Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் புலம்பெயர்ந்தோர் தம் உறவுகளுக்கு உதவும் பணம், அவர்களை வேலையற்ற வெட்டியாக்குகின்றது

புலம்பெயர்ந்தோர் தம் உறவுகளுக்கு உதவும் பணம், அவர்களை வேலையற்ற வெட்டியாக்குகின்றது

  • PDF

பரஸ்பரம் மனித உறவுகள் சார்ந்தது இந்த விடையம். உணர்வுகளும், உணர்ச்சிகளும்; சார்ந்த விடையம். மதிப்பும் மரியாதையும் சார்ந்த சமூக விழுமியம் சார்ந்த விடையம். குடும்ப பொறுப்புணர்வு சார்ந்த ஒரு விடையம். குடும்பம் மற்றும் சமூக சார்ந்த கடமைகளை, வாழ்வியல் ஒழுங்குகளையும் அடிப்படையாக கொண்ட ஒரு விடையம்.

இந்த எல்லைக்குள் மனித உறவுகளையும் வாழ்வையும் புரிந்து கொண்டு வாழ்தல். இது  கடமைகள், கட்டுப்பாடுகள், வாழ்வியல் ஒழுங்குகளை ஒரு  இயந்திரத்தனமான உணர்வுடன் உணர்ச்சியுடன் புரிந்து கொண்டு இயங்குதலே இதன் பிரதான கூறாக உள்ளது. பண உறவுகளுக்குள் இது இயங்குகின்றது. இந்த பணத்துக்கு என்ன நடக்கின்றது, என்ன செய்கின்றது என்று பார்ப்போம். 

    

பணத்தைப் பெறும் உறவுகள், சுயமாக உழைத்து வாழமுடியாத மனித சீரழிவுக்கு இந்தப் பணம் அடிப்படையாக இருக்கின்றது. இந்தப் பணம் இல்லாமல் உழைத்து வாழக் கூடிய மனித வாழ்வை, பணம் கைவிட வைக்கின்றது. உழைப்பை இழந்த அங்கவீனராக, மற்றவன் பணத்தில் வாழும் பண்பாட்டை உருவாக்குகின்றது. புலம்பெயர் உறவுகள் அனுப்;பும் பணத்தில் 90 சதவீதம் தவறாக கையாளப்படுகின்றது. இந்தப் பணம் பெற்று வாழ்பவரை, உழைப்பில் இருந்து அன்னியமாக்கி, மிதமிஞ்சிய சுகமான இலகுவான நுகர்வை செய்தபடி அவர்களை சீரழிக்கும் எல்லைக்குள் தான் பணம் பயன்படுத்தப்படுகின்றது.

 

எது அவர்களின் வாழ்வுக்கு நன்மை என்று கருதி பணத்தால் உதவுகின்றீர்களோ, அது அவர்கள் உழைத்து வாழும் தன் பலத்தில் சுயாதீனமாக வாழும் வாழ்வை அழிக்கின்றது. நீங்கள் அனுப்பிய பணத்தை பெற எப்போதும் தயாராக இருப்பவர்கள், பணத்தை எப்படி செலவு செய்வது என்ற உங்கள் அறிவுரையைக் கேட்கத் தயாரற்றவராக இருக்கின்றனர். இதுவே உங்கள் எல்லோருக்கும் கிடைக்கும் சொந்த அனுபவம். 

 

தன்னை வளர்த்த பெற்றோருக்கும், கடமையை செய்ய முனைந்து சகோதர சகோதரிகளுக்கும் உதவுதல் என்ற சமூக உணர்வாக்கம், பணம் சார்ந்தாக மாறிவிடுகின்றது. இது அவர்களின் சீரழிவாகவே பிரதிபலிக்கின்றது. உங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவு பணம் சார்ந்ததாக, அதற்கு உட்பட்டதாக மாறிவிடுகின்றது. பணம் அனுப்பாவிட்டால் உறவேயில்லை என்ற நிலைக்கு அது மாறிவிடுகின்றது.   

 

எந்த புலம்பெயர் உறவுகளும், இதை விரும்பிச் செய்வதில்லை. பணம் தான், அதை உருவாக்குகின்றது. தன் உறவுகள் அப்படியல்ல என்ற உணர்வுடன்தான், பணத்தை  அனுப்புகின்றனர். தாம் உதவுவது, நிச்சயமாக அவர்களின் அடிப்படை தேவை சார்ந்ததாக இருப்பதாக நம்புகின்றனர். தவறாக பணம் பயன்படுத்தப்படவில்லை என்று ஆணித்தரமாக நம்புகின்றனர். ஆனால் இது அப்படி இருப்பதில்லை. அது உங்களையே விலை பேசுகின்றது. முன்பு பணம் அனுப்பியவர்கள், அங்கு சென்ற அதிர்ந்து போகின்றனர். எங்கள் உறவுகள் முந்தி இருந்தது போல் அல்ல என்று புலம்பும் அளவுக்கு, சீரழிவோ பல முகம்கொண்டது. சமூகமே அப்படி மாறிவிட்டது. பணம் அனுப்பியவனின் நுகர்வையும், உழைத்து வாழும் வாழ்வையும் கேலிசெய்து இழிவாக பார்க்குமளவுக்கு, இவனின் பணம் அவர்களை மாற்றிவிட்டது. சிலர் அவர்கள் போல் ஆடம்பரமாக வாழ்ந்து, குறுகிய காலத்துக்கு நடிக்கின்றனர்.  

 

அவர்களை சீரழிய வைக்கும் பணம், உழைத்துத் தான் பெறுகின்றனர் என்பது அங்கு உணரப்படுவதில்லை. பணம் அனுப்புவர்கள் படும்பாடு சொல்லிமாளாது. தின்னாது குடியாது பணத்தை மிச்சம் பிடித்து அனுப்புபவர்கள், கடன் சுமைகளுடன், இரண்டு மூன்று வேலை செய்தும், தம்மை வருத்தியும் இதைச் செய்கின்றனர். ஆனால் அந்தப் பணம் அங்கே ஆட்டம் போடுகின்றது. 

 

இந்தப் பணம் எப்படி அவர்கள் வாழ்வை சீரழிக்கின்றது என்று நாம் பார்ப்போம். இதைத் தெரிந்து கொள்வதன் மூலம், பணம் அனுப்புபவன் சீரழிவை தடுக்கமுடியும். நீங்கள் அனுப்பும் பணம், அவர்கள் சுயமாக உழைத்து வாழும் வாழ்வையும், அதன் அடித்தளத்தையும்  இல்லாததாக்குகின்றது. மற்றவனில் தங்கி வாழும் வாழ்க்கை முறையை அது உருவாக்குகின்றது. அங்கு உழைத்து வாழும் வாழ்வியலுக்குள்ளான சமூகத் தேவைகளை ஓட்டி வாழ்வதை அழிக்கின்றது.

 

உழையாத பணத்தில் ஆடம்பரமும், நுகர்வும் எல்லையற்ற, எந்த சமூக வரைமுறையுமற்ற எல்லைக்குள் எகிறிப் பாய்கின்றது. தேவையும், நுகர்வும் வரைமுறையற்ற ஒன்றாக மாறுகின்றது. இது தங்கள் உறவுகளிடம் பணத்தை கறக்கும், மனித உறவுகளாக சீரழிகின்றது. பணத்தை பெற்று வாழ்வது எல்லையற்ற ஒன்றாக மாறுகின்றது. தேவை என்பது, எல்லையற்ற ஒன்றாக தொடருகின்றது. அதற்கு எல்லையோ, முடிவோ இருப்பதில்லை. அதற்கு பணத்தைக் கோருவதும், பணத்தை அறவிடவும், குறுக்கு வழிகளை கொண்ட ஒரு பண்பாடு மனித உறவாக மாறிவிடுகின்றது. 

   

பணத்தைப் பெறுவதும், பெற்று வாழ்வதும் வாழ்வியல் நெறியாகி விடுகின்றது. தேவைகளைக் காட்டி பணத்தை பெறுவது அதிகரிக்கின்றது. அதற்கு பொய்கள், சுத்துமாத்துகள் முதல் அனைத்து இழிவான வழிமுறைகளையும் கையாளுகின்றனர். இதை அவர்கள் விரும்பிச் செய்வதல்ல. பணம் அதை செய்ய வைக்கின்றது. பணத்தை பெற இவையே வாழ்வியல் வெறியாக  மாறிவிடுகின்றது. 

         

அவர்கள் அங்கு உழைத்து வாழும் வாழ்வு எதுவோ, அதுதான் அவர்கள் வாழ்க்கை. பணத்தை அனுப்ப முன், நீ இதைப் புரிந்து கொள். இதுதான் உனது முதல் பணி. அதை நெறிப்படுத்துவது தான் உன் கடமை. அதை சீரழிப்பதல்ல.

 

அங்கு உழைத்து வாழும் வாழ்வு எதுவோ, அதை வாழ்வாக வாழக் கோரு. நீ அங்கிருந்தால், எது அவர்கள் வாழ்க்கையாக இருக்குமோ, அதைத் தாண்டி நீ உதவாதே. இதை மீறி நீ உதவினால், அவர்கள் உழைத்து வாழும் சொந்த வாழ்க்கையை அழிக்கவே உன் பணம் உதவுகின்றது. இதைப் புரிந்து கொள். நீ அங்கிருந்த போது, உன்னைச் சுற்றி சில அடிப்படை தேவைகளற்று இருந்ததை நீ உணர்வாய். அதை புரிந்து கொண்டு, அவர்கள் தங்கள் சொந்த காலில் நிற்கும் வண்ணம் அதற்காக உதவு. உன் காலில் அவர்களை நிற்க வைக்காதே. இதைப் பிரிப்பது மெல்லிய கோடுதான். உன் அறிவை, உன் உழைப்பை கொண்டு, அவர்களை உழைத்து வாழ வை. அதை உன் பணத்தின் மூலம் அழிக்காதே. அவர்கள் தங்கள் தேவைக்காக உழைத்து வாழும் ஒரு வாழ்க்கைக்கு உதவு. கண்ணை மூடிக்கொண்டு, நீ பணத்தை அனுப்பாதே. அனுப்பும் பணத்துக்கு என்ன நடக்கிறது என்ற கணக்கு வழக்கின்றி பணத்தை அனுப்பாதே. எதார்த்தத்தில் உன் உதவி, அவர்கள் உழைத்து வாழும் வாழ்வை அழிக்கின்றது. பொதுவில் நீ அவர்களின் வாழ்வை அழிக்க உதவுகின்றாய் என்பதை தெரிந்து கொள்.

 

உன் பணத்தில் உழைப்புக்கு மீறிய மிதமிஞ்சிய வாழ்க்;கையை அது கற்றுக் கொடுக்கின்றது. அது உருவாக்கும் ஆடம்பரம், முழு சமூகத்தையும் அதற்குள் சீரழிக்கின்றது. உன் பணத்தில் உழையாது உருவாகும் ஆடம்பரமும் சமூக ஏற்றத்தாழ்வை உருவாக்குகின்றது. அடிப்படைத் தேவை கூட இல்லாதவர்களை, உன் பணம் பாதாளத்தில் பிடித்து தள்ளிவிடுகின்றது. நீ திரும்பிபார், அன்றைய உன்வாழ்க்கையைச் சுற்றி நடந்த மனித அவலங்களை. சமூகத்தில் இல்லாமை, சமூகத்தில் பாரிய சமூக ஏற்றத்தாழ்வுக்கு வித்திடுகின்றது. இதை புரிந்து கொண்டு, உதவுவதை நெறிப்படுத்து.

 

உன் முன்னால் உழைத்து வாழும் ஒரு வாழ்க்கை உன்னிடம் உண்டு. நீ உழையாது இங்கு வாழ முடியாது. இந்த உழைப்புக்கு உட்பட்டது தான் உன் வாழ்க்கை. இதை நீ உன் வாழ்வியல் அனுபவத்தில் புரிந்து அதற்குள் வாழ்கின்றாய்.

 

இதை நீ ஏன் உன் உற்றார் உறவினர்pடம் வலியுறுத்தவில்லை. அதை ஊக்குவித்து, அதை  செய்வதற்கு பதில், அதை அழிக்க உன் பணத்தை ஏன் அனுப்புகின்றாய். உன் பெற்றார், உன் சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர் உன்னிடம் கையேந்தி நிற்பதை நீ அனுமதியாதே. அவர்களை உழைத்து வாழக் கோரு. அங்கு எது வாழ்க்கையோ, அதற்கு உட்பட்டு வாழக் கோரு. இப்படி வாழ்பவர்களுக்கு, இப்படி வாழ முனைபவர்களுக்கு துணையாக நில். உன் பணம் தான் அவர்களுடானான உறவைத் தீர்மானிக்கின்றது என்றால், பணம்கொடுப்பதை நிறுத்து.

 

நல்லதொரு சமூகத்தை உருவாக்க, மக்கள் தங்கள் சொந்த உழைப்பில் சொந்தக்காலில் கையேந்தாது  வாழ்வது அடிப்படையானது. இதில் தான் உன் உறவுகளும் வளம்பெறுவர். இதை மீறி என் உறவுகள் உழையாது வீங்கினால், அது இந்த சமூகத்தில் வெம்பி அழுகத்தான் செய்யும். குறிப்பாக இன்று யாழ் குடா, வவுனியா நகர், கொழும்பு வாழ் தமிழர்கள் உழைப்பில் இருந்து அன்னியமாகி, உழையாத பணத்திலான சிதைந்து சீரழிந்து கொண்டு இருக்கின்றனர். இது வேறு யாருமல்ல, உழையாது உனது பணத்தைப் பெற்றுவாழும் உற்றார் உறவினர் தான்.

 

அவர்கள் உழைத்து வாழாத வாழ்வுக்கு உதவாதே!
தேவைக்கு மிஞ்சிய ஆடம்பரமான வாழ்வுக்கு உதவாதே!
மற்றவனுடன் போட்டி போட்டு வாழும் வாழ்வுக்கு உதவாதே!
பெரும்பான்மை மக்கள் வாழாதா ஒரு வாழ்வுக்கு உதவாதே!  

 

பி.இரயாகரன்
01.02.2010
 
 

Last Updated on Thursday, 18 March 2010 19:52