Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் ஆயிரத்தில் ஒருவன்: 32 கோடியில் வக்கிரக் கனவு !!

ஆயிரத்தில் ஒருவன்: 32 கோடியில் வக்கிரக் கனவு !!

  • PDF

காதல் கொண்டேன் படத்தின் இறுதிக் காட்சியில் அந்த சேட்டுப் பையனை கீழே கிடத்தி தனுஷ் கொரில்லா போல சுற்றி வருவாரே நினைவிருக்கிறதா? அந்தத் திரைப்படத்தில் செல்வராகவனின் ஏனைய பாத்திரங்களையெல்லாம் ஒப்பிடும்போது தனுஷ்ஷின் பாத்திரம் மட்டுமே இயக்குநரின் முழு சக்தியையும் உள்வாங்கிக் கொண்டு படைக்கப்பட்டிருந்தது.

மற்ற பாத்திரங்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை என்பதை விட அவர் விரும்பிய பாத்திரம் தனுஷின் சைக்கோ பாத்திரம்தான். அதற்கு ஏழ்மை, அனாதை போன்ற பிளாஷ் ஃபேக் இருந்தாலும் பிற்பகுதி சைக்கோதான் முதன்மை.

அதனால்தான் பின்பாதியில் ஆவேசமடையும் தனுஷின் ஆணாதிக்க உரையாடல்களுக்கும், உடல்மொழிக்கும் ரசிகர்கள் கைதட்டினார்கள். பெண்ணுடலை நுகர்ந்தெறியும் பண்டமாக கருதும் ஆணுள்ளங்களை அந்தப்படம் புண்படுத்தவில்லை. செய்ததெல்லாம் அதை ஆடவிட்டு இரசிகனின் அலைவரிசையில் ஒன்று கலந்து பெண் சதையை தின்பதற்கு முழுபடமும் ஆரவாரம் எழுப்பியதே. அப்போதே செல்வராகவனிடம் ஏதோ கோளாறு இருப்பதாக ஊகித்தோம். இப்பொது சரியென்று தோன்றுகிறது.

7ஜி ரெயின்போ காலனியில் கூட திண்ணை அரட்டையின் நட்பில் வாழும் வேலை வெட்டியற்ற நடுத்தர வர்க்க இளைஞன் தன்னை ஒரு பெண் காதலித்தே ஆகவேண்டும் என்பதற்கு ஆணவமாய் எல்லா தமிழ் ஹீரோக்களையும் போல விரட்டுகிறான். கூடவே விடலைப்பருவத்தின் சேட்டைகளை, குடும்பத்தோடு இயல்பாய் முரண்படும் அவர்களது உணர்ச்சியை சேர்த்துக் குழைத்ததால் இங்கும் ஆண் ரசிகன் ஒன்று கலந்தான். காதலிக்க வைக்கப்பட்ட பெண்ணை குறைந்த பட்சம் உடலுறுவு கொண்டுவிட்டாவது மறந்து விடலாம் என்ற அரிய சேதியை அதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண் காதலர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

புதுப்பேட்டை சிட்டி ஆப் காஃட் எனும் பிரேசில்படத்தை பார்த்து புலியென்று நினைத்து வரையப்பட்ட பூனை. அரிவாளால் கழுத்தை அறுப்பதையெல்லாம் பயிற்சியில் கற்கும் ரவுடிகளை சித்தரிக்கும் திரைப்படத்தில் அரிவாளைத் தாண்டி அரிவாளுக்கு அரசியல் மற்றும் பாதுகாப்பு வளையத்தை வழங்கும் ஆளும் வர்க்கத்தின் பாத்திரம் தவிர்க்கப்பட்டது. ஜெயேந்திரன் போன்ற காவிக்கயவர்கள் கூட அப்பு முதலான ரவுடிகளை வைத்து கொலை செய்யும் காலத்தில் ரவுடிகளை வெறும் விளைபொருளாக மட்டும் சிலாகித்த படமது.

என்றாலும் தனுஷ் கொரில்லா போல சுற்றி வரும் காட்சியை த்தரூபமாக சித்தரித்திருக்கும் செல்வராகவன் அத்தகைய மனநிலையில் யோசித்து வெளியிட்ட படம்தான் ஆயிரத்தில் ஒருவன். அந்த மனநிலைதான் அவருடைய ஆளுமையின் சாரமாகவும் இருக்கலாம்.

இரண்டு, மூன்று படங்கள் வெற்றியடைந்து விட்டால் எல்லா இயக்குநர்களும் அவர்களுடைய உலகில் கடவுளாகி விடுவார்கள். அதன் பிறகு விரிந்த மெத்தையின் கருவறைப் பகுதியில் அவர்கள் மானாவாரியாக பேசிக் கொண்டிருக்க, பலியாடுகளாக உதவி இயக்குநர்கள் ஆமாம் போட இந்த உலகு தங்களிடமிருந்தே துவங்குவதாக அந்த கடவுள் இயக்குநர்கள் துணிகிறார்கள். அந்த வகையில் நிஜ வாழ்க்கையிலிருந்தும் துண்டித்துக் கொள்கிறார்கள். கற்பதையும், தேடுவதையும், புற உலகை உற்று நோக்குவதும் கொள்ள வேண்டிய படைப்பாளிப் பண்புகள் தலைகீழாக மாறிவிடுகின்றன. படைப்பின் உள்ளடக்கத்தை விழுங்கும் வடிவமும், இதுதான் ரசிக்கப்படும் என்ற ஃபார்முலாவும், அவர்களின் அரதப்பழசான தத்துவக் கண்ணாட்டமும் மூன்றாவது படத்திற்கான தகுதிகளாக இயல்பாக அமைந்து விடுகின்றன.அதுவே ஐந்தாவது படமென்றால் ஆண்டவனும் கையேந்த வேண்டும். இது செல்வராகவனின் ஐந்தாவது படம்!

பதிவுலகில் ஆயிரத்தில் ஒருவன் விமரிசனங்களை வகைக்கொன்றாக படித்ததிலிருந்து புரிந்த விசயங்கள்: “முதல் பாதி விறுவிறுப்பு, இரண்டாம் பாதி போர்-புரியவில்லை” இது இரசிகர்களின் அளவை வைத்து படத்தை நிராகரித்த விமரிசனம். “வித்தியாசமான முயற்சி, கோலிவுட்டையும் – ஹாலிவுட்டையும் இணைக்கும் படம், தமிழின் முதல் ஃபேண்டசி – திரில்லர் படம்” இது படத்தை இரசித்தவர்களின் விமரிசனம். அப்புறம் நமது பின்நவீனத்துவ நண்பர்கள் வியந்தோதும் காட்சிகளையும், மொழிகளையும் கொண்டிருக்கும் படம், அதாவது ” பாலியல் விழைவுகளை ஒளிக்காத நபர்கள், விளிம்பு நிலை மக்களின் சிக்கல்கள், மனிதனின் ஆதிகால போர் வெறியை தொன்மங்களின் வழியாக பிரதி காட்டும் நிகழ் உலகம்…இத்யாதிகள்.

சத்தியமாய் இத்தனை நுட்பங்களும் நாம் படம் பார்க்கும் போது துளியேனும் உணரவில்லை. இது வினவின் பாமரப் பார்வையா, கலை விசயங்களில் இருக்கும் ஔரங்கசிப்தனமா?

ஃபேண்டசி எனப்படும் இல்லாததை விரும்பும் கனவுகளும், விரும்பியே ஆகவேண்டியவற்றை நினைக்கும் பகல் கனவுகளும், மாந்தீரிகத்தையும், சாகசத்தையும் துணைக்கழைத்துக் கொண்டு புனையும் கனவுகளும் உண்மையில் சமூக வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகியதா? இல்லை. அவை குறிப்பிட்ட சமூக யதார்த்தத்தின் தேவைகளிலிருந்தே அந்த தேவையை அடைய முடியாத சிக்கல்களிலிருந்தே இயல்பாக தோன்றுகின்றன.

குழந்தைகளின் ஆளுமை வளர்வதற்கும், அவை இந்த உலகுடன் பெரும் உரையாடல் நிகழ்த்தி புரிந்து கொள்வதற்கும் பேசும் குருவிகளும், சினேகமாய் இருக்கும் யானைகளும், சேட்டைகள் செய்யும் மிக்கி மௌவுசும் ஓரளவுக்கு தேவையாக இருக்கின்றன. இந்த தேவையை பகாசுரமாக்கி மழலையின் உணர்ச்சியை வெறியுடன் சுரண்டும்போது அவை வன்முறை மிகுந்த வீடியோ கேம்களாக படையெடுக்கின்றன. என்றாலும் இது கூட ஃபேண்டசிதான்.

ஆதிகாலத்தில் புராதானமாய் இயற்கையின் நீட்சியாய் மனிதக்கூட்டம் இருந்த காலத்தில் இயற்கையின் பேரழிவுகள் புரியாமல் அதிலிருந்து தப்பிப்பதற்கு மனிதன் புனைந்த முதல் புனைவு மாந்தீரிகம் கலந்த இறைச்சக்தி. அதுவே பின்னர் மதமாகி இறுகியது. உழைப்பின் வலி தெரியாமல் அவர்கள் உடல்தாளத்திற்கேற்ப இசைத்த பொருளற்ற வார்த்தைகள் பின்னர் சிம்பனி வரைக்கும் வளர்ந்தது, வளர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த நாள் வேட்டைக்கு அவர்கள் தமது மனதை புத்துணர்வாக்கிய புனைவுகளின் வழியேதான் கலையும் அதன் எண்ணிறந்த வடிவங்களும் பிறந்தன. தெரிந்தவனவற்றின் சாத்தியங்களிலிருந்து தெரியாதவற்றை கண்டுபிடிக்கும் புனைவுகள்தான் அறிவியலாக இன்று பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது.

இப்படி 21ஆம் நூற்றாண்டின் முன்னேறிய வாழ்க்கையை மனித குலம் கண்டறிந்தது ஃபேண்டசி எனப்படும் கற்பனையின் மூலம்தான். ஆனால் அது மட்டுமே தனியாக ஒரு சில மூளைகளில் தோன்றி வளரவில்லை. மனிதனின் உழைப்பு, அதுவும் கூட்டிழைப்பு செயற்காடுகளிலிருந்தே நாம் வியந்தோதும் இந்தக் கற்பனை, புனைவெளியின் எல்லையை உடைத்துக் கொண்டு அதையே தொட்டறியக்கூடிய வாழ்க்கையின் உண்மையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. ஃபேண்டசியின் பால் மனம் கவரக்கூடிய கலைஞன் இத்தகைய வரலாற்றை அறியாத போது நிகழும் விபத்துதான் ஆயிரத்தில் ஒருவன்.

அவதார் படம் கூட ஃபேண்டசிதான். என்றாலும் அதன் வேர் அனைவருக்குள்ளும் இருக்கக்கூடிய அடிமைத்தனத்திற்கு எதிராக போராடக்கூடிய மனித வரலாற்றின் மிகச்சாதாரண ஒன்றில் இருக்கிறது. இங்கே சாதாரணம் என்பது அதன் பரந்து தழுவிய ஒன்றைக் காட்டுகிறது. இயற்கையோடு ஒன்றி வாழும் ஆதிவாசிகளும் அவர்களது இயற்கையை பணமாக சுரண்ட நினைக்கும் முதலாளிகளும் உலகெங்கும் இருக்கிறார்கள். எல்லா முதலாளித்துவ நாகரீகங்களும் அநேகமாய் இந்த ஆதிவாசிகளை நரபலி கொடுத்தே சாத்தியமாகியிருக்கின்றன. அதுவே இன்றுஆப்பரேஷன் கீரீன் ஹண்ட்டாய் மத்திய இந்தியாவில் ஆட்டம் போடுகிறது.

அதனால்தான் அவதாரில் உளவாளியாக செல்லும் மனிதன் அந்த வேற்றுக்கிரக ஜீவன்களோடு ஒன்றி காதல், விளையாட்டு, போர், துக்கம் என எல்லாவற்றிலும் இணையும் போது நம் கண்கள் கிராபிக்சின் மாய உலகைக் கண்டு வியந்தாலும், இதயமோ நல்லது வென்று கெட்டது அழியவேண்டுமென்ற ஆதி உணர்ச்சியை அடைகிறது. இந்த உணர்ச்சியை கைவிட்டு விட்டால் அவதார் படம் கூட வெறும் வீடியோ விளையாட்டாக மாறிவிடும்.

எனில் ஆயிரத்தில் ஒருவன் எந்த உணர்ச்சியைக் கொண்டு கற்பனை செய்ய முயல்கிறது? ஒரு வெங்காயத்திலும் இல்லை என்பதுதான் முதல் பதில். சற்று யோசித்துப் பார்த்தால் வெள்ளையன் ஆட்சிக்காலத்து ஜமீன்தார்கள், மிட்டா மிராசுகள், மாளிகைக்கு வெளியே ஏழைகள் உழைத்து ஓடாக தேய்ந்திருக்கும் போது வெளிநாடு சென்று அங்கு ஒரு கழிப்பறை வெள்ளியில் செய்யப்பட்டிருந்தால், அதையே உள்நாடு திரும்பி தங்கத்தில் செய்து அழகு பார்ப்பார்கள். கூடவே விருந்து வைத்து ஏனைய நாட்டாமைகளுக்கு தமது மலசல தங்கக் கழிப்பறையை பெருமையுடன் காட்டுவார்கள். இந்த ஃபேண்டசியின் உணர்ச்சி என்ன? வக்கிரம்? எனில் அதுதான் ஆயிரத்தில் ஒருவனின் உணர்ச்சியும் கூட.

ஏழுகோடியில் போடப்பட்ட பட்ஜெட் 32 கோடிக்கு சென்றது வெறும் புள்ளிவிவரச் செய்தியல்ல.அங்குதான் தங்கக் கழிப்பறை மறைந்திருக்கிறது.

வரலாறு என்பது நம்மிடையே மன்னர்களின் டைரிக்குறிப்பாக பதிந்திருக்கிறதா, மக்களின் போராட்டமாக பதிந்திருக்கிறதா என்பதை நம்முடைய வரலாற்றுப் பார்வை தீர்மானிக்கிறது. அவ்வகையில் வரலாற்றை விட வரலாற்றுப் பார்வை முக்கியம். ஒரு முசலீம் மன்னன் ஒரு இந்துக் கோவிலை இடித்து விட்டான் என்று இந்துமதவெறியர்களின் பார்வையில் ஒரு வரலாறு முன்வைக்கப்படும் போது அது உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் அது உண்மையா? நோண்டிப் பார்த்தால் பல இந்து மன்னர்கள் அருகாமை இந்து மன்னர்களின் நாட்டை கொள்ளையடித்ததும், கோவில்களை இடித்ததும், அதே போல பல முசுலீம் மன்னர்கள் போட்டி முசுலீம் மன்னர்களின் நாட்டை ஆக்கிரமித்திருப்பதும், மசூதிகளை இடித்திருப்பதும் கூட வரலாறுதான். இங்கு மன்னர்கள் எனும் வர்க்கமும், அவர்களது ஆட்சியின் இருப்பும் எதனால் சாத்தியமாகிறது என்பதை புரிந்து கொள்வதற்கு வரலாற்றுப் பார்வை தேவையாக இருக்கிறது.

அதே போல வரலாற்றை நினைவு கூர்வதும், படிப்பினைகளை ஏற்பதும் கூட நிகழ்கால வாழ்வில் நீங்கள் நடத்தும் போராட்டத்தை சார்ந்திருக்கிறது. அமெரிக்காவின் காலனி நாடாக இந்தியா மாறிவருகிறது என்று உணர்த்துவதற்கு சின்ன மருதுவின் ஜம்புதீவுப்பிரகடனம் தேவைப்படுகிறது.

நாம் செல்வராகவனின் வரலாற்று பார்வையை எங்கஙனம் புரிந்து கொள்வது? இயக்குநர் செல்வராகவன் பலரும் கருதுகிறபடி ஒருமசாலா இயக்குநர் இல்லையே? ஆனாலும் அவரின் புனைவுக்கான வரலாற்று உந்துதல் எதையும் நம்மால் காணமுடியவில்லை. தமிழகத்தில் சோழர்களின் ஆட்சியில்தான் பவுத்த, சமண மதங்கள் முறியடிக்கப்பட்டு, பார்ப்பனியமாக்கம் வேகமாக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் பார்ப்பனர்களையும், வேளாளர்களையும் மையமாகக் கொண்ட நிலவுடைமைச் சமூகம் நிலை கொண்டது. பல கிராம மக்கள் பார்ப்பனர்களுக்கும், கோவில்களுக்கும், அடிமைகளாக தாரைவார்க்கப்பட்டார்கள். சைவமாய் இறுகிய பார்ப்பனியத்தின் பிடியில் நந்தன்கள் எரிக்கப்பட்டார்கள்.

இத்தகைய எதுவும் இயக்குநரின் கண்களுக்கோ, அவர் வித்தியாசமான படம் எடுத்த்தாக சிலாகிக்கும் இரசிகர்களுக்கோ படவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இந்த படத்தின் கதைக்கு இரண்டு மன்னர்கள் அதுவும் தமிழ் மக்கள் அறிந்த இரண்டு ராஜாக்கள் தேவைப்படுகிறார்கள். அவ்வளவே. அதனால்தான் அமெரிக்க ஏகாதிப்த்தியத்திற்கு பெயர்பெற்ற வியட்நாம் என்ற பெயர் சோழர்களின் பெயரால் வாழும் தற்குறிகள் மற்றும் காட்டுமிராண்டிகள் இடமாக மாறியிருக்கிறது.

வரலாற்று உணர்ச்சியற்ற இந்தப்படத்தில் இயக்குநர் ஒன்றியிருப்பது தடைகளைத்தாண்டும் காட்சிகளும், படம் நெடுக எது எதற்கோ ஊளையிடும் மனிதக் குரல்களும்தான். இந்த தடைகளில் அவர் பலவற்றையும் கேவலப்படுத்தியிருப்பதை எப்படித்தான் “வித்தியாசமான” படக்கோஷ்டிகள் இரசித்தனரோ தெரியவில்லை. ஒருவேளை ஒன்றுமே புரியமால் பாராட்டினால்தான் மதிப்பார்கள் என்ற பரிதாபமா, அதுவும் தெரியவில்லை.

மீனவர்களின் தாயான கடலைக் கேவலப்படுத்தி, சிவப்பு வண்ண ஆதிவாசிகளை கேவலப்படுத்தி, அப்புறம் பாம்புகளைக் கேவலப்படுத்தி, பாம்பையும், ஆதிவாசிகளையும் கொசுபோல கொல்லும் துப்பாக்கிகளைக் கேவலப்படுத்தி, பாலைவனத்தை வில்லனாக்கி, குகைக்குள் கருப்பு சாயம்பூசிய மக்களைக் கேவலப்படுத்தி, இறுதிக் காட்சியில் எல்லாவற்றையும் கேவலப்படுத்தி, இந்தக்காட்சிகளுக்கு கருப்பு, சிவப்பு வண்ணம் பூசிய நூற்றுக்கணக்கான துணைநடிகர்களை கேவலப்படுத்தி, அவர்களுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கூடக் கொடுக்கமுடியாமல் பட்ஜெட்டை கேவலப்படுத்தி, தூயதமிழைக் கேவலப்படுத்தி, இந்த எழவுக்கு செட்போட்ட தொழிலாளிகளின் உழைப்பை கேவலப்படுத்தி,படப்பிடிப்பு முடிந்த உடன்தான் திரைக்கதையை எடிட்டிங்கில் எழுதி அகிரோ குரசேவாவைக் கேவலப்படுத்தி, படம் சோதனையென்று புறக்கணித்த இரசிகர்களுக்கு பிரஸ் மீட் வைத்து கதையைச் சொல்லி கேவலப்படுத்தி….  அப்பப்பா தாங்க முடியவில்லை.

செல்வராகவன் எனும் இயக்குநர் வித்தியாசமாக எடுப்பதற்கு இத்தனை கேவலங்களையும் 32 கோடியில் அளிக்க முடியும் என்றால் இதுதான் தமிழர்கள் இளித்தவாயர்கள் என்பதோ?

ரீமா சென் நடிப்பில் பின்னிப் பெடலெடுத்துவிட்டார் என்று சில பதிவர்கள் பாராட்டுகிறார்கள். கப்பலில் பாடும் எம்.ஜி.ஆர் பாட்டுக்கு ஜெயல்லிதாவின் அபிநயம், மேசைக்கு அடியில் துப்பாக்கி நீட்டுவது, செம கட்டையென்று பேசுவது இவையெல்லாம் ஓடிப்போலாமா புகழ் மணிரத்தினத்தின் அபிநயங்கள், பார்த்திபனுடன் போடும் விரத தாப சண்டையெல்லாம் காதல் கொண்டேனில் சோனியா அகர்வால் ஆடிய அபிநயங்கள், ஆங்கிலத்தில் சண்டை போடுவது, தூய தமிழில் வஞ்சுவது இறுதியில் சிஜடி சகுந்தலாவாக அக்மார்க் வில்லியாக மாறும்போது இரசிகர்கள் ஆறுதலடைகிறார்கள் அதாவது தங்களது ஆண்மையை கார்த்திக் வழியாக சீண்டிய பெண்ணை வென்று விட்டோமென. மொத்த்த்தில் ஒரு நாலைந்து முகபாவனைகளை செயற்கையாக காட்டியதற்கே இத்தனை புகழ் என்றால் தமிழர்களை கருணாநிதியும், ஜெயாவும் ஏன் சுலபமாக ஏமாற்ற முடியாது?

அடுத்து பின்நவீனத்துவத்தின் பக்கம் கொஞ்சம் பார்க்கலாம். பிரதி வெளிப்படுத்தும் உவகையான கொண்டாட்டத்தை யாரும் மனம் போனபடி அர்த்தமாக்கலாம். ஞான குரு டோண்டு ராகவனிடம் கேட்டால் குண்டலினியில் இருக்கும் மூலாதாரச் சக்தியை ஏழு தடைகளைக் கடந்து சிரசில் இருக்கும் பிரம்மத்துடன் இணைவது என்று விளக்கமளிக்கலாம். முள்ளி வாய்க்காலின் துயரத்தை உண்மையாக பார்த்து வராத சோகம் செட்டுபோட்ட சண்டையின் மூலம் வருவதை தள்ளிவைத்துப் பார்த்தால் ஈழத்தை இந்தப்படம் நினைவுபடுத்தலாம். ஜே.கே போன்ற ஞானிகளிடம் கேட்டால் மனிதனின் ஆதார ஏழு உணர்ச்சிகளின் ( அது என்னவென்று எம்மிடம் கேட்டால் தெரியாது ) ஆழமான உளவியல் ஆட்டத்தை படம் கொடுத்திருப்பதாக சொல்லலாம்.

லீனா மணிமேகலை போன்ற COCKtail பெண்ணியவாதிகளிடம் கேட்டால் சங்க காலம் தொட்டு, ஈழக்காலம் வரை ஆணின் குறி போல ஆட்டம் போடும் போர்வெறியின் நள்ளிரவு தாக நீட்சியை, அற்புதமான உள்ளொளி புனைவு படும பராக்கிரமங்களின் வழி படம் உரசுகிறது என்று சொல்லலாம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்தான்.

படம் என்ன அதிகாரத்துவத்தை கேள்விக்குள்ளாக்குகிறது? என்ன விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை கட்டியமைக்கிறது? என்ன விதமான பாலியல் விழைவுகளை போட்டு உடைக்கிறது? இப்படி பொருளே இல்லாத சுற்றி வளைத்து மூக்கை தொடும் மொழியில் கேட்காமல் சாதாரணமாக யோசித்துப் பார்த்தாலே இரசிகனுக்கு ஏது ஏறியிருக்கிறது என்பதன் மூலமே பதிலைத்தேடலாமே?

வரலாறு புரியாமல் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினால், ஒரு குடிகாரக் கணவனின் கையில் அவதிப்படும் பெண்ணும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பினால் விதவையாகும் பெண்ணும் ஒன்றெனத் தோன்றுவார்கள். குடிகாரனும், உலக கொலைகாரனும் அருகருகே நாற்காலிகளைப் போட்டு பின் நவீனத்திற்காக அமரும் காட்சி நம்மால் சகிக்க முடியவில்லை.

ஆயிரத்தில் ஒருவன் உண்மையில் விளிம்பு நிலை மக்களை எவ்வளவு இழிவு படுத்த வேண்டுமோ அவ்வளவும் அதற்குமேலும் இழிவு படுத்தியிருக்கிறது. ரீமா சென்னின் மூலம் பெண்களை, சிவப்பு ஆதிவாசிகள் மூலம் பழங்குடிகளை, கஞ்சிக்கில்லாமல் பரிதவித்தாலும் மல்லனது சண்டையைப்பார்த்து ஆவேசக் கூச்சலாக இறையும் மக்களை, மக்களே இப்படி இருக்கும்போது எப்போதும் புணர்தலுக்கும், சண்டைக்கும் விரும்பக்கூடிய பார்த்திபன் அல்லது உண்மையான அதிகார மையம் மறைந்து கொள்ளும் தந்திரங்களை,….. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இங்கு மையமும் இல்லை, விளிம்பும் இல்லை, வெங்காயமும் இல்லை.

மனித குல வரலாறு பசிவெறி, தாகவெறி, பாலுறுவுவெறி போன்ற அடிப்படை உணர்ச்சிகளுக்கிடையில் மட்டுமே நகர்ந்திருக்கிறது என்று கற்பிதம் செய்து புரிந்து கொண்டால் இந்தப்படத்தையும் சிலாகிக்கலாம். ஆனால் இந்த அடிப்படை உணர்ச்சிகள் மனிதர்களை, கூட்டமாக, சமூகமாக வாழவைத்து, வாழ்வை முன்னேற்றுவதற்கு உரிய சக்திகள், அந்த சக்திகளை கிடைக்க விடமால் செய்யும் உடமைச்சக்திகள் என்று வரலாற்றை பார்ப்பவர்கள் எவரும் இந்தப்படத்தை சகிக்க முடியாது. ஏனெனில் இந்தப்படம் வெவ்வேறு தருணங்களில் வெளிப்படும் மனிதத்தின் அடிப்படை அறத்தை எந்தப் பொருளுமில்லாமல் வன்மத்துடன் கேலிசெய்கிறது.

இறைச்சிக்காக அடித்துக் கொள்ளும் மக்கள் பின்பு மைதானத்தில் மல்லனது குண்டால் இரத்தச் சகதிகளாக சிதறும் மனிதர்களைக் கண்டு ஆரவாரமிடுகிறார்கள் என்ற காட்சி இதற்கோர் சான்று. உடன்வந்தவர்கள் பல தடைகளால் காக்கை குருவிகள் போல மடிந்து போவதை மறந்து படத்தின் முக்கிய பாத்திரங்கள் மூவரும் சகஜமாக பயணத்தை தொடர்வது மற்றோர் சான்று. இவையெல்லாம் ஒரு ஃபேண்டசி படத்தை லாஜிக் என்ற கத்தி கொண்டு வெட்டுவதாக சிலர் கருதலாம்.

ஆனால் இங்கே காரணகாரியங்கள் விவாதப்பொருளல்ல. ஆனால் நடக்கும் கதை இந்த காரணகாரியங்களை இழிவுபடுத்துகிறது என்பதே நம் விமரிசனம். செல்வராகவன் முன்னரே சொன்னபடி எந்த அறவுணர்ச்சியிலோ, வரலாற்று உணர்ச்சியோலோ இந்தக் கதையை கட்டியமைக்கவில்லை. அவரது வினோதமான பாத்திரங்களும் அந்த வினோதத்தை விகாரமாக காட்சிப்படுத்தும் வடிவமும்தான் இந்தப்படத்தின் கலை ஊற்று.

இத்தனைக்கும் பிறகும் இந்தப்படத்தில் நல்லது எதுவும் வினவின் கண்ணுக்குப்படவில்லையா என்று கேட்பவர்களை ஆறுதல் படுத்த ஒன்று சொல்லலாம். அது பார்த்திபனின் லிங்க தரிசனம் வசனம் இந்து முன்னணி வகையறாக்களுக்கு கடுப்பேற்றியிருக்கும் என்பதே. தற்செயலாக அமைந்து விட்ட இந்த ஒன்றுக்காக மட்டும் படத்தைப் பாராட்டலாம்.

வேட்டைக்காரன், குத்தாட்டம், காமடி, சண்டை என வழமையான தமிழ்படத்தை பார்த்து சலித்தவர்கள் இந்த மாறுபட்ட கோணங்களையும் காட்சிகளையும் வண்ணங்களையும் ஒரு சேஞ்சுக்காக இரசிக்கலாம்.

நம்மைப்பொறுத்தவரை வேட்டைக்காரன் ஆயிரத்தில் ஒருவனை விட நல்ல படம். உழைத்து களைக்கும் மக்கள் அந்தப்படத்தில் ஏதோ கொஞ்சம் இளைப்பாறிவிட்டு அடுத்த நாள் வேலைக்கு சென்று விடுவார்கள். ஆயிரத்தில் ஒருவன் அதைக் கூட செய்யவில்லை.

http://www.vinavu.com/2010/02/03/1k1/

Last Updated on Friday, 05 February 2010 21:43