Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் எமது நட்சத்திர வாரம் பற்றிய முன்னோட்டம்

எமது நட்சத்திர வாரம் பற்றிய முன்னோட்டம்

  • PDF

15.03.2010 முதல் 21.03.2010 வரை எமது நட்சத்திர வாரம். இது எமது கிடைத்த மற்றொரு புதிய வாய்ப்பு. இதற்காக தமிழ்மணத்துக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவர்களின் நோக்கத்துக்கு ஏற்ப இதைச் சிறப்பாக நாம் பயன்படுத்த முனைகின்றோம்.  

 

தமிழ்மணம் எமக்கு 2005 ஆண்டு நடுப்பகுதியில் அறிமுகமானது. எம்மை பரந்த உலகுக்கு அது அழைத்துச் செல்லும் ஒரு காவியாகியது. இந்த வகையில் நாம் தமிழ்அரங்கம் என்ற  பிளாக்கர் ஊடாக கடந்த மாதம் வரை தமிழ்மணத்தில் உலாவினோம்.

 

கடந்த மாதம் முதல் மைய இணையத்தின் ஊடாக, அதாவது தமிழ்அரங்கம் ஊடாகவே, உங்களை நாம் சந்திக்கின்றோம்.

 

2005 நடுப்பகுதி முதல் கடந்த மாதம் வரை, அண்ணளவாக 2079 கட்டுரைகளை (2005 – 97, 2006 - 203, 2007 – 404, 2008 – 632, 2009 – 653, 2010 – 90) தமிழ்மணத்தில் கொண்டு வந்தோம். இதில் அண்ணளவாக 1000 கட்டுரைகள் புதிய கலாச்சாரம் மற்றும் புதியஜனநாயக கட்டுரைகளாகும். மிகுதி 1000யும் நான் எழுதியவை. மற்றும் சில எமது தோழர்களுடையது. இந்த வகையில் எம்மை மட்டுமின்றி, தமிழ் நாட்டில் மக்களுக்காக போராடிவரும் புதிய கலாச்சாரம் மற்றும் புதியஜனநாயகத்தையும் அறிமுகம் செய்தோம். இந்த வகையில் இலங்கை மற்றும் இந்தியாவில் அடிநிலை மக்களின் நிலையையும், அவர்களின் போராட்டத்தின் பாலான மாற்றுத்தளத்தையும் தமிழ்மணத்தில் நாம் கொண்டுவந்தோம். 

 

இப்படி எமது கட்டுரைகளை சுமந்து வந்த தமிழ்மணத்தின் பங்கு தனித்துவமானது. அது எமக்கு தோழனாக, நண்பனாக, காவியாக இருந்து, அதை பரந்த தமிழ் உலகின் முன் கொண்டு சென்றது.

 

நாம் எம் கருத்தைச் சொல்ல, பிரச்சாரத்தைச் செய்ய எந்தத் தடையையும் அது எமக்கு தரவில்லை. எந்த ஒரு விடையம் மீதும் தமிழ்மணம் எம்முடன் முரண்படவில்லை. அதாவது தமிழ்மணத்தின் சட்டதிட்டத்திற்கு மீறும் செயலாக எதையும் அவர்கள் காட்டவில்லை. இந்த வகையில் எமது 2000 கட்டுரைகளை தமிழ்மணம் எந்த ஊதியமுமின்றி காவிச்சென்றது. தமிழ்மணத்தைச் சார்ந்த நிர்வாகிகளின் கருத்துகளுடன் கூட, முரண்பட்ட தளத்தில் கடும் விவாதங்களை நடத்தி இருக்கின்றோம் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்;. தமிழ்மணம் அதில் தலையிடவில்லை என்பது, அதன் சிறப்பு அம்சமாகும்.  

 

தமிழ்மணம் எமது கருத்துகளால் சில நிர்ப்பந்தங்களைச் சந்தித்திருக்கலாம். குறிப்பாக புலிகள் தொடர்பான எமது நிலைப்பாடு மற்றும் பார்ப்பனியம் தொடர்பான எமது நிலைப்பாடுகள்.  தமிழ்மணத்துக்கு நெருக்கடியை கொடுத்து இருக்கலாம். எமக்குத் தெரியாது.

 

புலிகள் பற்றிய எமது கடும் விமர்சனங்கள், அரசு சார்பானது என்ற முத்திரையைக் குத்த புலி சார்பான கருத்தால் முடியவில்லை. தமிழ்மணத்தில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஈழத் தமிழ்மக்கள் என்றால் புலி என்று பேசி, புலிகள் ஆதிக்கம் பெற்ற தமிழ்மணத்தின் தளத்தில், சிறிரங்கன் மட்டும் அதை எதிர்த்து போராடிவந்தார். புலிக்கு எதிராக, தனக்கு பக்கத் துணையாக பல பெயரில் இணையங்களை வைத்திருந்தார். அவரின் தனிமையை இது தகர்த்துவந்தது.

 

இந்த நிலையில் தான் நாம் தமிழ்மணத்துக்கு வந்தோம். எமது வருகை அவருக்கு பக்கத் துணையானதுடன், எமக்கு இடையில் தோழமையை ஏற்படுத்த இந்தத் தமிழ்மணம் தான் உதவியது. தமிழ்மணம் தான், மீளவும் சிறிரங்கனை அறிமுகம் செய்து, தோழமையை ஏற்படுத்த உதவியது. திரும்பிப் பார்த்தால் ஆச்சரியம் தான்.

 

இலங்கைக்குள் தமிழ்மணம் மூலம் நாம் செல்ல முடிந்தது. எம்மை அவர்களுக்கு அறிமுகம் செய்தது. சில நல்ல இளம் தோழர்களைப் பெற்றுத் தந்தது. கருத்தியல் ரீதியாக புதிய தாக்கத்தையும், மாற்றத்தையும் அவர்கள் மேல் ஏற்படுத்த தமிழ்மணம் ஒரு காவியாக இருந்து அதற்கு உதவியது. 

 

இதை விடத் தமிழகத் தோழர்கள், நண்பர்கள் பலரை தமிழ்மணத்தின் ஊடாக பெற்றோம். நாம் கருத்துத் தளத்தில் பலமானவராக மாற, தோழமையே பக்கபலமாக இருந்தது.

 

மறுபக்கத்தில் எதிரிகளை உருவாக்கியது. எமக்கு எதிரான தனிப் பதிவுகளை சிலர் போட்டனர். நாம் எந்தக் கட்டுரை போட்டாலும் அதை அடுத்து துரோகி என்ற பதில் கட்டுரை அடுத்த நிரலில் வரும் வண்ணம், நாம் கடுமையாக தமிழ்மணத்தில் தொகுக்கப்பட்ட புலி ஆதரவு பிரிவினரால் வெறுக்கப்பட்டோம். தமிழ்மணத்தில் நாம் பல தளத்தில் பல எதிரிகளைச் சந்தித்தோம். பின்னோட்டங்களில் அவதூறுகள் முதல் துரோகிகள் என்ற, எத்தனையோ விடையங்களை நாம் எதிர்கொண்டோம்.

 

இவை அனைத்தும் எம் கருத்துகள் சார்ந்தது என்பதும், தனிப்பட்ட ரீதியில் நாம் அவர்களின் எதிரியல்ல. எம் கருத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் ஏற்பட்ட, எதிர்வினைகள் இவை. நாங்கள் தமிழ்மணத்திடம் இது தொடர்பாக எந்த ஆட்சேபனையைம் எழுப்பவில்லை. அவர்களிடம் இருந்தது இதுதான். அதன் அழிவு மூலம் அதை அது நிறுவியது.

 

நாங்கள் எம் கருத்துக்கான போராட்டத்தை நடத்தினோம், நடத்துகின்றோம். இது மனிதனை விழிப்புற வைக்கும் என்று நம்புகின்றோம். கருத்தியல் எதிரியைக் கூட, இது ஆட்டம் காண வைக்கும் என்ற நம்புகின்றோம்.

 

இந்த நிலையில் 15.03.2010 – 21.03.2010 வரையான எமது நட்சத்திர வாரத்தில் குறைந்தபட்சம், எனது 25 கட்டுரைகள் எனது பெயரில் தரவுள்ளேன். இதைவிட எமது இணையம் திரட்டும் தோழர்களின் கட்டுரைகள் தமிழரங்கம் என்ற பெயரில் திரட்டப்படும்.

 

1.15.03.2010 – 21.03.2010 வரையான சிறப்பு வாரத்தை நீங்கள் பார்க்க முடியும்.

 

2.மற்றும் இரயாகரன்  என்ற பெயரிலும்


3 மற்றவர்களுடையதை தமிழரங்கம்   என்ற பெயரிலும் பார்க்க முடியும்.

 

4.இவை தமிழ்மணத்தின் ஊடாக எம்மை பார்க்க வைக்கும்.

 

5.இவை தவிர உங்கள இணையத்தில் எம்மை தமிழரங்க  செய்தியோடை வைத்துப் பார்க்க முடியும்.

 

6.இவை அனைத்தும் எம் இணையத்துக்கு உங்களைக் கொண்டுவரும். இவை தவற விட்டதை, இலகுவாக அடையாளம் காண உதவும்;. எம் இணையத்தில் இதை இலகுவாகவும்,   நேரடியாகவும் பார்க்க முடியும்.  

 

நாம் 15.03.2010 – 21.03.2010 வரையான காலத்தில், பலதுறை சார்ந்த கட்டுரைகளை தரவுள்ளோம்.

 

இதில் குறிப்பாக நான்கு தொடர் அடங்கும்.

 

1.ஆபாசமும்! கவர்ச்சியும்! அதன் வக்கிரமுமா! மனித கலாச்சாரம்? ( 9 பாகம்) 

 

2.பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? (பல பத்து பாகங்கள்)

 

3.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை (இது புலிகளின் சிறையில் நான் சந்தித்த அனுபவங்கள் - பல பத்து பாகங்கள்)

 

4. இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - தூற்றுவதாலோ, திரிப்பதாலோ, திருத்துவதாலோ வர்க்கப் போராட்டங்கள் நின்று விடுவதில்லை (ஸ்ராலின் பற்றியது -  பல பத்து பாகங்கள்)

 

இதைவிட சில கட்டுரைகள் அடங்கும். இதில் மார்ச் 8 எனது வாரம் தொடங்க இருந்தாக தமிழ்மணம் முதலில் தெரிவித்து இருந்தது. இறுதியில் அதை ஒரு பெண்ணுக்கு கொடுக்க இருந்ததால், 15 திகதி எனது நட்சத்திர வாரம் தொடங்கியது. மாhச் 8 மையமாக வைத்து, பெண்ணியம் தொடர்பாக எழுதிய சிறப்பு கட்டுரை, சில திருத்தத்துடன் இக்காலத்தில் வெளிவரவுள்ளது. இங்கு வெளிவரும் நான்கு தொடரும் நூலுக்குரியது. அனைத்து விமர்சனங்களும், குறிப்பாக திருத்தத்குரியதாக வரவேற்கப்படுகின்றது. குறிப்பாக சாதியம் பற்றிய வரலாற்று அடிப்படையிலான இக் கட்டுரைகள் பற்றிய விமர்சனங்கள், மற்றும் தரவுகள் இதை செழுமைப்படுத்தி தவறுகளைத் திருத்தி வெளியிட உதவும்;. உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படுகின்றது.

 

தமிழ்மணத்தில் எமக்கு இடும் பின்னோட்டத்தை பார்க்கும் சிறப்பு வசதியும், வாக்களிக்கும் வசதியும் எமது இணையத்தை உருவாக்கி இயக்கும் மென்பொருளுக்கான சிறப்பு கருவிப்பட்டைகள் செயலிகள் தமிழ்மணத்திடம் இல்லை. இதனால் நேரடியாக எம் இணையத் தளத்தின் ஊடாகத்தான், பின்னோட்டத்தைப் பார்வையிட முடியும்.

 

தமிழ்மணம் கடந்த காலத்தில் வழங்கிய ஓத்துழைப்புக்கும், கடந்த மாதம் இந்த இணையத் தளத்தை நேரடியாக இணையத்தில் இணைக்க தமிழ்மண நிர்வாகிகள் எடுத்த அக்கறைக்கும் நன்றிகள். இதற்கு தமிழ்மணம் கேட்டதற்கு இணங்க உதவிய தமிழ்சசிக்கும் நன்றிகள் பல.

 

தமிழ்மணம் ஊடாக எம்முடன் பயணித்த வாசகர்களுக்கும், எமக்கு தோழமைபூர்வமாக எம்முடன் அக்கம் பக்கமாக நின்றவர்களுக்கும் நன்றிகள்.  எம்முடன் கருத்தியல் தளத்தில் முரண்பட்டவர்கள் எம்முடன் கருத்துத்தளத்தில் போராடுபவர்கள் என்ற வகையில், எம் கருத்துத் தளத்தை வளப்படுத்தினர். இந்த வகையில் அவர்கள் குறிப்பான நன்றிக்குரியவராகி விடுகின்றனர்.

 

கருத்து முரண்பாட்டுக்கு வெளியில், எமக்கு யாரும் தனிப்பட்ட எதிரியில்லை. நாங்கள் சமூக விடுதலைக்காக போராடுவதால், தனிமனித நலன் சார்ந்த வர்க்க சமூகத்தை முன்னோடியாக கொண்டவர்களுடனான முரண்பாடு தனிப்பட்ட முரண்பாடாக மாறுவது துரதிஸ்டம் தான். மாறாக சமூகத்தை நேசித்து, அதற்காக வாழக் கோருகின்றோம். அதை தான் எமது நட்சத்திர வாரத்தின் கோசமாக முன்வைக்கின்றோம்.

 

பி.இரயாகரன்
14.03.2010   

Last Updated on Sunday, 14 March 2010 08:06