Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் எது பயங்கரவாதம்?

எது பயங்கரவாதம்?

  • PDF

"இனியும் இது நீடிக்க முடியாது. எங்களுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கிறது. பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்'' என்று வானொளியில் தோன்றிய அமெரிக்காவின் தலைமைக் கொலை வெறியன் öரானால்டு ரீகன் முழங்கினான்.

அமெரிக்க தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டி ஒன்று இடுகாட்டுக்கு இராணுவ மரியாதையுடன் போகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் 40 அமெரிக்கப் பணயக் கைதிகளுடன் நிற்கும் கடத்தப்பட்ட விமானத்திலிருந்து வீசியெறியப்பட்ட கடற்படை சிப்பாய் ராபர்ட் டீன் ஸ்டேதமின் சவப்பெட்டி.

 

அது புதைக்கப்படும் முன்னரே எல்சால்வடாரின் தலைநகர் சான்சால்வடாரிலிருந்து ரீகனுக்கு அதிர்ச்சியூட்டும் மற்றொரு செய்தி. மேலும் ஆறு அமெரிக்கர்கள் நாலு கடற்படை வீரர்கள், இரண்டு வியாபாரிகள் உட்பட பதின்மூன்று பேர் தெருவோர உணவு விடுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

 

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே ஜெர்மனியின் பெரு நகரம் ஃப்ராங்க்பர்ட் விமானநிலையத்திலிருந்து இன்னுமொரு துயரச் செய்தி. பயணிகள் மண்டபத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பயணப் பெட்டி வெடித்துச் சிதறியது. இடிபாடுகளிடை÷ய ஒரு போர்த்துக்கீசியன், இரண்டு ஆஸ்திரேலியக் குழந்தைகளின் பிணம், ஓர் அமெரிக்கன் உட்பட ஒன்பது தேசத்தைச் சேர்ந்த 42 பேர் படுகாயமுற்றனர்.

 

1985 ஜூன் கடைசி வாரத்தில் அடுத்தடுத்து நடந்த மூன்று சம்பவங்கள் இவை. ""மேற்கத்திய நாகரிகம் பண்பாட்டின் மீது நாகரிகமற்ற பண்பாடற்ற காட்டுமிராண்டிகளின் தாக்குதல்'' என்று மீண்டும் கூச்சலிட்டான், ரீகன்.

 

""பல வண்ணப் புனைவுருத் தோற்றங்களின் பயங்கரங்கள் நிறைந்த வாரம் அது'' என்றார்கள். பிறகு வந்த ஒவ்வொரு வாரமும் அப்படித்தான் மாறியது. 1982 இறுதியில் லெபனானில் இருந்து பாலஸ்தீனர்களை விரட்டியபோது பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தாம் தப்பிவிட்டதாக மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் கனவு கண்டன. ஆறு மாதத்திற்குள் அமெரிக்கத் தூதரகம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது. வெடி குண்டுகள் ஏற்றிய லாரி ஒன்றை அமெரிக்க பிரெஞ்சுப் படை தங்கியிருந்த விடுதியின் மீது மோதி 250 இராணுவத்தினரைக் கொன்றனர்.

 

இன்று பாலஸ்தீன அரபு கொரில்லாக்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் உலகம் முழுவதும் விரிவடைந்து விட்டது. இவர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் பலநாட்டுக் கொரில்லாக்களின் பயங்கரவாத நடவடிக்கைகளை அமெரிக்க மற்றும் மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் எதிர்கொண்டுள்ளன.

 

இரண்டு மாதங்களுக்கு முன்பு, வெளிநாடுகளில் எதிர்ப்புரட்சி வேலை செய்து விட்டுத் திரும்பிய 245 அமெரிக்க இராணுவ வீரர்களைச் சுமந்து வந்த இராணுவ விமானம் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. சென்ற மாதம் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா மற்றும் இத்தாலியத் தலைநகர் ரோமின் விமான நிலையங்கள் தாக்கப்பட்டன. பல பயணிகள் மாண்டனர். இந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு லிபியாவே காரணம் என்று கூறி, அந்நாட்டை இராணுவபொருளாதார முற்றுகையிட்டுள்ளது, அமெரிக்கா.

 

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் மட்டும் தான் இலக்கு என்றில்லை. வடக்கு லெபனானில் உள்நாட்டுச் சண்டையின் காரணமாக வெடிகுண்டுகள் ஏற்றிய காரை மோதவிட்டு 75 பேரைக் கொன்றனர். இமயமலையிலுள்ள குட்டி நாடு நேபாளம். அமைதியையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவேன் என்று அந் நாட்டு மன்னன் பிரேந்திரா அறிவித்த அடுத்தநாளே, அரண்மனையிலும் அரசு கட்டிடங்களிலும் குண்டு வெடித்ததில் ஏழு பேர் மாண்டனர்; 240 பேர் காயமுற்றனர். இலங்கையில், இரயிலேகூடக் கடத்தப்பட்டுத் தகர்க்கப்படுகிறது.

 

""இது முதலாளித்துவ உலகத்தின் பயங்கரவாத நடவடிக்கைகள்'' என்று கூறி, அவற்றிலிருந்து தப்பி விட்டதாகக் கனவு கண்டது ருஷ்ய சமூக ஏகாதிபத்தியம். ஆனால், அதன் தூதரக அதிகாரி டெல்லி நகரத் தெருவிலே காருக்குள்ளே÷ய சுட்டு வீழ்த்தப்பட்டார். ஆஃப்கானிஸ்தானின் கொரில்லாத் தாக்குதல்களுக்கு நாள்தோறும் ஏராளமான ரஷியர்கள் அங்கே பலியாகிறார்கள்.

 

""பயங்கரவாதம் ஏதோ வெளிநாட்டுப் பிரச்சினை; இது காந்தி பிறந்த தேசம். இங்கே அகிம்சையே நிலவும்'' என்று யாரும் நிம்மதியாக இருந்து விட முடியாது. காஷ்மீரி, சீக்கியத் தீவிரவாதிகளின், அசாம் மற்றும் திரிபுரா தீவிரவாதிகளின் பயங்கரவாதத்தில் சிக்கித்தவிக்கிறது, இந்தியா. ஆனால், அதன் பஞ்சாப் அசாம் ஒப்பந்தத்திற்குப் பிறகு, பயங்கரவாதத்திலிருந்து மீண்டு விட்டதாக நம்பச் சொன்னது, இந்திய அரசு. ஆனால், ஒப்பந்த நாயகன் லோங்கோ வாலே பயங்கரவாதத்திற்குப் பலியானார். 529 பேரை ஏற்றி வந்த இந்திய விமானம் அட்லாண்டிக் கடலின் மீது வெடித்துச் சிதறியது. அதன் பிறகுதான், பயங்கரவாதம் இந்தியாவைக் கவ்விக்கொண்டிருப்பதாக ஒப்புக் கொண்டனர்.

 

ஆக, அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அணு ஆயுதப்போரை விட, நிகழ்ந்து வரும் பயங்கரவாதப் போர்தான் எல்லாப் பிற்போக்கு உலகத் தலைவர்களையும் ஆட்டிப் படைக்கிறது. பயங்கரவாதம் அவர்களைப் பயபீதியடையச் செய்துள்ளது. குண்டு துளைக்க முடியாத கார்களில், குண்டு துளைக்க முடியாத கோட்டு போட்டுக் கொண்டு ஆயுதந்தாங்கிய அதிரடிப்படைகள் புடை சூழத்தான் அவர்கள் நடமாட முடிகிறது; குண்டு துளைக்க முடியாத கூண்டுகளிலிருந்துதான் மக்களுக்குக் காட்சியளிக்க முடிகிறது; பெரும்பாலான நேரங்களில் தங்கள் மாளிகைகளிலேயே சிறைவாசம் செய்கின்றனர். இவ்வளவுக்கும் காரணம் பயங்கரவாதம்.

 

இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளிலிருந்தும் அமெரிக்க அதிபர் ரீகன், இங்கிலாந்து பிரதமர் தாட்சர், உலகக் கத்தோலிக்க மதகுரு போப் இரண்டாவது ஜான்பால் போன்றவர்களைக் கொலை செய்ய முயன்றுள்ளனர். எகிப்தின் அதிபர் சதாத், இந்திய பிரதமர் இந்திரா போன்றோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

ஆனால், பயங்கரவாதத்திற்கு உலகப் பிற்போக்கு ஆளும் வர்க்கத் தலைவர்களும், விமானப் பயணிகளான மேட்டுக்குடியினரும், இராணுவத்தினரும் மட்டும் பலியாவதில்லை. குறித்த இலக்குகளைத் தாக்குவதிலிருந்து தாறுமாறாக சுடுவது, வெடிகுண்டு வீசுவது, குண்டு வைத்துத் தகர்ப்பது என்று சம்பந்தமே இல்லாத அப்பாவி மக்களைக் கொலை செய்து பயபீதியைப் பரப்பி அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற முயல்வது என்பதாக பயங்கரவாதம் வளர்ந்து விட்டது.

 

டெல்லி மற்றும் பிற வடநாட்டு நகரங்களில் அப்பாவி பஸ் பயணிகள் "டிரான்சிஸ்டர்' வெடிகுண்டுக்குப் பலியாயினர். அயர்லாந்தில் கத்தோலிக்கர்களுக்கெதிராக நடந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதாக நடந்த தாறுமாறான துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி புராட்டஸ்டண்டுகள் கொல்லப்பட்டனர். இப்படி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஏராளமான மக்களும் பலியாகின்றனர். இதையே ஆதாரமாகக் கொண்டு பாசிச வெறியர்களான ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே முதல், உலகப்போர் வெறியன் ரீகன் வரை பயங்கரவாதத்திற்கெதிராகப் போராடும் வீரர்களாக வேடம் போடுகிறார்கள். அகிம்சாமூர்த்திகளாகக் காட்டிக் கொண்டு எல்லாவகையான வன்முறை நடவடிக்கைகளையும் பயங்கரவாதமாகச் சித்தரிக்கின்றனர்.

 

பயங்கரவாதத்தை எதிர்த்து ஒழித்துக் கட்டப் போவதாகக் கூறும் உலகப் பிற்போக்கு ஆளும் கும்பல்கள்தாம் முதன்மையாக பயங்கரவாதிகள். ஆனால் வெவ்வேறு நாடுகளில் நடக்கும் புரட்சிகர இயக்கங்களையும் பயங்கரவாதமென்று இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

அயர்லாந்திலும் ஸ்பெயினிலும், போர்ச்சுக்கலிலும் தெருவில் ரத்த ஆறு ஓடுகிறது. துருக்கியில் 1977இல் 262 அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. கிரீஸின் ஏதென்ஸில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதற்காக வெடிகுண்டுகள் வீசி கலவரம் செய்தனர். நிகரகுவாவில் முந்தைய பாசிச வெறியன் சமோசா ஒரே மாதத்தில் 3000 மக்களைப் படுகொலை செய்தான். எல்சால்வடாரின் பாசிச கூலிப்படை ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் கொன்று வருகிறது. 1980 ஆகஸ்டு 7ந் தேதி போடோசி என்ற பொலிவிய நகருக்கு அருகே 2000 விவசாயிகளை பொலிவிய பிளாங்கிஸ்டுகளும், அர்ஜென்டினா கூலிப்படையும், சி.ஐ.ஏ. உளவாளிகளும் அடங்கிய பொலிவிய பாசிச கும்பலும் வெட்டிப் படுகொலை செய்தது.

 

பண்டாரநாயகா, ஓமர் தோரி ஜேஸ், பாட்ரிஸ் லுமும்பா, ஓர்லாண்டே எலட்லியர், ஆஸ்கர் ஆர் நுல்போ ரோமிரோ போன்ற பல நாட்டுத் தலைவர்கள் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லிபியாவின் மும்மர் கடாபியையும், கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவையும் கொலை செய்வதற்காக சி.ஐ.ஏ.வின் கூலிப் படைகள் மீண்டும் மீண்டும் ஏவிவிடப்படுகின்றன.

 

இந்தியாவில் நக்சல்பாரி புரட்சியாளர்கள், கேரள கருணாகரன் ஜெயராம்படிக்கல், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். தேவாரம் கும்பல், ஆந்திரா என்.டி.ஆர். வெங்கல் ராவ் கும்பல், மேற்கு வங்க சித்தார்த்த சங்கர்ரே ரஞ்சித் குப்தா கும்பல், பீகாரில் ஜெகன்நாத் மிஸ்ரா தாவே கும்பல் போன்ற பாசிச வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சீக்கியர்களின் பொற்கோயிலுக்குள் புகுந்து ஆயிரக்கணக்கானவரை இந்திய இராணுவம் படுகொலை செய்தது. இந்திரா சாவை அடுத்து பாசிச காங்கிரசு குண்டர்கள் டெல்லி மற்றும் பிற நகரங்களில் வெறியாட்டம் போட்டு 5000 சீக்கிய மக்களைக் கொன்றனர்.

 

இங்கே எடுத்துக் காட்டப்பட்ட இந்த படுகொலைகள் எதையும் பயங்கரவாத நடவடிக்கைகளாக உலகப் பிற்போக்கு ஆளும் கும்பல்கள் கருதவில்லை. இவை அனைத்தும் அரச பயங்கரவாதத்தின் சில சான்றுகள்தாம்.

 

புரட்சிகர வாய்ச் சவடால் அடித்துக் கொண்டே ருஷ்ய சமூக ஏகாதிபத்தியமும் அதன் தொங்கு சதை நாடுகளும் கூட அரச பயங்கரவாதத்தை ஏவி விடுகின்றன. முன்பு செக்கோஸ்லோவாக்கியாவிற்கெதிராக ஆக்கிரமிப்புத் தாக்குதல் நடத்தியது ருஷ்யா. தற்போது ஆஃப்கானை ஆக்கிரமித்துக் கொண்டு விடுதலை இயக்கங்களுக்கெதிராக பயங்கரவாத ராணுவத் தாக்குதல் தொடுக்கிறது. மேற்கே கியூபாவையும் கிழக்கே வியத்நாமையும் கூலிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இந்திய மக்கள் மீது பாசிசத் தாக்குதல் தொடுத்த இந்திராவையும், எரிட்ரிய இன மக்களை அடக்கி ஒடுக்கும் எதியோப்பிய இராணுவ சர்வாதிகாரி மெங்குஸ்து ஹெய்லி மரியத்தையும் ருஷ்ய சமூக ஏகாதிபத்தியம் ஆதரிக்கிறது.

 

அரச பயங்கரவாதம்தான் உலக மக்களின் முழு முதல் எதிரி ஆகும். ஆனால், இவர்களது ஒடுக்குமுறை சுரண்ட லுக்கெதிராகப் போராடும் புரட்சிகர இயக்கங்களையும், தேசிய விடுதலை இயக்கங்களையும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டங்களையும் பயங்கரவாதமென்று சித்தரிக்கின்றனர்.

 

உண்மையில் புரட்சிகர இயக்கங்கள் எதுவும் புரட்சிகர மக்கள் திரள் வன்முறை இன்றி வெற்றி பெற முடியாது. வன்முறையைப் புரட்சிகர அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவதாலேயே, புரட்சிகர இயக்கங்களையும் பயங்கரவாதமென்று பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் சித்தரிக்கின்றன.

 

இனவெறி, நிறவெறி, அதி தீவிர வலதுசாரி பயங்கரவாதங்கள் அனைத்தும் புரட்சிக்கு எதிரானவை என்பது யாவரும் அறிந்த உண்மையே. ஆனால், புரட்சிச் சவடால் அடிக்கும் அதிதீவிர இடதுசாரி பயங்கரவாத இயக்கங்கள் பல உலகிலுள்ளன. ""செம்படை'', ""செங்காவலர்கள்'', ""ஆயுதந்தாங்கிய பாட்டாளிகளின் கருக்குழு'', ""செம்படைப் பிரிவு,'' ""சுயேச்சைப் படைக்குழு''

 

""பாட்டாளிகள் மற்றும் அரைப்பாட்டாளிகள், உழைக்கும் வர்க்கம் மற்றும் ஏழை விவசாயிகளின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும்போது மிருகத்தனமானதாக, கிரிமினல் குற்றமாக பயங்கரவாதம் மாறிவிட்டது.'' — லெனின்

 

என்று பல பெயர்களில், குறிப்பாக ஜப்பான், இத்தாலி, பிரான்சு, ஜெர்மனி போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் இவை உள்ளன.

 

மக்களைச் சார்ந்து நின்று புரட்சிகர வன்முறை மூலம் உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவுவது என்கிற மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை இவர்களது சித்தாந்தம் அல்ல. ஆயுதங்களைச் சார்ந்து நின்று ஒரு நடுத்தர வர்க்கக் குட்டி முதலாளித்துவ சிறு கும்பலே தனிநபர் படுகொலைகள் மூலம் ஆட்சியைப் பிடிப்பது என்கிற சேகுவாரா, ரேஜிஸ்தேப்ரே, மரிகெல்லா போன்ற வர்களின் தனிமனித பயங்கரவாதமே இவர்களது சித்தாந்த அடிப்படை. நடுத்தர வர்க்கத்தின் உறுதியின்மை, அவசர வெற்றி பற்றிய ஆசை ஆகியவற்றின் விளைவே இது. எனவே, அதிதீவிர இடது பயங்கரவாதம் போலி புரட்சிவாதம். இன்றைய ஏகாதிபத்தியம் அதிதீவிர இடது பயங்கரவாதிகள் பலரைத் தமது எதிர்ப்புரட்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறது.

 

ஆனால், அதிதீவிர இடது பயங்கரவாதச் செயல் புரிந்துள்ள தனிநபர்களைப் பற்றி புரட்சிகர இயக்கம் என்ன கண்ணோட்டம் கொள்கிறது? புரட்சிகரமான சமுதாய மாற்றத்தில் நேர்மையான நம்பிக்கையும், ஒடுக்குமுறை சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை துரிதப்படுத்துவதில் நேர்மையான நோக்கமும் இருப்பின் அத்தகைய தனிநபர்களை புரட்சிகர இயக்கங்கள் ஆதரிக்க வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம் அவர்களல்ல; எதிர்ப்புரட்சி பயங்கரவாதம் தான். பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் எப்போதுமே தமது சொந்த பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்தியே வந்திருக்கின்றன. ஆனால், அவற்றின் பயங்கரவாதத்திற்குப் பலியானவர்களின் எதிர்த்தாக்குதலைப் பழிதூற்றியே வந்திருக்கின்றன.

 

புரட்சியாளர்கள் தனிநபர் பயங்கரவாதத்தை நிராகரிக்கும் அதேவேளையில், புரட்சிகர மக்கள் திரள் பயங்கரவாதத்தை ஏற்கிறோம். ஏனெனில், அந்த முறையில் தான் பயங்கரவாதத்தையே பூண்டோடு நிரந்தரமாக ஒழிக்க முடியும்.

 

மக்கள் திரள் பயங்கரவாதத்தை மேற்கொள்வதாலேயே புரட்சியாளர்களையும் கிரிமினல் குற்றவாளிகளைப் போலச் சித்தரிக்கிறார்கள், ஆளும் வர்க்கத்தினர். இதுவொன்றும் புதிதல்ல. அமெரிக்கத் தொழிலாளர் களுக்கு எழுதிய தமது கடிதத்தில் லெனின் இதைத் தெளிவுபடுத்தி விட்டார். இதுதான் எல்லாப் புரட்சியாளர்களின் பதிலுமாகும்.

 

""நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராகத் தமது சொந்த நலன்களுக்காகப் பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விட்டபோது, பயங்கரவாதம் நியாயமானதாக நீதியானதாக இருந்தது. முதலாளிகளுக்கெதிராகத் தொழிலாளர்களும் விவசாயிகளும் பயன்படுத்தத் துணிந்தபோது பயங்கரவாதம் மிருகத்தனமானதாக கிரிமினல் குற்றமாக மாறி விட்டது! சுரண்டும் ஒரு சிறுபான்மைக்குப் பதிலாக மற்றொரு சுரண்டும் சிறுபான்மை வருவதற்காகப் பயன்படுத்தப்பட்டபோது, பயங்கரவாதம் நியாயமானதாக நீதியானதாக இருந்தது. ஒவ்வொரு சுரண்டும் சிறுபான்மையையும் தூக்கியெறியும் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும்போது, உண்மையில் பரந்துபட்ட பெரும்பான்மை நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும்போது, பாட்டாளிகள் மற்றும் அரைப்பாட்டாளிகள், உழைக்கும் வர்க்கம் மற்றும் ஏழை விவசாயிகளின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும் போது பயங்கரவாதம் மிருகத்தனமானதாக கிரிமினல் குற்றமாக மாறி விட்டது.

 

'' ஒடுக்குமுறை சுரண்டலுக்கெதிராக, உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடும்போது மிருகத்தனமானதாக, கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டாலும், மக்கள்திரள் பயங்கரவாதத்தையே உயர்த்திப் பிடிப்போம்!

 

· ஆர்.கே.

Last Updated on Saturday, 23 January 2010 07:34