Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் “லியோ பாஸ்ட்னர்ஸ் நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” – போராடும் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் – பொதுக்கூட்டம்

“லியோ பாஸ்ட்னர்ஸ் நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” – போராடும் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் – பொதுக்கூட்டம்

  • PDF

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் கடந்த 40ஆண்டு காலமாக இயங்கிவரும் லியோ பாஸ்ட்னர்ஸ் எனும் போல்ட்நட் தயாரிக்கும் நிறுவனத்தின் கொத்தடிமைத்தனத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராக, பு.ஜ.தொ.மு. சங்கத்தின் தலைமையில் கடந்த ஈராண்டுகளாகத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி என கடந்த இரு மாதங்களாகத் தொழிலாளர் போராட்டம் தீவிரமடைந்த போதிலும், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கடந்த 22.2.10 முதலாக தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். முதலாளிகளின் எடுபிடிகளாகச் செயல்படும் போலீசு, போராடிய தொழிலாளர்களை போலீசு நிலையத்துக்குக் கொண்டு சென்று மிரட்டிப் பார்த்தது. மிரட்டலுக்கு அஞ்சாமல், போலீசு கொடுத்த உணவையும் புறக்கணித்து தொழிலாளர்கள் அங்கும் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்ததால், அன்றே அனைவரையும் விடுவித்தது.

போராட்டத்திற்கு ஆதரவாக இதர தொழிலாளர்களிடம் பிரச்சாரம் செய்வதைத் தடுத்தும், தொழிற்பேட்டையில் போலீசைக் குவித்தும், பொய்வழக்கு போடுவதாக மிரட்டியும் பார்த்த முதலாளிகளின் திட்டங்கள் அனைத்தும் தொழிலாளர்களின் போராட்ட உறுதியின் முன்னே தவிடுபொடியாகின. வேலைக்கு வராவிட்டால் பணிநீக்கம் செய்து விடுவேன் என்று மிரட்டிப் பார்த்த முதலாளி ஷா, அது தோல்வியடைந்ததால், வீடுவீடாகச் சென்று தொழிலாளர்களைக் கெஞ்சி தனது காரில் ஏற்றி வரும் தொழிலாளர்களின் காரோட்டியாக மாறிப்போனார். வறுமையிலுள்ள தொழிலாளர்களை விலை பேசியும், புதிதாகச் சிலரை வேலைக்கு அமர்த்தியும் எப்படியாவது நிறுவனத்தை இயக்க முயற்சிக்கிறார், இப்பயங்கரவாத முதலாளி.

 

தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கிச் சுரண்டும் இம்முதலாளித்துவப் பயங்கரவாதத்தை எதிர்த்தும், இதற்கு அடியாளாகச் செயல்பட்டுவரும் போலீசை அம்பலப்படுத்தியும் தொடர் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட தொழிலாளர்கள், கடந்த 1.3.10 அன்று தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை நுழைவாயிலில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, லியோ பாஸ்ட்னர்ஸ் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்தும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்தும் இந்துஸ்தான் லீவர், கோத்ரேஜ்சாராலீ, மெடிமிக்ஸ் ஆகிய ஆலைகளின் தொழிலாளர் சங்கங்கள் ஒருங்கிணைந்து புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இவற்றின் தொடர்ச்சியாக, மறுகாலனியாக்கத்தின் வேட்டைக்காடாக புதுச்சேரி மாற்றப்பட்டு, முதலாளித்துவ பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை எதிர்த்து கடந்த 10.3.10அன்று பக்கமுடையான பட்டுஜீவா காலனியில், போராடும் தொழிலாளர்கள் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்தின் இறுதியில் நடந்த ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி போராட்ட உணர்வுக்குப் புதுரத்தம் பாய்ச்சியது. வர்க்க உணர்வுடன் உறுதியாகத் தொடரும் தொழிலாளர் போராட்டம், புதுச்சேரி எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

— பு.ஜ.செய்தியாளர், புதுச்சேரி.