Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் பாரம்பரிய விவசாயத்தை அழிக்க வரும் கருப்புச் சட்டம்

பாரம்பரிய விவசாயத்தை அழிக்க வரும் கருப்புச் சட்டம்

  • PDF

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைச் சோதனை முறையில் பயிரிடுவதையும், அதன் பின் அவற்றை வர்த்தகரீதியில் பயிரிட அனுமதிப்பதையும் எதிர்த்து வரும் விவசாயிகள், அறிவியலாளர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக சக்திகளை முடக்கும் வண்ணம் ஒரு புதிய கருப்புச் சட்டத்தைக் கொண்டுவர முயன்று வருகிறது, மைய அரசு. ""உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய வரைவு மசோதா'' என அழைக்கப்படும் இம்மசோதா நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமாக அங்கீகரிக்கப்படுமானால், அச்சட்டத்தின்படி தேசிய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். அமைச்சர்களோ, எம்.பி., எம்.எல்.ஏ.க்களோ, விவசாயிகளின பிரதிநிதிகளோ இன்றி, நான்கு நிபுணர்களை மட்டுமே கொண்டு அமைக்கப்படும் இந்த ஆணையம்தான், இனி, மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயிர்களை உணவுப் பொருட்களை இந்திய மக்கள் மீதி திணிக்கும் விஷயத்தில் வானளாவிய அதிகாரம் கொண்டு செயல்படும்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காயை வர்த்தகரீதியில் அனுமதிக்க மைய அரசு முயற்சி செய்தபொழுது, விவசாயிகளின் மத்தியில் இருந்து எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக, பல மாநில அரசுகள் கூடத் தங்கள் மாநிலங்களில் பி.டி. கத்திரிக்காய் பயிரிடுவதற்குத் தடைபோட்டன. இனி இதுபோன்ற எதிர்ப்புகள் விவசாயிகள், அறிவியலாளர்கள் மத்தியில் இருந்து மட்டுமல்ல, மாநில அரசுகள், நாடாளுமன்றத்திலிருந்து கூட எழுந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு, இச்சட்டம் எதிர்ப்போரின் குரல்வளையை நெறிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை யாராவது ஆதாரமின்றி எதிர்த்தால், அவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிக்கப்படும் என்றவாறு இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய விதைகளை நம்பி பயிர் செய்யும் விவசாயிகளை, அவர்களை ஆதரிப்போரைக் குறிவைத்து விடப்பட்டுள்ள அச்சுறுத்தல் இது .

 

""சரியான ஆதாரமில்லை'' எனத் தீர்மானிக்கப்போவது யார்? எந்த ஆணையம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அனுமதிக்கிறதோ, அவர்களேதான் அதனை எதிர்ப்பவர்கள் தரும் ஆதாரங்களை ஆராய்வார்கள் என்றால், யாரால்தான் சரியான ஆதாரங்களைத் தந்துவிடமுடியும்? குற்றவாளியே தீர்ப்புச் சொல்லும் நீதிபதியாக நியமிக்கப்படுவதுபோன்ற கேலிக்கூத்து இது!

 

இதுவொருபுறமிருக்க, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைச் சோதனை முறையில் பயிரிட்டு, அது பற்றிய தகவல்களை அரசுதான் சேகரித்து வருகிறது. எனவே, சோதனையின் விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் யாரும் அரசிடம்தான் அத்தகவல்களைக் கோரிப் பெறமுடியும். ஆனால், இம்மசோதாவோ மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள ;பயிர்கள் பற்றிய விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெறமுடியாது என்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. தகவல்களைத் தரவும் மாட்டார்களாம்; அதேசமயம், "ஆதாரமின்றி'ப் போராடுபவர்களைச் சிறையிலும் தள்ளுவார்களாம். இதன்பொருள், விவசாயிகள் மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகளை எவ்விதக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

 

விவசாயிகள் மட்டுமல்ல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் தகுதி குறித்து, அது தங்களின் உடல் நலத்துக்குக் கேடுவிளைவிக்கக் கூடியதா இல்லையா என்பது குறித்து நுகர்வோர் என்ற முறையில் "பொதுமக்கள்'கூடக் கேள்வி கேட்கமுடியாது.

 

விவசாயத் துறை மாநில அரசுகளின் உரிமையின் கீழ்வருகிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்டுதான் 13மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் பி.டி. கத்திரிக்காய் பயிரிடுவதற்குத் தடை விதித்தன. கேரளாவும், ஜார்கண்டும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் விதைகள் அனைத்திற்கும் தடை விதித்துள்ளன. ஆனால், இம் மசோதாவோ தேசிய உயிரித்தொழில் நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பயிர்களுக்கு மாநில அரசுகள் மட்டுமல்ல, நீதிமன்றங்கள் கூடத் தடைவிதிக்க முடியாது என்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது.

 

இம்மசோதா சட்டமானால், ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினராக உள்ள நான்கு நிபுணர்களும், அவர்களைப் பின்னாலிருந்து இயக்கும் பன்னாட்டு விவசாயக் கழகங்களும்தான் இந்திய விவசாயத்தின் தலையெழுத்தை, இந்திய மக்கள் என்ன உணவுப்பொருளை உண்பது என்பதைத் தீர்மானிப்பார்கள். இக்குற்றச்சாட்டை நாம் ஏதோ காழ்ப்புணர்ச்சியால் கூறவில்லை. அமெரிக்காவின் தேசங்கடந்த விவசாயக்கழகமான மான்சாண்டோவின் இந்திய மேலாளர் தேவராஜ் ஆர்யா, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள்;, பயிர்களை அனுமதிப்பதற்கு ஒரேயொரு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அவ்விதைகள், பயிர்கள் பற்றிய தகவல்களைப் பொதுமக்களுக்கு அளிக்கக் கூடாதென்றும் ஆலோசனைகளை வழங்கி வந்தார். அக்கழகம் முன்வைத்த ஆலோசனைகள் இம்மசோதாவில் விதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

 

மரபணு மாற்றம் செய்யப்பட்டவிதைகள் பயிர்களைச் சோதனை முறையிலும், வர்த்தக ரீதியிலும் பயிரிடுவதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் மட்டுமின்றி, இந்த அனுமதி குறித்து யாராவது வழக்குத் தொடுத்தால், அதனை விசாரித்துத் தீர்ப்புவழங்கும் அதிகாரமும் தேசியஉயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் இவ்வாணையம் வழங்கும் தீர்ப்புகளை எதிர்த்து இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது.

 

தற்பொழுதுள்ள நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைச் சோதனை முறையில் பயிர்செய்ய வேண்டும் என்றால் கூட சுற்றுப்புறச் சூழல் மற்றம் வனத் துறை, விவசாயத் துறை ஆகியவற்றின் அனுமதியைப் பெறுவதோடு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், பல்லுயிர் பாதுகாப்புச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களின் ஆய்வுக்கும் உடன்பட வேண்டும். இம்மசோதாவும், ஒழுங்குமுறைஆணையமும் இச் சட்டங்களுக்கும், விவசாய மற்றும் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகங்களுக்கும் கட்டுப்படத் தேவையில்லை என்றவாறு உருவாக்கப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொன்னால், மரபணு மாற்றம் செய்யப்பட்டவிதைகள் பயிர்கள் உணவுப்பொருட்களைப் பரிசோதனைக்கும் வர்த்தகத்திற்கும் அனுமதி அளிப்பதில் இனி இந்த ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சர்வாதிகாரி போலவே செயல்படும்.

 

நமது நாட்டின் பாரம்பரியமிக்க விதைகள் அனைத்துமே அழிந்துபோகக்கூடிய நிலைதான் இம்மசோதாவால் உருவாகும். தனியார்மயம் தாராளமயத்தின் மூலமும், கட்டுப்பாடற்ற விவசாய விளைபொருட்களின் இறக்குமதியின் மூலமும் இந்திய விவசாயத்தின் சுயசார்பு அழிக்கப்பட்டு வரும் போக்கை இம்மசோதா மேலும் விரைவுபடுத்தும்.

 

· ரஹீம்

*----------*

மான்சாண்டோவின் தயாரிப்பான பி.டி.பருத்தி விதை எதிர்பார்த்த விளைச்சலைத் தரவில்லை என விவசாயிகள் கதறியபொழுது, ""அவர்களுக்குப் பயிர் செய்யத் தெரியவில்லை'' எனத் திமிராகப் பதிலளித்த மான்சாண்டோ நிறுவனம், இப்பொழுது இந்த உண்மைகளைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. ""குஜராத்தில் நடத்திய கள ஆய்வுகளில், இளஞ்சிவப்பு புழுக்களை எதிர்த்து வளரும் சக்தியை பி.டி. பருத்தி விதைகள் இழந்து விட்டன. இந்தப் புழுக்கள் தங்களுக்குள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டு விட்டதால், இனிமேல் பி.டி. பருத்தியில் 2வது ரகத்தை விவசாயிகள் வாங்குவதுதான் நல்லது' 'என அறிக்கை வெளியிட்டுள்ளது, மான்சாண்டோ. மான்சாண்டோவின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் அதனின் இரண்டு திருட்டுத்தனங்கள் அம்பலமாகியுள்ளன. முதலாவதாக, பி.டி. பருத்தி விதைபுழு, பூச்சித் தாக்குதலைத் தாங்கி வளரும் என்பது வெறும் பொய்தான். இரண்டாவது, இது ஒரு வியாபார உத்தி. காப்புரிமை வழங்கப்பட்ட பி.டி. விதைகளுக்கு குறிப்பிட்ட காலம் வரை தான் உரிமத் தொகையைக் காட்டி விலை நிர்ணயம் செய்யமுடியும். குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர், அந்த விதைக்கான உரிமத் தொகை பெறும் உரிமை காலாவதியாகிவிடும். அதனால்தான் மான்சாண்டோ பி.டி. பருத்தி 1வது ரகத்தின் தோல்வியை ஒப்புக்கொண்டு, பி.டி. பருத்தியின் இரண்டாவது ரகத்தை இந்திய விவசாயிகளின் தலையில் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. நியாயமாகப் பார்த்தால், இந்தத் திருட்டுத்தனத்திற்காக மான்சாண்டோ மற்றும் அதனின் கூட்டாளி நிறுவனமான மாஹிகோ நிறுவனங்களைச்சேர்ந்த உயர் அதிகாரிகளைத் தண்டிப்பதோடு, பி.டி. பருத்தி விதைகளைப் போட்டு நட்டமடைந்த விவசாயிகளுக்கு அந் நிறுவனங்களிடமிருந்து நட்ட ஈடு பெற்றுத்தரும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கவேண்டும். ஆனால், அமெரிக்க அடிவருடி மன்மோகன்சிங் அரசோ, மான்சாண்டோவிற்கு எதிராகக் குரல்கொடுப்போரைத் தண்டிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்திச் சட்டமாக்கிவிடத் துடிக்கிறது.

Last Updated on Sunday, 18 April 2010 12:51