Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் 25ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் - சிறப்பு வாசகர் வட்டக் கூட்டம்

25ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் - சிறப்பு வாசகர் வட்டக் கூட்டம்

  • PDF

இருபத்தைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள புதிய ஜனநாயகம் இதழை வாழ்த்தியும், வாசகர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை விளக்கியும் திருச்சி வாசகர் வட்டத் தோழர்கள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து கடந்த 6.12.09 அன்று மாலை அரங்கக் கூட்டத்தைப் பேருற்சாகத்துடன் நடத்தினர். திருச்சி புத்தூர் நாலுரோடு சண்முகா திருமண அரங்கில், மாணவர்களும் மாணவிகளும் இணைந்து நடத்திய தப்பாட்டத்தோடு தொடங்கிய இக்கூட்டத்திற்கு ம.க.இ.க. மையக் கலைக்குழு தோழர் கோவன் தலைமை தாங்கினார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு புதிய ஜனநாயகம் இதழ் தொடக்கவிழாவின் போது, தான் கலை நிகழ்ச்சி நடத்தியதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், அதன் புரட்சிகர அரசியலையும், அது எவ்வாறு ஒரு அமைப்பாளனாகச் செயல்பட்டது என்பதையும் தனது தலைமையுரையில் விளக்கினார்.

 

""புதிய ஜனநாயத்தின் தொலைநோக்கும் நிரூபிக்கப்பட்ட முன்னோக்குகளும்'' என்ற தலைப்பில் ம.க.இ.க. கவிஞர் தோழர் துரை.சண்முகம் ஆற்றிய சிறப்புரையில், எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி மார்க்சியலெனினிய அரசியலை நிலைநாட்டும் வகையில் இதழ் வெளிவருவதையும், எம்.ஜி.ஆரை பாசிஸ்டு என்று அச்சமின்றித் தோலுரித்துக் காட்டியதோடு, அமைதிப்படை என்ற பெயரில் ஈழமக்கள் மீது ஆக்கிரமிப்புப் போரை ஏவிய பாசிச ராஜீவை ""கொலைகாரன் ராஜீவ்'' என்று அட்டைப்படத்தோடு வெளியிட்ட அதன் துணிவையும், பல்வேறு அடக்குமுறைகள் பொய்வழக்குகளை எதிர்கொண்டு கொள்கை உறுதியோடு தொடர்ந்து இதழை வெளியிடுவதையும், பு.ஜ. முன்வைத்த அரசியல் எவ்வாறு சரியானவை என்பது இன்று நிரூபிக்கப்பட்டிருப்பதையும் தனக்கே உரித்தான சுவையோடு விளக்கினார். கால் நூற்றாண்டு காலமாக இந்த இதழை பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு நடுவே மக்களிடம் கொண்டு சென்று, புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்து வளர்த்த முந்தைய தலைமுறையைச் சேர்ந்த வாசகர்கள், விற்பனையாளர்கள், முகவர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த அவர், புதிய ஜனநாயகம் முன்வைக்கும் அரசியலை மக்களிடம் கொண்டு சென்று அமைப்பாக்கி, புரட்சியைச் சாதிப்பதுதான் வாசகர்களாகிய நாம் ஆற்ற வேண்டிய மிக முக்கிய கடமை என்பதை உணர்த்தினார்.

 

இக்கூட்டத்தில் பு.ஜ. இதழின் புரட்சிகர அரசியலை வாழ்த்தியும், ஈழ மக்களின் அவலத்தையும் விளக்கியும் தோழர்கள் கவிதை வாசித்தனர். அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த 24 ஆண்டுகால புதிய ஜனநாயகம் இதழ்களை ஆர்வத்தோடு எடுத்து படித்துப் பார்த்த பல புதிய வாசகர்கள், உடனடியாகச் சந்தா செலுத்தி, இதழ் வளர்ச்சிக்கு நன்கொடையும் அளித்தனர். முன்பேர வர்த்தகத்தால் விலைவாசி உயர்வதைச் சித்தரிக்கும் ""துவரம் பருப்பல்ல, துயரம் பருப்பு'' எனும் பு.மா.இ.மு. தோழர்கள் நடத்திய நாடகமும், மாணவர்களும் சிறுவர்களும் நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சியும் புரட்சிகர அரசியலை ஏந்தி போராட அறைகூவுவதாக அமைந்தன.

 

— பு.ஜ.செய்தியாளர்கள், திருச்சி.

Last Updated on Wednesday, 20 January 2010 17:39