Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் கிராமப்புற மருத்துவர்கள் பஞ்சுமிட்டாய்த் திட்டம்!

கிராமப்புற மருத்துவர்கள் பஞ்சுமிட்டாய்த் திட்டம்!

  • PDF

விவசாயம் போண்டியாகி, பெரும்பாலான கிராமங்கள் காலியாகிக் கொண்டிருக்கும் வேளையில், கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்காகப் புதிய திட்டமொன்றை அறிவித்திருக்கிறது, மைய அரசு. இதன்படி, கிராமப்புறங்களில் நிலவும் மருத்துவர்களின் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காகவே ""கிராமப்புறநலவாழ்வு பட்டப் படிப்பு'' (Bachelor of Rural Heath) என்ற பெயரில் புதிய அலோபதி (ஆங்கில) மருத்துவக் கல்வித் திட்டத்தை நாடெங்கும் தொடங்கத் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

 

""சில குறிப்பிட்ட வகை நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த மூன்றரை ஆண்டு கால அலோபதி மருத்துவப்பட்டப் படிப்பைப் புதிதாகத் தொடங்கப்படும் மருத்துவப் பள்ளிகள் (மருத்துவக் கல்லூரிகள் அல்ல) வழங்கும்;. கிராமப்புறங்களில் பிறந்த, +2 அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டும் இப்பட்டப்படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்;. இந்தக் கிராமப்புற நலவாழ்வு பட்டப்படிப்பு (BR HC)அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வரும் எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்புக்கு ஈடாகாது. இப்பட்டப் படிப்பை முடிக்கும் மருத்துவர்கள் அரசால் அறிவிக்கப்படும் கிராமப்புறங்களில் மட்டுமே மருத்துவ சேவை வழங்க அனுமதிக்கப்படுவார்கள்;. இந்தக் கிராமப்புற நலவாழ்வு மருத்துவர்கள் உடனடியாக மேல்படிப்பு படிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது'' என இந்தப் புதிய பட்டப்படிப்பு பற்றி பலவிதிகள் மைய அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.

 

இந்திய மருத்துவக் கழகம் (Indian Medical Association) உள்ளிட்டப் பல்வேறு மருத்துவர் சங்கங்களும், பயிற்சி மருத்துவர்களும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இந்தக் கிராமப்புற மருத்துவக் கல்வியை எதிர்க்கின்றனர். ""நகர்ப்புற மக்களுக்கு எம்.பி.பி.எஸ்.,எம்.டி., போன்ற உயர்கல்வி படித்த மருத்துவர்கள்; கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க இந்த அரைகுறை மருத்துவர்கள் என்ற பாகுபாடு திணிக்கப்படுகிறது; எம்.பி.பி.எஸ்., படித்துவரும் மாணவர்கள் மற்றும் அப்படிப்பைப் படித்து முடித்துவிட்டு அரசுவேலைக்காகக் காத்திருப்போரின் வாய்ப்புகளை இப்புதிய திட்டம் பறித்துவிடுகிறது'' என்பன உள்ளிட்டப் பல்வேறு காரணங்களை முன்வைத்து இத்திட்டத்தை இவர்கள் எதிர்த்து வருகின்றனர்.

 

கிராமப்புற மக்களுக்கு ஓரளவுக்காவது தரமான மருத்துவ சேவை கிடைக்கவேண்டும் என்றால், துணை, ஆரம்ப, சமூக சுகாதார மையங்களின் கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். ஆனால், மைய அரசு தேசிய ஊரக மருத்துவசேவைத் திட்டத்தின் மூலம் (சே;வடிணிணச்டூகீதணூச்டூ ஏழூச்டூவட ஆடிண்ண்டிணிண) கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் தனியாரைப் பங்கேற்க அனுமதிப்பது அரசு ஆரம்ப நலவாழ்வு நிலையங்களில் பயனாளிகள் கட்டணம் வசூலிப்பது(தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக இக்கொள்ளை நடைமுறைக்கு வரவில்லை) போன்ற நடவடிக்கைகளின் மூலம் கிராமப்புற மருத்துவ சேவையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்படிபட்ட நிலையில் அரசு கிராமப்புற மக்களின் மீது காட்டும் இந்தத் திடீர் கரசனம் நம்மைத் திடுக்கிடத்தான் செய்கிறது.

 

மைய அரசு 2008ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவெங்கும் 1,46,036 துணைநலவாழ்வு மையங்களும், 23,458 ஆரம்ப நலவாழ்வுமையங்களும், 4,276 சமூக நலவாழ்வு மையங்களும் இயங்கி வருகின்றன. எனினும், இது போதுமானதல்ல. 2001ஆம் ஆண்டு வெளியான ஒரு கணக்கெடுப்போடு இந்த எண்ணிக்கையை ஒப்பிட்டால்கூட, இன்னும் 20,486 துணை நலவாழ்வு மையங்களையும், 4,477 ஆரம்பநலவாழ்வு மையங்களையும், 2,337 சமூக நலவாழ்வுமையங்களையும் புதிதாக உருவாக்க வேண்டும்.

 

புதிய நலவாழ்வு மையங்களைக் கட்டுவது பற்றி மூச்சுவிட மறுக்கும் மைய அரசு, உடனடியாகக் கிராமப்புற மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என வரிந்துகட்டிக் கொண்டு நிற்கிறது. இதற்கு, நலவாழ்வு மையங்களில் மருத்துவர்கள் மற்றும் துணை நிலை மருத்துவஊழியர்கள் பற்றாக்குறையாக இருப்பதைக் காரணமாகக் காட்டுகிறது. நலவாழ்வு மையங்களில் காலியிடங்களை நிரப்பப் புதிதாக ஒரு படிப்புத் திட்டத்தையே ஆரம்பிப்பது விநோதமாக இருக்கிறது. ஏனென்றால், இது வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போன்றதாகும்.

 

புதிதாகப் படித்துவரும் கிராமப்புற மருத்துவர்களை நலவாழ்வு மையங்களில் நியமிக்க வேண்டும் என்றால், அதற்கு இன்னும் மூன்றரை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். இந்த மூன்றரை ஆண்டுகளுக்குள் இந்தியாவெங்கும் ஏறத்தாழ 40,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பை அரசு மருத்துவக்கல்லூரிகளில் படித்து முடித்துவிட்டு வெளியே வந்துவிடுவார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 90,000ஐத் தொட்டுவிடும். இதுவொருபுறமிருக்க, வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காகக் காத்திருக்கும் மருத்துவர்களும் கணிசமான எண்ணிக்கையில்உள்ளனர். இவர்களுள் ஒரு நாலாயிரம் மருத்துவர்களை நிரந்தர ஊழியர்களாக ஆரம்ப நலவாழ்வு மையங்களில் நியமித்தாலே, மருத்துவர்கள் பற்றாக்குறையைச் சமாளித்து ஓரளவுக்காவது உருப்படியான மருத்துவ சேவையைக் கிராம மக்களுக்குக் கொடுத்துவிட முடியும். ஆனால், அரசோ எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு ஈடாகாத இரண்டாம் தர மருத்துவர்களை உருவாக்கி, அவர்களைப் பதவியில் அமர்த்தத் திட்டம் போடுகிறது.

 

""எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய மனதார விரும்புவதில்லை. ஆரம்ப நலவாழ்வு நிலையங்களில் நியமிக்கப்படும் மருத்துவர்கள் பணிக்கு ஒழுங்காக வராமல் டிமிக்கி கொடுப்பதும் அதிகமாக இருக்கிறது'' எனக் காரணங்களை அடுக்கி வருகிறது, அரசு. இப்படிப் புலம்பும் அரசு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ""டிமிக்கி'' கொடுக்கும் மருத்துவர்கள் மீது பாரதூரமான நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, இதனைத் தனது பொறுப்பைத்தட்டிக் கழிப்பதற்கே பயன்படுத்தி வருகிறது.

 

அதேசமயம், தமது ஊதிய உயர்வு, பணி பாதுகாப்புக்குப் போராடும் மருத்துவர்களோ, கிராமப்புறநகர்ப்புற மக்களின் மருத்துவத் தேவைகளை அரசு திட்டமிட்டு புறக்கணிப்பதையும், தனியார்மயமாக்குவதையும் எதிர்த்துப் போராடுவதில்லை. மேலும் பணிக்குவராமல் ""டிமிக்கி'' கொடுப்பதை நலவாழ்வு மையங்களில் அரசு மருத்துவமனைகளில் வசதிகள் போதாமல் இருப்பதைக் காட்டி நியாயப்படுத்துகின்றனர். இதனால் அரசு மருத்துவர்கள் மீது மக்கள் அதிருப்தியடைந்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, கிராமப்புறமருத்துவர்கள் என்ற புதிய படிப்பை நியாயப்படுத்த முயலுகிறது, அரசு. பல்வேறு சமயங்களில் கம்பவுண்டர் கூட இல்லாமல் கிடக்கும் நலவாழ்வு மையங்களில் ஒரு ""மருத்துவர்'' இருந்தால், அது கிராம மக்களுக்குப் பெரிய விஷயம்தானே!

 

அரசு, எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாதென்றாலும், இவையெல்லாம் இரண்டாம் பட்சமானவை தான். எம்.பி.பி.எஸ்., படித்த மருத்துவர்களை பணியில் அமர்த்தினால் அவர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டும்; அதற்குப் பதிலாக கிராமப்புறமருத்துவர்களை உருவாக்கிவிட்டால், அவர்களைக் குறைவான சம்பளத்திற்குப் பணியில் அமர்த்த முடியும். இதன் மூலம், மருத்துவ சேவைக்கு ஒதுக்கப்படும் அரசின் நிதியைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்ற இலாபநட்டக் கணக்குதான் உண்மையான காரணம்.

 

அரசு மருத்துவமனைகளிலும் கிராமப்புற நலவாழ்வு மையங்களிலும் ஒப்பந்தக் கூலிகளாகவும், மாதச் சம்பளம் ரூ. 8,000 என்ற தொகுப்பூதியம் அடிப்படையிலும் எம்.பி.பி.எஸ்., படித்த மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பதுதான் தற்பொழுது அரசின் கொள்கை. பா.ம.க. அன்புமணி மைய அரசில் நலவாழ்வுத்துறை அமைச்சராக இருந்தபொழுது, கிராமப்புற நலவாழ்வு மையங்களில் மருத்துவர்களை நிரந்தரமாக நியமிப்பதற்குப் பதிலாக, கட்டாய கிராமப்புற சேவை என்ற திட்டத்தின் மூலம் எம்.பி.பி.எஸ்.,மாணவர்களின் பயிற்சிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீடித்து, அவர்களைக் கிராமப்புற அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்கும் வெகு புத்திசாலித்தனமான நடவடிக்கையை எடுக்க முயன்றார். பயிற்சி மருத்துவ மாணவர்களும், மருத்துவர்களும் இந்த இரண்டு திட்டங்களையும் எதிர்த்து வருகின்றனர். இந்த எதிர்ப்பை ஒரேயடியாக முறியடித்துவிடும் நோக்கமும் இந்த இரண்டாம்பட்ச மருத்துவர்களை உருவாக்கும் திட்டத்தில் உண்டு.

 

அரசு மட்டுமின்றி, தனியாரும் இந்தப் புதிய மருத்துவப் படிப்பை வழங்கும் பள்ளிகளைத் திறந்து கொள்ளலாம்;. இப்படிப்பிற்கு மாநில மருத்துவக் கவுன்சிலின் அனுமதியைப் பெற்றாலே போதும் எனச் சலுகைகள் காட்டப்பட்டுள்ளன. பிஸியோதெரபி, பார்மஸி போன்ற துணை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் மவுசு குறைந்துபோய், பல தனியார்கல்லூரிகள் இப்படிப்புகளை மூடிவருகின்றன. அவர்களுக்கெல்லாம் பம்பர் குலுக்கலில் பரிசு கிடைத்ததுபோல இப்படிப்பு அமையும்.

 

சோசலிச சீனாவில் 1960களில் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க வெறுங்கால் மருத்துவர்கள் (Barefoot Doctors) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டதை 2010இல் எடுத்துக்காட்டி, ஆதரவு தேட முயலுகிறது, மைய அரசு. சீனாவில் 1960களில் பயிற்சிபெற்ற மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்ததால், வெறுங்கால் மருத்துவர்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னாளில், மருத்துவக் கல்வி விரிவுபடுத்தப்பட்ட பின், அம்மருத்துவர்கள் மைய மருத்துவ நீரோட்டத்துடன் இணைக்கப்பட்டனர். ஆனால், இந்தியாவிலோ, தற்பொழுது ஆரம்ப நலவாழ்வு மையங்களில் நிரந்தரமாக நியமிக்கும் அளவிற்கு ஆங்கில மருத்துவர்கள் மட்டுமின்றி, சித்தா, யுனானி, ஹோமியோபதி போன்ற இதர மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது. மேலும், துணை நலவாழ்வுமையங்களில் நிரந்தரமாக நியமிக்கக்கூடிய அளவிற்கு துணை மருத்துவம் படித்து முடித்திருப்போரின் எண்ணிக்கையும் இருக்கிறது. இவர்களை நிரந்தரமாகப் பணியில் அமர்த்தும் எண்ணம்தான் அரசிடம் இல்லை.

 

தற்பொழுது இந்தியாவில் 1676 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலைதான் இருப்பதாகவும், இந்தநிலையை மாற்றி அமைக்கவே இத்திட்டத்தைக் கொண்டு வருவதாகவும் அரசு தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டால் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடும் என்பதில் எந்தளவிற்கு உண்மையுண்டோ, அதுபோலத்தான் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி கிடைத்துவிடும் என்பதும் கவர்ச்சிகரமான பொய்யாகும்.

 

இதுவொருபுறமிருக்க, இந்தத் திட்டம் ஏற்கெனவே சத்தீஸ்கர் மாநில அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுத் தோல்வியில் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால், இந்தத் திட்டம் ஆரம்ப நலவாழ்வுநிலையங்களில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை என்ற நிலையை, கிராமப்புறங்களில் இம்மருத்துவர்கள் ""கிளினிக்''குகளைத் திறந்து வைத்துக் கொண்டு கல்லா கட்டும் நிலையை வேண்டுமானால் உருவாக்கலாம். ஆனால், இத்திட்டத்தால் கிராமப்புற மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைத்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாமும் கிடையாது.

 

• ரஹீம்

 

வலது இடது போலிகளின் இரட்டை நாக்கு

 

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கம், சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான மருத்துவர்கள் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து இக்கிராமப்புற மருத்துவக் கல்வித் திட்டத்தை எதிர்த்து சென்னை நகரில் 21.02.2010 அன்று கருத்தரங்கமொன்றை நடத்தின. இக்கருத்தரங்கிற்கு வலது கம்யூனிஸ்டு கட்சியின் தேசியச் செயலர் ராஜாவும், இடது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.கே ரங்கராஜனும் அழைக்கப்பட்டிருந்தனர். டி.கே.ரங்கராஜன் அவசரமாக பெங்களூரு சென்றுவிட்டதால், கருத்தரங்கை வாழ்த்தி செய்தி அனுப்பியிருப்பதாகக் கூறப்பட்டது. கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய சி.பி.ஐ.இன் தேசியச் செயலர் ராஜா, பார்வையாளர்கள் இத்திட்டத்தை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தனியார்மயம் இந்தியாவில் புகுத்தப்பட்டது குறித்து ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்துகட்டி நீண்ட உரையாற்றினார். மேலும், தி.மு.க. அரசு இத்திட்டத்தைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியதைப் பாராட்டிவிட்டு, இதே கருத்தை டெல்லியிலும் சொல்ல முடியுமா? எனச் சவால் விட்டார். இப்படிச் ""சவடால்'' அடித்துப் பேசிய அவர் ஒன்றைச் சொல்லாமல் விட்டுவிட்டார்.

 

அவர் மறந்து போனதை, அவருக்குப் பின் பேசிய ஏ.ஐ.டி.யு.சி.யைச் சேர்ந்த ஏ.எம். கோபு போன்ற ""பெரியவர்களும்'', கருத்தரங்க அமைப்பாளர்களும் கூட சுட்டிக் காட்டவில்லை. அதனால் நினைவுபடுத்த வேண்டிய பொறுப்பு நம்மீது விழுந்து விட்டது.

 

சி.பி.ஐ.யும், சி.பி.எம்.மும் அண்ணன் தம்பிகளாக இணைந்து கொண்டு ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் அலோபதி மருத்துவத்தில் மூன்றாண்டு பட்டயப் படிப்பைத ;தொடங்குவதற்கான சட்டம் டிசம்பர் 16, 2009 அன்று "இடதுசாரி' கூட்டணி அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது (ஃபிரெண்ட் லைன், பிப்.26. 2010, பக்.117). தனியார்மயத்தை விளக்குவதற்கு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த விஷயங்களைக்கூட மறக்காமல் புட்டு வைத்தவருக்கு,கொல்கத்தாவில் நடந்த விஷயம் தெரியவில்லை என்றால், நம்பும்படியாகவா இருக்கும்? அவரது இந்த நினைவு மறதியை மருத்துவ மொழியில் ""செலக்டிவ் அம்னீசியா'' என்று அழைக்கலாம். அரசியல் மொழியில், நாகரிகமாகச் சொல்வதென்றால், இரட்டை வேடம் எனக் கூறலாம்.

Last Updated on Thursday, 01 April 2010 05:50