Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5)

  • PDF

அசோக் தீப்பொறியின் போராட்டத்தையும், தளக்கமிட்டியின் போராட்டத்தையும், பல சிறு குழுக்களின் போராட்டத்தையும், மறுத்தும் திரித்தும், அனைத்தையும் ஒன்றாக இட்டுக் கட்டியதுடன், "எங்களோடும்" என்று கூறி றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ்யுடன் சேர்ந்து  நின்றதை மூடிமறைத்ததைப் பார்த்தோம். இந்த வரலாறு தான் இப்படி என்றால், அசோக் நாவலனுடன் சேர்ந்து கடந்தகால மற்றொரு வரலாற்றை திரித்து மறுக்கும் அரசியல் அசிங்கமோ இங்கு இயல்பில் எதிர்ப்புரட்சி அரசியலாகும்.

இங்கு நாவலன் துணையுடன் அசோக் கூறுகின்றார்

 

"1990களின் பிற்பாடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஜிதரன் போராட்டம் தோழர் நாவலன் தோழர் விமலேஸ்வரன் ஆகியோரின் வழிநடத்தலில் நடைபெறாமல் இருந்திருந்தால் உங்கள் பெயரே இன்று எவராலும் இனம்காண முடியாமல் போயிருக்கும். தோழர் நாவலன், தோழர் விமலேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் விஐpதரன் போராட்டக்குழு அமைக்கப்பட்டபோது பல மாணவ தோழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நாவலனின் முயற்சியால் அக் குழுவில் சேர்க்கப்பட்டீர்கள்.

அந்த வரலாற்றை இன்று என்ன மாதிரி திரிவுபடுத்தி போராட்டத்தை தாங்கள்தான் முன்னெடுத்தது போன்ற விளம்பர அரசியலை செய்கிறீர்கள். இதெல்லாம் உங்களுக்கு உங்கள் மொழியில் “விபச்சார அரசியலாக” தெரியவில்லையா."

 

என்கின்றார்.

 

எது எப்படி எந்த அரசியல் என்பதை, இந்தக் கூற்று மூலம் உங்களை நீங்கள் அம்பலமாக்கியிருக்கின்றீர்கள்.

 

அன்று உங்கள் அரசியலுக்கு முரணாக எம்முடன் நின்ற அசோக்கின் துணைவியாரும் பின்னாளில் புலியால் கொல்லப்பட்ட செல்வி இங்கு எம் அரசியலை மீண்டும் பாதுகாக்கின்றார். அவர் உங்கள் கூற்றுக்கு முரணாக இதை பதிவு செய்ததுதான், இன்று உங்கள் வரலாற்று திரிபையும் அதன் எதிர்ப்புரட்சி அரசியலிலை தவடுபொடியாக்கின்றது.

 

எம்முடன், எம் அரசியலுடன் நின்ற செல்வி, ராஜனி திரணகம ஊடாக இந்தப் போராட்டத்தை திரிக்க முடியாத மறுக்க முடியாதபடி ஒரு வரலாற்று பதிவைச் செய்துள்ளார்.   
 
அதை முறிந்த பனை என்ற நூலில்

 

"தமது அயலவர் ஒருவர் திடீரெனக் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போனால் மக்கள் அது பற்றிப் பாராமுகமாயிருந்தனர். இவ்வாறு இருக்கத் தயாராயில்லாத சிலர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாவர். விஜிதரன், றயாகரன் எனும் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விவகாரத்தின்போது, இத்தகைய சூழ்நிலைகளிலே, அவர்கள் துணிகரமாகச் செயற்பட்டார்கள். ....அது பெருமளவில் உற்சாகத்தைக் காட்டுகின்ற முற்போக்கு இயக்கமாயிருந்தது. ...அதன் எதிர்ப்பு முடிவுற்றதும், அதன் தலைவர்கள் தலைமறைவாகவோ அல்லது வெளிநாட்டுக்குச் செல்லவோ வேண்டியிருந்தது. தலைவர்கள் பலரும் சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான சாதாரண பெண்களும், அவசியமானதும் மூத்தவர்கள் செய்வதற்குப் பின்வாங்கியதுமான ஒன்றைச் செய்வதில், அரியதொரு துணிவைக் காட்டினார்கள். " (பக்கம் 97)

 

"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இன்னொரு அரசியல் வேலை ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் அம்பலமாயிற்று. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான ஆனால் சிறு தொகையினருக்கே தெரிந்த விவகாரம் என்னவெனில், பல்கலைக்கழக மாணவன் றயாகரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டமையாகும். அந்த மாணவன் பொது நல விடயங்களில் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருந்தான். அத்துடன் 1986 நவம்பரில் காணாமற் போன விஜிதரனின் விவகாரத்தில் நடவடிக்கைக்குழு உறுப்பினாரகப் பங்குபற்றினான். றயாகரன் சிறு மார்க்ஸியக் குழுவான தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியுடன் தொடர்பு கொண்டிருந்தான் என்று, விடுதலைப்புலிகள் இயக்கம் அவர் மீது சந்தேகப்பட்டமையே அவரைக் கடத்திச் சென்றமைக்கு உண்மையான காரணமெனப் பின்னர் அம்பலமானது. பொறியியலாளரான திரு. விஸ்வானந்ததேவனே அவ் மார்க்ஸியக் குழுவின் தலைவர் ஆவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கடுமையாக விமர்சிப்பவர். அவர் கடந்த இரண்டாண்டுகளாக காணாமற் போய்விட்டார். .....றயாகரனைக் கடத்திச் சென்ற போது, நெல்லியடியில் விஸ்வானந்ததேவனின் 70 வயதான தந்தையும் கைது செய்யப்பட்டு அடிக்கப்பட்டார். அவரது வீட்டுக்காணி நிலமும் தோண்டப்பட்டது. விடுதலைப்புலிகள் றயாகரனை தடுத்து வைக்கப்பட்டிருந்ததை மறுதலித்தனர். இதனால் மிகமோசமான முடிவு ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்பட்டது. அதி உற்சாகமும், திறமையும் வாய்ந்த றயாகரன் யூலை ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிறைவைப்பிலிருந்து தப்பிவிட்டார். 1987 ஜீலை 17ம் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு அவர் அனுப்பிய கடிதத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேசி, தனக்கு எதுவித இம்சையும் அவர்கள் செய்யமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன் பின்னர் அந்த விடயம் பற்றி விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேசும் பணி மாணவர்களிடமே விடப்பட்டது. ஏனையோர் வேண்டாத பயத்தினால் பின்வாங்கியபோது, மாணவர்கள் மீண்டும் துணிகரமாகச் செயற்பட்டார்கள். .....மாத்தையா கைலாசபதி கலையரங்கில் நடந்த கூட்டத்தில், சமூகமளித்து அந்த உறுதிமொழியை அளித்தார். மாத்தயா தனது கூற்றிலே றயாகரன் "கிரிமினல்" இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தாரா என விசாரணை செய்யப்பட்டாரெனக் கூறினார். கிரிமினல்கள் வேலைகளில் அசகாய சூரர்களான விடுதலைப்புலிகள், ஏனைய இயக்கங்களை கிரிமினல் இயக்கங்களென முத்திரை குத்துவது வேடிக்கையானது. றயாகரன் கைலாசபதி கலையரங்கிலே பிரசன்னமாயிருந்து வேண்டுகோளின் பேரில் மேடையில் தோன்றியமை எதிர்பாராத நிகழ்வாயிருந்தது.

 

விடுதலைப்புலிகள் இயக்கம் அங்கிருந்து வெளிநடப்புச் செய்தது. றயாகரன் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தனக்குச் செய்த சித்திரவதைகள் உட்படத் தனது அனுபவங்களை விபரமாக எடுத்துக் கூறினார். அவர் வெளியிட்ட முக்கியமான தகவல்களில் ஒன்று, மன்னார் மாவட்டத்தில் இலுப்பைக் கடவையைச் சேர்ந்த தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணியின் முக்கிய பிரமுகரான திரு. கைலாசபிள்ளை .....தன்னுடைய முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்தமையாகும். சில நாட்களுக்கு முன்னர் "ஈழமுரசு" பத்திரிகை தனது முக்கிய செய்தியில் திரு.கைலாசபிள்ளை பற்றிக் குறிப்பிட்டு அவரது புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தது. ஒரு பேட்டியில் அவர், த.வி.ஐ.மு. இனியும் தேவையில்லையெனக் கூறி, ஆயுதப் போராட்ட இளைஞர்களைப் புகழ்ந்தார்." (பக்கம் 169 ,    170)

 

இது ராஜனி திரணகம தன் நூலில் எழுதியது. அப்போராட்டம் நடைபெற்ற காலத்தில் அவர் அங்கு இருந்திருக்கவில்லை. அவரை நான் என்றும் சந்தித்ததும் கிடையாது. அவர் எப்படி இதை எழுத முடிந்தது.

 

செல்வி போன்றவர்கள் மூலம்தான் இதை எழுத முடிந்தது. செல்வி பூரணி பெண்கள் அமைப்பில் இருந்ததுடன், ராஜனி திரணகம நடித்த "அடுப்படி அரட்டை",  "தியாகத் திருமணம்" போன்ற நாடகங்களில் நடித்தார். 30.08.1991 புலிகள் கடத்தும் வரை, அவர் எம்கருத்தாக, தம் வழியில் தொடர்ந்து போராடியவர் தான்.

 

இப்படி எம்மைச் சுற்றி வரலாறு இருக்கின்றது. இப்படி இருக்க அசோக்கும், நாவலனும் சேர்ந்து வரலாற்றை திரிக்கின்றனர். ஆயிரம் ஆயிரம் மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை மறுத்து, விமலேஸ்வரனும் நாவலனும் நடத்தியதாக அதை இட்டுக்கட்டுகின்றனர்.

 

இந்த போராட்டத்தை நான் நடத்தியதாக நான் உரிமை கோருவதாக சோடித்து காட்டி (எனக்கு ஒரு அரசியலில்லை என்ற மாதிரி), தம்மை முன்னிறுத்துகின்றனர். இது அன்று போராடியவர்களுக்கு எதிரான பச்சைத் துரோகம். நான், நாவலன் உள்ளிட்ட பலர் இதில் முன்னின்றதும், அதற்கு தலைமை தாங்கியதும், அதை இன்று குறுகிய எதிர்ப்புரட்சி அரசியலுக்கு லாடம் அடிக்க உதவும் என்பதற்காக அல்ல.

 

அமைப்புக் கமிட்டி இந்த போராட்டத்தை முன்னெடுத்த போது, அந்தக் கமிட்டியில் நானோ நாவலனோ இருக்கவில்லை. இது மறுக்க முடியாத வரலாறு. நடந்த போராட்டத்தில் எனதும், நாவலனதும் செயலூக்கமுள்ள பாத்திரமும், வழிகாட்டலும் போராட்டத்தை சரியான வழிக்கு வழிகாட்டியது.

 

விமலேஸ்வரன் இல்லாத அமைப்புக்குழுவை சிவத்தம்பி புலி கொலைகாரர்கள் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தி அடிக்கடி அடிபணியவைத்தார். இதை நாம் இருவரும் மறுத்ததால், சிவத்தம்பி எம்மை உள்ளடக்கிய பேச்சுவார்த்தையைக் கோரினார். இதனால் தான் மாணவர்கள் ஒரு திடீர் கூட்டம் மூலம், எம்மை அமைப்புக் குழுவில் சேர்த்தனர். இது வரலாறு. சிவத்தம்பி தான், தன் புலிசார்பு நிலையை சாதித்ததன் பயனாய், மாணவர் அமைப்பு குழுவுக்கு எம்மை அதற்குள் கொண்டுவர நிர்ப்பந்தித்தவர். சிவத்தம்பிக்கு பதிலடி கொடுத்து, அம்பலப்படுத்தியும், பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியவர்கள். இது பற்றி புலியிடம் இருந்து தப்பிய பின், ஆற்றிய உரையில் நான் குறிப்பிட்டதை இங்கு நீங்கள் பார்க்க முடியும்.

 

புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை

 

விமலேஸ்வரன் என்.எல்.எவ்.ரி. மாணவ அமைப்பின் செயல் குழு உறுப்பினராக இருந்ததும், புலிக்கு அஞ்சி அவர் தலைமறைவாக வேண்டிய நிலை ஏற்பட்ட போது,  பாசறையின் விவசாய அமைப்பு இருந்த கிராமத்தில் தலைமறைவாக இருக்க நாவலன் உதவியதும், நான் புலியில் இருந்து தப்பி அதே கிராமத்துக்கு விமலேஸ்வரனிடமே சென்றதும், நாவலன் வேறு இடத்தில் தலைமறைவாக நான் தங்க ஏற்பாடு செய்யும் அளவுக்கு, எமது அரசியல் உறவு பல தளத்தில் இருந்தது.

 

முன்னைய கட்டுரைகள்

 

எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)

 

அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)

 

தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல்

 

வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4)

 

தொடரும்   

 

பி.இரயாகரன்
04.12.2009

Last Updated on Friday, 04 December 2009 10:49