Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் மோடி கும்பலைக் காக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு

மோடி கும்பலைக் காக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு

  • PDF

குஜராத் மாநிலத்தின் இந்துவெறிபயங்கரவாத முதல்வர் மோடியின் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிரான குஜராத் படுகொலைகள் நடத்தப்பட்டு 8 ஆண்டுகள் கழிந்து விட்டன. இந்திய வரலாற்றில் மிகக் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட இந்த இனப்படுகொலைகள் குறித்த விசாரணை மிகவும் கீழ்த்தரமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை, அவற்றை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மீதான குற்றச்சாட்டுகளே நிரூபித்துக்காட்டுகின்றன.

இப்படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ""சிறப்புப் புலனாய்வுக் குழு'' குற்றவாளிகளைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதில், இவற்றில் தொடர்புடைய மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் போலீசு அதிகாரிகளுக்கு எதிரான முக்கிய ஆதாரங்களைத் திட்டமிட்டு மறைத்து வருகிறது. தேவேந்திரபாய் பதக், தீஸ்தாசெதல்வாத் போன்ற சமூக ஆர்வலர்களும் அரசு சாரா நிறுவனங்களும் அரசுத்துறையினர் கலவரக்காரர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டது குறித்துத் தெளிவாகவிளக்கி உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்த பின்னர், சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் விளக்கம் கேட்டு இப்போது நீதிமன்றம் நோட்டீசு அனுப்பியுள்ளது.

போலீசுக்கும், இனப்படுகொலை நடத்திய கும்பலுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள், படுகொலைகளின் போது போலீசார் இருந்த இடங்கள், பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் என சிறப்புப் புலனாய்வுக்குழு சேகரிக்கத் தவறியவற்றை சமூக ஆர்வலர்கள் தமது மனுவில் தொகுத்துத் தந்துள்ளனர். படுகொலைகளில் நேரடியாகத் தொடர்புடையதாக இந்த ஆவணம் சுட்டிக்காட்டும் போலீஸ் அதிகாரிகள், தற்போது குஜராத் அரசில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.

இந்த இனப்படுகொலையைத் தலைமையேற்று வழிநடத்திய மோடி மீது வழக்குத் தொடரப்படவேண்டும் என்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் கூடக் கண்டுகொள்ளப்படவில்லை. சிறப்புப் புலனாய்வுக்குழு, அதிகாரமிக்க குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்பது அம்பலமாகியிருப்பதால், இப்போது அக்குழு தனது நேர்மையை நிரூபிக்க, விசாரணைக்கு வருமாறு மோடிக்கு நோட்டீசு அனுப்பியிருக்கிறது. ஆனால் மோடியோ, அக்குழுவின் விசாரணைக்கு செல்லாமல் தவிர்த்துவிட்டு, இதர சட்டபூர்வ வழிகளை ஆய்ந்து கொண்டிருக்கிறார்.

3000 பக்கங்களுக்கு மேற்பட்ட அந்த மனுவிலிருந்து சில முக்கியமான குற்றச்சாட்டுகள்:

கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த கலவரம் போல குஜராத் படுகொலைகள் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால், இது போன்றதொரு படுகொலையை நிகழ்த்த பல ஆண்டுகளாகச் செய்யப்பட்ட தயாரிப்புகள் குறித்து தெகல்கா ஏடு ""ஆபரேசன் கலாங்'' மூலம் வெளிக்கொணர்ந்த செய்திகளையும், படுகொலைகள் நடைபெற்றபோது பணியிலிருந்த போலீசு அதிகாரிகளான ஆர்.பி. சிறீகுமார், ராகுல் சர்மா ஆகியோரது வாக்குமுலங்களையும் விசாரணைக் குழுவினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

படுகொலைகளை நேரில் கண்ட சாட்சிகளுக்குப் போதுமான பாதுகாப்புகள் வழங்கப்படவில்லை. சாட்சிகளை மிரட்டக்கூடிய, செல்வாக்கு மிகுந்த குற்றவாளிகள் சுதந்திரமாகச் சுற்றி வருகின்றனர். அவர்களது பிணையை ரத்து செய்யக் கூட புலனாய்வுக் குழுவினர் கோரவில்லை.

நரோடா பாட்டியா மற்றும் நரோடா காம் ஆகிய இடங்களில் 110க்கும் அதிகமானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பெண்களும், சிறுமிகளும் வன்புணர்ச்சிக்காளானார்கள். இந்த வழக்குகளில் 129 சாட்சியங்களின் வாக்குமூலங்களை சிறப்பு புலனாய்வுக்குழு பதிவு செய்யவே இல்லை.

படுகொலைகளின்போது, தாக்குதலுக்குப் பயந்து ஓடிவந்த முஸ்லீம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட போலீசு ஆய்வாளரான கே.கே.மைசூர்வாலா (இப்போது இவர் போலீசு கண்காணிப்பாளராகப் பதவிஉயர்வு பெற்றுள்ளார்)விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. அவர் மீது குற்றச்சாட்டு பதியப்படவில்லை. இதே விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மாயாபென் கோத்னானிக்கும், மைசூர்வாலாவுக்குமிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலை அடுத்துத்தான் துப்பாக்கிச் சூடுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை நிரூபிக்கப் பல சாட்சிகள் இருந்தும், புலனாய்வுக் குழு அவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை.

மைசூர்வாலா, தன்னிடம் பாதுகாப்புக் கோரிவந்த முஸ்லீம்களிடம், ""உங்களைப் பாதுகாக்கக் கூடாது என்பது மேலிடத்து உத்தரவு. முஸ்லீம்களைப் பாதுகாக்கும்படி உத்தரவு இல்லை... இன்றிரவு நீங்கள் எல்லோரும் சாகத்தான் வேண்டும்'' எனப் பச்சையாகக் கூறியிருந்ததை உறுதி செய்யும் நேரடி சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை. நரோடாபாட்டியா மற்றும் நரோடா காம் ஆகிய இடங்களில் நடைபெற்றக் கோரக் கொலைகளின் முக்கிய குற்றவாளியான, விஷ்வ இந்து பரிசத் தலைவன் ஜெயதீப் பட்டேலும் மைசூர்வாலாவும், அந்த சமயத்தில் தொலைபேசியில் பலமுறை பேசியிருக்கின்றனர்.

இதேபோல, சிறப்பு ரிசர்வ் போலீசுப் படையைச்சேர்ந்த அதிகாரியான கே.பி.பரேக், தன்னிடம் அடைக்கலம் கோரி வந்த முஸ்லிம்களிடம், அன்று அவர்களை யாரும் காப்பாற்றப்போவதில்லை என்றும், அவர்களைக் கொல்லச் சொல்லி உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்துள்ளது என்றும் கூறியதற்கு பல நேரடி சாட்சியங்கள் உள்ள நிலையில், பரேக் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை.

பாபுபாய் பஜ்ரங்கி எனும் இந்துவெறி பயங்கரவாதக் கொலைகாரனின் தலைமையில் ஒரு கும்பல் 95பேரை வெட்டிக் கொன்றதுடன், கவுசர்பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவையும் கொன்றது. இது குறித்து 15 சாட்சிகள் உள்ள நிலையில், அவன் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருகின்றான். சிறப்புப் புலனாய்வுக் குழு அவனது பிணையை ரத்துசெய்யுமாறு கூடக் கோரவில்லை. அவன் வெளிநாடுகளுக்குச் சர்வசாதாரணமாகப் போய்வந்து கொண்டுள்ளான். இதே போல, சுரேஷ் லாங்கடா ரிச்சர்ட் சாரா என்ற இந்துவெறி பயங்கரவாதியின் தலைமையிலான ஒரு கும்பல் முஸ்லீம்களை வன்புணர்ச்சி செய்து, எரித்துக் கொன்றதாக 53 சாட்சியங்கள் கூறியுள்ளன. சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்கும் இவனைப் புலனாய்வுக் குழுவினர் இதுவரை விசாரிக்கக் கூட இல்லை.

இவையெல்லாவற்றையும் விடக் கொடூரம், குல்பர்க் சொசைட்டியில் 70 முஸ்லீம்கள் 11 மணி நேரம் சிறுகச் சிறுக சித்திரவதை செய்யப்பட்டு எரித்தும் வெட்டியும் கொல்லப்பட்ட வழக்குதான். குல்பர்க் சொசைட்டியில் கொல்லப்பட்டவர்களில், காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாப்ரியும் ஒருவராவார். அந்தப் பதினோரு மணி நேரத்தில், அங்கிருந்து போலீசாருக்கு நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. ஜாப்ரி மட்டும் 200 முறைக்கும் அதிகமாக போலீசாரைத் தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால், அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அவருடன் சேர்த்து 70 பேர் அவர் வீட்டிலேயே இந்துவெறியர்களால் கொல்லப்பட்டனர். போலீசு கட்டுப்பாட்டு அறையிலும்  மூத்த போலீசு அதிகாரிகளின் தொலைபேசிகளிலும், அரசு உயரதிகாரிகளின் தொலைபேசிகளிலும் எதிரொலித்த கூக்குரலுக்கு ஏன் யாரும் செவிசாய்க்கவில்லை என்று புலனாய்வுக்குழு விசாரிக்கவேயில்லை.

அகமதாபாத் நகர போலீ” இணை ஆணையர் சிவானந்த் ஜா, கலவரம் நடைபெற்றபோது காவல்துறைக்கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பாளராக இருந்தார். படுகொலை நடந்தபோது கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது ஏன் என இவரைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும். ஆனால், இவர்தான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முக்கிய அதிகாரி!

கோத்ரா வழக்கிலும் சிறப்பு புலனாய்வுக்குழு மேற்கொண்டு எந்த விசாரணையையும் செய்யவில்லை. குஜராத் போலீசார் ஒருதலைபட்சமாக விசாரித்துக் கூறியதை, சிறப்பு புலனாய்வுக் குழு அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டது.

அகமதாபாத் நகர போலீசு ஆணையர் பாண்டே, புலனாய்வுக் குழுவால் எல்லாக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். கலவரம் நடைபெற்ற போது, தான் கோத்ரா சம்பவத்தில் இறந்தவர் பிணங்களுக்குப் பாதுகாப்பளித்து வந்ததாக இவர் கூறுகிறார். மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது, இவர் பிணங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்ததை புலனாய்வுக் குழுவினரைத் தவிர வேறு யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். புலனாய்வுக் குழு இவரை விடுவித்ததற்குக் காரணம், அந்தக் குழுவின் முக்கிய அதிகாரிகளான கீதாஜோரி, சிவானந்த் ஜா மற்றும் ஆசிஷ் பாட்டியா ஆகிய குஜராத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அண்மைக்காலம் வரை பாண்டேவுக்கு கீழ் வேலை செய்து வந்தவர்கள் என்பதுதான். மேலும், இவர்கள் குஜராத் அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தவர்கள்தான்! சோராபுதீன் மோதல் கொலைவழக்கில் உச்சநீதி மன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்தான் ஜோரி. இத்தகையோரைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுதான் விசாரணை நடத்துகிறது எனும்போது, அது எப்படி குற்றவாளிகளை இனங்காட்டும்?

— இவை அனைத்தும் மீண்டும் நிரூபித்துக் காட்டுவது இதைத்தான்: உச்சநீதி மன்றத்தின் உத்தரவுப்படி சிறப்புப்புலனாய்வுக் குழு விசாரணை நடத்துவதாகக்காட்டிக் கொண்டாலும், உண்மையில் அங்கு ஒரு நாடகம்தான் நடந்துகொண்டிருக்கிறது. மதச் சார்பின்மை பேசும் காங்கிரசு கூட்டணி ஆட்சியோ, இந்துவெறி பாசிச பயங்கரவாதக் கொடூரங்களுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது.

தனபால்

Last Updated on Tuesday, 04 May 2010 15:58