Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!

பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!

  • PDF

இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூரில் பி.டி கத்திரிக்காய்க்கு எதிரான உழவர் உழைப்பாளர் கட்சியின் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது. அபாயகரமான சாயக்கழிவுகளுடன் அசால்ட்டாக வாழ்க்கை நடத்தும் எங்கள் கவனத்தை கத்திரிக்காயா திருப்பும் ??

கொடி புதுசாயிருக்கே என ஒருசிலர் கவனித்ததுதான் மிச்சம். ஆனால் சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரையை வாழ்த்துரை வழங்கச்செய்து பி.டி கத்திரிக்காய்க்கு மாபெரும் விளம்பரம் ஒன்றை செய்திருக்கிறது விவசாயப் பல்கலைக்கழகமும் அவர்களின் சமீபத்தைய குலசாமியான மான்சாண்டோவும். இதுவரை அப்துல் கலாமை உதாரணபுருஷனாக கொண்டிருந்து கொஞ்சம் சலித்துப்போயிருந்த மக்களின் புதிய கண்டுபிடிப்புதான் மயில்சாமி அண்ணாதுரை.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நான்கு பி.டி கத்திரிக்காய்களை கோவை வேளான் பல்கலைக்கழகம் அறிமுகம்  செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார் ம.சா.அ.து. இதுவரை உள்ளூரில் விளைந்த கத்திரிக்காயால் சுற்றுப்புறத்திற்கு என்ன கேடு வந்துவிட்டது என்பது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அதையும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரை வைத்து சொல்லச் சொல்வதன் காரணம் என்ன ?? ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தத்திற்கு மார்கெட்டிங் செய்ய அப்துல் கலாமை அனுப்பினார்கள், இப்போது அண்ணாதுரையின் முறை.பி.டி கத்திரிக்காயின் நல்லதா கெட்டதா என விவாதிக்கும் முன் அதன் தேவையைப்பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். பெரிய அளவில் தட்டுப்பாடு வராத, பயிரிடப்படுவதிலும் ஒரு பெரிய முக்கியத்துவம் இல்லாத கத்திரிக்கு ( தங்கள் நிலத்தின் ஒரு பாகத்தில் மட்டுமே பெரும்பாலான விவசாயிகள் கத்திரியை பயிரிடுகிறார்கள் ) மரபணு மாற்றம் செய்வது என்பது ஒரு முன்னோட்டமே. அடுத்து வரப்போகும் மற்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கான தடைகளை இப்போதே கத்திரியை அனுப்பி ஆழம் பார்க்கிறார்கள். நமது கேனத்தனத்தினைப் பொறுத்து பி.டி நெல் உள்ளிட்ட மற்ற பயிர்கள் இன்னும் சுலபமாக உள்ளே நுழையும்.

பிடி கத்திரிக்காய்இந்தியாவில்  மரபணு மாற்றம் செய்யப்பட்டு முதலில் பயன்பாட்டுக்கு வர இருப்பது கத்திரிக்காய்தான். பி.டி கத்திரிக்காய் உடலுக்கு ஏற்படுத்தும் கேடுகளைப்பற்றி ஆராயாமல் ஏதோ வீடு கட்டும் ஒப்புதலை வழங்குவதுபோல அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது மத்திய மரபணுப் பொறியியல் ஒப்புதல் குழு ( genetic engineering approval committe ). கத்திரி மீதான ஆய்வு முடிவுகள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அதன் பிறகு மக்களின் கருத்து கேட்கப்பட்ட பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் பல்வேறு விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய  இந்தியாவில் வசதி இல்லை என்றும் உடனடியாக ஒரு ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசை கோரியிருக்கிறார் புஷ்பா பார்கவா ( இவர் உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட GEAC யின் பார்வையாளர் ). மத்திய அரசும் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறது. அப்படியானால் ஜெயராம் ரமேஷ் மக்களுக்குத் தரப்போவது எந்த ஆய்வறிக்கை என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

உண்மையில் GEAC ஆய்வு என சொல்வது பி.டி கத்திரிக்காயை உருவாக்கிய மான்சாண்டோ செய்த ஆய்வைத்தான். அந்த ஆய்வு பத்து எலிகளைக் கொண்டு மூன்று மாதங்கள் மட்டும் நடைபெற்றது. இதில் நீண்டகால பாதிப்புகள் குறித்து எந்த தகவலை பெறமுடியும் ? முதலில் எலிகள் மீதும் பிறகு குரங்குகள் மீதும் ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். இப்போது இந்தியர்கள் கிடைத்துவிட்டதால் குரங்குகள் மீதான ஆய்வு தவிர்க்கப்பட்டு விட்டதுபோலும். விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாமை, மகரந்த சேர்க்கை மூலம் மற்ற பயிர்களும் மலடாகும் போன்ற பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்யும் சாத்தியம் இந்தியாவில் கண்ணுக்கெட்டியவரை கிடையாது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அவற்றின் ஆபத்துக்கள் பற்றி பெரிய தெளிவு மக்களிடம் கிடையாது அல்லது அவர்களுக்கு விளக்கம் தரப்படவில்லை. தாய்ப்பால் முதல் அண்டார்டிகா வரை பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு அறியப்பட்டபிறகும் அந்த விவரம் பெரும்பாலான பாமர மக்களுக்கு தெரியவில்லை. இதேகதைதான் பல ஆலைக்கழிவுகளின் விசயத்தில் இப்போதும் நடக்கிறது. இந்த லட்சணத்தில் மக்களிடம் கருத்து கேட்டு பி.டி கத்திரிக்காயை அனுமதிக்கப்போவதாக சொல்வது வேறு பயமுறுத்துகிறது.

இதன் இன்னொரு முகம் பொருளாதாரம் சார்ந்தது. விவசாயிகளை சகல வழிகளிலும் நிறுவனங்களை சார்ந்திருக்கச் செய்வது. ஏற்கனவே உரம் பூச்சி மருந்து என பல இடுபொருட்களுக்கு விவசாயிகள் அடிமையாக்கப்பட்டுவிட்டார்கள். விதைகளும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எல்லா விவசாயியும் ஒப்பந்தப் பணியாளரைப்போல மாண்சான்டோவுக்கு வேலைசெய்ய வேண்டியதுதான். பி.டி பருத்தி விதைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை 1750, அப்போது சாதாரண பருத்தி விதை முன்னூறு ரூபாய்கூட கிடையாது. அப்படி வாங்கியவர்களும் பெரிய மகசூல் எடுத்ததாக மான்சாண்டோவாலும்கூட நிரூபிக்க முடியவில்லை அவர்களின் உள்ளூர் எடுபிடிகளான வேளான் பல்கலை(ளை)க்கழகங்களாலும் நிரூபிக்க முடியவில்லை. பி.டி பருத்தியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இப்போது கத்திரிக்காய் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ தெரியாது. இது போதாதென்று இன்னும் ஐம்பத்தாறு பி.டி பயிர்கள் அறிமுகத்திற்காக காத்திருக்கின்றன.

விதை யார் கொடுத்தால் என்ன, கத்திரிக்காய் வழக்கம்போல கிடைக்கும்தானே என கேட்கவும் ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க என்னிடமும் ஒரு கேள்வி உண்டு, உங்கள் பிள்ளை எங்கிருந்து வந்தால் என்ன ? அது உங்களுடையதாக இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது ?

விதைக்கான உரிமை பறிபோகும் வேளையில் விளைபொருளின் மீதான உரிமையையும் பறிக்க ஒரு சட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கரும்புக்கான நியாய ஆதரவு விலை அவசரச்சட்டம் என்பதுதான் அது. அதாவது இப்போது அமுலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சுமார் முன்னூறு ரூபாய் குறைவான விலையை ஒரு டன்னுக்கு “அவசரமாக” நிர்ணயம் செய்யும் சட்டம்தான் இப்போது பிரச்சினையாகியிருக்கிறது. ஒரு விளைபொருளின் விலையை குறைப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர முயலும் ஒரே சாதனை அரசு இந்தியாவில்தான் இருக்கமுடியும். இத்தனைக்கும் கடந்த ஓராண்டில் மட்டும் சர்க்கரையின் சந்தை விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.ஒப்புக்குக்கூட எந்தவிதமான காரணமும் சொல்லாமல் விவசாயிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பான ஒரு திட்டத்தை சட்டமாக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறது  காங்கிரஸ்.

ஏற்கனவே எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி திட்டமிட்டு குறைக்கப்பட்டு இறக்குமதி நிரந்தரமாகிவிட்டது. அடுத்து கரும்பு இறக்குமதி துவங்கியாயிற்று ( கரும்பு உற்பத்திப் பரப்பு 48% குறைந்துவிட்டதாக ( அல்லது குறைக்கப்பட்டுவிட்டதாக) மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அடுத்து அரிசி இறக்குமதிக்கு சாக்குப்பையை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. மேற்கூறிய எல்லா பொருட்களும் சமீப காலமாக கடுமையான விலையேற்றத்தை சந்தித்திருக்கின்றன. விவசாயிக்கும் விவசாயத்திற்கும் எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் மறுநாள் பாதிக்கப்போவது சாதாரண நுகர்வோரான இந்தியக் குடிமகனைத்தான். மன்மோகனும், மாண்டெக் சிங்கும் இந்தியாவை பணம் படைத்தோருக்கு மட்டுமான ஒரு தேசமாக மாற்றும் வரை ஓயப்போவதில்லை. அதுவரை நம்மை திசைதிருப்ப இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான் தீவிரவாதம். அதுசரி செத்தாலும் உள்ளூர்காரனால் சாவதுதானே தேசபக்தி.

கரும்பு விலை சட்டத்தின் மூலம் நமக்கு இன்னொரு முக்கியமான பாடம் கிடைத்திருக்கிறது. டில்லியை ஒருநாள் முற்றுகையிட்டாலே ஒரு அராஜகமான சட்டத்தை நிறுத்த முடியும் என்பதுதான் அது.

-நன்றி வில்லவன்

http://www.vinavu.com/2009/12/02/bt-brinjal/

Last Updated on Wednesday, 02 December 2009 10:26