Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் “நீங்கள் என்னை நக்சல்பாரி ஆக்கினீர்கள்!”

“நீங்கள் என்னை நக்சல்பாரி ஆக்கினீர்கள்!”

  • PDF

"நீங்கள் நடுநிலையாளர்களாக இருப்பதென்பது குற்றம்!'' — இந்திய அரசு விடுக்கும் எச்சரிக்கை! அது, தெற்கு சத்தீஸ்கரின் வெச்சபல் கிராமம். காட்டின் மடியிலிருந்த அந்தக் கிராமத்தில், அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார் பொன்யாம் பந்துரு. இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு வந்த துப்பாக்கிகளின் வேட்டுச்சத்தம் பந்துருவின் தூக்கத்தைக் கலைத்தது. ""ஐயோ! கொலைகாரர்கள் வந்துவிட்டார்கள்'' என்ற அலறல் எங்கும் எதிöராலித்தது.

தீவட்டியும் துப்பாக்கியும் ஏந்திக் கொலைவெறியுடன் தாக்க வரும் குண்டர்களிடமிருந்து தப்பிக்க அவர் ஓட ஆரம்பித்தார். வில்லையும் அம்பையும் கையில் பிடித்தபடி, தனது நான்கு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அருகிலிருந்த அடர்ந்த காட்டுக்குள் பந்துரு தப்பி ஓடினார். அவரைப் போலவே மொத்த கிராமமும் உயிரைக் கையில் பிடித்தபடி ஓடியது.

 

தொடர்ந்து வந்த துப்பாக்கிகளிலிருந்து சீறிப்பாயும் குண்டுகளின் பேöராலி,மெல்லக் குறைந்து அடங்கும் வரை கிராம மக்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். அவரைப் போலவே இன்னும் சிலரும் கொலைகாரர்களிடமிருந்து தப்பிவிட்டனர். அவரது கிராமமோ முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. வேகமாக ஓட முடியாமல் மாட்டிக் கொண்டவர்கள், காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டனர். வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன; அவர்களது தானியங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அவர்கள் வளர்த்து வந்த கோழிகள், மாடுகள்கூடக் கொன்றொழிக்கப்பட்டன.

 

காடுகளில் சுற்றித்திரிந்த அவர்கள், நான்கு நாட்கள் கழித்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திரும்பிவந்து பார்த்தபோது, அங்கே அவர்களது கிராமம் சுடுகாடாகிக் கிடந்தது. வெறும் சாம்பல் குவியலாய்க் கிடந்த தனது வீட்டிற்கு முன்பு வந்தமர்ந்த பந்துரு, ""சல்வாஜுடுமில் சேர மறுத்ததால், அவர்கள் எங்களை நக்சலைட்டுகள் என்கிறார்கள்; அடிக்கடி இப்படி தாக்குதல் தொடுக்கிறார்கள்'' என்று வேதனையில் விம்முகிறார்.

 

இதுதான், சத்தீஸ்கர் மாநில காட்டோரக் கிராமங்களின் இன்றைய நிலை. நக்சலைட்களோடு தொடர்புடையதாகக் கருதப்படும் வெச்சபல் போன்ற 700 கிராமங்கள் அரசின் ஆதரவு பெற்ற கூலிப்படையான சல்வாஜுடுமால் தாக்கி அழிக்கப்படுவது அங்கே தொடர்கதை. இதே வெச்சபல் கிராமம், கடந்த மூன்று ஆண்டுகளில் பன்னிரண்டு முறைக்கும் மேல் கொளுத்தப்பட்டுள்ளது.

 

ஈவிரக்கமற்ற அரசு பயங்கரவாதக் கூலிப்படையான சல்வா ஜுடுமை, கடந்த 2005ஆம் ஆண்டு, சத்தீஸ்கர் அரசு உருவாக்கியதிலிருந்து, இந்தக் கிராமங்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. வாழ்விழந்த ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள், சொந்த நாட்டிலேயே அகதிகளாக, அரசு நடத்தும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், இரண்டரை லட்சம்பேர் வரை அடர்ந்த காட்டிற்குள் தப்பியோடி வாழ்ந்து வருகின்றனர். பஞ்சத்திலும், பசியிலும், பயத்திலும் இந்த மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

 

எப்போது தாக்குதல் வரும் எனத் தெரியாமல், அச்சத்துடன் கோடாரிகளை இறுகப் பற்றியபடி இரவு நேரங்களில் தங்களது குடிசைகளில் பதுங்கிக் கிடக்கிறார்கள் இந்தப் பழங்குடியின மக்கள். தொடர்ச்சியாக வீடுகள் கொளுத்தப்பட்டதால், சிலர் தங்களது வீடுகளை திரும்பக் கட்டும் எண்ணத்தையேகூடக் கைவிட்டுவிட்டனர். வீடற்ற இவர்கள், இரவு நேரங்களை அருகிலுள்ள காடுகளில் தார்பாய்க் கூடாரங்கள் அமைத்துத் தங்கிக் கழிக்கின்றனர்.

 

சல்வா ஜுடும் அமைக்கப்படுவதற்கு முன்பு வெச்சபலுக்கு சென்றவர்கள், இந்த பகுதிகள் எப்பொழுதுமே நக்சல் ஆதரவு பகுதிகளாக இருந்ததில்லை என்கிறார்கள். துப்பாக்கியேந்தித் தாக்கும் அடியாள் படையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள தாங்களே ஆயுதமேந்த வேண்டிய சூழலுக்கு அரசு இவர்களைத் தள்ளிவிட்டுள்ளது. இப்பொழுது மக்கள் தங்களது எதிரியாக அரசையும், தங்களது நேசசக்தியாக நக்சல்பாரி போராளிகளையும் பார்க்கின்றனர்.

 

""ஊருக்கு வெளியே இருக்கும் அய்யனாரைப் போல, எங்களை ஒடுக்குபவர்களிடமிருந்து எங்களைக் காப்பவர்கள் நக்சலைட்டுகள்தான்'' என்கிறார் பந்துரு. மேலும், ""இந்தியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதெல்லாம் இப்போது கிடையாது; மரியாதை எல்லாம் செங்கொடிக்கு மட்டும்தான்'' என்கிறார் அவர். கிராம மக்கள் தங்களது பாரம்பரிய ஆயுதங்களான வில், அம்பு, கோடாரிகளைக் கொண்டே, தாக்க வரும் சல்வாஜூடும் குண்டர்படைகளை எதிர்த்து இன்னும் வீரியத்துடன் போரிடும் வகையில், அவர்களுக்கு மாவோயிஸ்டுகள் பயிற்சியளித்து வருவதாகவும் அவர் கூறுகிறார். பிஜாபூர் மாவட்டத்திலுள்ள இந்த கிராமங்களுக்குச் செல்லும் வெளிநபர்களை ""லால் சலாம்''(செவ்வணக்கம்)தான் இப்போதெல்லாம் வரவேற்கிறது. கிராமப்புற மக்களும் தங்களது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக, போராளிகளால் நடத்துபடும் மக்கள் நீதிமன்றங்களை நோக்கி அருகிலிருக்கும் காடுகளுக்குத் திரளாகச் சென்று வருகின்றனர்.

 

கோந்தி பழங்குடியினரைப் பெரும்பான்மையாக கொண்ட இந்தப் பகுதியில், மக்கள் கடும் வெயிலில், வியர்வை சொட்ட உழைத்து தமது விளைநிலங்களில் நெல் பயிரிடுகிறார்கள். பருவமழையை நம்பியுள்ள இவர்களின் வாழ்க்கைப் போராட்டம் மிக அவலமானது. ஏழ்மையில் வாடும் இந்த மக்கள், சல்வாஜூடுமில் சேர மறுத்த ஒரே காரணத்தினால், அவர்களைத் தண்டித்து வருகிறது அரசு. அடிப்படை சமூக நலத் திட்டங்களை இங்கு செயல்படுத்துவதை வெகு காலம் முன்பே அரசு நிர்வாகம் நிறுத்திவிட்டது. மின் இணைப்பு கொடுக்கப்படாததால், வெச்சபல் கிராமம் இரவு நேரங்களில் காரிருளில் மூழ்கி விடுகிறது. அரசாங்க உயர்நிலைப் பள்ளிக் கட்டிடமோ, மூன்று வருடங்களுக்கு முன்பு சல்வா ஜுடும் குண்டர்களால் எரிக்கப்பட்டு விட்டது. உள்ளுர் பூசாரி ஓதும் மந்திரமும் பச்சிலைகளும்தான் நோயினால் தாக்கப்படும் இக்கிராமமக்களுக்கு ஒரே மருந்தாக உள்ளது.

 

""சத்தீஸ்கரின் கனிம வளங்களை டாடாவுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் தாரை வார்க்க, இப்பகுதிவாழ் மண்ணின் மைந்தர்களை வெளியேற்றும் வன்மத்துடன் களமிறங்கியுள்ளது, அரசு. நடுநிலை வகிப்பதென்பது இங்கே குற்றமாகிவிட்டது. துணைராணுவப் படை கொண்டு இந்தப் பகுதிகளில் தாக்குதல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. வெச்சபல் போன்ற பல கிராமங்களில், அரசு பயங்கரவாத உள்நாட்டுப் போரைக் கட்டவிழ்த்துவிட்டு, கொடூரமான மனித இனப் படுகொலையை அரசு நடத்தப்போகிறது'' என்று அபாய எச்சரிக்கை செய்கிறார்கள், காந்தியவாதியான ஹிமான்ஷû குமார் உள்ளிட்ட மனித உரிமை இயக்க முன்னணியாளர்கள்.

 

(அபுதாபியிலிருந்து வெளிவரும் ""தி நேஷனல்'' என்ற நாளேட்டில், அனுஜ் சோப்ரா என்ற செய்தியாளர் 6.11.09 அன்று எழுதிய கட்டுரையின் சாரமான மொழியாக்கம்)

Last Updated on Thursday, 25 February 2010 10:45