Wed04242024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் நீ தான் ஆசிரியன்

நீ தான் ஆசிரியன்

  • PDF

நீ தான் ஆசிரியன்

பருவத்தேர்வுகள்
நெருங்கிவிட்டது போலிருக்கிறது
படித்துக்கொண்டிருக்கிறாய்
பார்க்கும் போதெல்லாம்
தொலைபேசியில் கேட்கும் போதெல்லாம்……

 

தலையில் தட்டி குட்டி
இரவு முழுக்க விழுந்து விழுந்து
எதைப்படித்துக்கொண்டிருக்கிறாய்?
புரியாததை புரிய வைக்க உன்னுள்
எத்தனைப் போராட்டம்
தெரியாததை தெரியவைக்க
எத்தனை விழிப்புக்கள்……

 

எதைப்புரிந்து கொண்டாய்?
எதைத் தெரிந்து கொண்டாய்?
ஆனாலும் கண்டிப்பாய்
நீ தேர்வாகிவிடுவாய்
மக்களைப் புரியாமலும்
தெரியாமலும்
இருக்கத்தானே தேர்வுகள்……

I=V/R
இது ஓம்ஸ் விதி
இன்னும் எத்தனை விதிகள்
எதை மாற்ற? எதை உருவாக்க?
மின்சாரத்தின் அலகினை
அளக்க முற்படும் நீ
என்றாவது நம் பொருளாதார அலகினை
பற்றி நினைத்திருக்கிறாயா?

அரிசி விலையும்
பருப்பு விலையும் எதனால்
ஏறுகிறதென்று தெரியாமல்
எதைப் படிக்கிறாய்?

மருத்துவம்,பொறியியல்
அறிவியல்……..
காய்ந்து போன நிலங்கள்
மூடிக்கிடக்கும் ஆலைகள்
சுருண்டு போன நெசவாளிகள்
எந்தப்படிப்பு வந்து இதை
மாற்றப்போகிறது?

பார்ப்பனீயத்தின் தேர்வுகள்
குத்திக்கிழிக்கின்றன
பறையனென்றும் சூத்திரனென்றும்
முதலாளித்துவம்
கடைசி பென்ச்-ல் உட்காரவைத்து விட்டது
உழைக்கும் மக்களை……

நீ டாக்டர் ஆனாலும் என்ஜினியர் ஆனாலும்
ஏன் அந்த கலக்டரே ஆனாலும்
இதை மாற்ற முடியுமா என்ன ?
உன் வாழ்வுக்கு
இம்மியளவும் பயன்படாத படிப்புதான்
உனக்கு மதிப்பு கொடுக்கப்போகிறதா?

படி நன்றாகப்படி
முதலில் உன்னைப்படி
இந்த உலகைப்படி
உழைக்கும் மக்களைப்படி
அவர்கள் தான் ஆசிரியர்கள்
அங்கிருந்து கற்போம்
புரிந்ததை உனக்கு தெரிந்ததை
பற்றி கற்போம்- வேலையில்லா
திண்டாட்டம் இங்கில்லை……

போராட்டத்தில்
ஓய்வுக்கு இடமில்லை
உன் விளங்காத படிப்பையும்
விளங்க வைக்க “புதிய ஜனநாயகத்தையும்”
சேர்த்துப்படி
இனி நீ விளக்கு
மற்றவர்களுக்கு நீ தான் ஆசிரியன்.

http://kalagam.wordpress.com/2009/12/03/நீ-தான்-ஆசிரியன்/

Last Updated on Thursday, 03 December 2009 20:31