Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் கர்நாடகா அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள்

கர்நாடகா அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள்

  • PDF

கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவிற்கும், அவரது ஆட்சியின் அஸ்திவாரமாக இருந்துவரும் சுரங்க முதலாளிகளான ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே இரண்டு வார காலமாக நடந்து வந்த அதிகாரச் சண்டை, “கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிற்கு நெருக்கமானவரும் அம்மாநிலத்தின் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சருமான ஷோபா கரந்த்லாஜேயைப் பதவியில் இருந்து அகற்றுவது;

 பெல்லாரி மாவட்டத்தில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்துவது; எடியூரப்பா, ஆட்சி தொடர்பாக எடுக்கும் எந்தவொரு முடிவையும் ரெட்டி சகோதரர்களைக் கலந்து ஆலோசித்து எடுப்பது” என்ற பேரத்தின் அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.

“எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்ற ரெட்டி சகோதரர்களின் கோரிக்கையை, பா.ஜ.க. தலைமை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.  எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து தூக்கியடித்தால், கர்நாடகா மாநிலத்தில் மிகுந்த அரசியல் செல்வாக்கும், வாக்கு எண்ணிக்கையும் கொண்ட லிங்காயத்து சாதியினரைப் பகைத்துக் கொள்ள நேரிடும் என்ற சாதி அரசியல்தான் இதற்குக் காரணமேயொழிய, வேறெந்தக் கொள்கையும் இதன் பின்னணியில் கிடையாது.

ஆர்.எஸ்.எஸ்.க்கு நெருக்கமாக இருந்தவரும், பா.ஜ.க.வில் நீண்ட காலம் பணியாற்றியவருமான ஜஸ்வந்த் சிங்கை ஒரே நொடியில் தூக்கியெறிந்த பா.ஜ.க. தலைமை, ரெட்டி சகோதரர்களைக் கட்சியிலிருந்தும், அரசாங்கத்தில் இருந்தும் தூக்கியெறியத் துணியவில்லை.  இதற்குக் காரணம், அச்சகோதரர்களின் பணபலம்!

பா.ஜ.க. கடந்த பத்தே ஆண்டுகளுக்குள் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு “வளர்ந்துள்ளதற்கு’ ரெட்டி சகோதரர்களின் பண பலமும் ஒரு காரணம் என்பதை மூத்த பா.ஜ.க. தலைவர்களால்கூட மறுக்க முடியவில்லை. குறிப்பாக, கடந்த 2008- ஆம் ஆண்டு நடந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பலம் கிட்டவில்லை.  எனவே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை, “தாமரை நடவடிக்கை’ என்ற பெயரில் நடத்தியது, பா.ஜ.க.  இந்தக் குதிரை பேரத்திற்குத் தலைமேயேற்றதோடு, அதற்காகப் பல கோடி ரூபாய்களை வாரியிறைத்தார்கள், ரெட்டி சகோதரர்கள்.  இதற்கு நன்றிக் கடனாக

கருணாகர ரெட்டிக்கு வருவாய்த் துறையும், ஜனார்த்தன ரெட்டிக்கு சுற்றுலாத் துறையும், ரெட்டி சகோதரர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் தரகனான சிறீராமுலுவிற்கு சுகாதாரத் துறையும் சன்மானமாக அளிக்கப்பட்டன.

எடியூரப்பாவிற்கும் ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே அதிகாரச் சண்டை முற்றியபொழுது, பா.ஜ.க.வைச் சேர்ந்த 50-60 சட்டமன்ற உறுப்பினர்கள் ரெட்டி சகோதரர்களோடு ஒட்டிக் கொண்டனர்.  ரெட்டி சகோதரர்களை இழந்தால், ஆட்சியையே இழக்க நேரிடும் என்பதால்தான், பா.ஜ.க. தலைமையால் ரெட்டி சகோதரர்களை ஜஸ்வந்த் சிங்கைப் போலக் கழட்டிவிட முடியவில்லை.

கர்நாடகா மாநில மக்கள் குழந்தை குட்டிகளோடு, பசி-பட்டினியோடு வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தபொழுது, பா.ஜ.க.வைச் சேர்ந்த இந்த 50-60 சட்டமன்ற உறுப்பினர்கள், கோவாவிலும், ஹைதராபாத்திலும் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர்.  முதல்வர் எடியூரப்பாவோ தனது பதவியைக் காத்துக் கொள்ள தில்லிக்குக் காவடி தூக்கிக் கொண்டிருந்தார்.  பா.ஜ.க. தலைமையோ மாநிலத்தின் வெள்ளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, கட்சிக்குள் நடந்து வந்த அதிகாரச் சண்டையைத் தீர்த்து வைப்பதில்தான் மும்மரமாக இருந்தது.  இதிலிருந்து பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை “இந்துக்கள்’புரிந்து கொள்ளலாம்.

ரெட்டி சகோதரர்கள், எடியூரப்பா முதல்வராவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தனர்.  தனது அதிகாரத்திற்கு இடையூறாக இருந்து வரும் ரெட்டி சகோதரர்களைப் போட்டுப் பார்த்துவிடக் காத்திருந்த எடியூரப்பா, வெள்ளச் சேதத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்.  வெள்ளச் சேதத்தை ஈடுகட்டுவது என்ற முகாந்திரத்தில், இரும்புத் தாதுவினை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு லாரியின் மீதும் கூடுதலாக 1,000 ரூபாய் வரி விதிக்கப்பட்டது; மேலும், ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் அனைவரும் பெல்லாரி மாவட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் பணி மாற்றம் செய்யப்பட்டனர்.  தனது அடிமடியிலேயே கைவைக்கத் துணிந்த எடியூரப்பாவிற்கு எதிராக ரெட்டி சகோதரர்கள் ஆரம்பித்த கலகத்திற்கு இரும்புச் சுரங்க முதலாளிகள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளித்தனர்.

இரண்டு கோஷ்டிகளும் வெள்ளச் சேதத்தைத் தமது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முயன்றன.  எடியூரப்பா இரும்புத் தாது மீது கூடுதலாக வரி விதித்தார் என்றால், ரெட்டி சகோதரர்களோ வெள்ளம் பாதித்த பகுதிகளில் 500 கோடி ரூபாய் செலவில் வீடு கட்டித் தரும் திட்டத்தைத் தன்னிச்சையாக அறிவித்தனர். இதன்மூலம், தம்மை மாநில அரசுக்கு மேலானவர்களாகவும், பெல்லாரி மாவட்டம் தமது சொந்த நிலப்பகுதி போலவும் காட்டிட முயன்றனர்.

இத்துணைக்கும் கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் ரெட்டி சகோதரர்களுக்கு இரும்புத் தாதுவை வெட்டியெடுக்கும் உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை. அவர்களது சுரங்கங்கள் பெல்லாரியையொட்டியுள்ள ஆந்திர மாநிலப் பகுதியில்தான் அமைந்துள்ளன. ஆனால், அவர்களோ ஆந்திர மற்றும் கர்நாடகா மாநில அரசுகளில் தங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பெல்லாரியில் இருந்து இரும்புத் தாதுவைக் கடத்துவதை “அங்கீகரிக்கப்பட்ட’ தொழில் போலவே நடத்தி வருகின்றனர். தற்பொழுது, பெல்லாரி மாவட்டத்தில் ரெட்டி சகோதரர்களின் ஒப்புதல் இன்றி அதிகாரிகளை இடம் மாற்றவோ, புதிதாக நியமிக்கவோ எடியூரப்பா முயலக் கூடாது என பேரம் பேசப்பட்டிருப்பதால், ரெட்டி சகோதரர்களை பெல்லாரி மாவட்டத்தின் குறுநில மன்னர்களாகவே அங்கீகரித்துவிட்டது, பா.ஜ.க.

எடியூரப்பா-ரெட்டி சகோதரர்களிடேயே நடந்துவரும் இந்த அதிகாரச் சண்டை ஒருபுறம் பா.ஜ.க.வின் உட்கட்சிப் பிரச்சினையாக இருந்தாலும், இன்னொருபுறம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதாகக் கூறப்படும் அரசாங்கங்களின் மூக்கணாங்கயிறு யார் கையில் இருக்கிறது என்பதை மிகவும் தெள்ளத்தெளிவாக அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது.

முதலாளிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் (அதாவது அரசிற்கும்) முதலாளிகளுக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் இடையே இருந்துவரும் நெருக்கமும் ஒத்துழைப்பும் புதிய விசயம் கிடையாது. டாடா-பிர்லாக்களின் கட்சி என அறியப்பட்ட கட்சிதான் காங்கிரசுக் கட்சி.  முன்னாள் மன்னர்கள், லேவாதேவிக்காரர்கள், வியாபாரிகளின் கட்சியாக உருவானதுதான் பா.ஜ.க.  முதலாளிகள்-ஓட்டுக்கட்சிகள்-அரசு ஆகியவற்றுக்கு இடையே இருந்துவரும் நெருக்கமான பிணைப்பு, நாடாளுமன்றம், அனைவருக்கும் ஓட்டுரிமை ஆகியவற்றின் மூலம் மூடிமறைக்கப்படுகிறது என்பதை கம்யூனிஸ்டுகள் நீண்டநாட்களுக்கு முன்பிருந்தே அம்பலப்படுத்தி வருகின்றனர். தனியார்மயமும், தாராளமயமும் இந்த மூடுதிரைகூடத் தேவையில்லை என அம்மணமாக முதலாளிகளின் ஆட்சியை நம் முன்னே நிறுத்திவிட்டன என்பதுதான் புதிய விசயம்.

கர்நாடக மாநில ஆட்சியை முன்பு சாராய அதிபர்கள் தீர்மானித்தார்கள் என்றால், இப்பொழுது சுரங்க முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள். ஆந்திராவில், பாசனக் கால்வாய்களைக் கட்டும் உரிமங்களைப் பெறும் ஒப்பந்தக்காரர்களும்; அரியானாவில் ரியல்-எஸ்டேட் அதிபர்களும்; ஜார்கண்டில் சுரங்க முதலாளிகளும்; மகாராஷ்டிராவில் கரும்பாலை அதிபர்களும்தான் உண்மையில் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். தமிழகத்தில், தி.மு.க. தலைமையே பெரும் தொழில் குடும்பமாக பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது.  மேற்கு வங்க இடதுசாரிக் கூட்டணி ஆட்சியைக்கூட, அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிரூபன் சக்கரவர்த்தி ஒப்பந்தக்காரர்களின் ஆட்சி என்று அம்பலப்படுத்தி இருக்கிறார்.

கோடீசுவரர்கள்தான் எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல்களில் போட்டியிட முடியும் என்பதை கடந்த சில தேர்தல்கள் நமக்கு உணர்த்திவிட்டன. நாடாளுமன்றத்தின் மேலவை என்பது தரகு முதலாளிகளும், அவர்களது நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் நுழையும் புறவாசலாகிவிட்டது.  அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் வகுக்கும் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் தரகு முதலாளிகள், பங்குச் சந்தை சூதாடிகள், வியாபாரிகள் ஆகியோரின் கூடாரமாகிவிட்டதாக “இந்தியா டுடே’ இதழே அம்பலப்படுத்திப் புலம்பும் அளவிற்கு முதலாளிகளின், புதுப் பணக்காரக் கும்பலின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக நடைபெறும் ஆட்சி எனப் பசப்பிவந்த காலம் மலையேறிவிட்டது. இது, முதலாளிகளுக்காக, முதலாளிகளால் நடத்தப்படும் ஆட்சி என்பதைத் தனியார்மயம் போட்டு உடைத்துவிட்டது.  மாறி மாறி எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும், இந்த நிலை மாறிவிடாது.  எனவே, உழைக்கும் மக்கள் தங்களுக்கான அரசை எப்படி அமைப்பது என்பதைக் கண்டுணர்ந்து, செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

-புதிய ஜனநாயகம்’ டிசம்பர், 2009

ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் ஜாதகம்

“தேசிய’அரசியலை ஆட்டிப் படைப்பதில்  அம்பானி சகோதரர்கள் கில்லாடிகள் என்றால், கர்நாடகா அரசியலுக்கு ரெட்டி சகோதரர்கள் அல்லது பெல்லாரி சகோதரர்கள் என்றழைக்கப்படும் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகிய மூவரைக் குறிப்பிடலாம். இவர்களின் பணபலத்தையும், அதிரடி அரசியலையும் தமிழக மக்களுக்குப் புரியும்படி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், இச்சகோதரர்களை, “பெல்லாரியின் அழகிரி’ எனக் குறிப்பிடலாம்.  “அண்ணன்’அழகிரி கடந்த தேர்தல்களில் 500 ரூபாய் நோட்டுக்களை வீசியெறிந்து ஓட்டுக்களை வாங்கினார் என்றால், ரெட்டி சகோதரர்களோ கர்நாடகா மாநிலச் சட்டமன்றத் தேர்தலின்பொழுது 1,000 ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில்விட்டு, ஓட்டுக்களை விலை பேசுவதில் “தேசிய’சாதனையே படைத்தனர்.

இத்துணைக்கும் ரெட்டி சகோதரர்கள் பரம்பரை பணக்காரர்களோ, மிட்டா மிராசுகளோ அல்லர்.  ஆந்திராவைச் சேர்ந்த சாதாரண போலீசுக்காரனின் வாரிசுகள்.  இவர்களின் திடீர் வளர்ச்சிக்குத் தனியார்மயமும், தாராளமயமும் எந்தளவிற்கு உதவின என்பது குறித்துத் தனிப் புத்தகமே போடலாம்.

ஆந்திர மாநிலத்தின் எல்லையையொட்டி அமைந்துள்ள கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்திற்குப் பிழைப்பு தேடி வந்த ரெட்டி சகோதரர்கள், “”என்னோபிள் சேவிங்க்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்”என்ற பெயரில் ஒரு “பிளேடு’கம்பெனியை (கவுரவமாகச் சொல்ல வேண்டுமென்றால் சீட்டுக் கம்பெனியை)த் தொடங்கினர்.  அதன் மூலம் மக்களுக்கு நாமம் போட்டு அவர்கள் அடித்த பகற்கொள்ளை மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் தேறும் எனக் கூறப்படுகிறது.  ரெட்டி சகோதரர்கள் இந்த மோசடிக்காக ஒருநாள்கூட கம்பி எண்ணவில்லை.  அதே சமயம், வழக்குகளில் இருந்து தப்பிக்க பா.ஜ.க.வில் புகலிடம் தேடிக் கொண்டனர்.

1999-ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா சுவராஜ் பெல்லாரி நாடாளுமன்றத் தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபொழுது, அவரது தேர்தல் வேலைகள், “தேவைகள்’அனைத்தையும் ரெட்டி சகோதரர்கள்தான் கவனித்துக் கொண்டனர்.  அன்று தொடங்கி அரசியலில் மட்டுமின்றி, பொருளாதாரத்திலும் அவர்கள் இந்தியாவின் “ஜி.டி.பி.’க்கு இணையாக வளரத் தொடங்கினர்.  தனி ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ஆடம்பரக் கார்கள் என இவர்களின் பகட்டு வாழ்க்கையைப் பார்த்து விக்கித்துப் போன மக்கள், “இவர்களின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கலாம்’ என இரகசியமாகப் பேசிக் கொண்டபொழுது, “எங்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தேறும்” எனச் சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்துத் தங்களின் பணத் திமிரை வெளிக்காட்டிக் கொண்டனர்.

200 ரூபாய்க்கு விற்று வந்த ஒரு டன் இரும்பு, 2,000 ரூபாயாக அதிகரித்ததற்கு ஏற்ப இவர்களின் கல்லாப்பெட்டியும் நிரம்பி வழிந்தது.  பா.ஜ.க. மட்டுமின்றி, காங்கிரசின் எஸ்.எம்.கிருஷ்ணா, ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோரும் ரெட்டி சகோதரர்களின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருந்துள்ளனர்.  இரும்புத் தாதுவை வெட்டியெடுக்க அரசு கொடுத்துள்ள வரிச் சலுகைகள் ஒருபுறமிருக்க, இரும்புத் தாதுவைச் சட்டவிரோதமாக வெட்டியெடுத்துக் கடத்துவதன் மூலம்தான் இவர்கள் பெரும் கோடீசுவரர்கள் ஆனார்கள்.  இந்த வியாபாரத்தின் மூலம் ரெட்டி சகோதரர்களுக்கு ஆண்டொன்றுக்கு 4,000 கோடி ரூபாய் இலாபம் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய வீரப்பனைச் சுட்டுக் கொன்ற அரசு, இந்த இரும்புக் கடத்தலுக்காக இச்சகோதரர்கள் மீது ஒப்புக்காக வழக்கொன்றை உச்சநீதி மன்றத்தில் நடத்தி வருகிறது.  இந்த வழக்கில் இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 6 மாத சிறைத் தண்டனையும், 1,000 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுமாம்.  மாநில அரசினையை கவிழ்க்கும் அளவிற்குப் பண பலமும், குண்டர் பலமும், அரசியல் செல்வாக்கும் கொண்ட இத்திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு, உச்சநீதி மன்றம் எம்மாத்திரம்?

 

http://www.vinavu.com/2010/01/14/reddy-bros/

Last Updated on Thursday, 14 January 2010 06:39