Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் நூதனக் கல்விக் கொள்ளை தி.க.வீரமணியின் ’சாதனை’

நூதனக் கல்விக் கொள்ளை தி.க.வீரமணியின் ’சாதனை’

  • PDF

அண்மையில் நாடெங்கிலும் 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் தகுதி நீக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 17 தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இவற்றுள் ஒன்றுதான், தி.க. வீரமணியின் ""பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்''.

இந்த கல்வி வியாபார நிறுவனத்தை 2007 ஏப்ரலில் ஆய்வு செய்த பல்கலைக் கழக மானியக் குழுவால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழுவினர், "இது கல்விநிறுவனம் போலவே இல்லை, தன்னார்வத் தொண்டுநிறுவனம் போல உள்ளது' என்று கூறி அங்கீகாரம் தரமறுத்தனர். பின்னர் பல "அற்புதங்களை' வீரமணியார் நடத்தி அங்கீகாரத்தை "வாங்கினார்'.

 

நிகர்நிலையாவதற்கு முன்னர், இக்கல்லூரியின் நிர்வாகப் பிரிவு இடங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் 62 ஆயிரம்தான். ""எங்கள் கல்லூரியில் சேர்ந்தால் லேப்டாப் இலவசம்'' என அறிவித்து ஆள்பிடித்த வீரமணி கும்பல், ஆண்டுக் கட்டணமாக வசூலித்து வந்ததோ ரூ. 1.35 இலட்சம். இக்கல்லூரி நடத்திய நுழைவுத் தேர்வை எழுதியவர்கள் 400 பேர்கள் மட்டும்தான். ஆனால், சேர்ந்த மாணவர்களோ இரண்டாயிரம் என்பதிலிருந்தே அதன் "நாணயத்தை'ப் புரிந்து கொள்ளலாம். நிர்வாகத்தில் வீரமணி, அவர் மனைவி, மகன் என குடும்பமே ஆண்டு அனுபவிக்கும் சொத்தாகத்தான் அது இருந்து வருகிறது. மேலும் இக்கல்லூரிக்குத் தேவையான நிலத்தைக் கூட அடியாட்கள், ஆள்கடத்தல், சித்திரவதைகள் மூலம்தான் பறித்தெடுத்தது, இக்கும்பல்.

 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் முதலாளிகள் பணமூட்டைகளுடன் உச்சநீதிமன்றம் சென்று தடையாணையும் பெற்றுவிட்டனர். நிகர்நிலைப் பல்கலைக்கழக முதலாளிகளின் கூட்டமைப்பில் இருக்கும் ஜெகத்ரட்சகன், ஏ.சி.சண்முகம் போன்றவர்களுக்கு தோன்றாத யோசனை வாய்க்கப்பெற்ற "தமிழர் தலைவர்', ""இது மக்கள் பல்கலைக்கழகம்... இதனைக் காக்க வழக்கு நிதி தாரீர்'' என இப்போது வசூலில் இறங்கிவிட்டார். ரூ. 5 லட்சத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது, இந்த வசூல்வேட்டை. பிக்பாக்கெட் அடித்து மாட்டிக் கொண்டவன் தனது வழக்குச் செலவுக்குக்கென்று, பறிகொடுத்தவர்களிடமே இன்னொருமுறை பிக்பாக்கெட் அடிப்பதைப் போல, முன்னாள் இந்நாள் மாணவர்களிடம் மட்டுமின்றி, தனது நிறுவனப் பணியாளர்களின் மாதச்சம்பளத்தில் 10 சதவீதத்தையும் இப்போது வழக்கு நிதிக்கெனப் பிடுங்கிக் கொண்டது, இந்த மோசடிக் கும்பல்.

 

கல்வி இலவசமாகக் கொடுக்கப்படவேண்டும் எனும் நோக்கத்தைக் கொண்டவர், தந்தை பெரியார். அவரின் வாரிசாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வீரமணியோ, தனது ""விடுதலை'' நாளேட்டின் தலையங்கத்தில் ""அரசு, அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களையும் எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துவிடுமானால், தாராளமாகச் செய்து கொள்ளட்டும்'' என்று யோக்கியவானைப் போல எழுதுகிறார். பின் எதற்காக வழக்காட வேண்டும்? ஏன் கட்டாய வசூல் நடத்தவேண்டும்?

 

மணி