Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் காடுகளைக் காப்பாற்ற நிலம் அதிராதோ.. உறக்கம் கலையாதோ?

காடுகளைக் காப்பாற்ற நிலம் அதிராதோ.. உறக்கம் கலையாதோ?

  • PDF

அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஒரு தேநீர்க் கடை. தொண்டையை நனைக்கவும், பேசியும் ஊதியும் உலர்த்தவும் விரும்பும் நண்பர்கள் கேண்டீனை விட்டு அங்கு செல்வது வழக்கம். 

ன்று தேநீர்க்கடையில் சில நண்பர்கள் வேலை நிலைமைகள், ஊதியக் குழு, வருமானவரி என்ற அவர்களின் உலகப் பிரச்சினைகளை அலசிக்கொண்டிருந்தனர்.  ”அம்மாவப் பொட்டியால அடிச்சிட்டு மேலப் போயிட்டான்..யா சிதம்பரம், நல்லவேள அவனை நிதியமைச்சராக்குல, உள்துறை அமைச்சருன்னு உக்கார வச்சுட்டாங்க, நாம பொழச்சோம் ..” என்ற அவர்கள் பேச்சின் இடையில் ஒரு சந்து கிடைத்தது, நானும் சற்று உள் நுழைந்தேன்.

என்னங்க அப்படி சொல்லிட்டீங்க.. என்று நான் ஆரம்பிப்பதற்குள், ”அதுக்கில்லீங்க, பிரணாப் முகர்ஜி பெங்கால்காரன்; காங்கிரஸ்காரனா இருந்தாலும், பெங்கால் ரத்தமில்ல, அவங்கள்ளாம் ஒரு டைப்பு, ஏதாச்சும் நாலு நல்லது செய்யிலன்னாலும் கெடுக்க மாட்டாங்கள்ள”, என்று தன் அபிப்ராயத்தைச் சொன்னார் நண்பர்.  அபிப்பிராயங்களுக்கு எல்லாம் அடிப்படை தேவையா என்ன? சிறு மாற்றமும், அதைத் தொடர்ந்து வழக்கமான ஒரு எதிர்பார்ப்பும் போதாது?  பேச விரும்பும் விசயத்தில் இருந்து விலக வேண்டாம் என்று ஒரு புன்னகையில் அந்த அபிப்பிராயத்தைப் புதைத்தேன்.  “ நான் அதுக்கு சொல்ல வரலீங்க, சிதம்பரம் என்ன சாதாரண ஆளா, இல்ல, உள்துறைன்னா என்ன சும்மாவா?…” எனக் கேட்டு முடிப்பதற்குள் “நரி வலம் போனா என்ன, இடம் போனா என்னங்க, நம்பள விழுந்து புடுங்காம இருந்தா சரி”  என்றார் நண்பர். மற்றவர்களும் புன்னகைத்தனர். தொடர்ந்து.. ”போனாலும் போனான், நல்லா செருப்படி பட்டான். நம்மளாலதான் அடிக்க முடியல, சர்தார்ஜீல்ல.. சந்தோசமா இருந்தீச்சு” என்றார் அவர்.

நாங்கள் எல்லோரும் நகைக்க, சிறு மௌனத்திற்குப் பின் விசயத்துக்கு வரலாம் என்று, ”சரி, இந்த காட்டு வேட்டை பற்றி என்ன நினைக்கிறீங்க”, என்று கேட்டேன்.  அது என்னது காட்டுவேடை என்றார் ஒருவர். மற்றவர்களுக்கும் பிடிபடவில்லை என்று அவர்கள் முகம் காட்டியது.  சற்று புரியும்படி சொல்லுவோமே என்று நினைத்து, அதாங்க, ”ஆப்பரேஷன் க்ரீன் ஹண்ட்”  என்றேன்.  ஒருவருக்குப் பொரிதட்டிவிட்டது. பக்கத்தில் இருந்த சுடக்குடிக்கி நண்பர், ”என்ன, சினிமாவா, இல்ல டிஸ்கவரி சானல்ல வர்ர விசயமா?” என்றார்.   விசயம் விட்டு விசயம் தாவுவதும், ஜாலியாகப் பேசுவதும் இத்தகையவர்களிடம் சகஜம்தான்.  ஆனாலும் நல்ல நண்பர்கள், இந்த நாட்டின் பரந்துபட்ட படித்தவர்கள்.

”இல்லைங்க, நம்ப அரசாங்கத்துல புதுசா டிஸ்கவர் பண்ணியிருக்காங்க. அதுக்குப் பொருத்தமான டைரக்டர் தேவையா இருந்துச்சு. அதுக்காகத்தான் சிதம்பரத்தை அங்க போட்டிருக்காங்க”  என்று நகைச்சுவையாகச் சொன்னேன்.  ஆனால், அவர்களுக்குப் புரியவில்லை.  ஏண்டா இந்த ஆளு வர்த்தகம், நிதியை எல்லாம் விட்டுட்டு உள்துறைக்குப் போனார்ன்னு எனக்கும்கூடத்தான் ஆரம்பத்தில் புரியவில்லை.  பின்னர்தான், கலைஞரின் ஆத்ம நண்பர், பாராளுமன்றத்திலேயே குரளோவியம் தீட்டியவர், அதன் எஜமானர்களான வேதாந்தா, டாடாக்களின் காதில் “இதனை இதனால் இவன்முடிப்பன் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்”  என்ற தந்திரோபாயத்தை கிசுகிசுத்திருக்க மாட்டாரா? அவர்கள் அதைப் புரிந்துகொண்டு சிங்கு சோனியாக்களுக்கு ஆணையிட்டிருக்க மாட்டார்களா? அக்கணமே அந்த அமைச்சர் பதவிக்கான தேர்தலே முடிந்திருக்காதா என்றெல்லாம் ரிஷிமூலம் தொட்டு புரிய ஆரம்பிப்பதுபோல் இருந்தது.

”எல்லாம் காரணம் கருதித்தாங்க அவர அங்க உக்கார வச்சிருக்காங்க; ஏதோ ஒதுக்கி வச்சிடல…. ஆதிவாசி மக்களை மிருகத்தனமாகவும், ஜனநாயக வாதிகளை இண்டலெக்சுவலாகவும், மீடியா மழுமட்டைகளை பாமர லாஜிக்கிலும் சந்திக்கப் பொருத்தமான ஆள் அந்த நாற்காலிக்குத் தேவையாய் இருந்தது.. அவர்தான் அந்த சிதம்பரம்,  அதுதான் அந்த காட்டு வேட்டைங்கிற ஆப்பரேஷன் க்ரீன் ஹண்ட்”  என்ற விசயத்தை சொன்னேன். அப்போது, அதுபற்றி சற்று புரிந்து வைத்திருந்த நண்பர், “அது நக்சலைட்டு தீவிரவாதிகளை ஒழிக்கிறதுக்குன்னுல்ல சொல்றாங்க. நீங்க என்ன வித்தியாசமா சொல்றீங்க” என்று கேட்டார்.

அவர்கள் அகராதியில், அல்லது அவர்களுக்குக் கற்பிக்கப்பட்ட அகராதியில், நக்சலைட், தீவிரவாதி என்ற சொற்களுக்குத் தனித்தனியே பொருள் ஏதும் கிடையாது.  அது, அந்த சொற்களைத் தாங்கியவர்கள், தாங்கியவர்களாய் சொல்லப்படுபவர்கள் மீது எழுதப்பட்ட தீர்ப்பு மாதிரி.  தீர்ப்பை விமர்சிப்பதும், எதிர்ப்பதும் கண்டெம்ட் ஆஃப் கோர்ட் இல்லையா, அதைக் கற்பனையும் செய்யலாமா?  அவர்களிடம் என்ன சொல்வது.. “ஆமாங்க அப்படித்தான் சொல்லிக்கிறாங்க.  ஆனால் அது அவங்க மாதிரியே, அவங்க பேசுற அரை உண்மை, பொய்யை விட அபாயகரமானது” என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில், ”அப்ப நக்சலைட் எல்லாம் நல்லவங்கன்னு சொல்றீங்களா?” என்று மறித்தார் நண்பர்.  இந்த ஆப்ஜெக்டிவ் டைப் கேள்வியை எல்லாம் ஈசியாக டிக் அடித்துவிடலாம்.  ஆனால், அது சப்ஜெக்டிவாக அவர்களுக்குள் பதிந்து இருக்கும் ஒரு கருத்தை அசைக்க வேண்டுமே, சொல்லுவது அவர்கள் சிந்தைக்குத் தடையின்றிப் போய்ச் சேரவேண்டுமே.  “ஆமாம். நல்லவங்க தான்.. இருந்தாலும் நீங்க உடனே ஒரு கருத்துக்கு வரவேண்டியதில்லை, நடப்புகளை நிதானமாக ஆலோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தா நல்லது”  என்று மேலே சொல்லத் தொடர்ந்தேன்.

சரி, அவர்களிடம் எதைச் சொல்ல, எப்படிச் சொல்ல?

பசுமையாய் அடர்ந்து நிற்கும் காடுகளான அந்த கற்பக தருக்களை வேரறுத்து;
தாம் உள்ளளவும் தம் உயிர்களின் மூச்சாய், உயிர் நீராய், வளம்பலவாய் வாரி வழங்கிவரும்
மக்களின் உண்மையான அந்த காமதேனுவின் மடியறுத்துப் பால் குடிக்க
வெறிகொண்டு அலைகிறார்கள் நவயுக மைதாஸ்களான
பல பன்னாட்டு, இன்னாட்டு தொழில் முதலைகள்.
அவர்கள் தொடுவதெல்லாம் பணமாக வேண்டும், அதற்காக மனிதம் பிணமாக வேண்டும்.
ஆமாம், அய்யா சொன்னா சரிதான்.  அதுதான் வளர்ச்சி.

சீன நாகம் தோற்க வேண்டும், சிங்கநாதம் கேட்கவேண்டும்.  மூலதனத்தை ஈர்த்தாக வேண்டும். அன்னியச் செலாவணியை மலையாய்க் குவித்தாக வேண்டும்.
அதற்குப் பத்து சதவீத வளர்ச்சியை நாம் எட்டிப் பிடித்தாகவேண்டும்.
எனவே, அப்பசுவின் மடியை அறுத்தாக வேண்டும்.  இந்தா பிடி அரிவாளை
என்று தூக்கிக் கொடுக்கிறார்கள், பி.ஜே.பி., காங்கிரஸ் என பேதமில்லாது
எல்லா ‘அரசியல்’ கட்சிகளும்..

ஐந்தாண்டுகளாய் இந்த அமைதிப்படை – சல்வா ஜுடூம் (peace march) -  என்ன ஆமைவேகத்தில் நடைபோடுகிறது? வெறும் 700 ஆதிவாசி கிராமங்களைத்தான் சுட்டுப் பொசுக்கி சுடுகாடாக்கி இருக்கிறார்கள்.

வளர்ச்சியின் வேகம் போதாது.  விழுந்து பிடுங்க வேண்டாமா .. இதோ, வேட்டை நாய்கள், கருநாகங்கள் என இந்திய இராணுவத்திற்கு உரிய பெயர் சூட்டி இறக்கிவிட்டிருக்கிறார்கள், காட்டு வேட்டைக்கு.  இயற்கை அன்னையின் மடியில் தவழும் குழந்தைகளையும், அவள் கருவையும் சேர்த்து அறுத்தெரிவதற்கு.
அவள் மடியறுக்கத் துணிந்தவர்களின் ஏவல் நாய்கள்,
அந்த முதிய அன்னையின் மார்பகங்களை அறுத்து ஊன் குடித்தார்கள்.
வளர்ச்சிப் பார்வை கொண்டவர்களின் அடியாட்கள்,

பார்வை மங்கிய எழுபது வயது முதியவரை அவர் படுக்கையிலேயே குத்திக் கிடத்தினார்கள்.
அந்த மரங்களை விட்டகல மறுத்த மரவர்களை மரத்தில் கட்டி வைத்து சுட்டு,
பின் தலையை வெட்டி வீழ்த்தினார்கள்.  அவர்தம் இறுதி விருப்பத்தை நிறைவேற்றினார்கள்.
அவரை, அவர் மனைவியை, மக்களை, பேரன் பேத்திகள் என்று தொடரும் விழுதுகளை
வீட்டிலேயே வைத்து என்கவுண்டர் செய்து சாதனை படைத்தார்கள்.

அம்மா என்ற ஒரே முழக்கத்தை மட்டுமே எழுப்பத் தெரிந்திருந்த அந்த சிசுவின் நாவை அறுத்தார்கள், அதன் எதிர்காலத் தீண்டுதலைக் கண்டு அஞ்சியோ என்னவோ
துப்பாக்கியின் அடிக்கட்டையால் அதன் பற்களை இடித்து உடைத்தார்கள்,
பிஞ்சு விரல்களை வெட்டி எரிந்தார்கள்.

தன் துண்டு நிலத்தை உழுதுகொண்டிருந்த அறுபது வயது முதியவரை,
கோவணத்துக்கும் உனக்கு அருகதையில்லை, நிலமொரு கேடா என
நிர்வாணமாக்கி வெட்டிக் கொன்றார்கள்.

ஆநிரையையும் அடித்து மேய்த்தறியாத அந்த முதியவரை அடித்து இழுத்துவந்து
கை கால்களைக் கட்டி கிராமத்து நடுவே ஒரு மரத்திலிருந்து தலைகீழாய்த் தொங்கவிட்டனர்.
அவர் தலைக்கடியில் எரியூட்டப்பட்ட எண்ணைக் கொப்பரையில்
ஒரு முக்கு முக்கி எடுத்தனர். பின் அவர்மேல் தண்ணீர் ஊற்றித் தூர எரிந்து சென்றனர்.
இன்று அவர் உடலில் புழுவாய் புழுத்து நெளிந்து அவரைத் தின்பவர்களும் அவர்கள்தான். இக்கொடுமையை மறுக்க முடியாத அந்த தன் கையறு நிலையை நொந்துகொண்டு
வெந்து வெதும்பி நிற்கிறது அந்த மரம், ஒரு சாட்சியாக.

இவ்வளவுதானா, சிறை, சித்திரவதை, கற்பழிப்புகள், தானியங்களையும், ஆடு, கோழிகளையும் அவர்களின் பண்ட பாத்திரங்களையும், பத்தம்பது ரூபாய் சொத்துக்களையும் திருடிச் செல்வது எனப் பாதுகாப்புப் படையினரின் வீரசாகசங்கள் ஏராளம்.

இதில் எதைச் சொல்ல, எப்படிச் சொல்ல?  ஏதேதோ சொன்னேன்.

”என்னங்க, இவ்வளவு கொடுமையா இருக்குது, இதெல்லாம் நெசமான்னே பயமா இருக்குதேங்க.
இதை ஏன் எந்த பத்திரிகைக் காரனும், டி.வி. யும் கவர் பண்ணல?”
“இலங்கையில தான் தமிழர்களுக்கு எதிரா இப்படி அட்டூழியங்கள் நடந்துக்கிட்டு இருந்துச்சு..
அதப்பத்தி நிறைய வந்துச்சு, இப்ப இங்கயுமா?”

என்ற கேள்விகளுக்கும் சிறு மௌனத்துக்கும் இடையில் இடைவேளை முடிந்தது.
அலுவல் அகம் நோக்கி கால்கள் நடந்தன.

பரவலாய் இந்த விசயம் தெரிந்திருக்கவில்லை என்பது உண்மைதான். உண்மை மீளா உறக்கத்தில் இருப்பதற்காக பரந்துபட்ட மக்களை ஜனநாயக ஊடகங்கள் ஜாலியாய்த் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பதும் உண்மைதான். அவர்கள் அவர்களது வேலையைச் செய்கிறார்கள்…  நாம்?

எதார்த்தம் நெருப்பாய் சுட்டெரிக்க, அந்தக் காடு மலைகளையும் அதன் மக்களையும் காக்க  இந்த நிலம் அதிராதோ, உறக்கம் கலையாதோ என மனம் ஏங்குகியது.

……………………………………………………………………………………………………………………………………….

எரி எண்ணையில் அமிழ்த்தப்பட்ட உண்மைகள்:

செப்டம்பர்- அக்டோபர், 2009ல் தண்டிவாடாவில் நிகழ்த்தப்பட்ட  காட்டு  வேட்டை அல்லது பச்சைப் படுகொலை நடவடிக்கை பற்றிய உண்மை அறியும் குழுவின் அறிக்கை-  ஷர்மிளா புர்கயச்தா, ஆஷிஷ் குப்தா, ஹிமான்ஷு குமார் ஆகியோரால் உண்மையறியும் குழுவின் சார்பாகக் கையொப்பம் இடப்பட்டது – அக்.21, 2009.

[பி.யு.சி.எல்; பி.யு.டி.ஆர், வன்வாசி சேத்னா ஆஸ்ரம்; மனித உரிமை சட்டக் குழு; ஆக்‌ஷன் எய்ட்; மன்னா அதிகார்; மற்றும் மாவட்ட ஆதிவாசிகள் ஒருமைப்பாட்டு சங்கம் ஆகிய அமைப்புகள் அக்டோபர் 10 – 12 தேதிகளில் பல தடைகளையும் குறுக்கீடுகளையும் கடந்து தண்டிவாடா சென்று சேகரித்த தகவல்களின் சுருக்கம்].

செப்டம்பர் 17ம் நாள்

கசன்பள்ளி கிராமத்தில் பாதுகாப்புப் படை நடத்திய கொலைவெறியாட்டம்

நடக்கக்கூட முடியாத துகி முயீ என்ற 70 வயது மூதாட்டி மார்பகங்கள் அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இரத்தவெள்ளத்தில் கிடந்தாள்.

அதுபோலவே கண்பார்வை மங்கிய கவாசி கங்கா என்ற 70 வயது முதியவர் அவரது படுக்கையிலேயே குத்திக் கொல்லப்பட்டுக் கிடந்தார்.

வீட்டு வேலையாக வெளியே சென்று திரும்பிய மாத்வி தேவா என்ற 25 வயது இளைஞர் மரத்தில் கட்டப்பட்டு மும்முறை சுடப்பட்டு பின்னர் தலை துண்டிக்கப்பட்டார் என்கிறார் அவருடன் கிராமம் திரும்பிய அவரது பாட்டனார்.  அவரது உடலைத் தேடி அலைந்த குடும்பத்தாரிடம் அவரது உடல் சிண்டகுஃபா காவல் நிலைய காம்பவுண்ட் சுவர் அருகே புதைக்கப்பட்டதாக அவ்வேலையை மேற்பார்வையிடப் பணிக்கப்பட்ட படேல் என்பவர் இரண்டு தினங்களுக்குப் பிறகு தெரிவித்திருக்கிறார்.

தனது துண்டு நிலத்தை உழுதுகொண்டிருந்த மாத்வி ஜோகா என்ற 60 வயது முதியவரைப் பிடித்து இழுத்து வந்து ஆடையை உருவி நிர்வாணமாக்கி வெட்டிக் கொன்றிருக்கிறார்கள் பாதுகாப்புப் படையினர்.

மாத்வி ஹத்மா [35 வயது] மற்றும் மத்கம் சுல்லா ஆகியோர் சுல்லாவின் மனைவியின் கண்முன்னாலேயே கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டனர்.

அன்று காலை மாடுமேய்த்துக் கொண்டிருந்த ஆந்தர்பராவை சேர்ந்த முசகி தேவா என்ற 60 வயது முதியவரைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து அடித்து கிராமத்துக்குள் இழுத்துச் சென்றனர்.  கைகாலைக் கட்டி ஒரு மரத்திலிருந்து அவரைத் தலைகீழாகத் தொங்கவிட்டனர்.  அவரது தலைக்குக்கீழ் ஒரு எண்ணைக் கொப்பரை எரியூட்டப்பட்டது.  கொதிக்கும் எண்ணைக்குள் அவரை ஒரு முக்கு முக்கி எடுத்தனர் பாதுகாப்புப் படையினர்.  பின்னர் அவர்மீது தண்ணீர் உற்றினர். பிறகு அவிழ்த்துப் போட்டுவிட்டு சென்றனர். அவரது இரணம் இன்று புழுபுழுத்து நெளிகிறது. மருத்துவ வசதியின்றி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

கிராமத்தின் அனைத்து வீடுகளும், அடித்து உடைக்கப்பட்டு தீயிடப்பட்டன. பாதுகாப்புப் படை வருவது அறிந்து ஒட்டுத் துணியோடு ஓடமுடிந்தவர்கள் உயிர்தப்பினர். காடுகளில் கூடாரமிட்டும், உறவினர்களின் அடைக்கலம் புகுந்தும் காலம் தள்ளுகின்றனர். பாதுகாப்புப் படையினரின் செயல்களால் கிராமமே பீதியில் உறைந்து கிடக்கிறது.

அக்டோபர் 1 ம் நாள்

கோம்பட் கிராமத்தில் பாதுகாப்புப் படை நடத்திய கொலைவெறியாட்டம்

மாத்வி பாஜார், அவரது மனைவி மாத்வி சுபி, அவர்களது மணமான மூத்தமகள் கர்தம் கன்னி மற்றும் இளைய மகள் மாத்வி முட்டி ஆகியோர் அவர்களது வீட்டுக்குள்ளேயே குத்திக் கொலை செய்யப்பட்டனர்.  அவர்கள் வீட்டில் தங்கியிருந்த மந்தர்பதார் கிராமத்தை சேர்ந்த முச்சகி ஹண்டாவும் மத்கம் தேவாவும் அதுபோலவே குத்திக் கொல்லப்பட்டிருந்தனர்.

மாத்வி பாஜாரின் இரண்டே வயதான பேரப் பிள்ளையையும் பாதுகாப்புப் படை விட்டுவைக்கவில்லை. அக்குழந்தையை அடித்து, அதன் நான்கு விரல்களை அறுத்து, கதறும் குழந்தையில் பல்லை உடைத்து, நாக்கையும் அறுத்திருக்கிறது இத்தேசப் பாதுகாப்புப் படை.       [அதன் தாய் வெட்டிக் கொலை செய்யப்படும்போது அவள் அணைத்திருந்த குழந்தையின் விரல்கள் துண்டிக்கப்பட்டதாக வேறொரு செய்தி கூறுகிறது]

சோயம் சுபாவும் அவரது மனைவி சோயம் ஜோகியும் அவர்களது வீட்டுக்குள்ளேயே குத்திக் கொல்லப்பட்டிருந்தனர்.

மாத்வி என்கா என்பவரது வீட்டில் புகுந்து அவரைக் கத்தியால் குத்தி வெளியே தள்ளி கிராமம் நெடுகத் தறதறவென இழுத்துச் சென்றனர்.  இறுதியில் அவரை சுட்டு வீழ்த்திவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறினர் பாதுகாப்புப் படையினர்.

கோம்பட் கிராமத்தில் பாதுகாப்புப் படையுடன் நடந்த ”சண்டையில்”  ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.  பாதுகாப்புப் படையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. கொல்லப்பட்டவர்களை மாவோயிஸ்டுகள் இழுத்துச் சென்றுவிட்டனர் என்கிறார் தண்டிவாடா காவல் கண்காணிப்பாளர்.

சிண்டகுஃபா கிராமத்தில் பாதுகாப்புப் படை நுழைவதைப் பார்த்த தோமர் முட்டா தன் வீட்டு மக்களைக் காக்க விரைந்தோடும்போது சுடப்பட்டு பின்னர் வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார். அக்கிராமத்தில் 10 போர் கொலை செய்யப்பட்டதை மட்டுமே உண்மையறியும் குழுவால் உறுதி செய்ய முடிந்தது.  ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. கோப்ராக்களும் போலீசாரும் இரண்டு அணியாய் அன்று செயலில் இறங்கியதை எஸ்.பி. உறுதி செய்கிறார்.  எத்தனை கிராமங்களில் எத்தனை கொலைகள் விழுந்தது என அறிய முடியவில்லை.

முகுட்டோங்க் மற்றும் ஜினிடொங்க் கிராமங்களில் இருந்து 18 முதல் 32 வயது வரையான பத்து இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் அடித்து இழுத்துச் சென்றனர்.  அக்டோபர் 1 ம் தேதி இழுத்துச் சென்ற இவர்களில் எட்டு பேர் மீது 3ம் தேதி இ.கு.சட்ட்த்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது கோண்டா காவல் நிலையம். இருவரைப் பற்றிய விவரமில்லை.  அவர்களைத் தேடிச்சென்ற அவர்களது உறவுக்காரப் பெண்கள் கோண்டா காவல் நிலையத்தில் கொடுமைப்படுத்தப்பட்டு வெற்றுத் தாளில் கைநாட்டு பதித்துக்கொண்டு விரட்டப்பட்டனர்.  இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பெண்கள்  விசாரிக்கச் சென்றபோது அவர்கள் கேவலமாக ஏசப்பட்டு, அவர்கள் இருவரையும் கண்காணாத இட்த்துக்கு அனுப்பிவிட்டோம் இனி ஒருமுறை தேடிக்கொண்டு வரக்கூடாது என மிரட்டி அனுப்பிவிட்டனர்.

செப்டம்பர் 17 அன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலின்போது, கிராமத்தாரைக் கொலை செய்வதிலும், அதைத் தொடர்ந்து அவர்கள் வீடுகளை தாக்கி அழிப்பதிலும் தீயிடுவதிலும் ஈடுபட்டனர்.  அக்டோபர் 1 அன்று நட்ததிய தாக்குதலின்போது விசயம் சற்று வித்தியாசமாக இருந்தது.  அவர்கள் கிராமத்தார் வீடுகளில் புகுந்து தானியங்கள், பருப்புகள், பணம், பண்டபாத்திரங்கள் எல்லாவற்றையும் அள்ளிச் சென்றதோடு, கால்நடைகளையும் ஓட்டிச் சென்றனர். சூரையாடலுக்குப் பிறகு ஆங்காங்கே வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தினர்.  மக்கள் 300 ரூபாயிலிருந்து 10000 ரூபாய் வரையிலான தொகையைப் பாதுகாப்புப் படையிடம் திருட்டு கொடுத்திருந்தனர்.

அடித்து சித்திரவதை செய்து விசாரிப்பது, பின்னர் காலில் சுட்டு ஓடவிடுவது; நாள் முழுவதும் அடித்து சித்திரவதை செய்வது, ஆங்காங்கே கத்தியால் குத்துவது பின் விடுவிப்பது போன்ற பயங்கர ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் படை கையாள்கிறது.

பாதுகாப்புப் படை மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின்போது கூலிப்படைகளான சல்வா ஜுடூம், எஸ்.பி.ஓ வைச் சேர்ந்த ஆட்கள் உடன் வந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.  சல்வா ஜுடூம் தலைவன் பொட்டு ராஜா, பாண்டேகுடா கிராமத்தை சேர்ந்த பாண்டே சோமா, அசர்குடா கிராமத்தை சேர்ந்த கங்கா, தங்கள் கோம்பட் கிராமத்தை சேர்ந்த மாத்வி புச்சா ஆகிய எஸ்.பி.ஓ கூலிப்படை ஆட்களை மக்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்.

http://www.vinavu.com/2010/02/18/wake-up/

Last Updated on Thursday, 18 February 2010 07:28