Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் மனிதத் தன்மைகள் ஒன்றுக்கொன்று எதிரானதா? : மனித கலாச்சாரம் பாகம் - 09

மனிதத் தன்மைகள் ஒன்றுக்கொன்று எதிரானதா? : மனித கலாச்சாரம் பாகம் - 09

  • PDF

சுற்றிச் சுற்றி கலாச்சாரம் என்ற பெயரால், மொழி என்ற பெயரால், நாம் பாதுகாக்க முனைவது எதை? உண்மையில் எமது மனிதத்தன்மையற்ற பண்பைத்தான். மனிதத் தன்மை என்பது என்ன? மனிதத் தன்மையற்ற அனைத்தையும் எதிர்ப்பது தான், மனிதத் தன்மை. மனிதாபிமானம் என்பது, மனிதத்தன்மையற்ற சமூகத்தின் இருப்பினால் உருவாகின்றது. இதை நாம் புரிந்து உள்வாங்குவது கிடையாது. மேலெழுந்தவாரியான, மனஉணர்வுகளாகவே, அவை எமக்குள் குறுகி, மிகக் குறுகிய உணர்வாக பிரதிபலிக்கின்றது.

இந்த வகையில் இன்று பெண்ணின் எல்லையில் காணப்படும் பண்பாட்டு, கலாச்சாரக் கூறு சார்ந்த சமூக முரண்பாடுகள், எமது மனிதத்தன்மையற்ற போக்கின் மொத்த விளைவாகும். இது இரண்டு தளத்தில் பிரதிபலிக்கின்றது.

1. ஒருபுறம் பெண் பற்றி நுகர்வு சந்தை உருவாக்கும் ஆபாசம் கவர்ச்சி சார்ந்த பண்பாடு கலாச்சாரம் ஊடாக உருவாகின்றது.

2. மறுபுறம் பெண் பற்றிய குறுகிய எதிர்நிலை மனப்பாங்கு ஊடாக உருவாகின்றது.

இந்த விவகாரங்களை அடிப்படையில் புரிந்து கொள்வது மிகவும் சிக்கலுக்குரியது. இரண்டு கூறுகள் இதில் இருப்பதை தெரிந்து கொள்வதும், அதை மறுத்து சிந்திப்பதற்கும் எமக்கு விமர்சன மனப்பாங்கு இருக்கவேண்டும். மாறாக சரியானதை வைக்கும் சுய சமூக ஆற்றல் இருக்கவேண்டும். பொதுவாக மாறாவகைப்பட்ட கிளிப்பிள்ளைகளாக வாழுகின்ற சமூகப் போக்கில், ஆதிக்கம் வகிக்கும் நடைமுறையில் தொங்கியபடி இழுபடுவதே சமூகத்தின் பொதுபுத்தி மட்டமாக உள்ளது. இப்படி அங்குமிங்குமாக இடறியடித்தபடி வாழ்கின்ற வாழ்வை பெருமையாக கருதி, நியாயப்படுத்துகின்ற சமூக இயக்கத்தின் எடுபிடிகளாக இருப்பதில் பெருமைப்படும் மனித மனப்பாங்கே, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

நாம் என்றும் எமது மனப்பாங்கு சார்ந்த பிரமைகள் ஊடாக கற்பிக்கும் ஒரு முடிவுகளை வந்தடைந்த நிலையில், எதையும் தெளிந்து உள்வாங்குவதையும், விமர்சனம் செய்வதையும் மறுதலிக்கின்றது. நிலவுகின்ற சமூகத்தின் போலித்தனத்தை, திறந்த ஒரு வெளியில் போட்டு உடைப்பதை மறுக்கின்றது.

உதாரணமான பெண்ணின் உடை பற்றி, இரண்டு தீவிரமான கலாச்சாரம் பண்பாடு சார்ந்த மனப்பாங்கில் சிக்கிக்கிடப்பதன் ஊடாக, இதன் மீதான பார்வைக்குறைபாடு சமூகக் குறைபாடாகின்றது. ஒருபுறம் கவர்ச்சி, ஆபாசம் என்ற வக்கிரப்படுத்தும் நுகர்வுப்பண்பாடு. மறுபுறம் அடக்க ஒடுக்கமான பெண் என்ற எல்லைக்குள், பெண்ணின் மீதான எதிர்நிலைப்பாடு. ஆணாதிக்க அமைப்பின் பெண் பற்றிய சமூக நோக்கின் எல்லைக்குள், இப்படி செயற்படுகின்றது. அறிவுபூர்வமாக இந்த விடையம் அணுகப்படுவதில்லை என்பதே, இதில் உள்ள முக்கியமான விடையமாகும். இங்கு மனிதப் பண்புகள் தீவிரமான மறுப்புக்குள்ளாகின்றது.

பெண்ணை உடல் கவர்ச்சி ஊடாக அணுகும் சமூக மனப்பாங்கு என்பது மனிதப்பண்பற்ற நுகர்வு சதைக் கலாச்சாரமாக உள்ளது. மறுபக்கத்தில் மனிதத் தன்மையற்ற வகையில், பெண்ணின் மீதான அடக்குமுறையூடாக, பெண் மீதான ஒழுக்கம் திணிக்கப்படுகின்றது. இது அறிவியல் பூர்வமான விவாதம் மட்டுமின்றி, விமர்சனம் கூட. ஆணாதிக்க சமூக அமைப்பு கொண்டுள்ள மனப்பாங்கில், ஆபாசமும், நேர் எதிர் மனப்பாங்கில் அடக்க ஒடுக்கமான பெண் என்ற சமூகப் பார்வைகளும் ஆதிக்கம் வகிக்கின்றன. இந்த நோக்கில் இருந்து, இதை தீவிரமாக விமர்சனம் செய்து, சமூகத்தை சிந்திக்க தூண்டுவது மட்டும் தான் சரியான சிந்தனை முறையாகும்.

அறிவியல் பூர்வமாக ஆண் ஏன் உடல் தெரிய, ஆபாசமாக உடுப்பை அணிய மறுக்கின்றான். சமூகம் ஏன் அதை மாற்றத்துக்குள்ளாக்கவில்லை. ஆணாதிக்க அமைப்பு ஆண் சார்ந்து இதை அனுமதிக்கவில்லை. பெண் மீது இது தீவிரமாக மாறுகின்றது, திணிக்கின்றது. பெண் சுயமற்ற ஆணாதிக்க அமைப்பில், அதன் எடுபிடியாக காவியாக இருப்பதை ஆணாதிக்க அமைப்பு உறுதி செய்கின்றது. ஆணாதிக்க அமைப்பில், பெண் தீவிரமான மாறுகின்ற அமைப்பின் கலாச்சாரத்தின் ஊடகமாகின்றாள்.

இந்தப் போக்கில் இருந்து சமூகம் விடுபட்டேயாக வேண்டும். ஒரு முரண்நிலையாக, பெண்ணிணை அடக்கவொடுக்கமாக அடிமைப்படுத்தும் மூடிக்கட்டிய பெண்ணை கோரும் ஆணாதிக்க சமூகம், ஆணாதிக்க ஆபாச கலாச்சாரத்தின் ரசிகனாக இருப்பதையும், அது ஒரே நேர்கோட்டில் இருப்பதையும் பார்க்கின்றோம். எந்த எதிர்வினையும் அதை மாற்றுவதை கோருவதில்லை. ஒட்டுமொத்தமாக இந்த கலாச்சாரத்தின் சமூக கூறுகளை மாற்றப் போராட வேண்டும்.

இதேபோல் திருமணத்தை எடுத்தால், நுகர்வுச் சந்தை பெண்ணை விபச்சார நிலைக்கு தள்ளிவிட்டது. சமூகப் பொதுத்தளத்தில் பாலியல் என்பது, வெறும் சதை நுகர்வாக, அதுவும் பாலியல் அனுபவிப்பாக மாற்றிவிட்டது. சமூகத்தின் கூட்டான சமூக மனப்பாங்கை, இது தீவிரமாக மறுக்கின்றது. மறுபக்கத்தில் பெண்ணை பாலியல் அடிமையாக மாற்றி, ஒரு ஆணின் சொத்தாக விபச்சாரியாக இருக்க கோருகின்றது. ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் பாலியல், இப்படி இரண்டு தளத்தில் பந்தாடப்படுகின்து.

இதில் வேடிக்கை என்னவென்றால் பாலியல் கலாச்சாரம் என்பது நுகர்வதற்குரிய ஒன்றாக உலகமயமாதல் சந்தை மாற்றிவிட்டது. மறுபக்கத்தில் அது மொழி, இனம், நிறம், சாதி என்ற குறுகிய எல்லைக்குள் பெண் வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றது. அதற்குள் பெண் திணிக்கப்படுகின்றாள். இப்படிக் கோருபவர்கள் உலகமயமாதலின் நுகர்வுப் பண்பாடு சார்ந்த கலாச்சாரத்தின் கூறுகளாக இருந்தபடி, பெண்ணை நுகர்வு பண்பாட்டுக்கு எதிராக வாழக்கோருவது இதன் முரண்நிலையாகும்.

ஒருபுறம் நுகர்வுக் கலாச்சாரம் வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறுகின்றது. மறுபுறம் இதற்கு எதிராக கட்டிப்போட்டு ஒழுக்கம் என்கின்றது. உண்மையில் இங்கு இதன் பின் பிரதிபலிப்பது, மனிதத்தன்மையற்ற சமூகக் கூறுகள் தான். மனிதர்களுக்கு இடையிலான இயல்பான இணக்கமான அம்சங்கள், ஆபாச கலாச்சாரத்தாலோ, அடக்கியொடுக்கும் பண்பாட்டு கலாச்சாரத்தாலோ, எந்தவகையாலும் யாராலும் நியாயப்படுத்திவிட முடியாது.

இந்த சமூக முரண்நிலையை சதா வாழ்க்கையில் சந்திக்கும் போதும், இந்த உண்மை உறைப்பதில்லை. அது வெறும் சம்பவங்களாகின்றது. தனிப்பட்ட விடையங்களாக கூனிக் குறுகிவிடுகின்றது. அவை மற்றவனின் விவகாரங்களாகவும் குசுகுசுப்பாகவும் மாறிவிடுகின்றது. ஆனால் அதைச் சுற்றி முழு சமூகமும் நீக்கலற்று இயங்குகின்றது. இதற்குள் சமூகத்தின் அனைத்துக் கூறுகளும் முரண்படுகின்றது. இது பற்றிய சமூகத் தெளிவு இன்மையால், இவை சமூக இயக்கமாக வெளிப்படுவதில்லை. இதை பற்றிய விவாதங்கள் கருத்துகள் கூட, இந்த எல்லையைத் தாண்டி பிரசவிப்பது என்பது இலகுவான ஒன்றாகவுமில்லை.

உண்மைக்கு நேர்மாறாக எமது கற்பனையான முரண்நிலை விருப்பங்கள், உண்மை சார்ந்த முரண்நிலைக்குரிய கூறை மறுதலிக்கின்றது. உலகமயமாதல் வரவும், அதன் சீரழிவு சார்ந்த கலாச்சார பண்பாடும், தலைமுறைக்கு இடையில் அதீதமான மோதலை அதிகப்படுத்தியுள்ளது. வாழ்க்கை அனுபவமற்ற, உழைப்பை அறியாத குழந்தைகளின் உணர்வுகளை நச்சுப்படுத்தி நுகர்வுவெறிக்குள் நகர்த்தும் உலகமயமாதல், சமூகத்தை தனிஅலகுகளாக உடைத்துப் போடுகின்றது. ஒரு குடும்பம், ஒரு சமூகஅலகு என்று நீடித்த பரஸ்பர சமூக இருப்பு இப்படியாக நலமடிக்கப்படுகின்றது. சுயநலம் கொண்ட, தனிமனித நலனை முன்னிறுத்துகின்ற நுகர்வுக் கலாச்சாரம், இயல்பில் குடும்ப அலகுகளை உள்ளீடாகவே சிதைக்கின்றது. இந்த தனிமனிதவாதம் என்பது, தனிமனித நுகர்வுவெறி சார்ந்த கலாச்சாரமாக இருக்கின்றது. இது மற்றைய மனிதனுடன் கூடி வாழ்தல் என்ற, சமூகத்தின் இயற்கை சார்ந்த உணர்வையும், கடமையையும் மறுதலிக்கின்றது. சமூக அடிப்படையை மறுதலிக்கும் போக்கு, புதிய தலைமுறையில் அதீதமாக பிரதிபலிக்கின்றது. பெற்றோர் குழந்தைகளுக்கு செய்யும் இயற்கையான சமூகக் கடமைகள் பற்றிய கண்ணோட்டம், படிப்படியாக குழந்தைகளை பெறாமை என்ற நுகர்வுக் கண்ணோட்டமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. குழந்தையை பெற்றோர் அல்லது குடும்ப அலகைச் சேர்ந்தோர், குழந்தையால் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை என்று சலித்துக்கொள்கின்றனர். தனிமையும், தனிமனித வாதங்களும் சமூக செயல்கள் மீது குதறுகின்றது.

இதன் மறுபக்கத்தில் புதிய தலைமுறை, முதிர்ந்த பெற்றோருக்கு செய்யவேண்டிய சமூகக் கடமையை மறுதலிக்கின்றது. உலகமயமாதல் விதிப்படி சமூகக் கடமையைச் செய்தல், நுகர்வுக்கு தடையாகவே இருக்கின்றது. சமூகப் பாதுகாப்புகளைப் பெற்றதாக நம்பப்படும் மேற்கில் கூட, உழைத்து வாழ முடியாத முதிர்ந்த தலைமுறையின் சமூக பாதுகாப்பு என்பது, வாழமுடியாத எல்லையில் அற்பத்தனமானதாக உள்ளது. இந்த நாடுகளில் குறைந்தபட்ச கூலியின் அரைவாசியே, சமூக பாதுகாப்பு நிதியாக (ஒய்வூதிய நிதியாக) வழங்கப்படுகின்றது. உழைப்பு ஆற்றலை இழந்த சமூகத்தை இப்படி மூலதனம் கையேந்தி வாழும் நிலைக்கு தரம் தாழ்த்தியுள்ளது. குழந்தைகள் இந்த பெற்றோரை இட்டு அலட்டிக் கொள்ளாத வகையில் நுகர்வு வெறிக்குள், அவர்களின் சமூக உணர்வுகள் மலடாக்கப்பட்டுள்ளது. ஒருவனை ஒருவன் புடுங்கித் தின்னும் வாழ்க்கை முறை தான், உலகமயமாதல் கலாச்சாரம். இது கவர்ச்சியால், ஆபாசத்தால் அழகுபடுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையை மாற்ற நாம் என்ன செய்யப் போகின்றோம்?

மக்கள் சமூகமாக கூடிவாழும் சமூக உணர்வை, எப்படி எந்த வழியில் நாம் மீளப் பெறப் போகின்றோம்? என்பதுடன் தொடர்புடையது.

மக்கள் மக்களாக ஒன்று இணைவதைத் தவிர, வேறு மாற்று வழி கிடையாது. சக மனிதனை ஒடுக்காது இருக்க முதலில் நான் போராடுவது அவசியம். மனித்தன்மையுள்ள மனிதனாக நான் என்னை இனம் காண்பது, அதற்காக சக மனிதனையும் வென்று எடுப்பதும், கற்பிப்பதும் அவசியம். இந்த வகையில் மனிதத்தன்மையற்ற அனைத்தையும் எதிர்த்துப் போராடுவது அவசியம். இது மனிதனாக இருக்கும் ஒவ்வொருவனினதும் முன்னுள்ள சமூகக் கடமையாகும்.

முற்றும்.

பி.இரயாகரன்

8.சந்தைக் கலாச்சாரமும், உழைப்புக் கலாச்சாரமும் : மனித கலாச்சாரம் பாகம் - 08


7.மனித விழுமியங்களையா கலை உற்பத்தி செய்கின்றது? : மனித கலாச்சாரம் பாகம் - 07

Last Updated on Wednesday, 07 April 2010 06:05