்டமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன அவர்களின்  “தீர்க்கதரிசன வாக்கு” .  கடந்த 60-ஆண்டு கால தமிழ் தேசியத்தின் அரசியல் வாழ்வில்  கூட்டமைப்பு செய்த அர்த்தமுள்ள அரசியல் நடவடிக்கை,  ஓர் சிங்களப் பிரதிநிதிக்கு இடம் கொடுத்து அரவணைத்தது. இது போன்ற நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்தால், இன ஐக்கியத்திற்கும்,  இனப் பிரச்சினைத் தீர்விற்கான படிகளிலும் படிப் படியாக முன்னேறலாம்.  இத்தோடு ஏனைய  “ நம்பிக்கை நட்சத்திரங்களும்”  என்ன சொல்கின்றன எனபதையும் பார்ப்போம்.

அரசதரப்பு

மகிந்த சிந்தனையே சகலதிற்கும் துணை.  இத் துணை  கொண்டே சகல பரிமாணங்களும், பரிகாரங்களும், வேலைத்  திட்டங்களும்,  தீர்வுகளும்,  கொடுப்பதும்,  கொடுக்காததும் ஆகும். முதலில் இலங்கையராக இருக்க முயல்வோம்,  கற்போம்.  அதனூடே ஒருங்கிணைந்து எமது சக்தியை வெளிப்படுத்துவோம்.  இதனூடே இவர்கள் என்ன தான் சொல்கின்றார்கள். “எதிர்காலம் மகிந்த நமோ நாம தேசியே”,  “சர்வாதிகார சரணம் கச்சாமியே  நமோ” என்கின்றார்கள்.

இதற்கு  மக்களை  நோவதா?  புரட்சிகர மக்கள் அரசியலின் பலவீனத்தை நோவதா?
சரத் பொன்சேகாவின் பாராளுமன்றக் கன்னிப்பேச்சு

சபாநாயகர் அவர்களே,
நான் மிகவும் மனவேதனையுடன் சிலவற்றை சொல்கின்றேன். பொய்யான குற்றச்சாட்டுக்களை  சோடித்து கைது  செய்து என்னை சிறையில் அடைத்துள்ளார்கள். நான்  குற்றமற்றவன் என்பதை மக்கள் இத்தேர்தல் ஊடாக சொல்லியுள்ளார்கள்.  ஜனநாயகமும்,  நீதியான ஆட்சியுமே  மக்களுக்குத்  தேவை.  தனி நபர் சிவில் அரசியல் சுதந்திரமும்,  ஊடக சுதந்திரமும்,  எம்நாட்டில் தற்போது  இல்லை.  மாறுபட்ட  கருத்து  சிந்தனை உள்ளவர்களை, அவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் எனக் கூறி,  கைது செய்வதை நிறுத்த வேண்டும்.  இது ஓர் ஜனநாயக விரோதச் செயலே.

நீங்கள் சொல்லும் மக்கள் தீர்ப்பு என்பது,  இம்மாதம் 8-ந் திகதியுடன் முடிவுற்றுள்ளதே. இது எதிர்காலத்தில் இருக்குமோ தெரியாதே.

13-வது  திருத்த்தை ஆரம்பமாக கொண்டு சகல கட்சிகளுடனும் பேசவுள்ளேன் –டக்கிளஸ்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு  தமிழ் மக்களுக்கான  தீர்வு பெற்றுக் கொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி  உட்பட  சகல கட்சிகளுடனும்  பேசவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார்.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சராக  நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  நேற்று இஸிபத்தான  மாவத்தையிலுள்ள  சமூக சேவைகள் அமைச்சில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். இச் செய்தியாளர் மாநாட்டின்  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  ஒரு நடைமுறைச்  சாத்தியமான  இறுதித் தீர்வை  நோக்கிச்  செல்லும் ஆரம்பமாகவே  இது அமையும்.

தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார்கள். எனினும் உத்தியோகபூர்வமாக சகல கட்சிகளுடனும் பேசி பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அவரவர்களுடைய  தனிப்பட்ட கருத்துக்கள்,  கொள்கைகள் இருக்கலாம்.  எனினும் ஆரம்பம் ஒன்றாக இருக்க வேண்டும்.  தமிழர் மத்தியில் ஒருமித்த ஒற்றுமை இல்லை. தென்னிலங்கை தட்டிக் கழித்து விடக் கூடாது. அதற்கு ஏற்றாற்போல் நாம் செயற்பட வேண்டும்.


கடந்த காலங்களில் எமக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தவற விட்டு விட்டோம்.  இனியும் அவ்வாறு நடைபெறாமல் சந்தர்ப்பங்களை பயன் படுத்த முயற்சிப்போம்.  நாம்  இழந்தவைகள்  இனியும் போதும்  என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்
.


நீங்கள் 13-வதை ஆரம்பித்து வைத்துப் பேசுவதில் தவறில்லை. ஆனால் தங்கள் மன்னன் பிள்ளயானுக்கு கொடுத்து
ள்ளதைப்  போன்றதைத் தானே தருவார். அதைவிட உங்கள் மந்திரிப் பதவி பரவாயில்லை.

“வடக்கு, கிழக்கு மக்களின் ஜனநாயக தீர்ப்பை அங்கீகரிக்க வேண்டும்” – இரா.சம்பந்தன்

வடக்கு, கிழக்கு மக்கள் அளித்த ஜனநாயகத் தீர்ப்பை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும். எமது மக்கள் அளித்த ஜனநாயகத் தீர்ப்பு மதிக்கப்படும் இடத்து அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற முறையில் எம்மை அரசியல் தீர்வொன்றைக் காணவும் வடக்கு கிழக்கு மீள்குடியமர்வு,  புனர்வாழ்வு,  மீள் நிர்மாணம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளவும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
பொதுத் தேர்தலில் அரசாங்கம் தனது சொந்த வெற்றியைக் கௌரவித்துக் கொண்டாடுவதைப் போன்று வடக்கு, கிழக்கு மக்களின் ஜனநாயகத் தீர்ப்பையும் அங்கீகரிக்க வேண்டும் என்று பாராளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டத்தின் முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மேற்கூறப்பட்ட விடயங்களை நிறைவேற்ற அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தம்மை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் அவ்வாறான செயற்பாடு தமிழ் மக்களின் நலன்களையும் முழுநாட்டின் நலன்களைப் பேணுவதாகவும் அமையும்.  இது குறித்து அரசாங்கத்தின் சமிக்ஞையை எதிர்பார்க்கின்றோம்  என்று பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவோ மோசமான நெருக்கடி நிலைவரங்களுக்கு மத்தியிலும் எமது மக்கள் எமக்குத் தெளிவான ஆணையைத் தந்திருக்கிறார்கள்.  எம் மீது நம்பிக்கை வைத்துள்ள எமது மக்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தலை வணங்குகிறது.  எமக்கு வழங்கப்பட்ட ஆணையை  நிறைவேற்ற நாம் அயராது உழைப்போம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தா மக்களின் தீர்ப்பை ஏற்பதென்பது, நாய் வாலை நிமிர்த்துவதற்கு ஒப்பாகும்.

“அமைச்சுப் பதவிகளுக்காக நாம் சோரம் போகவோ எமது சமூகத்தை விலை பேசி துரோகமிழைக்கவோ நாம் ஒருபோதும் முன்வரமாட்டோம் – ரவூப் ஹக்கீம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒரு தடவை கையைச் சுட்டுக் கொண்டவன் நான். இன்னொரு  தடவை அப்படிச் செய்வதற்கு நானொரு முட்டாள் அல்ல வெனத் தெரிவித்திருக்கும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மைச் சமூகத்தை விலை பேசும்  துரோகத்தனத்தை  ஒரு போதும் செய்யமாட்டேன் எனவும் உறுதிபடக் கூறியுள்ளார்.


இன்றைய நிலையில் அரசுடன் எந்த விதமான பேச்சுவார்த்தைக்கும் இடமில்லையெனவும் சுட்டிக் காட்டியிருக்கும்  ஹக்கீம்  இது  நாவலப்பிட்டியில் தனக்கு அளிக்கப்படக்கூடிய வாக்குகளைத்  தடுக்கும் ஒரு சதித்திட்டமெனவும் தெரிவித்தார். எமக்கு நாளைய தினம் கண்டி மாவட்டத்தில் பெரு வெற்றி கிட்டும் என்பது உறுதியானது. அரசுமுஸ்லிம் காங்கிரஸ் பேச்சு விரைவில் இடம்பெறுமென அரச ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து மறுத்துரைக்கையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
.
அரசாங்கம் முதலில் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வை முன்வைக்கட்டும். அதன் பிரதிபலிப்பு சாதகங்களை வைத்தே எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும். அதைவிடுத்து அமைச்சுப் பதவிகளுக்காக  நாம் சோரம் போகவோ எமது சமூகத்தை விலை பேசி துரோகமிழைக்கவோ நாம் ஒருபோதும் முன்வரமாட்டோம் எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இப்போக்குத் தொடர்ந்தால் தமிழ்-முஸ்லிம் மக்களின் ஐக்கியமும் உறவும் வலுப்பெறும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் பொதுமக்களின் கால் நடைகளைப் பிடிப்பதைக் கைவிட வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்


ன்னியில் முல்லைத்தீவு  மாவட்டத்தில் பொதுமக்களின் கால்நடைகளை இராணுவத்தினர் தமது பால் தேவைக்காகப் பிடித்து கட்டுவதைக் கைவிட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் வன்னிப்பிரதேச ஆயுதப் படைகளின் தளபதியிடமும் முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.


அத்துடன் வன்னிப் பிரதேசத்தில் உள்ள குளங்களில் வளரும் நன்னீர் மீன்வகைகளை வெளிமாவட்டத்தினர் பிடித்துச் செல்வதற்கு இராணுவத்தினரால் அளிக்கப்பட்டுள்ள அனுமதியையும் இரத்துச் செய்து உள்ளுர் நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு அந்த அனுமதியை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


வன்னிமக்களின் வாழ்வாதாரங்களில் பிரதான இடம் பிடிப்பவை விவசாயம் கடற்றொழில் கால்நடை வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன்பிடித் தொழில்களாகும்.  ஏற்கனவே இப்பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் தங்கள் வசம் எஞ்சியிருக்கின்ற கால்நடைகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கைச் செலவை ஓரளவிற்காவது சமாளிப்பதற்காகப் பெருமுயற்சி செய்து வருகின்றனர். இப்பொழுது அதற்கும் வழியில்லாத நிலை தோன்றியுள்ளது.


அடையாளக் குறிகளுடன்  மேய்ந்து கொண்டிருந்த மாடுகளைப் படையினர் தமது இராணுவ வண்டியில் வந்து ஏற்றிச் செல்கின்றனர். இவ்வாறு ஏற்றிச் செல்லப்பட்ட மாடுகளை ஒட்டிசுட்டான் – முல்லைத்தீவு சாலையில் ஒட்டிசுட்டானிலிருந்து சுமார்  600மீ  தொலைவிலுள்ள  கமநல சேவைகள் திணைக்களத்தின் பின்புறமுள்ள ஒரு இடத்தில் பண்ணை அமைத்து அதில் கொண்டு போய் கட்டுகின்றனர்.
24 ஆம் திகதி காலையிலும் கூட சுமார் 7.30மணியளவில் ஒரு வீட்டில் கட்டியிருந்த மூன்று எருமை மாடுகளை இராணுவத்தினர் சீருடையில் வந்து அவிழ்த்துச் சென்றுள்ளனர். ஏன் இப்படிச் செய்கின்றீர்கள் என்று உரிமையாளர்  கேட்டதற்குத் தங்களது பண்ணைக்கு வேண்டும் என்று சொல்லியுள்ளனர்.
இராணுவத்தினரின் பால் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக  இப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காககவே இவ்வாறு  மாடுகள் கபளீகரம் செய்யப்படுவதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.


சிலர் தமது மாடுகளை அடையாளம் காட்டி விட்டு விடுங்கள் என்று கேட்டதற்கு முறையாகப் பதில் அளிக்காமல் படையினர் உடனடியாக அந்த மாடுகளை வேறொரு இடத்திற்கு மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.  இவ்வாறு பலமாடுகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.
அடுத்ததாக வன்னி நிலப்பரப்பில் ஏராளமான குளங்கள் உள்ளன. இக்குளங்களில் நன்னீர் மீன்கள் ஏராளமாக இருக்கின்றன. வன்னி மக்களின் உணவில் நன்னீர் மீனும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. இங்கு பிடிக்கப்படும் மீன்களுக்கு நல்ல மதிப்பு உண்டு. இராணுவத்தினர் இந்த மீன்களைப் பிடிப்பதற்கென்றே வெளிமாவட்டங்களிலிருந்து சிங்களர்களை அழைத்து வந்துள்ளனர். அவர்களுக்கு மட்டுமே இங்குள்ள குளங்களில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


அப்பகுதிக் குளங்களுக்குச் சொந்தமான அந்த கிராமவாசிகள் தமது தேவைக்குக் கூட மீன்களைப் பிடிக்க முடியாதுள்ளதுடன் சிங்களர்கள் பிடிக்கும் மீன்களைக் கூட இவர்கள் வாங்க முடியாத நிலையும் தோன்றியுள்ளது.  அவர்கள் பிடிக்கும் மீன்கள் முழுவதும் தென் பகுதிகளுக்குக் குளிரூட்டிய வாகனங்களில் கொண்டுசெல்லப்படுவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


இதனைப் போன்றே நந்திக்கடல் மற்றும் வற்றாப்பளை பகுதிகளில் கடலில் இறால் பிடிப்பதற்குத் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.  இப்பொழுது அதற்கும் இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர்.  இடம்பெயர்ந்துள்ள மக்கள் கைவிட்டுச் சென்ற பொருட்களை இவர்கள் எடுத்துச் செல்கின்றனர் என்று காரணம் சொல்லி கடல் மீன்பிடித் தொழிலையும் இப்பொழுது இல்லாமல் செய்துவிட்டனர்.


ஏற்கனவே  போர் அவலத்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து எமது மக்கள் இடம் பெயர்ந்து ஏது மற்றவர்களாக அங்கும் இங்கும் அலைக் கழிந்து இவர்களில் ஒருபகுதியினர் ஒருவாறாக தமது இடங்களுக்குச் சென்று தமது வாழ்வாதாரங்களைப் பெருக்கிக் கொள்ளலாம் என நினைத்திருக்கையில் இவ்வாறான இடையூறுகள் அவர்களை மேலும் சலிப்படையச் செய்துள்ளன.

எமது மக்கள் விட்டுச் சென்ற வீடுகளில் இருந்து ஏராளமான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. அவர்களின் வாகனங்கள் களவாடப்பட்டுள்ளன. எஞ்சியிருக்கும் கால் நடைகளும் இப்பொழுது படையினரால் கபளீகரம் செய்யப்படுகின்றன.  இவற்றுக் கெல்லாம் நல்ல தொரு முடிவினைப் பெற்றுத் தருமாறு எமது மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் வன்னி மாவட்ட கட்டளைத் தளபதிக்கும் முறையிட்டு நடவடிக்கை எடுக்கும்படிக் கோரியுள்ளேன்.


இது மகிந்த சிந்தனையின் பாற்பட்டதா? அல்லது மகிந்த மாட்டுச் (எருமை) சிந்தனையின் பாற்பட்டதா?


http://www.psminaiyam.com/?p=5050

Last Updated on Monday, 03 May 2010 06:10