Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து… பாகம் - 01

பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து… பாகம் - 01

  • PDF

அடிமைகளின் வரலாறு தான், இந்தியாவின் வரலாறு. யாரும் இப்படி இதை அணுகியது கிடையாது. சாதியம் என்பது, நிலவும் அடிமைகளின் மொத்த வரலாறு தான். இந்த அடிமைத்தனம், சாதியப் படிநிலையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

'..ஒரு சமூகத்தில் எந்த ஒரு தனிமனிதனும் எப்போதும் எதாவது ஒரு வர்க்க உறுப்பினராகவே இருக்கின்றான். இது ஒரு உலகளாவிய உண்மை. தொன்மையான இந்துச் சமூகமும் இவ்வுண்மைக்கு உட்படாத விதிவிலக்காக இருந்ததில்லை என்பது நாமறிந்த ஒரு உண்மையே." இதை கார்ல் மார்க்ஸ் சொல்லவில்லை. இது 24 வயதே நிரம்பியிருந்த இளம் அம்பேத்கரின் கூற்று. சோவியத் புரட்சி 1917 இல் உலகைக் குலுக்க முன்னம், 1916 இல் அம்பேத்கர் இந்திய சாதிய அமைப்பைப் பற்றிய தனது ஆய்வில் இதை முன்வைத்திருந்தார்.

 

இளம் அம்பேத்கரின் இந்தக் கூற்று ஊடாக இந்தத் தொடரில் அழைத்துச் செல்லுகின்றேன். இதுவரை சாதியம் குறித்து நிலவும் ஆய்வுகளையும், முடிவுகளையும், இந்த நூல் மூலம் நான் மறுதலிக்கின்றேன். 'சாதி என்பது அடைபட்டுள்ள ஒரு வர்க்கமே" என்று இளம் அம்பேக்கர் கூறியதன் அடிப்படையில், இதை மறுதலிக்கின்றேன்.

 

சாதியம் பற்றி ஆய்வுகள் பொதுவாக பார்ப்பனியத்தின் செல்வாக்குக்கு உட்பட்டதும், தனிச்சொத்துரிமை சமூக அமைப்பின் நியாயப்பாட்டுக்கும் உட்பட்ட முடிவுகளே, சாதியம் பற்றிய பகுப்பாய்வாக உள்ளது. பொதுவில் சாதிய சமூக பொருளாதார அடிப்படைகளுக்கு உட்பட்டு, அதை நியாயப்படுத்தி விடுகின்றது. இவற்றில் பல முன்கூட்டிய முடிவுகளின் அடிப்படையில், கற்பிக்கப்பட்டு அவை மறுபடியும் திணிக்கப்பட்டுள்ளது. வரலாற்று இயங்கியலின் அடிப்படையில் ஒரு சமூகத்தின் மாற்றங்களையும், அதற்கான சமூகப் பொருளாதார காரணங்களையும் ஆய்வு செய்ய மறுப்பதே, சாதியம் பற்றிய வரலாறாக எம்முன்னுள்ளது.

 

வருணம் என்பது சுரண்டும் வர்க்க அமைப்பாக, அதற்குள் தனிச் சலுகையின்றி அது இயங்கியது. இந்த இயங்கியல் போக்கை மறுத்த பார்ப்பனர், சுரண்டும் உரிமையை பரம்பரை உரிமையாக்கியதால் தான், வருணம் சாதியாக திரிந்தது. இங்கு தனிச்சொத்துரிமையிலான இயங்கியல் போக்கின் மீது, இயங்கியல் மறுப்பை கருத்துமுதல்வாதம் கொண்டு பார்ப்பனர்கள் மறுத்தனர்.

 

இதனால் வ(ருண)ர்க்க சமூகமோ சாதிய சமூகமாகத் திரிந்து பார்ப்பனியமாகியது. வேடிக்கை என்னவென்றால், பார்ப்பனிய எதிர்ப்பிலும் இயங்கியல் மறுப்பு கருத்துமுதல்வாத உள்ளடக்கத்தில் இயங்குவதுதான். தற்செயலாக சாதியில் பிறப்பவன் (உயர்சாதியில்), சாதிக்கு எதிராக சாதியை விட்டு விலகவும், அதற்கு எதிராக போராடவும் முடியாது என்கின்றது இந்த இயங்கியல் மறுப்பு. இதை அவர்கள் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலாக கொள்கின்றனர்.

 

இது சாதியை ஒழிக்க முடியாது, சாதிக்கு எதிராகப் போராட முடியாது என்ற இயங்கியல் மறுப்பை கருத்துமுதல்வாத உள்ளடகத்தில் வைக்கின்றனர். இதனால் வெறுமையாகி விடுகின்றது. உயர்சாதிக்கு எதிரான சாதிகளின் வன்முறையாக மாறுகின்றது. சாதியை விட்டு விலகவும், அதை ஒழிக்கவும் முடியாது என்ற இயங்கியல் மறுப்பை, சமூகப் பொருளாதார அரசியலாகத் திணிக்கின்றனர். இடையில் வந்த சாதி கொண்டிருக்கும் இயங்கியல் மறுப்பை, சமூக இயங்கியல் மூலம் ஒழித்துக்கட்ட முடியும். ஆனால் இயங்கியல் மறுப்பால் அது முடியாது.

 

சாதி பற்றிய ஆய்வு முறைகள், அதில் உள்ள கோளாறுகள், இதில் உள்ள திரிபுகள், இந்த விடையத்தை சிதிலமாக்கியுள்ளது. இந்தியாவின் சாதியம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்ட இளம் அம்பேத்கர், சாதியத்தின் வேரைக் கண்டறிவதில் மிக நெருங்கிச் சென்றவர். ஆனால் பின்னால் அதில் இருந்து விலகிச் சென்றுவிடு;கின்றார். இளம் அம்பேத்கராக 09.05.1916 அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில், சாதிய சமூக அமைப்பை நெருங்கிச் சரியாக பார்ப்பதில் ஒரு முன்னோடியாக இருந்திருக்கின்றார்.

 

ஆனால் தன் பிந்தைய ஆய்வு மற்றும் அரசியல் முடிவுகளில், இதைக் கையாள முற்படவேயில்லை. அவர் தனது பூர்சுவா வாழ்வியலுக்கு ஏற்பவும், பிரிட்டிஷ்சாருடன் அவர் கொண்டு இருந்த சமரச அரசியலுக்கு ஏற்பவும், அவர் தனது முன்னைய மிகச் சரியான எடுகோளைக் கைவிட்டு விடுகின்றார். அம்பேத்கரை முன்னிறுத்தும் பலரும், இந்த இளம் அம்பேத்கரின் முடிவைக் கண்டு கொள்வது கிடையாது. இதை பொதுவாக மூடிமறைத்தே, சாதிகளை அணுகினர், அணுகுகின்றனர். 

 

இளம் அம்பேத்கராக 1916ம் ஆண்டு அவர் ஆற்றிய உரையில் '.. எந்த வர்க்கம் முதலில் சாதி ஆக்கப்பட்டது என்பதை தீர்மானிப்பதே போதுமானது. சொல்லப்போனால் வர்க்கமும் சாதியமும் அடுத்தடுத்துள்ள அண்டை வீட்டுக்காரர்கள். அவற்றைப் பிரித்து நிற்பது மிகச்சிறிய இடைவெளி. சாதி என்பது அடைபட்டுள்ள ஒரு வர்க்கமே." என்றார். இளம் அம்பேத்கர் அன்று ஆற்றிய உரையில், இந்த விடயத்தை மிகவும் நுட்பமாகவும் தெளிவாகவும் நெருங்கிப் பார்க்கின்றார். வர்க்கம் ஊடாக சமூகத்தை அணுகாத, வர்க்கம் பற்றிய அறிவு இந்திய சமூகத்தில் இல்லாத காலத்தில், அம்பேத்கர் இதில் ஒரு முன்னோடியாக நெருங்கி இருந்தார். வர்க்கம் ஊடாக இந்திய சாதிய சமூகத்தைப் பார்க்க முனைந்தார். வர்க்கத்தைக் கடந்து, சாதியைப் பார்க்க முடியாது என்றார்.

 

அவர் அந்த உரையின் தொடர்ச்சியில் 'ஆக சாதியின் தோற்றுவாய் பற்றிய நமது ஆய்வு என்பது இந்த வேலியை தனக்குத்தானே எழுப்பிக்கொண்ட வர்க்கம் எது என்னும் வினாவுக்கு விடையளிப்பதாக இருத்தல் வேண்டும்" என்றார். இப்படி மிகச் சரியாகத் தான், இளம் அம்பேத்கர் சாதியுடன் போராடத் தொடங்கினார். வர்க்கத்தை வேலியிட்ட போதுதான், சாதியம் உருவாகியது. ஆனால் இதை அவர் தெளிவுபடுத்தவில்லை என்ற போதும், மிக நுட்பமாகவே அதை வெளிப்படுத்துகின்றார்.

 

சாதியம் பற்றிய தனது பிந்தைய ஆய்வுகளில், அம்பேத்கர் உட்பட யாரும் தொடாத ஒரு மையமான விடையம் இது. மேலும் அவர் தனது உரையில் '..இக் கேள்விக்கு விடை இந்தியா எங்கிலும் சாதிகள் எப்படி வளர்ந்தன, விரிந்து பரந்தன என்னும் புதிரை தௌ;ளத்தெளிவாக்க நமக்குத் துணை நிற்கும். கெடுவாய்ப்பாக இக்கேள்விக்கான பதிலொன்றும் என் சக்திக்கு உட்பட்டதாக இல்லை." என்கின்றார் இளம் அம்பேத்கர்.

 

இதற்கு பிந்தைய வரலாற்றிலும், சாதிய ஆய்வுகளிலும், யார் இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்? இதற்கு வெளியில் தான் அம்பேத்கர் உட்பட, பலரும் பயணித்துள்ளனர். இப்படி சாதியத்தின் தோற்றத்தை திரித்துப் புரட்டியதே, சாதிய பற்றிய புரிதலாகவும், சாதியம் பற்றிய  தத்துவங்களாகவும்;; உள்ளது.

 

கேள்வியைக் கேட்ட அம்பேத்கர், அதே உரையில் 'இக் கேள்விக்கு நான் சுற்றி வளைத்தே விடையளிக்க முடியும்." என்கின்றார். அவர் தனது வாழ்நாள் முழுக்கவே, இப்படி சுற்றி வளைத்து விடுகின்றார். அவர் மட்டுமல்ல, சாதியம் பற்றிய ஆய்வுகள் அனைத்தும், இதைத் தான் செய்துள்ளது, செய்துவருகின்றது.

 

சுற்றிவளைக்க வெளிக்கிட்ட அம்பேத்கர், அதே உரையில் 'பிராமண வர்க்கம் ஏன் தன்னைத் தானே ஒரு சாதியாக வேலியிட்டுக் கொண்டது என்பது முற்றிலும் வேறான கேள்வி." என்று கூறி, அந்த விடையத்தை சுற்றி வளைத்ததுடன் அதை விலகி விட்டு விலகிச் செல்லுகின்றார். 'பிராமண வர்க்கம் ஏன் தன்னைத் தானே ஒரு சாதியாக வேலியிட்டுக் கொண்டது"? இதற்கு அம்பேத்கர் உட்பட, பலரும் ஏன் பதிலளிக்க முனையவில்லை.

 

பிராமண வர்க்கம் ஒரு சுரண்டும் வர்க்கம் என்பதால் தான், அது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேலியிட்டுக் கொண்டது. இதை அம்பேத்கர் சொல்ல மறுப்பதுதான், இதல் உள்ள சுற்றி வளைப்பு. இதை சொல்ல மறுத்து, அதை வேறான கேள்வியாக்கிபடி, இதில் இருந்து அம்பேத்கர் விலகிச் செல்லுகின்றார். 

 

நாம் இந்த நூல் மூலம் இதை அணுகுகின்றோம். சுற்றி வளைக்காது விடையத்தை ஆராய்வதும், இதை தெளிவாக்குவதும், அவசியமானதாக உள்ளது. சாதி எப்படி, எந்த நிபந்தனைகளில், ஏன் தோன்றியது என்பதை தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது. இதனால் கடந்தகால சாதியம் பற்றிய பல முடிவுகளையும், கற்பனைகளையும் இயல்பாகவே மறுதலித்து விடுகின்றது.

 

சாதியம் பற்றிய ஆய்வுகளோ பல எழுந்தமானதாக இருக்கின்றது. அவை கற்பனைக்கு உட்பட்டதாக இருக்கின்றது. இவை எதுவும் தெளிவுபடுத்தப்படாத புதிராக இருக்கின்றது. இதைத் தேடிய போது, சாதியம் பற்றிய சில நூறு நூல்களை படிக்க வேண்டியேற்பட்டது. இறுதியாக நான்கு வேதங்களையும், அர்த்தசாத்திரத்தையும் முழுமையாக படிக்க வேண்டியேற்பட்டது. இதன் மூலமே சாதியின் தோற்றத்தையும், அதன் உண்மைகளையும் துல்லியமாக அணுகவும், அதை வெளிக்கொண்டு வரவும் முடியும் என்றும் கருதினேன்.

 

இவற்றை நான் படித்தபோது, ஆரிய-வேத மக்கள் பற்றிய பொதுவான மதிப்பீடே தவறாக கற்பிக்கப்பட்டு இருப்பது தெளிவாகியது. இப்படி அனைத்தையும் தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது.

 

இந்த வகையில் இளம் அம்பேத்கரின் ஆய்வுகளின் அடிப்படையில், அதை சரி செய்தபடி சாதியத்தின் வேரை அடையாளம் காணமுடியும். சாதியம் தோன்ற முன்னும் தோன்றிய பின்னுமாக, சாதிய வரலாற்றை அதன் சமூக பொருளாதார உள்ளடகத்தில் இருந்து இதை புரிந்துகொள்ள முனைவோம்.

 

தொடரும்


பி.இரயாகரன்

 

 

Last Updated on Thursday, 18 March 2010 19:53