Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் ராஜபக்சே குடும்பத்தின் பாசிசப் பிடியில் இலங்கை

ராஜபக்சே குடும்பத்தின் பாசிசப் பிடியில் இலங்கை

  • PDF

இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவால் தனிச்சிறப்பான முறையில் கட்டியமைக்கப்பட்டிருக்கும் இராணுவம், போலீசு, உளவுப்படை, ""வெள்ளைவேன்'' கொலைப்படை, பேரினவாதச் செய்தி ஊடகம் ஆகிய கட்டுமான அமைப்பு முழுவதும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற "பயங்கரவாதி'களை ஒழிப்பதற்கும், நாட்டின் ஒருமையைக் காப்பதற்கும் அவசியமானதுதான் என்று சிங்கள சமூகம் நம்பிக் கொண்டிருந்தது.

ஈழ மண்ணில் தமிழனின் இரத்த ஆறு ஓடவதை வெற்றிப் போதை தலைக்கேற தென்னிலங்கையின் தெருக்களில் எக்காளமிட்டுக் கூத்தாடியது சிங்கள சமூகம். ஆனால், போதை தெளிவதற்குள்ளாகவே தான் ஊட்டி வளர்த்த இனவெறி பாசிச ஓநாய்கள் தன்னையே சூழ்ந்து கொள்ளும் என்பதைச் சிங்கள சமூகம் அறிந்திருக்கவில்லை. அந்தப் பாவத்துக்குத் தக்க விலைகொடுக்காமல், அது தப்பித்துவிட முடியாது என்பதை ராஜபக்சே குடும்பக் கும்பல் இப்போது காட்டி வருகிறது.

 

அதிபர் மகிந்த ராஜபக்சே  அவரது சகோதரர்களான பாசில், கோத்தபாயா, சாமல் இவர்களின் பிள்ளைகளான சுசீந்திரா, நாமல் மற்றும் மருமகன்கள் மூவர் இலங்கையின் இராணுவம், போலீசு, உளவு, நிதி, அயலுறவு, மதம் மற்றும் அரசு ஊடகம் உட்பட அனைத்து முக்கியத் துறைகளையும் தமது இரும்புப் பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு மகிந்தாவின் நெருங்கிய உறவினர்கள் 15 பேராவது அரசு நிர்வாகத்தில் அதிஉயர் பொறுப்புகளில் இருப்பதால், நாட்டின் ஆண்டு வரவுசெலவில் எழுபது சதவீத நிதி இவர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றது.

 

2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கு வந்தபோது தனக்கு விசுவாசமாக ஒரு சிறு அரசியல் கும்பலை மட்டுமே பெற்றிருந்தார். கடந்த ஜந்தாண்டுகளில் அரசு நிர்வாக இயந்திரம் முழுவதையும் ராஜபக்சே குடும்ப கும்பலின் விசுவாசக் கருவியாக மாற்றிக்கொண்டதோடு, இலங்கையின் அரசியல் சட்டத்துக்குப் புறம்பான ஒரு பாசிசக் கொலைகாரக் கூலிப்படையையும் கோயபல்சு பாணியிலான பிரச்சார ஊடகத்தையும் அக்கும்பல் கட்டியெழுப்பிக் கொண்டது.

 

ராஜபக்சே கும்பலின் ஆணையில் இருக்கும் பாசிச அரசு இயந்திரம் மற்றும் பிற பாசிச பரிவாரங்களைக்கொண்டு இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மட்டுமல்ல் சிங்கள இனத்தவரானாலும் அதன் அதிகாரத்தை விமர்சிக்கவோ, எதிர்க்கவோ துணிந்தால் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் தயங்காது. இது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெளிப்படையாகவே தெரிந்தது, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் மீண்டும் ஒருமுறை தெரியவரும்.

 

கடந்த ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட ஈழத்தமிழின அழிப்புப் போரினூடாக விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிப்பதில் சிங்கள அரசபடைகள் அடைந்த வெற்றி, மகிந்த ராஜபக்சேவுக்கே உரியதென்று ராஜபக்சே கும்பலின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள அரசுஊடகம் இடைவிடாது பிரச்சாரம் செய்து வருகிறது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சிகளும் வானொலிகளும் பத்திரிக்கைகளும் அவரை வீர நாயகனாகச் சித்தரித்து வருகின்றன. தொலைக்காட்சிகளும் வானொலிகளும் அவ்வாறான பாடல்களை இடைவிடாது ஒலி ஒளிபரப்பி வருகின்றன. இதற்கு மாறாகச் செயல்படும் செய்தி ஊடகம் எதுவானாலும் ராஜபக்சேபாசிசப் படையின் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளானது. ஏற்கெனவே ராஜபக்சே கும்பலை விமர்சித்து எழுதிய பத்திரிகை ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்; ஒரு செய்தியாளர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார். மகிந்தாவை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா அதிபரானால் இலங்கையில் இராணுவ ஆட்சியே ஏற்படும் என்ற தொடர்பிரச்சாரத்துக்கு எதிராக, ""தற்போது மட்டுமென்ன ஜனநாயக ஆட்சியா நடக்கிறது, ஒரு சர்வாதிகார ஆட்சிதானே நடக்கிறது'' என்று எழுதிய குற்றத்திற்காக ""லங்கா ஈ நியூஸ்'' என்ற இணையதள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலியகெட தேர்தலுக்கு இருநாட்கள் முன்னதாக கடத்தப்பட்டு, அவர்பற்றிய விவரங்கள் இன்னமும் தெரியவில்லை. இதோடு வேறு மூன்று இணையதளங்கள் தடை செய்யப்பட்டன.

 

தமிழ் புலி ஆதரவு அமைப்பாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் சரத் பொன்சேகா ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்து விட்டதாகவும், அதில் புலிகளின் பழைய கோரிக்கைகளை ஏற்பதாக சரத் ஒப்புக் கொண்டதாகவும், இது ஒரு தேசத் துரோகம் என்றும் அந்த ஒப்பந்தத்தின் பிரதி என ஒன்றை அரசு அச்சகத்திலேயே அச்சிட்டு சிங்கள மக்களிடையே விநியோகித்துப் பொய்ப் பிரச்சாரம் செய்தது.

 

அவ்வாறான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருப்பதாக ஒப்புக் கொள்ளும் இரா.சம்பந்தனின் நேர்காணல் என்ற ஒரு புனைவை லங்காதீபா என்ற முதன்மை சிங்கள நாளேடு வெளியிட்டது. அதிபரின் முதன்மை ஆலோசகரென பாசில் ராஜபக்சேவே இதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கிறார். இந்தக் கற்பனைப்பேட்டியை எழுதிய ஊடகவியலாளருக்குப் பதவிஉயர்வு அளிக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதையும், சட்டவிரொதமாக பிரச்சாரச் சாதனங்கள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கும்படி தேர்தல் ஆணையாளர் விடுத்த பரிந்துரைகளை இலங்கை போலீசு மாஅதிபர் மகிந்த பாலசூரியா மதிக்கவே இல்லை.

 

தேர்தல் சட்டவிதி மீறல்களும் வன்முறைகளும் அதிகரித்தே வந்தபோதும், போலீஸ் மா அதிபரிடம் பலமுறை கோரியும் அவை குறையவில்லை என்பதால்,தேர்தல் விதிமுறை மீறல் குறித்த முறைபாடுகளை அனுப்ப வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு அறிவித்துவிடலாம் என்றார், தேர்தல் ஆணையாளர்; தேர்தல் விதிமுறைகளையே ரத்து செய்து விடலாம் என்ற விதிப்புபையும் செய்தார். அரசு ஊடகங்களைச் சார்பின்றி நெறிப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரி செயல்பட முடியாமல் போனதால், தேர்தல் ஆணையாளரால் விலக்கிக் கொள்ளப்பட்டார். தனது உத்தரவுகளை அரசு மதிப்பதில்லை என்பதால் தானே விலகிக்கொள்ளப் போவதாக எச்சரித்திருந்தார். இறுதியில் தேர்தல் முடிவு அறிவிப்பதற்கு முன்பு தேர்தல் ஆணையாளரும் அவரது மனைவியும் அதிபர் மாளிகைக்குள் அடைத்து வைக்கப்பட்டு, ராஜபக்சே கும்பலுக்குச் சாதகமான முடிவு அறிவிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டார்.

 

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மிரட்டல்களும் வன்முறைத் தாக்குதல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன. எதிர்க்கட்சியினரின் பிரச்சாரக் கூட்டங்கள், ஊர்வலங்கள் போலீசு துணையுடன் ஆளுங்கட்சிக் குண்டர்களால் தாக்கப்பட்டன. மக்களை அச்சப்படுத்தி வாக்களிப்பதைத் தடுக்கும் வகையில் தாக்குதல்கள் நடந்தன. எதிரணியினரின் செயலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அவர்களின் ஊர்வலங்களின் மீது ராஜபக்சே கும்பலின் குண்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் ஒரு பெண்மணியும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டனர்.

 

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள், இலங்கையின் வரலாற்றிலேயே மோசமான வன்முறைகளைக் கொண்ட தேர்தல் இதுதானென்று கூறியுள்ளன. இந்தத் தேர்தல் ஏற்றுக் கொள்ளத்தக்க ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட தேர்தலாக அமையவில்லை என்று பொது நலவாய (காமன்வெல்த்) நாடுகளின் தேர்தல் கண்காணிப்புத் தொடர்பான அறிக்கை கூறுகிறது.

 

ராஜபக்சே கும்பல் தனக்கு எதிராகத்தான் சிறுபான்மை இன மக்கள் வாக்களிப்பார்கள் என நம்பியதால், அவர்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்காகப் பல தாக்குதல்களை நடத்தியது. தேர்தலுக்கு முதல் நாளிரவு யாழ்குடா நாடு முழுக்க டக்ளஸ் தேவானந்தா, கருணா முதலிய துரோகக் குழுக்கள் மூலம் குண்டுகளை வெடிக்கச் செய்து பீதி கிளப்பியது. அவற்றில் 13 சம்பவங்கள் பெரிய அளவிலானது. தேர்தலைப் புறக்கணிக்கும்படி, புலிகளின் பெயரில் ஏராளமான துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு டக்ளசின் குழு யாழ்குடா நாடு முழுவதும் விநியோகித்தது. ராஜபக்சேவுக்கு எதிராகவும் சரத்துக்கு ஆதரவாகவும் ஈழத் தமிழர்கள் வாக்களித்து விடுவார்கள் என்பதால் இந்த உத்தி கையாளப்பட்டது. யாழ்குடாநாட்டில் தேர்தல் நாளன்று பொதுப் போக்குவரத்தை அரசு நிறுத்திவிட்டது. பயங்கரவாத அமைப்பான புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டால் நாட்டில் ஜனநாயகச்சூழல் திரும்பிவிடும் என்ற ராஜபக்சே உள்ளிட்ட சிங்கள, தமிழ்த் துரோக அரசியல் கட்சிகள் கூறி வந்தன. ஆனால், அதிபர் தேர்தல் வன்முறைகள் நிரம்பியதாகவும் 20 சதவீத தமிழ் மக்களே வாக்களிப்பதாகவும் அமைந்தது.

 

பல இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜபக்சே வெற்றி பெற்றிருப்பதால், இவ்வளவு பெரிய தேர்தல் தில்லுமுல்லுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று இந்தியாவிலுள்ள ""இந்து'' நாளேடு உட்பட ராஜபக்சே கும்பலின் விசுவாசிகள் சாதிக்கின்றனர். ஆனால், ராஜபக்சே கும்பல் கட்டியெழுப்பியிருக்கும் சிங்கள பாசிச பயங்கரவாத அமைப்பு மற்றும் சிங்கள  சிறுபான்மை இன அடிப்படையில் இலங்கையின் சிவில் சமூகம ;முழுவதும் அணிபிரிந்து நிற்குமாறு ராஜபக்சே கும்பல் அரசியலை நெறிப்படுத்திக் கொண்டு சென்றது ஆகியவை தாம் அதன் வெற்றியை உறுதிப்படுத்தின. ஈழத்தமிழர்கள் சிறுபான்மை முசுலீம்கள் மற்றும் மலையகத்தமிழர்கள், இந்த இனங்களின் துரோக அரசியல் தலைமையின் வற்புறுத்தலையும் மீறி மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதாவது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் எதிரணியினரின் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்து, மொத்தத்தில் அவர் 40 சதவீத வாக்குகள் பெறுமாறும், எஞ்சிய சிங்கள இலங்கை முழுவதும் ஒரு தலையாக மகிந்த ராஜபக்சேவுக்கு வாக்களித்து மொத்தத்தில் அவர் 58 சதவீத வாக்குகள் பெறுமாறும் செய்துள்ளனர்.

 

சிறுபான்மை இன மக்கள் எப்படியும் தமக்கு எதிராகவே வாக்களிப்பாளர்கள் என்று கருதியதால், சிங்களமக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் வாக்குகளை ஒருமுகமாக பெறவேண்டும் என்பதால்தான் மகிந்த ராஜபக்சே தேர்தல் பரப்புரையின் போது சிறுபான்மை மக்களுக்கு எதிராக நஞ்சு கக்கினார். சிறுபான்மை இன மக்களுக்கு எத்தகைய அதிகாரத்தையும் வழங்கப் போவதில்லை; அதற்கு வகை செய்வதாக உள்ள உடன்படிக்கைகளைக் கிழித்தெறிவேன் என்றார். ஈழத்தமிழின மற்றும் விடுதலைப் புலிகள் ஒழிப்புப் போரை வழிநடத்திய சிங்கள இராணுவத்தின் தலைமைத் தளபதியை சிங்கள தேசத்தின் துரோகியாகவும், சதிகாரனாகவும் மோசடியாளனாகவும், எதிரணியினர் அனைவரும் இத்தகையவர்கள் என்றும் சித்தரிக்கப்பட்டனர்.

 

""இலங்கையில் உள்ளது ஒரு இனப்பிரச்சினையே கிடையாது; முற்றிலும் பயங்கரவாதப் பிரச்சினைதான். அது யுத்ததத்தின் மூலம் தான் முறியடிக்கப்பட வேண்டும்'' என்பது தான் ராஜபக்சே கும்பல், சரத் பொன்சேகா மற்றும் ஜே.வி.பி. ஆகியோரின் உறுதியான நிலையாகும். இந்த அடிப்படையிலே தான் ராஜபக்சே கும்பலும் மற்றும் ஜே.வி.பி.யினரும் அரசியல் பரப்புரையை வெறியோடு நடத்தின. பாசிச பயங்கரவாத இரத்தவெறிப் போøர ஈழத் தமிழர்க்கெதிராக முப்படைத்தளபதி மகிந்தாவும் மற்றும் இராணுவத் தலைமைத்தளபதி சரத்தும் சேர்ந்தே வழிநடத்தினர்.

 

ஈழப் போர் வெற்றியை அதிபர் தேர்தல் மூலதனமாக்கிக் கொள்வதற்காக, அதன் ஏகபோக உரிமையாக்கிக்கொள்ள ராஜபக்சே கும்பல் எத்தனித்தது. அதைப் பங்கு போடப் போட்டியாளர்களாக சரத்தும் ஜே.வி.பி.யும் வந்தனர். சிங்கள வாக்காளர்களை மட்டும் நம்பி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று கணக்குப் போட்ட சரத், ஈழத் தமிழரின் ஆதரவைப் பெறுவதற்காக, ஈழப்போரின் இறுதி கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்களுக்கு ராஜபக்சே கும்பல்தான் காரணமென்றும், அதுகுறித்த விசாரணை வந்தால் அதை உறுதிசெய்து தாம் சாட்சியமளிக்கப் போவதாகவும் கூறினார். இது, போர் வெற்றிக்கு உரிமை பாராட்டுவது, அதேசமயம் போர்க் குற்றங்களுக்கான பழியைப் பிறர்மீது சுமத்துவது என்று இரண்டு குதிரைகளில் ஒரே சமயத்தில் சவாரி செய்வது போலாகிவிட்டது. விளைவு, தலைக்குப்புற வீழ்ந்து விட்டார்.

 

சரத்தின் இரட்டை நிலையைப் பயன்படுத்திக்கொண்ட ராஜபக்சே கும்பல், போர்வெற்றியில் அவர் பங்கு பாராட்ட முடியாது போரின் இறுதி நாட்களில் அவர் களத்தில் இருக்கவில்லை, வேறு களமுனை தளபதிகளே இறுதிப் போரை நடத்தினார்கள் என்றும், போர்க் குற்றங்கள் பற்றிப் பேசும் சரத் ஒரு தேச துரோகி, இராணுவ ஆட்சிக்கு சதி செய்தவர், ஆயுதக் கொள்வனவில் மோசடி செய்தவர் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி, சிங்கள இனவெறியை கிளப்பி ஆதாயம் தேடிக் கொண்டது. சரத் பொன்சேகாவை அரசியல் அரங்கில் இருந்து முற்றாக அகற்றிவிட முடிவு செய்து, மரண தண்டனைக்குரிய வழக்குப்போட்டு கைது செய்து, அவரது ஆதரவு இராணுவ அதிகாரிகளைக் களையெடுத்தது.

 

சிங்கள பாசிச இனவெறி அரசியல் இயக்கங்களிடையே ஏற்பட்டுள்ள இந்தப் பாரிய பிளவு, முரண்பாடு மோதல்களை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வதில் எஞ்சிய தமிழின அரசியல் இயக்கங்கள் தவறிவிட்டன. ஈழத் தமிழர், மலையகத் தமிழர் மற்றும் இசுலாமியர்களின் பெயரால் ராஜபக்சே கும்பல் அரசில் மந்திரி பதவிகளை சுவைத்துக் கொண்டிருக்கும் சிறுபான்மை இனத் துரோகத் தலைமை தொடர்ந்து அக்கும்பலுக்கு விசுவாசங்காட்டி வருகின்றன. எஞ்சியுள்ள சிறுபான்மை இனங்களின் அரசியல் தலைமைகளோ சிங்கள இனவெறி பாசிச சக்திகளின் இன்னொரு தலைமையாகத் தோன்றிய சரத் பொன்சேகாவை ஆதரித்தன.

 

சிங்கள இனவெறி பாசிசத்துக்கு எதிரான சிறுபான்மை இனங்கள் ஓரணியாக நிற்பதையே நடந்துமுடிந்த அதிபர் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதை ஒரு அரசியல் அணியாக ஒன்று திரட்டுவதோடு, ராஜபக்சே கும்பலின் பாசிச பயங்கரவாதத்துக்கு எதிராக சிங்கள சமூகத்தில் தோன்றக்கூடிய ஜனநாயக சக்திகளோடு ஜக்கியப்பட்ட இயக்கத்தை கட்டியமைப்பதுதான், இலங்கையில் ஒரு புதிய புரட்சிகர அரசியல் முன்னெடுப்புக்கு வழிவகுக்கும்.

 

• ஆர்.கே.

Last Updated on Friday, 02 April 2010 14:29